இவரைப் பற்றி

அரசியல் செயல்பாட்டாளரான ஆழி செந்தில்நாதன் முற்போக்கு அரசியல் அடிப்படையையும் சமூகநீதி அரசியல் மரபையும் கொண்டிருக்கும் ஒரு தமிழ்த்தேசியர். ஆழி செந்தில்நாதன் மாணவர் பருவத்திலேயே அரசியல் களம் கண்டவர். தற்போது நேரடி அரசியல் களப்பணிகள் மட்டுமின்றி, எழுத்து, தமிழ்ப்பணி, நூல் வெளியீடு, மொழிபெயர்ப்பு, ஊடகத்துறை என பலதுறைகளில் இயங்கிவருகிறார்.  இந்த இணைய தளம் அவருடைய அதிகாரபூர்வ இணையதளமாகும்.

தற்போது தன்னாட்சித் தமிழகம் என்கிற அரசியல் அமைப்பு ஒன்றின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். கடந்த நான்காண்டுகளாக அனைத்திந்திய அளவில் மொழி நிகர்மைக்கும் உரிமைக்குமான பரப்பியக்கம் (Campaign for Language Equality and Rights, CLEAR) என்கிற மொழியுரிமை அமைப்பின் தொடங்குநராகவும் இப்போது அதன் செயலராகவும் இருக்கிறார்.

1970 இல், இன்றைய திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணிக்கு அடுத்த தேவிகாபுரத்தில் பிறந்த செந்தில்நாதன், உள்ளூர் ஊராட்ச ஒன்றியத் தொடக்கப்பள்ளியிலும் சூசைநகர் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார், செய்யாறு அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் இயற்பியலில் இளம் அறிவியல் முடித்த செந்தில்நாதன், 1994 இல் செ்ன்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்புப்பாட்டியலில் முதுகலை படிப்பை முடித்தார்.