நீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?

தமிழ் ஆழி, பிப்ரவரி 2013

கவர் ஸ்டோரி / விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சை

நீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?

 கமல்ஹாசனுக்கு ஒரு பகிரங்க கடிதம்

செ.ச.செந்தில்நாதன்

அன்பின் கமல் சார்,

இக்கடிதம் உங்கள் கையில் கிடைக்கும் நேரம், விஸ்வரூபம் தொடர்பான பிரச்சனைகள் முடிந்து அநேகமாக தமிழ்நாட்டில் அது திரையிடப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என நீங்கள் தொலைக்காட்சியில் கூறும்போது, “உங்களைப் போன்ற ஒருவனாக” நான் இல்லையென்றாலும், உங்களுடைய ரசிகனாகவும் பொதுமக்களில் ஒருவனாகவும் மிகுந்த வேதனை அடைந்தேன். இனி அப்படியெல்லாம் பேசாதீர்கள், ஒருவேளை லாஸ் ஏஞ்சலிசுக்குப் போவதற்கு ஏதேனும் திட்டமிருந்தால் அதை வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள். இப்படி எங்களை அழவிடாதீர்கள்.

விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டது தவறு என அழுத்தந்திருத்தமாக முதலில் இக்கடிதத்தின் மூலம் பதிவு செய்ய விரும்புகிறேன். இவ்விவகாரம் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறிய வார்த்தைகளில் சட்டத்தின் எழுத்துகள் பிரதிபலித்தனவே ஒழிய எண்ணங்கள் பிரதிபலிக்கவில்லை. திரைப்படத்துக்குத் தடை என்கிற ஒரு கருத்து சுதந்திர மீறலை கோட்பாட்டு ரீதியில் சரியென ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆஹா, முதல்வருடையதுதான் எவ்வளவு இலக்கணச் சுத்தமான சர்வாதிகாரம்!

இருந்தாலும் பிரச்சனைக்கு முதல் காரணம் அரசு அல்ல, நீங்கள்தான். படத்தை வெளியிடும் முன்பு அதை முஸ்லிம் அமைப்பினருக்குத் திரையிட்டுக் காண்பித்தீர்கள். அவர்கள் உங்கள் ‘முதல் நாள் முதல் காட்சி’ ரசிகர்கள் அல்ல. உங்கள் மீது சந்தேகத்தோடுதான் அதைப் பார்க்க வந்தார்கள். முஸ்லிம் அமைப்புகள் உங்கள் படத்தைப் பார்த்துப் பாராட்டிவிட்டு, வெளியே சென்றவுடன் தடை கோரவில்லையே! அப்போதே அவர்களின் கருத்தைக் கேட்டு சில முடிவுகளை நீங்கள் எடுத்திருக்கலாம். இந்தப் படத்தில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்று நீங்கள் நினைத்துக் கொண்டீர்களா, அல்லது பிரச்சனை வரட்டும், நல்ல விளம்பரமாக அது ஆகும் என ஆசைப்பட்டீர்களா?

அநேகமாக முதலாவதுதான் சரி. உங்கள் படத்தின் மீது உங்களுக்கு அந்த அளவுக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது. இந்தப் படம் மிக மோசமாக இஸ்லாமியர்களைச் சித்தரிக்கிறது என முஸ்லிம் அமைப்புகள் கூறியபோது எந்த அடிப்படையில் என்று நீங்கள் பதில் கேள்வி கேட்கவில்லை? அப்படி இல்லவே இல்லை என சாதித்தீர்கள்.

மிகவும் கடுமையான, அரசியல் ரீதியில் மிகவும் ஆபத்தான பதில்களைக் கொண்ட ஓர் அறிக்கையை உங்கள் படத்தின் மீது தடைகோரியவர்கள் மீது நீங்கள் பொறுப்பற்ற முறையில் தூக்கி எறிந்தீர்கள். படம் 24ந் தேதி வெளியாக இருந்தது. உங்கள் கடிதம் அதற்கு மறுநாள் வெளியானது. பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததற்கு உங்கள் அலட்சியகரமான அணுகுமுறைதான் முதல் காரணம். உங்கள் “முஸ்லிம் சகோதரர்கள்” மீது நீங்கள் எறிந்த வாசகங்கள் இதோ:

  • ‘அரசியல் அடையாளம் தேடும் சிறு குழுக்களால் நான் இரக்கமின்றி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறேன். நீங்கள் பிரபலமாக இல்லாதபோது மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க மிகச் சிறந்த வழி பிரபலங்களைத் தாக்குவதுதான்.’
  • ‘எந்த நடுநிலையான, தேசபக்தியுள்ள இஸ்லாமியரும் என் படத்தைப் பார்த்துப் பெருமையடைவார். அந்த நோக்கத்துடன்தான் அது உருவாக்கப்பட்டுள்ளது.’
  • ‘இந்த விதமான கலாச்சார பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும்.’

எவ்வளவு தீவிரமான வாசகங்கள்! எவ்வளவு அரசியல் உள்ளர்த்தங்கள் இதில் பொதிந்திருக்கின்றன! கேட்டால் எனக்கு அரசியல் கிடையாது, மதம் கிடையாது என்பீர்கள்.

போராடிய முஸ்லிம்கள் சிறிய அமைப்புகள்; அவை தமக்கென்று எந்த லட்சியங்களும் இல்லாதவை; விளம்பரம் பெறுவதற்காகவே உங்களை எதிர்த்துப் போராடுகின்றன என்கிறீர்கள். அதாவது உங்கள் “முஸ்லிம் சகோதரர்கள்” பற்றிய உங்களுடைய பார்வை இது.

20க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புகள் பலதரப்பட்ட அரசியல் சிந்தனைகள் உலவும் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளே என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. அத்தனை அமைப்புகள் ஏன், ஒரே ஒரு ஆள்கூட உங்களை விமர்சிக்க, எதிர்க்க இந்த நாட்டில் உரிமையுண்டு. உங்கள் படத்தின் மீதான தடை என்பதை நான் ஒரு துளிகூட ஆதரிக்கவில்லை என்றாலும் தடை விதியுங்கள் எனக் கோருவதற்கு அந்த ஒரு தனிமனிதனுக்குக்கூட இடமுண்டு. அதற்கு நீங்கள் பதில் சொல்லத்தான் வேண்டும். அதை சட்ட ரீதியிலும் அரசியல் ரீதியிலும்தான் நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் உங்கள் பதில் அதிர்ச்சிகரமானதாக இருந்தது.

எந்தப் படத்தைப் பார்த்து இது எங்களை மிகவும் மோசமாக சித்தரிக்கிறது என முஸ்லிம் அமைப்புகள் சொல்கின்றனவோ அந்தப் படத்தைப் பார்த்தால் “ஒரு நடுநிலையுள்ள, தேசபக்தியுள்ள முஸ்லிம் பெருமைப்படுவான்” என நீங்கள் கூறுகிறீர்கள். அப்படியென்றால் போராடிய முஸ்லிம் அமைப்புகள், எதிர்க் குரல் கொடுத்த முஸ்லிம்கள் நடுநிலை அற்றவர்கள், தேசவிரோதிகள் என்று நீங்கள் கூற விரும்புகிறீர்களா? இந்த தந்திரத்தை யாரிடம் கற்றுக் கொண்டீர்கள் என்று புரிகிறது. உங்களுடைய உலகநாயகன் ஜார்ஜ் புஷ்ஷிடமிருந்துதானே?

இது எல்லாவற்றையும்விட உச்சமானது, கலாச்சார பயங்கரவாதம் என்கிற குற்றச்சாட்டு. ஒரே ஒரு கிராமத்திலே, டாவின்ஸிகோட், டேம் 999 போன்ற படங்கள் இதற்கு முன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியா முழுமையிலும் பல திரைப்படங்கள், ஓவியங்கள், நாவல்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. கருத்துரிமை சுதந்திரம் என்கிற அடிப்படையில் பார்க்கையில் நாம் எந்த வித தடையையும் ஏற்க இயலாது. ஆனால் நாட்டில் நிலவும் சமூகச் சூழல்தான் இவ்வாறு தடை கோரும் அரசியலை உருவாக்கியிருக்கிறது. பிளவுண்ட சமூகத்தின் நோய்க்குறியீடுதான் எதற்கெடுத்தாலும் தடை தடை என்று பதறுவது. விஸ்வரூபத்தை எதிர்ப்பது உங்களைத் தனிப்பட்ட முறையில் எதிர்ப்பதாகாது. இந்தியாவிலும் உலகளவிலும் இஸ்லாத்தின் பெயரால் நடைபெறும் பயங்கரவாதம் ஒருபுறமாகவும் இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் மற்றொரு புறமாகவும் இருக்க, இந்த இரண்டு முனைகளுக்கிடையில் 99 சதவீத முஸ்லிம் மக்கள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பதற்றம்தான் இந்த போராட்டத்துக்கான பிரதான காரணம். அதை முதலில் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு எதிராக போர்க்கொடி ஏந்திய முஸ்லிம் அமைப்புகள்கூட ஒரே மாதிரியானவை அல்ல. அடிப்படைவாதிகள் முதல் ஜனநாயகவாதிகள் வரை பலவிதமான செயல்பாட்டாளர்கள் அதில் கலந்திருக்கிறார்கள். உங்கள் படத்துக்குத் தடைகோருபவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களும் உண்டு. ஆனால் ஒரே வீச்சில் அவர்களுடைய செயல்பாட்டை கலாச்சார பயங்கரவாதம் என்று உங்களால் எப்படிக் கூற முடிகிறது?

திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியாதபடி ஒரே ஒரு நாள்தான் கழிந்தது. அதற்குள் இவ்வளவு காட்டமான அறிக்கையை நீங்கள் வெளியிட்டிருக்கிறீர்கள். ஆனால் டிடீஎச் விவகாரத்தில் வியாபார ரீதியில் சமரசம் செய்துகொள்ளும் முன்பு அவர்களுக்கு எதிராக நீங்கள் இது வர்த்தக பயங்கரவாதம் என்று சொன்னதாக நாங்கள் கேள்விப்படவில்லை. ஜெயலலிதா சொன்னது சரிதான்: நீங்கள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்!

சுயநலம் தவிர வேறெதுவும் தென்படாத உங்கள் செயல்பாட்டால் சமூகத்தில் ஏற்கனவே இருந்த பிளவு மேலும் அதிகரித்திருக்கிறது. உங்களது பொறுப்பின்மையின் விளைவுகள் உங்கள் “முஸ்லிம் சகோதரர்களுக்கு” எதிராக சமூக ஊடகங்களிலும் தமிழகத்தின் வீதிகளிலும் ஒரு யுத்தத்தையே கட்டவிழ்த்து விட்டிருப்பதை நீங்கள் பார்க்க முடியும். வட இந்தியாவில் சகஜமாக இருந்துவரும் வெறுப்பரசியல் தமிழகத்தையும் ஆட்கொள்ள வந்திருக்கிறது. இருதரப்பு மாதவாதங்களும் விஸ்வரூபம் எடுத்துள்ளன. முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள், தீவிரவாத ஆதரவாளர்கள் என்கிற பிம்பம் மேலும் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. நீங்கள் அஞ்சியது போல தமிழகம் மதசார்பற்ற மாநிலமாக மாறிவிட்டதாகவே தோன்றியது.

ஒரு சாதாரணமான விடயத்தை எல்லோரும் பார்க்கத் தவறுகிறார்கள். “அல் கொய்தாவும் தாலிபான்களும் என்ன செய்கிறார்களோ அதைத்தானே விஸ்வரூபம் காட்டுகிறது? அதில் என்ன தவறு?” என்கிறார்கள் உங்களுக்கு ஆதரவளிப்பவர்கள். மேலோட்டமாகப் பார்த்தால் அது சரிதான் எனத் தோன்றும். நீங்கள் முஸ்லிம் தீவிரவாதிகளை சித்தரித்த விதத்தில் எல்லா முஸ்லிம்களும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பது போன்ற ஒரு பிம்பம் உருவாகிறது என்று முஸ்லிம் அமைப்புகள் கூறுகின்றன. ஏன் அப்படிக் கூறுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள நீங்கள் முஸ்லிம் வேடம் போட்டுப் பார்த்தால் புரியாது; முஸ்லிமாக உணர்ந்து பார்த்தீர்கள் என்றால் மட்டுமே புரியும்.

இருபதாண்டுகளாக, குறிப்பாக உங்கள் மணிரத்னம் ரோஜா படம் எடுத்த நாள் முதலாக, இந்தியாவில் எடுக்கப்பட்ட முஸ்லிம் தீவிரவாதத்துக்கு எதிரான படங்கள் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக மட்டுமே பிறர் பார்க்கும்படியாக ஆக்கியிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் உணர்ந்திருக்கிறார்கள். பல மீடியா ஆராய்ச்சிகளிலும்கூட அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து அதை அறிந்த காரணத்தினால்தான் முஸ்லிம்கள் எதிர்க் குரல் கொடுத்தார்கள். தங்கள் மீதான தாக்குதல்களை இனியும் சகிக்க முடியாது என்கிற நிலையில்தான் உங்கள் “முஸ்லிம் சகோதரர்கள்” இப்போது வீதிக்கு வந்திருக்கிறார்கள்.

எதார்த்தம் பற்றி நீங்கள் பேசுவீர்கள். ஆனால் நாம் பார்வைகள் (perceptions) பற்றியும் பேச வேண்டும். குறிப்பாக சினிமா போன்ற ஊடகங்கள் எதார்த்தங்களின் மீது தாக்கம் செலுத்துவதைவிட பார்வைகளின் மீது தாக்கம் செலுத்துவதே அதிகம். மிகப் பெரிய சினிமாக்காரரான உங்களுக்கு இது தெரியாதது அல்ல. ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கும் இன்று உங்களுக்காகக் குரல் கொடுக்கும் உங்கள் பாலிவுட் நண்பர் ஷாருக் கானுக்கும் அமெரிக்க விமான நிலையங்களில் ஏற்பட்ட அவமானங்கள் எதார்த்தங்களால் ஏற்பட்ட விளைவு அல்ல. ஒருவர் முன்னாள் ஜனாதிபதி; இன்னொருவர் சினிமா ஸ்டார். ஆனால் அவர்கள் இருவரும் முஸ்லிம்கள் என்பதால், முஸ்லிம் என்றாலே பயங்கரவாதியாக இருக்கக்கூடும் என்கிற பார்வை நிலவுவதால், அமெரிக்காவின் கரங்கள் அவர்களை பரிசோதனை செய்தன.

உங்கள் படத்துக்கு எதிராகப் போராடிய முஸ்லிம்களின் பெரும்பான்மைக் கருத்து என்ன? நீங்கள் ஏன் “எங்களுடைய” தாலிபான்களையும் அல் கொய்தா “போராளிகளையும்” கேவலமாகச் சித்தரிக்கிறீகள் என்றா அவர்கள் கேட்டார்கள்? அல் கொய்தாக்களையும் தமிழக முஸ்லிம்களையும் ஏன் இணைக்கிறீர்கள் என்றுதான் அவர்கள் கேட்டார்கள். கோவைக்கும் கந்தகாருக்கும் முடிச்சுப் போடாதீர்கள் என்றுதான் அவர்கள் குரல் எழுப்பினார்கள். குண்டு வைப்பதற்கு முன்பாக குரான் படிக்கிறார்கள் என்று நீங்கள் காட்டும் ஒரு காட்சி, குரான் படிக்கிறவர்களெல்லாம் குண்டு வைக்கவே செய்வார்கள் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்காதா என்று அவர்கள் கேட்டால் அது நடுநிலையற்ற கேள்வியா? அப்படி கேட்பவர்கள் தேசவிரோதிகளா? அதற்கு நீங்கள் பதிலளிக்காதபோது உங்களை எதிர்க்கக்கூடாதா? எதிர்த்தால் அது கலாச்சார பயங்கரவாதமா? கமல் சார், உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை. சினிமாவில் ஸ்டீரியோடைப்கள் செய்யும் அட்டகாசங்கள் உங்களுக்குப் புரியாதா? அந்தக் கலையில் வல்லவராயிற்றே நீங்கள்?

“எங்களைத் தீவிரவாத சக்திகளோடு சேர்த்து ஏன் முடிச்சுப் போடுகிறீர்கள்” என்பதுதானே பெரும்பாலான முஸ்லிம்களின் கேள்வி? எல்லா மதங்களிலும் தீவிரவாதிகளும் அடிப்படைவாதிகளும் இருக்கிறார்கள். எப்படி ஒவ்வொரு இந்துவும் ஒரு ஆர்எஸ்எஸ்காரர் இல்லையோ, அப்படித்தான் ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு அல் கொய்தா தீவிரவாதி இல்லை. பழமையில் பிடிப்புள்ள ஒவ்வொரு இந்துவும் ஒரு மத அடிப்படைவாதி அல்ல. அப்படித்தான் பழமைப் பிடிப்புள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு தாலிபான் அல்ல. மத பயங்கரவாதிகள் என்பது தனி ரகம். அவர்களை எதிர்த்துப் போராடுவது எல்லோருடைய வேலையும்தான். ஆனால் அது மிகவும் பொறுப்புடன் கையாளப்பட வேண்டிய விடயம். படத்தில் எப்படியோ, படத்துக்கு வெளியே அதை நீங்கள் சற்றும் பொறுப்பில்லாத வகையிலேயே அணுகத் தொடங்கினீர்கள். அதன் பலனை அனுபவித்தீர்கள். கர்ம பலன்?

இது ஒரு பக்கம் இருக்கட்டும் கமல் சார்; இன்னொரு முக்கியமான விடயத்தை நான் உங்களிடம் பேசவேண்டியதிருக்கிறது. இந்த அம்சம் பற்றி இங்கே அதிகமாக யாரும் பேசவில்லை. ஆரம்பத்தில் விஸ்வரூபம் குறித்த தகவல்கள் வந்தபோது, நீங்கள் தமிழ் சினிமாவை ஹாலிவுட் அளவுக்கு உயர்த்துகிறீர்கள் என்று மற்றவர்களைப் போல நானும் நினைத்துக் கொண்டேன். பெரிய பட்ஜெட், அற்புதமான கிராபிக்ஸ், சரளமான திரைக்கதை, பிரம்மாண்டமான காட்சிகள் என பொழுதுபோக்குக்கு நீங்கள் கியாரண்டி தருவீர்கள் என சந்தோஷமாக இருந்தது. ஆனால் விஸ்வரூபம் வந்த பிறகுதான் தெரிந்தது; நீங்கள் தமிழ் சினிமாவை ஹாலிவுட் அளவுக்குக் கொண்டுசெல்லவில்லை; மாறாக ஹாலிவுட்டை தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவந்திருக்கிறீர்கள் என்பது! அதாவது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பிரச்சார பீரங்கியாக விளங்கும் ஹாலிவுட் அரசியலை தமிழ்நாட்டுக்கு டவுன்லோடு செய்திருக்கிறீர்கள் என்று பிறகுதான் புரிந்தது!

உங்கள் படத்தை இதுவரை எங்களால் பார்க்க இயலவில்லை. உங்கள் படத்தைப் பார்க்க எனக்கிருக்கும் உரிமையைத் தடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு என் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய நடவடிக்கைகள் இஸ்லாம் மக்கள் மீதான தவறான அபிப்பிராயங்களை மேலும் வலுப்படுத்தவே செய்யும் என முஸ்லிம் அமைப்புகளுக்கு எச்சரிக்க வேண்டிய கடமையும் நமக்கிருக்கிறது. படம் பார்க்காததால் அதிலுள்ள காட்சிகள், வசனங்கள் குறித்து என்னால் பேச முடியாது. எப்படியும் அவற்றில் சிலவற்றை நீங்கள் நீக்கவும் முடிவு செய்திருக்கிறீர்கள் என்பதால் இனி பேசியும் பலனுமில்லை. ஆனால் விஸ்வரூபம் படத்துக்கான உங்கள் கதைக் கருவையும் அதிலுள்ள அரசியல் பின்புலத்தையும் பற்றி மட்டும் நாம் பேசுவோம். அந்தக் கதைக்கரு குறித்து ஏற்கனவே உங்களுக்கு ஆதரவாக மீடியாவில் விமர்சனம் எழுதியவர்களும் பொதுவான தகவல் குறிப்புகளும் தெரிவிக்கின்றனர். அதை நாடே அறியும்.

கமல் சார், விஸ்வரூபம் படத்தை எடுக்கும் முன்பு கதைக்கான ஆராய்ச்சியில் நீங்கள் நிச்சயம் இறங்கியிருப்பீர்கள். அநேகமாக அந்த சமயத்தில் பிரபல ஆராய்ச்சியாளர் மக்மூத் மம்தானி எழுதிய குட் முஸ்லிம் பேட் முஸ்லிம் என்கிற நூலைப் படித்திருப்பீர்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் யார் “நல்ல முஸ்லிமாக” கருதப்படுகிறார், யார் “கெட்ட முஸ்லிமாக” வெறுக்கப்படுகிறார் என்பதை அந்த நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பெரும்பாலும் அமெரிக்க நலன்களுக்கு இசைந்த முஸ்லிம்கள் “நல்ல முஸ்லிம்கள்”, அதை எதிர்ப்பவர்கள் “கெட்ட முஸ்லிம்கள்” என்ற கருத்து நிலவுவதை அந்த ஆராய்ச்சியாளர் அம்பலப்படுத்துகிறார். இந்தப் பிரிவினை ஹாலிவுட் தன்மையுள்ள ஒன்று. இந்தப் பார்வையைத்தான் நீங்கள் உங்களுடைய அறிக்கைகளிலும் நேர்காணல்களிலும் வெளிப்படுத்தி வருகிறீர்கள். மும்பையில் ஜனவரி 31ல் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது நீங்கள் சொன்னீர்கள்: “இந்தப் படம் முஸ்லிம்களைப் புண்படுத்தும் ஒன்று அல்ல. இந்தப் படத்திலுள்ள நல்ல முஸ்லிம்கள் இந்தியர்கள். கெட்ட முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்; அதுவும் இந்தியாவைச் சேராத பயங்கரவாதிகள்.” தர்க்கபூர்வமாகத் தோன்றும் இந்த வார்த்தைகளுக்குப் பின், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? உங்கள் படத்தைவிட நீங்கள் மிகவும் அபாயகரமானவராக இக்கிறீர்களோ என்ற எண்ணம் எழுகிறது. எந்த இந்திய முஸ்லிம் உங்கள் பார்வையில் நல்ல முஸ்லிம்?

படத்தில் இந்திய முஸ்லிமாக வரும் உங்களுடைய அரசியலை கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போமா? நீங்கள் சிஐஏவுடன் சேர்ந்து அல் கொய்தாவை துவம்சம் செய்கிறீர்கள். இனியும் செய்வீர்கள். ஆனால் இந்தக் கதைக்கருவே அடிப்படையில் கேள்வி கேட்கப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால் இது இந்திய முஸ்லிம் ஒருவரின் பார்வையில் எழுதப்பட்ட கதையாகத் தெரியவில்லை. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் பல்வேறு வியூகங்களில் எந்த வியூகம் உண்மையிலேயே அந்த பயங்கரவாதத்தை மேலும் ஊக்குவிக்குமோ அதற்கான கதையை நீங்கள் தேர்வு செய்திருக்கிறீர்கள் என்றே தெரிகிறது. பச்சையாகச் சொல்வதென்றால் தெற்காசியாவில் எத்தகைய வெளியுறவுக் கொள்கை நிலவ வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறதோ அதை நீங்கள் கதையாக ஆக்கியிருக்கிறீர்கள்.

எதார்த்தமாகவே பேசுவோமே! முஸ்லிம் தீவிரவாதத்துக்கு நாம் பலியாகியிருக்கிறோம். இந்துத்துவத்துக்கு எதிர்வினையாக ஏற்பட்டதுதானே என்றெல்லாம் கூறி முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை நியாயப்படுத்தவே முடியாது. எனவே அல் கொய்தாக்களையும் லஷ்கர் – இ – தொய்பாக்களையும் (ஒரு சிறு புன்னகை என் உதடுகளில், பல்ராம் நாயுடு வந்து செல்கிறார்!) எதிர்த்துப் போராடத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் பயங்கரவாதத்துக்கு எதிரான அரசியல் மற்றும் ராணுவ ரீதியிலான வியூகங்களுக்கு நீங்கள் சிஐஏவுடன் கூட்டு சேர்வதுதான் எனக்குப் பிரச்சனையாக இருக்கிறது.

அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பின் லட்சணம் என்ன?  அந்தப் பெயரால் அது நடத்திவரும் அரசியலின் உள்நோக்கம்தான் என்ன? பயங்கரவாத எதிர்ப்பு என்கிற விடயத்தில் அமெரிக்கா இரண்டு லீலைகளைப் புரிகிறது. முதலாவது, அது “நல்ல முஸ்லிம்களின்” துணையோடு “கெட்ட முஸ்லிம்களை” ஒழிப்பதற்கான உத்தியைக் கையாள்கிறது. இரண்டாவது, உகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களை ஒரே மாதிரியானவர்களாகக் காட்டி அவர்களுக்கிடையிலுள்ள பன்மைத்துவத்தை அழிக்கிறது. அதன் மூலமாக மறைமுகமாக, அரபு தேசியவாதத்தின் அடிப்படையிலான மதவாதப் போக்கான வாஹாபியிசம் பரவ அது வழிவகுக்கிறது. “நடுநிலையையும் தேசபக்தியையும் கொண்ட முஸ்லிம்களை” அடிப்படைவாதிகளின் பக்கத்தில் விரட்டியடிக்கிறது.

எல்லா முஸ்லிம்களும் தாலிபான் பழமைவாதத்தையும் அல் கொய்தா தீவிரவாதத்தையும் ஏற்பவர்கள் இல்லை. சமீபத்தில் இலங்கையைச் சேர்ந்த ரிஸானா நஃபீக் என்கிற தமிழ் முஸ்லிமை சவூதி அரேபியாவில் சிரச்சேதம் செயத்போது முஸ்லிம்களில் மிகமிகப் பெரும்பான்மையோர் அடிப்படைவாத சவூதி அரேபியாவுக்கு எதிராகத்தான் நின்றார்கள். கமல் சார், மாலாவை மறந்திருக்க மாட்டீர்கள்தானே? அறுபதாண்டுகள் ஆகியும் மதவாதிகளாலும் ராணுவ ஜெனரல்களாலும் பாகிஸ்தானை ஒருபோதும் மதவாத நாடாக மாற்ற முடியவில்லை. பாகிஸ்தானின் சிவில் சமூகம் தாலிபான்மயமாக்கத்துக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஈரானிலிருந்து வரும் மிகச் சிறந்த உலகத் தரம் வாய்ந்த திரைப்படங்களில் அந்த மக்களின் கலாச்சாரத்தையும் விடுதலை தாகத்தையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். விநாயகனுக்கும் கருடனுக்கும் அடையாளபூர்வமாகவே முக்கியத்துவம் தந்த இந்தோனேஷியா என்கிற முஸ்லிம் நாட்டையும் நீங்கள் அறிவீர்கள். மத்திய ஆசியாவில் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்து விடுபெற்ற பல ஸ்தான் நாடுகளில் மத அடிப்படைவாதிகளால் பெரிய தாக்கம் எதையும் உருவாக்கிவிட முடியவில்லை. காஷ்மீர், பாலஸ்தீனம், செச்சென்யா, கிழக்கு துர்கெஸ்தான் போன்ற இடங்களில்  தேசிய இனப் பிரச்சனைகளால் உருவான மோதல்களை மதப் பிரச்சனைகளாக மாற்றி சில முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகள் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றன. மிகப் பெரிய முஸ்லிம் தொகை கொண்ட இந்தியாவின் இன்றைய கலாச்சார முகமே இஸ்லாமிய மரபுகளையும் உள்ளடக்கியதுதான் என்பதை ஹேராம் படத்துக்காக நீங்கள் ஆராய்ச்சி செயதபோது நிச்சயம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஒரு மூன்றாம் தர ஹாலிவுட் இயக்குநர் செய்கிற வேலையைத்தான் விஸ்வரூபம் படத்தில் நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. சம்பந்தப்பட்ட இரு தரப்புகளையும் திருப்திப்படுத்துவதற்காக நீங்கள் பலவிதமான காட்சிகளை வைத்திருக்கலாம். அது வெறும் உத்திதான். கதையின் அடிப்படை இலக்கு என்ன என்பதுதான் முக்கியம். அது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையாகவே இருக்கிறது என்பதுதான் பிரச்சனை.

இந்தியா அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்லாமிய பயங்கரவாதத்தை முடிவு கட்ட முடியுமா? ஒருபோதும் முடியாது. கலாச்சார ரீதியில் மத்திய ஆசியாவின் நீட்சியாகவே உள்ள இந்தியா தனது பக்கத்து நாட்டவர்களுடன் எத்தகைய உறவை வைத்துக் கொள்வது என்பது முற்றிலும் இந்தியாவின் முக்காலங்களையும் சம்பந்தப்பட்ட விடயம்.

ஒரு நடைமுறை உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். இந்தியா பாகிஸ்தானோடு முரண்படுகிறது. ஆனால் ஆஃப்கானிஸ்தானுடனும் ஈரானுடனும் தோழமை பாராட்டக்கூடிய நிலையில் இருக்கிறது. இது ஒரு புவிசார் வியூக அரசியலின் வெளிப்பாடு. ஆனால் அமெரிக்காவின் கொள்கை என்ன? அது பாகிஸ்தானோடு தோழமை பாராட்டுகிறது. ஆனால் ஆஃப்கனில் ஆக்கிரமிப்புப் படையாக இருக்கிறது. ஈரானை நெ.1 பகைவனாகப் பார்க்கிறது. இந்தச் சூழலில் சிஐஏவுடன் சேர்ந்து இந்திய உளவுத்துறை செயல்பட வேண்டும் என்கிற உங்கள் அரசியல் யாருடையது? அமெரிக்காவினுடையதா, அல்லது இந்தியாவினுடையதா? அல்லது இந்திய நலன்களை அமெரிக்காவுக்கு முற்றிலும் சரணடைய வைக்கக் கோரும் இந்தியாவின் ஒரு சிறு தரப்பினரின் வாதங்களை நீங்கள் முன்மொழிகிறீர்களா? சொல்லுங்கள், “ஒர் தேசபக்தி உள்ள இந்தியனாக” நான் என்ன முடிவு எடுப்பது?

அல்லது ஹாலிவுட் கனவு உங்கள் கண்ணை மறைத்துவிட்டதா? ஹாலிவுட் என்பது அமெரிக்க கலாச்சார ஏகாதிபத்திய கருவி என்பதை ஒத்துக் கொள்ளாத ஒரு சினிமாக்காரன்கூட இந்த உலகில் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு காலத்தில் செவ்விந்தியர்களை வேட்டையாடினார்கள் ஹாலிவுட் கௌபாய்கள். இடையில் பனிப்போர் காலத்தில் எதற்கெடுத்தாலும் ரஷ்யர்கள் மீது பழி போட்டார்கள். உள்ளூரில் கருப்பின, ஸ்பானிய மக்களைக் கிண்டலடித்தார்கள். சீனர்களையும் ஜப்பானியர்களையும் மஞ்சள் பிசாசுகளாக வர்ணிக்கப் பார்த்தார்கள். வேறு யாரும் கிடைக்காதபோது வேற்றுக் கிரகவாசிகளையும் இயற்கைச் சீற்றங்களையும் எதிர்த்து உலகைக் காக்கப் போராடுவது வழக்கம். ஆனால் 9/11க்குப் பிறகு அவர்களது இலக்கு இஸ்லாமியர்கள்தான். அவர்களது வில்லன்கள் அல் கொய்தாவும் தாலிபானும்.

ஆஃப்கானிஸ்தானில் சோவியத் சார்பு அரசை விரட்டுவதற்காகவும் மேற்காசியாவில் ஜனநாயகம் பரவாமலிருந்து தங்கள் எண்ணெய் வியாபாரம் தடையின்றி நடக்கவும் சிஐஏவால் ஊக்குவிக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதப் படைகளிலிருந்து முகிழ்த்தவைதான் அல் கொய்தாவும் தாலிபான்களும். மேற்காசியாவில் பழமைவாத ஆட்சிகள் நீடிக்கும் வரை அமெரிக்காவுக்கு நல்ல காலம். அங்கே ஜனநாயகம் தலைதூக்காத வரைதான் தங்களது பிழைப்பு நடக்கும் என்று அமெரிக்காவுக்கும் தெரியும். கடந்த சில ஆண்டுகளில் உருவான அரபு வசந்தப் போராட்டங்களுக்கு முன்பு வரை அந்த நாடுகளில் உள்ள பிற்போக்கு சர்வாதிகாரிகளை காலங்காலமாக ஆதரித்து வந்தது வாஷிங்டன். 1990களுக்கு முன்பு சோவியத்தை எதிர்க்க எல்லாவிதமான இஸ்லாம் அடிப்படைவாத அமைப்புகளுக்கும் நிதியளித்தது அமெரிக்கா. தெற்காசியாவில் பாகிஸ்தானின் அடிப்படைவாத அமைப்புகளுக்கும் அரசுகளுக்கும் அமெரிக்கா ஆதரவளித்து வந்தது.

பாவம், வளர்த்த கடா மார்பில் பாய்ந்தபோது அது தடுமாறிப் போனது. ஆனால் வளர்த்த கடாவை விட்டுவிட்டு ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகின் மீதே அது பாய்ந்தது. ஈராக்கிலும் ஆஃப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானின் வடமேற்கிலும் அமெரிக்கா தன் ஆக்கிரமிப்பை வலுப்படுத்தி வருகிறது. அதற்கு நியாயங்கள் கற்பிக்கப்பட வேண்டும் இல்லையா? அதற்காக கலாச்சார, ஊடக யுத்தங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. ஹாலிவுட்டும் தன் வேலையைத் தொடங்கியது. ஒரே ஒரு எடுத்துக்காட்டு, கமல் சார்: 2008ல் வெளிவந்த ஹாலிவுட் படமான ஜேஃப்ரி நாக்மனாஃப் இயக்கிய ஸ்பை திரில்லரான டிராய்டரின் கதைக்கருதானே உங்கள் கதைக்கருவும்? (இது ஏற்கனவே அன்வர் என்ற பெயரில் மலையாளத்தில் காப்பியடிக்கப்பட்டு தமிழிலும் டப் செய்யப்பட்டிருக்கிறது).

அமெரிக்க வல்லாதிக்க வெளியுறவுக் கொள்கையின், அமெரிக்க வலதுசாரி கிறிஸ்தவ மற்றும் யூதர்களின் ஜியோனிசக் கொள்கையின் அடிப்படையிலான பார்வையைத்தான் உங்கள் படம் காட்டுகிறது. உண்மையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி. நியாயமாகப் பார்த்தால் இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசும் இடதுசாரிகள்கூட இதற்கு எதிராகக் கொடி பிடித்திருக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யவில்லை.

கமல் சார், நீங்கள் ஒரு நல்ல கலைஞர். பல்வேறு விதமான மனிதர்களை நங்கள் தசாவதாரத்தில் வெளிப்படுத்தியவர். ஆனால் தசாவதாரம் படத்தில்கூட அந்த தமிழ் முஸ்லிம் இளைஞர் என்னவோ பெஷாவரிலிருந்து வந்தவர் போலத்தான் எனக்குத் தோன்றினார். மிகச் சிறந்த இசைக் கலைஞர்கள் உணர்ச்சிகளைக் கிளப்பக்கூடிய பின்புலத்தில் உள்ள கதைகளைப் படமாக எடுக்கும்போது மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். அது மட்டுமல்ல அப்படிப்பட்ட படங்கள் எடுக்கப்படும் செயல்பாடே அவர்களுக்குள் மாற்றம் ஏற்படுத்தும். ஆங்கிலேயரான ரிச்சர்ட் அட்டன் பரோவால் அவரது சொந்த நாட்டவர்களாலேயே அடக்குமுறைக்கு ஆளான காந்தியின் ஆத்மாவை எவ்வாறு தரிசிக்க முடிந்தது? காந்திகூட வர்த்தகத்தில் மிகச் சிறப்பான வெற்றியை ஈட்டிய ஆஸ்கர் அவார்டுகளை வென்ற படம்தான். ஹாலிவுட்காரர்கள் கம்யூனிசத்துக்கு எதிராக ஏகப்பட்ட படங்களைச் சுட்டுத்தள்ளிக் கொண்டிருந்தபோதுதான், அமெரிக்கர்களின் வியட்நாம் துர்சாசகத்தை அம்பலப்படுத்தியது ஆலிவர் ஸ்டோனின் பிளாட்டூன் (1986) என்கிற யுத்தத் திரைப்படம். அதுவும் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்ற படமே. சிறந்த திரைப்படத்துக்கான அகாடமி விருதை மட்டுமல்ல வேறு பல விருதுகளையும் வாங்கிய படம் அது. இவ்வாறாக மேற்குலகிலும் கிழக்கிலும் எத்தனயோ இயக்குநர்கள் உண்மையைச் சொல்லி உலகப் புகழ் பெற்றிருக்கிறார்கள். வர்த்தக ரீதியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

வேடத்துக்கும் நிஜத்துக்கும் இடையிலான வித்தியாசங்களை இந்த உலகம் எளிதில் புரிந்துகொள்ளும். விஸ்வரூபம் படம் நிச்சயமாக முஸ்லிம் எதிர்ப்பு உள்ளடக்கம் கொண்ட படம்தான். உங்களுடைய நோக்கம் அதுவாக இல்லை என்பதை நாங்கள் ஜீரணிக்கக் கஷ்டப்பட்டு ஒப்புக் கொள்வதாக இருந்தாலும், உங்கள் படைப்பு அப்படிப்பட்டதாகவே இருக்கிறது என்பதை வருத்தத்தோடு பதிவு செய்ய விரும்புகிறோம். நீங்கள் மிக அற்புதமான நடிகர். ஆனால் இந்தப் படத்தில் கமல் ஹாசனாகிய நீங்கள் கமால் ஹாசனாக மாறவே முடியவில்லை.