“களத்தில் இறங்கினோம் தமிழர்களுக்காக”: டிரவர் கிராண்ட் நேர்காணல்

தமிழ் ஆழி, பிப்ரவரி 2013

உலகம் / இலங்கை கிரிக்கெட் புறக்கணிப்பு இயக்கம்

களத்தில் இறங்கினோம் தமிழர்களுக்காக

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் இயக்கம் நடத்துகிறார் அந்த நாட்டின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் எழுத்தாளர் டிரவர் கிரான்ட். அவருடன் ஒரு நேர்காணல்.

 

 

ஆஸ்திரேலிய மக்கள், குறிப்பாக அங்கேயுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் டிரவர் கிரான்ட்டை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நாற்பதாண்டு காலமாக ஆஸ்திரேலியாவின் பிரபலமான கிரிக்கெட் எழுத்தாளராக அவர் இருந்துவருகிறார். ஆனால் இப்போது டிரவர் கிரான்ட்டின் பெயர் செய்தித்தாள்களில் இடம்பெறுவது வேறு ஒரு காரணத்துக்காக.

2009 முள்ளிவாய்க்கால் படுகொலைக்குக் காரணமான இலங்கையின் ராஜபக்ஷே அரசுக்கு எதிராகவும் அவருக்குத் துணைபோகும் ஆஸ்திரேலியாவின் லேபர் கட்சி அரசுக்கு எதிராகவும் களமிறங்கியுள்ள டிரவர், இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிப்போம் (Boycott Sri Lanka Cricket Campaign) என்ற பெயரில் ஒரு இயக்கத்தைத் தொடங்கி நடத்திவருகிறார். கடந்த மாதம் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தில் இருந்த இலங்கை அணி போகுமிடங்களிலெல்லாம் டிரவரின் எதிர்ப்பு அணியைச் சந்தித்தது.

ஆஸ்திரேலியாவிலுள்ள இலங்கை தமிழ் அகதிகளுடன் இணைந்து செயல்படும் டிரவரின் இந்த பிரச்சார இயக்கம் அந்த நாட்டின் உயர் பீடங்களிலேயே அதிர்வலைகளை உருவாக்கியிருப்பதுடன், மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதாக உள்ளூர் பத்திரிகைகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்தப் போராட்டம் வெகுவிரைவில் உலகம் முழுமைக்கும் பரவக்கூடும் எனத் தெரிகிறது.

ஜனவரி 20ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சிட்னியில் நடந்த சர்வதேச ஒருநாள் போட்டியின்போது தமிழர்களுக்காகக் களமிறங்கி போராட்டத்திலிருந்த டிரவர் கிரான்ட்டை தமிழ் ஆழி ஆசிரியர் செ.ச.செந்தில்நாதன் தொடர்புகொண்டார். டிரவர் மிக உற்சாகமாக பேசினார். அவருடனான மின்-நேர்காணலிலிருந்து:

தமிழ் ஆழி: திரு. கிரான்ட், இலங்கையில் நிலவும் பதற்றமான சூழலை வெளியுலகிற்குத் தெரியாமல் மறைக்கவே அந்த நாடு தன் கிரிக்கெட் அணியை ஒரு அரசியல் கருவியாகத் தொடர்ந்து பயன்படுத்திவருவதாக நீங்கள் கூறியுள்ளீர்கள். கிரிக்கெட் வட்டாரத்தில் ஆஸ்திரேலியாவிலும் பிற நாடுகளிலும் இது குறித்த விழிப்புணர்வு ஏற்கனவே இருந்ததா, அல்லது உங்கள் போராட்டத்தால் இப்போது அது ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதா? இலங்கையுடனான கிரிக்கெட் உறவைத் துண்டிக்க வேண்டும் என்பது தொடர்பான பிரச்சாரத்தில் நீங்கள் ஈடுபடும்போது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கிரிக்கெட் வட்டாரத்தில் ஆதரவு கிடைக்கிறதா?

டிரவர்: தனது நாட்டின் இமேஜை வளர்க்கவே இலங்கை அரசு தன் தேசிய கிரிக்கெட் அணியை ஒரு பிரச்சார சாதனமாகப் பயன்படுத்துகிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு ஆஸ்திரேலியாவில் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. தமிழர்கள் மீது இலங்கை அரசு கொடூரமாக இழைத்த கொடுமைகள், அந்த அரசால் தமிழர்கள் தண்டனைக்குள்ளாக்கப்படுவது ஆகியவை பற்றியெல்லாம் சமீப காலம் வரை ஆஸ்திரேலிய ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. இலங்கையிலிருந்து பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தவுடன்தான் இங்குள்ள அரசியல்வாதிகள் இவ்விஷயத்தைப் பற்றிப் பேசவே ஆரம்பித்தனர். வழக்கம் போல இனவெறுப்பு காட்டுவதுதான் அவர்களுடைய முதல் எதிர்வினாயாக இருந்தது.

இந்தக் கோடைக்காலத்தில் இலங்கையின் நடப்பு நிலவரத்தை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தியபோதும் அது பற்றிய துண்டறிக்கைகளை விநியோகம் செய்தபோதும் ரசிகர்கள் பலர் அங்கு (இலங்கையில்) நடப்பவை பற்றி தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று கூறினர். மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பணிபுரியும் ஒருவர் நாங்கள் தந்த துண்டறிக்கையைப் படித்த பின்னர் எங்களது பிரச்சார மையத்துடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு “இலங்கை அரசு இத்தகைய அட்டூழியங்கள் செய்திருக்கிறது என்று எனக்கு இதுவரை தெரியாது. உங்களது போராட்டத்திற்கு உதவும்படியாக நான் எனது ஒருநாள் சம்பளத்தைத் தரட்டுமா?” என்று கேட்டார்.

கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கிடைத்த சாதகமான எதிர்வினைகளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். ஆயினும் “மனித உரிமைகளைப் பற்றியெல்லாம் நாண் கண்டுகொள்வதே இல்லை” என்று பொறுப்பற்ற வகையில் சொல்லக்கூடிய சில ‘மேதாவிகள்’ இருக்கின்றனர் (தங்களது மனித உரிமைகள் மீறப்படும்போதுதான் அவர்கள் அதுபற்றி கவலைகொள்வார்கள்). நாங்கள் தந்த துண்டறிக்கைகளைப் படித்து, இவ்விஷயம் குறித்து எங்களிடம் பேசி முழுமையாகத் தெரிந்துகொள்ள விரும்பியவர்களின் எண்ணிக்கை எங்களுக்கு மிகுந்த தெம்பைத் தந்துள்ளது. கிரிக்கெட் போட்டி நடக்கும் ஐந்து மைதானங்களில் இதுவரை நாங்கள் 17,000 துண்டறிக்கைகளை விநியோகித்திருக்கிறோம்.

‘பாக்ஸிங் டே’ அன்று (கிறிஸ்துமஸுக்கு மறுநாள்) மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய டெஸ்ட்  போட்டியின் முதல் நாள் மைதானத்திற்கு வெளியே நாங்கள் போராட்டம் நடத்தினோம். அதற்கு ஒரு நாள் கழித்து, ஆஸ்திரேலியாவில் மிகவும் மதிக்கப்படும் நாளிதழ்களில் ஒன்றான மெல்பர்ன் ஏஜ் பத்திரிகை, வாசகர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. ‘கிரிக்கெட் விளையாட்டிலிருந்து இலங்கை அணியை மற்ற நாடுகள் தள்ளிவைக்க வேண்டுமா?’ என்ற கேள்வியைக் கேட்டிருந்தது. 66% பேர் ‘ஆம்’ என்றும் 34% பேர்  ‘வேண்டாம்’ என்றும் பதில் தந்தனர்.

மெல்பர்ன் ஏஜ் சில மாதங்களுக்கு முன் தன் வாசகர்களிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்காது. அப்படி ஒரு முடிவும் அவர்களுக்குக் கிடைத்திருக்காது. எனவேதான் ஊடகங்களில் மிகப் பரவலாக இடம்பெற்ற ‘இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிப்போம்’ என்ற முழக்கத்துடனான எங்களது பிரச்சாரம் நல்ல பலனைத் தர ஆரம்பித்துவிட்டது என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரிந்தது.

கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட்டை நிர்வகிக்கும் அதிகாரிகளும் இப்பிரச்சனைக்கு ஆதரவளிக்க ஓரணியில் ஒன்றுதிரளவில்லை என்றே நான் நினைக்கிறேன். அது கிட்டத்தட்ட நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். அரசியல் பிரச்சனையைப் பற்றி கிரிக்கெட் வீரர்கள் ஏதாவது சொன்னால் அவர்கள் தத்தம் நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை மீறியவர்களாக ஆகிவிடுவார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தற்போது கிரிக்கெட்டுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், எந்தெந்த வழிகளில் தம்மால் பணம் சம்பாதிக்க முடியுமென்ற யோசனையில் இருக்கிறார்களே தவிர, ‘இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிப்போம்’ என்பது போன்ற பிரச்சாரங்களுக்கு வரமாட்டார்கள். அவற்றில் தலையிட்டால் தங்களது பணவரவும் கௌரவமும் பாதிக்கப்படுமோ என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.

முரளீதரன் இதற்கான ஒரு சிறந்த உதாரணம். தமிழராக (இந்தியத் தமிழர்) இருந்தபோதிலும் தன் இன மக்களுக்கு ஆதரவாக அவர் எப்போதும் எதையும் கூறியதில்லை. இலங்கையின் மேல்தட்டு வர்க்கத்தில் பணப்பிரச்சனை எப்போதும் இருந்திராத ஒரு பிரிவில் இருப்பதாலும் அவரது சமூக அந்தஸ்தும் அவரை அவ்வாறு கட்டிப் போட்டிருக்கின்றன. சொல்லப்போனால், ஒரு முறை யுத்தத்தில் மறைந்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்ட புகைப்படம் ஒன்றை நான் பார்க்க நேரிட்டபோது, எங்கே தன் பிழைப்பு தடங்கலின்றி நடக்கும் என்பதை அவர் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவே எனக்குத் தோன்றியது. கொடுமை என்னவென்றால் அதே போரில் மாண்ட தன் இன மக்களுக்கு அஞ்சலி செலுத்த அவர் சென்றிருந்தால், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் அனைத்துப் பிரிவுகளின் கீழும் அவர் மேல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடும்.

நாங்கள் அரசியல் பேச விரும்பவில்லை என்கிறார்கள். ஆனால் குமார் சங்ககாரா போன்றவர்கள் எப்போது பத்திரிகையாளர்களை சந்தித்தாலும் எங்கள் நாட்டில் எல்லாம் அமைதியாக இருக்கிறது, நாங்கள் நல்லிணக்கத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று பேசிக் கொண்டையிருக்கிறார். ஒரு கொடூரமான சர்வாதிகாரிக்கு பிரச்சார ஏஜெண்டாக மாறியிருக்கிறார்கள். அவரும் பிற இலங்கை வீரர்களும் அரசியல் சாயம் விழுந்துவிடுமோ என்று அஞ்சுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இது அரசியல் இல்லையா? இதைவிட மோசமாக அரசியல் செய்ய முடியுமா?

 

தமிழ் ஆழி: நீங்கள் இந்த பிரச்சார இயக்கத்தை எப்போது தொடங்கினீர்கள்? இப்படி ஒரு இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்ற உந்துதல் எப்படி உங்களுக்கு வந்தது? உங்களுடைய நாற்பது ஆண்டுகால இதழியல் வாழ்க்கையில் இது ஒரு புதிய இன்னிங்ஸாக இருக்கிறதே.

டிரவர்: நான் ஒரு விளையாட்டு எழுத்தாளர்தான். ஆனால் சர்வதேச விவகாரங்களில் எனக்கு ஆழமான ஆர்வம் எப்போதுமுண்டு. கிரிக்கெட். ஒலிம்பிக்ஸ், உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என எப்போதும் நான் உலகைச் சுற்றியவாறு இருப்பேன்.

பல ஆண்டுகளாக இலங்கைச் சூழலைக் கவனித்து வருகிறேன். யுத்தத்தின் இறுதியில் தமிழர்களைக் கொத்துக் கொத்தாக ராஜபக்ஷே ஆட்சி கொன்று குவித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். என் பத்திரிகைக்கார புத்தியைப் பயன்படுத்தி என்ன நடந்தது என்பதை ஆராய்ச்சி செய்தேன். அந்த தீய அரசு பற்றிய முழு உண்மைகளையும் நான் விரைவில் தெரிந்துகொண்டேன்.

ஆனால் தமிழ் அகதிகள் சிலருக்கு உதவத் தொடங்கியதுதான் இந்த விவகாரத்தில் நான் தீவிரமாகச் செயல்படுவதற்கான பிரதான காரணமாக இருந்தது. வடக்கிலும் கிழக்கிலும் இளைஞர்கள் ராணுவத்தால் எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்கிற கண்ணீர்க் கதைகளை நான் அவர்களிடமிருந்து தெரிந்துகொண்டேன். ஒரு கிராமத்தை ஒரு முழு பட்டாலியனும் சுற்றிவளைத்த சம்பவத்தை ஒருவர் கூறினார். ஊரில் நுழைந்த ராணுவ வீரர்கள் அங்கே இளம் ஆண்கள் கிடைத்தால் அவர்களை சிறைக்குள் தள்ளியதையும் இளம் பெண்களைக் கண்டால் பெரும்பாலும் அவரவர் குடும்பத்தினர் முன்னிலையிலேயே ரேப் செய்ததையும் கூறினார். குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களைப் பார்த்தால் அவர்களுடைய மார்பகங்களை வெட்டி எறிந்ததையும் அவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் பலரைச் சந்தித்தேன். ஒவ்வொருவரும் இதுபோல் அதிர்ச்சிகரமான சம்பவங்களைச் சொன்னார்கள். எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்த பின்பு இந்த மக்களுக்காக உதவுவதைவிட வேறு வழியில்லை என்று முடிவெடுத்தேன். நான் 1975ல் இருந்து கிரிக்கெட் எழுத்தாளராக இருந்து வருகிறேன். இந்த ஆட்டத்தின் அரசியல் எனக்கு அத்துபடி.

இந்தப் பிரச்சனையைப் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமானால் கிரிக்கெட் மூலமாக அதைச் செய்வதே நல்ல வழி என்று உணர்ந்தேன். அப்போதுதான் மீடியாவுக்கு உறைக்கும். பொதுமக்கள் என்ன என்று கேட்பார்கள் என எனக்குத் தெரியும்.

எனது வாழ்க்கையில் இது ஒரு புதிய அத்தியாயம். மைய நீரோட்ட இதழியலாளராக இருக்கிறேன். இதுவரை நான் வேலை செய்துவந்த சூழல்களிலேயே மிகவும் உற்சாகமான சூழல் இதுதான் என்பதை நான் உங்களுக்கு உறுதிபடச் சொல்ல முடியும்.

தமிழ் ஆழி: உங்களுக்கு யார் உறுதுணையாக இருக்கிறார்கள்? அரசியல் கட்சிகளும் மக்களும் உங்கள் அழைப்புக்கு எப்படி எதிர்வினை புரிகிறார்கள்?

டிரவர்: பல்வேறு இடங்களிலிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவு அபாரமானவை. உலகப் புகழ் பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் தாமஸ் கெனீல்லி எங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார். இலங்கைக்கான ஆஸ்திரேலிய ஹைகமிஷனர் ப்ரூஸ் ஹை, நார்வேயைச் சேர்ந்த திரைஞர் பீட் ஆர்ன்ஸ்டட், புகழ் பெற்ற அமெரிக்க சட்ட வல்லுநர் பிரான்சிஸ் ஏ.பாய்ல் போன்றவர்களின் ஆதரவு கிடைத்தது. சிட்னி பீஸ் பவுண்டேஷன் தலைவர் ஜுலியன் பர்ன்ஷைட் கிரீன் பார்ட்டியைச் சேர்ந்த பல எம்.பிக்கள் என அந்த ஆதரவுத் தளம் விரிந்துகொண்டே செல்கிறது.

நாங்கள் மக்கள் மத்தியில்தான் வேலை செய்கிறோம். ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளை ஈர்ப்பது கடினம். கடந்த மாதம் இலங்கை சென்ற எங்கள் வெளியுறவுத் துறை அமைச்சர் பாப் கார் அந்த சர்வாதிகாரியுடன் சேர்ந்து கூத்தடித்துவிட்டு வந்திருக்கிறார். இலங்கை அகதிகள் ஆஸ்திரலியாவுக்கு வரக்கூடாது என்பதுதான் அவருடைய ஒரே லட்சியம். ஏனென்றால் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் வரப்போகிறது. அதனால் போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஒரு அரசோடு சமரசம் செய்துகொள்வதில் ஆஸ்திரேலிய அரசுக்குத் தயக்கமே இல்லை. இலங்கை கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டுமா என பல தடவை அவரிடம் கேட்கப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்தபடியே அவரும் கூடாது என்றுதான் பதில் சொன்னார். ஆனால் பல தடவை அந்தக் கேள்வியை அவர் எதிர்கொள்ள நேரிட்டது என்பதுதான் இந்த இயக்கத்தின் வெற்றி.

 

 

தமிழ் ஆழி: இலங்கை அரசும் சற்று ஆடிப்போயிருக்கிறது. உங்களையும் உங்கள் ஆதரவாளர்களையும் கண்காணிக்க தன் புலனாய்வு ஏஜென்சிகளை அது ஏவிவிட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டோம். இது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.

டிரவர்: நான் கவலைப்படவில்லை. அவர்கள் என்னை வந்து புகைப்படம் எடுத்தபோதெல்லாம் நான் அவர்களை புகைப்படம் எடுத்தேன். இதுபோன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளால்தான் புலம்பெயர் தமிழர்கள் இதுவரை கோழைகளைப் போல மவுனமாக இருக்க நேரிட்டது. அவர்களின் நடவடிக்கைகளைப் புகைப்படம் எடுத்து பிறகு இலங்கையில் அவர்களது உறவினர்கள் வீட்டில் நுழைந்து துன்புறுத்துவது போன்ற சம்பவங்கள் முன்பு நடந்திருக்கின்றன. ஆனால் 2009 படுகொலைக்குப் பிறகு இந்த அச்சம் போய்விட்டது. இனி தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். தமிழர்கள் என்று பெருமைப்பட சொல்லிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கே ஆஸ்திரேலியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் வந்திருக்கிறார்கள். இனி ஓரடியையும் அவர்கள் பின்னோக்கி வைக்கமாட்டார்கள். தங்களைப் படமெடுக்க வந்த இலங்கை அரசின் கைக்கூலிகளை இவர்கள் திரும்பி படமெடுத்தவுடன் அந்தக் கைக்கூலிகள் ஓடி ஒளியப் பார்த்தார்கள். வேடிக்கையாக இருந்தது.

தமிழ் ஆழி: காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை (சிஎச்ஓஜிஎம்) இலங்கையில் கூட்டவதைத் தடுக்க வேண்டுமென உங்கள் அரசை நீங்கள் நிர்பந்தித்திருக்கிறீர்கள். இதற்கு பலன் இருக்கிறதா?

டிரவர்: காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை எப்படி நடத்துவது என ஆஸ்திரேலிய அரசு இலங்கை அரசுக்கு வழிகாட்டியாக செயல்டுவதைக் கண்டு பல ஆஸ்திரேலியர்களைப் போலவே நாங்களும் அதிர்ந்து போயிருக்கிறோம். இது ஒரு லேபர் கட்சி அரசாங்கமாம்! 2009 போர்க்குற்றம் தொடர்பாக இலங்கையின் மீது சுயாதீனமான விசாரணை மேற்கொள்வதில் உறுதியான முன்னேற்றம் இல்லாவிட்டால் இந்தக் கூட்டத்துக்கு வரமாட்டோம் என்று கனடாவின் வலதுசாரி கன்சர்வேடிவ் அதிபரான ஸ்டீபன் கார்ப்பரே கூறியிருக்கிறார். ஆனால் கார்ப்பரை சந்தித்து அவரை இணங்க வைப்போம், ராஜபக்ஷேவுடன் பேசவைப்போம் என்கிறார் எங்களுடைய அமைச்சர் கார். ஆனால் தங்கள் அரசு முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றும் தங்கள் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் கார்ப்பர் கண்டிப்பாக கலந்துகொள்ளமாட்டார் என்றும் கனடிய குடிபுகல்வு அமைச்சர் தெளிவாக சோல்லிவிட்டார். இது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி அரசுக்கு கனடாவிலுள்ள கன்சர்வேடிவ் அரசு மனித உரிமைகள் குறித்து பாடம் எடுக்க வேண்டிய அளவுக்கு நிலைமை இங்கே விநோதமாக இருக்கிறது.

தமிழ் ஆழி: தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் முறை நிலவியபோது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி புறக்கணிக்கப்பட்டது. ஐசிசி கூட அங்கே சுற்றுப்பயணம் செல்வதற்கு தடை விதித்தது. நாம் இன்னமும் அது போன்ற ஒரு காலகட்டத்தில்தான் வாழ்கிறோமோ? விளையாட்டில் தார்மீகம் என்கிற விழுமியத்துக்கு கிரிக்கெட் உலகில், கிரிக்கெட் அமைப்புகளிடையில் இப்போதும் மதிப்பிருக்கிறதா?

டிரவர்: இன்று கிரிக்கெட் துறையில் தார்மீகம் என்பதற்கெல்லாம் அர்த்தமிருப்பதாகத் தோன்றவில்லை என்றே நினைக்கிறேன். கிரிக்கெட் அணிகள் மது நிறுவனங்களிடமும் பாஸ்ட்புட் நிறுவனங்களிடமும் ஸ்பான்சர் வாங்குவதை நீங்களும் பார்க்கலாம். ஆஸ்திரேலியாவில் உடல் பருமனும் ஆல்கஹாலும்தான் தடுக்கப்படக்கூடிய மரணங்களுக்கு இரண்டு மிகப் பெரிய பிரதான காரணங்களாக உள்ளன.

1971ல் வெள்ளையர்களை மட்டுமே கொண்டிருந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியுடன் விளையாட, பயணம் செய்ய ஆஸ்திரேலியாவில் எதிர்ப்பு எழுந்தது. அதனால் 1971 – 72 போட்டிகள் ரத்தாயின. போட்டிகள் நடக்க வேண்டும் என்றுதான் கிரிக்கெட் அமைப்புகளும் அரசும் விரும்பின. ஆனால் போராட்டங்களைக் கண்டு அவர்கள் அஞ்சினார்கள். தென்னாப்பிரிக்காவில் இன ஓதுக்கல் முடிவுக்கு வரும் வரை அந்தத் தடை தொடர்ந்தது.

இலங்கையை தென்னாப்பிரிக்காவுடன் ஒப்பிட முடியாதுதான். ஆனால் இன ஒதுக்கல் என்கிற தீமைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அரசியல் நோக்கத்துக்காக புறக்கணிப்பு என்கிற உத்தி மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. அது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றிகரமாக செயல்படுமானால் அது ராஜபக்ஷேவுக்கு எதிராகவும் வெற்றிகரமாக செயல்பட முடியும். இலங்கையின் மிகப் பிரதானமான விளையாட்டே கிரிக்கெட்தான். அதில் ஒரு அடி விழுந்தால் மாற்றங்கள் உருவாகலாம்.

தமிழ் ஆழி: இந்த பிரச்சார இயக்கம் ஆஸ்திரேலியாவுக்கு வெளியேயும் பரவுமா?

டிரவர்: இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிப்போம் என்கிற இந்த இயக்கம் உலகு தழுவியதாக மாறப்போகிறது. இனி உலகின் எந்த கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் அணி கால் வைத்தாலும் தமிழ் மக்களைக் கொல்கிற, சித்திரவதை செய்கிற, சிறையில் இடுகிற, தண்டிக்கிற அரசின் ஒரு பகுதிதான் நீங்கள் என இலங்கை அணிக்கு நினைவுபடுத்துகிற ஒரு போராட்டம் அங்கே நிச்சயம் நடந்தே தீரும்.

20011ல் பிரிட்டனில் உள்ள தமிழ் இளைஞர் அமைப்பு கிரிக்கெட் மைதானத்தில் தனது எதிர்ப்பைத் தெரிவித்து பிரமாதமாக செயல்பட்டது. அவர்களோடு நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். ஐசிசி சேம்பியன்ஸ் டிராபிக்காக இலங்கை அணி இங்கிலாந்துக்குச் செல்லும்போது அது போராட்டக்காரர்களை எதிர்கொள்ளும். இந்தியாதான் இந்த இயக்கத்துக்கு மிகவும் உகந்த நாடாக இருக்கும். எங்கள் இயக்கம் குறித்து இந்தியாவில் பலருக்கும் தெரிந்திருக்கிறது. அவர்கள் எங்களைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் உள்ள எங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். ‘இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிப்போம்‘ இயக்கத்தின் இனி வரும் செயல்பாடுகளை நீங்கள் உற்று கவனித்து வாருங்கள். ஆட்டம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.