கலைஞர் 90: அறம் பொருள் துன்பம்

தமிழ் ஆழி,  ஜூன் 2013

கவர் ஸ்டோர் / கலைஞர் 90

அறம் பொருள் துன்பம்

கலைஞர் கருணாநிதிக்காக அய்யன் திருவள்ளுவர் தேர்ந்தெடுத்து வழங்கும் 10 திருக்குறள்கள்

வள்ளுவன்
(கேட்டு எழுதியவர் செ.ச.செந்தில்நாதன்)

என் அன்பு தமிழ் மக்களே,

நான், வள்ளுவன் பேசுகிறேன். குறள் எழுதிய, குமரியில் சிலையாக நிற்கிற அதே வள்ளுவன்தான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதியைப் பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்திருந்த 90 கவிஞர்களின் விழாவில் கலந்துகொள்ள முயற்சி செய்து நான் தோல்வியடைந்துவிட்டேன். முன்பதிவு செய்யாமல் போனது எனது குற்றமாக இருக்கலாம். என்னை உள்ளே விட மறுத்தார்கள். “நான் கவிஞன்” என்றேன். “இன்விடேஷன் க்கீதா” எனக் கேட்டார் ஒருவர். “இல்லை, கவிதை இருக்கிறது” என்றேன். அதைப் பார்த்த பக்கத்திலிருந்த இன்னொரு உடன்பிறப்பாளர், “என்னாது, திருக்குறளா” என்று அதிர்ந்து கேட்டார் அவர். “ஆம்” என்றேன். “இது எங்க தலீவர் எய்துன புக்கு பெரீவரே! மண்டபத்திலேர்ந்து எய்தி வண்டீங்களா?” என்று கத்தத் தொடங்கிவிட்டார். காரணம் என்னிடம் இருந்த நூல் “திருக்குறள்: கலைஞர் உரை”. சற்றே விஷயம் தெரிந்தவராகத் தோன்றிய முதலாமவர் என் தோற்றத்தைப் பார்த்துவிட்டு, “இல்லப்பா, இவரு ஒரிஜினல் திருவல்லுநர் போலத்தான் கீது” என்று கூறினார். என்னதான் மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்று நான் எழுதியிருந்தபோதும், என்னை முனிவர் தோற்றத்திலேயே தமிழர்கள் சிலை வைத்திருந்தபடியால், நானும் அதே காஸ்ட்யூமில்தான் பூமிக்கு வந்தேன். என் தலை மாணாக்கனைக் காண வந்தேன். எனது புத்தகத்தை வாங்கிப் பார்த்த அந்த விழா ஏற்பாட்டாளர் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். எனது ஐபேடில் இதன் மின்னூல் பிரதியொன்று இருக்கிறது என்றாலும், வசதியாக இருக்கட்டுமே என வரும்போதுதான் டிஸ்கவரி புக் பேலசில் கலைஞர் உரையை வாங்கினேன். விலை அதிகம். மூலநூல் எனதாயினும் பத்து சதவீதத்துக்கு மேல் தள்ளுபடியில்லையாம். அது மட்டுமல்ல உலகவுடமையான நான் இங்கே நாட்டுடமையாக்கப்பட்டிருக்கிறேனாம். பாதகர்கள்! நான் மட்டும் ராயல்டி கொடுங்களப்பா என்று கிளம்பினால், நீயா நானா கோபிநாத்தையும் மல்லிகா பத்ரிநாத்தையும்விட மிகப் பெரிய செல்வந்தராகிவிடுவேன். இதற்கிடையில் நூலைப் புரட்டிப் பார்த்த விழா ஏற்பாட்டாளர், “இவற்றில் பல இரட்டை வரிகள் உள்நோக்கங்களுடன் எழுதப்பட்டவை என்று தெரிகிறது அய்யா” என்று எனக்கு நல்ல தமிழில் சொன்னார். “தலைவரை நீங்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள்” என்றார் அவர். விழாவுக்கு அனுமதி இல்லை என்பது புரிந்துபோயிற்று. “எனக்கு கலைஞரை நன்றாகத் தெரியும்” என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். விட மறுத்துவிட்டார். இனி பயனில்லை என்று புரிந்துகொண்ட நான், கலைஞரைப் பார்க்காமலேயே திரும்பினேன். விஷயம் அவர் காதுக்குப் போனால் வருத்தப்பட்டாலும் படுவார், பாவம். ஆனால் புத்தேள் உலகிலிருந்து பூவுலகு நோக்கிய என் பயணம் வீணாகிவிடக்கூடாது என்பதால், அவ்விழாவில் படித்துக் காட்டி விளக்க வேண்டும் என்று நான் விரும்பிய பத்துக் குறள்களை மட்டும் இதோ உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இவை பல அதிகாரங்களிலிருந்து தொகுக்கப்பட்டன. கலைஞருக்கான சிறப்பதிகாரம் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்.

கலைஞர் உரை:
ஒருவரின் குணங்களையும் அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.

வள்ளுவனாகிய நான் எவ்வாறு மதிப்பிடுவேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் எந்தக் கட்சியையும் சாதியையும் சார்ந்தவன் இல்லை என்பதால் எனது அணுகுமுறை நான் முன்பு வகுத்த கோட்பாடுகளின் அடிப்படையிலேதான் இருக்கும். நல்லதும் சரியானதும் பாராட்டத்தக்கதுமான பல குணநலன்களை இவர் கொண்டிருக்கிறார். இவர் செய்ததெல்லாம் சரியென்றும் இவரை விட்டால் நாதியிலை என்றும் சிலர் துதிபாடுகிறார்கள். இவர் செய்தவை அனைத்தும் தவறு, இவர்தான் இந்த சமூகத்தின், தமிழக அரசியலின் மோசமான நிலைகளுக்கெல்லாம் ஒரே காரணம் என்று சிலர் எல்லாப் பழிகளையும் இவர் மீது போட்டுவிட்டுத் தப்பிக்கிறார்கள். சமீப காலத்தில் கலைஞரின் திறமை தள்ளாட்டமாகவே இருக்கிறது. குடும்ப அரசியல், ஈழ விவகாரத்தில் துரோகம், ஊழல் என நீளும் பட்டியலில், சில சமயம் வில்லனாகவும் சில சமயங்களில் வில்லன்களிடம் மாட்டிக் கொண்ட பரிதாபியாகவும் அவர் நம் முன்பு தோன்றுகிறார். எனவே இவரை எதிர்மறை அம்சங்களால் மட்டுமே முத்திரை குத்திவிட்டு நாம் தப்பித்துவிடக்கூடும். ஆனால் இவர் 70களில், 80களில் செய்த அரசியலையும் இந்திய அரசியலில் ஆற்றிய பங்குகளையும் சமூகநீதிக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த இறுதி வரை முயற்சிகள் எடுத்ததையும் பார்க்கத் தவறிவிடக்கூடும். இவரது எல்லாப் பலமும் நம்மிடமிருந்தே வந்தன. இவரது எல்லா பலவீனங்களும் நம்மிடமிருந்தே வந்தன.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

கலைஞர் உரை:
செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இரு சாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.

கலைஞரின் நெடுங்கால நண்பர்கள் அவரது மிகப் பெரிய பலம் என்று சுட்டிக் காட்டுவது நிஜ நிலைகளைப் புரிந்துகொண்டுதான் கலைஞர் திட்டமிடுவார் என்பது. தேர்தல் வருகிறது என்றால் அசட்டுத்தனமாக முடிவெடுக்கமாட்டார். அந்தத் தேர்தல் எவ்வளவு சவால் மிக்கது, அந்தச் சூழலில் தன் கட்சியின் நிலைமை என்ன, கூட்டணிகள் அவசியமா, கூட்டணிகளால் பெரும்பான்மை கிடைக்குமா என்பது போன்ற கேள்விகளை தனக்குள் கேட்டு முடிவெடுப்பார். இவ்வளவு நாட்கள் பொதுவாழ்வில் அவர் நீடிப்பதற்கு அதுவே காரணம். அவரளவுக்கு ஒரே நேரத்தில் ஆளுங்கட்சியினராகவும் எதிர்க்கட்சியினராகவும் அனுபவப்பட்டவர்கள் வேறு யாரும் இல்லை. முடிவுகள் பல சமயம் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டாமல் போகலாம் என்றாலும் பெரும்பாலும் வெற்றிக் கூட்டணிகளை ஏற்படுத்தியவராகவே அவர் இருக்கிறார். வேறு எந்த மாநிலக் கட்சியும் தில்லியில் திமுகவைப் போல் நெடுங்காலம் ஆளுங்கட்சியின் ஒரு அங்கமாக நீடித்ததில்லை. இவரது எந்த வலிமையும் எம்ஜிஆரிடம் மட்டுமே ஜெயிக்காமல் போனது என்பார்கள். உண்மைதான். பகைவர்களின் வலிமையைக் கணக்கிடுவதில் மட்டும் இவருக்கு குறைபாடுகள் இருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்ளவே வேண்டும். ஆனால் வலிமை மிக்க பகைவனுக்கு முன்னால் இவர் பனி போல் மறைந்துவிடவில்லை. தனது சொந்த வலிமையை 14 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்த நிலையிலும் காத்துவந்தார். அதனால்தான் காலமும் இடமும் கைகூடியபோது மீண்டும் ஆட்சிப் பொறுப்பு கிட்டியது. நீங்கள் ஏன் பிரதமராக ஆகக்கூடாது என்ற கேள்விக்கு என் உயரம் எனக்குத் தெரியும் என்று பதில் சொன்னதன் மூலம் தன் வலியை (சுயவலிமையை) இவர் நிதர்சனமாகப் புரிந்துகொண்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. அதேசமயம் ஐந்து பிரதமர்கள் இவர் தயவால்தான் உருவானார்கள் என்பதும் வரலாறு. தில்லியில் இவருக்கு ஒரு காலத்தில் இருந்த நற்பெயருக்குக் காரணம் இதுவே. கடந்த சில ஆண்டுகளில்தான் இவர் இந்த நான்கு வலிமைகளையும் மதிப்பிடுவதில் மோசமான தவறுகளைச் செய்தார்.

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

கலைஞர் உரை:
ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார்  என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

கலைஞரின் நிர்வாகத் திறமை குறித்து நிறையப் பேசுவார்கள். கட்சியிலும் ஆட்சியிலும் சரியான இடங்களை சரியான நபர்களுக்கு அளிப்பதில் அவருக்கிருந்த புத்திசாலித்தனம்தான் இதுநாள் வரை பொதுவாழ்வில் அவரது வெற்றிக்குக் காரணமாக இருந்துவந்தது. சுயநலமும் குடும்ப நிர்பந்தங்களும் அழுத்தும் நிலைமை ஏற்படாத பட்சத்தில் அவர் பெரும்பாலும் சரியாகவே இதைச் செய்துவந்தார். சரியான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதுதான் அவர் நல்ல நிர்வாகி என்ற பெயரை வாங்கியதற்கு காரணமாக இருந்தது என்றும் எப்படிப் பார்த்தாலும் கலைஞர் ஆட்சியில் இருந்தால் ஒரு விடயத்தை எடுத்துச் சொல்லி செயற்படுத்திவிட முடியும் என்று பலர் நினைத்ததற்கும் இதுவே காரணமாக இருந்தது. எப்போதெல்லாம் இந்த உத்தியை அவர் கைவிடுகிறாரோ அல்லது விடும்படி ஆகிறாரோ அப்போதெல்லாம் அவர் மீது விமர்சனக் கணைகள் பாய்ந்தன. தனக்குப் பிடித்த திட்டங்களை நிறைவேற்றுகையில் அதற்குச் சரியான அமைச்சரையும் அதிகாரிகளையும் தேர்ந்தெடுத்து நிறைவேற்றுவார் என்பது அவரது சிறப்பியல்புகளில் ஒன்று.

சொலன்வலன் சொர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

கலைஞர் உரை:
சொல்லாற்றல் படைத்தவனாகவும் சோர்வு அறியாதவனாகவும் அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.

இதுதான் கலஞரின் மிகப் பெரிய சக்தி, ஆயுதம், வெற்றி ரகசியம் எல்லாம். அவர் மீது ஒரு கழகத் தொண்டன் எவ்வளவு கடுப்பாக ஆனாலும், ஒரே ஒரு முறை அவரது உடன்பிறப்பே என்ற விளித்தலையும் பேச்சையும் கேட்டால் மீண்டும் அவர் வசமாகிவிடுகிறான். அவரது கடிதத்தைப் படித்த மாத்திரத்தில் நான் திமுககாரன் என்று செம்மாந்து போகிறான். ஈர்ப்பதில் மட்டுமல்ல, எதிர்த்து வரும் அம்புகளை முனைமழுங்க வைப்பதிலும் அவர் கெட்டிக்காரர். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசுவதாகட்டும் தன்னை தொடர்ந்து விமர்சித்தும் அர்ச்சித்தும் வரும் பத்திரிகையாளர்களை வசப்படுத்துவதாகட்டும் அதில் கலைஞர் முனைவர் பட்டம் பெற்றவர்தான். அதைப் போலத்தான் அவரது சோர்வற்ற செயல்பாடும். உடலையும் உள்ளத்தையும் உற்சாகமாக வைத்துக் கொண்டிருக்கும் கலைஞர்தான் இன்றும் கட்சியின் பிரதான பேச்சாளர், பிரதான அமைப்பாளர், பிரதான தேர்தல் ஏற்பாட்டாளர். பஞ்சாயத்துத் தேர்தல் என்றாலும் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடும் அவரது அர்ப்பணிப்புதான் பல்வேறு பிளவுக்கு அப்பாலும் திமுகவை நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. அதுவும் தங்கள் குடும்பத்தவர்களுக்கு பதவிகளை வாங்கித் தருவதற்காக தில்லியில் சக்கர நாற்காலியிலிருந்தே சுழன்று சுழன்று அவர் செயல்பட்ட வேகம் இருக்கிறதே, புல்லரிக்கிறது. இறுதி வரை தன் கை தாழ்ந்துவிடக்கூடாது என்கிற முனைப்புதான் அவரது சோர்வற்ற செயல்பாட்டுக்கு அடிப்படை காரணம்.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு

கலைஞர் உரை:
இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது.

கலைஞர் மிகத் திறமையாளர், நிர்வாகத் திறன்களில் பேர்போனவர், அரசியல் சாணக்கியர், அவரது நினைவாற்றல் திறன் அதிசயமானது. அவரது நண்பர் சோ ஒரு முறை நடமாடும் கணிப்பொறி என்றே அவரை வர்ணித்தார். முத்தமிழ் அறிஞர் எனச் சொல்வதில் தவறில்லை. திராவிட இயக்கத்தின் பிரச்சார பீரங்கியாகவும் தமிழ் வெகுஜன எழுத்தில் ஒரு குறிப்பிட்ட வகையின் சிறந்த முன்மாதிரியாகவும் தமிழகத்தைத் துயிலெழப்பிய வசனங்களுக்குச் சொந்தக்காரராகவும் அவர் இருந்தார். அவரது திறமைகளை தமிழக, இந்திய, உலக அளவில் பலரும் அதிசயித்துப் பாராட்டியிருக்கிறார்கள். இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இன்று இருக்கிறது என்றால் அவரது இதயத்துக்கும் மூளைக்கும் அதில் பங்கு உண்டு. என்ன குறைகள் கூறப்பட்டாலும் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாக, பல பிளவுகளுக்கும் பழிவாங்கல்களுக்கும் அப்பால், ஒரு கட்சியை அவர் நடத்தி வருகிறார் என்றால் அவரது அறிவாற்றலைக் குறை சொல்வதற்கில்லை. இவையெல்லாம் அவரது குணங்கள். பாராட்டத்தக்கவைதாம்.

ஆனால் “இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை” விட்டுவிட்டு நீங்கள் மிகவும் அறிவாற்றல் மிக்கவர், அரசியல் வித்தகர் என்பதால் உங்களை மட்டுமே போற்றிக் கொண்டிருக்காதே! என்ன செய்வது என்பதை நீங்கள்தான் யோசிக்க வேண்டும். தன்னலம் துறந்து புகழ் ஈட்டுதல் என்று வரும்போது, தங்களுடைய மதிப்பெண் பட்டியல் அச்சம் தருவதாக இருக்கிறது. அறிவும் திறமையும்தான் எல்லாமும் என்று ஒருபோதும் நான் கூறியது கிடையாது. அறிவின் நோக்கம் என்ன, திறமையின் இலக்கு என்ன என்றெல்லாம்கூட நான் நிறைய சொல்லியிருக்கிறேனே!

இவறலும் மாண்பிறந்த மானமும் மாண்
உவகையும் ஏதம் இறைக்கு.

கலைஞர் உரை:
மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசு படியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிகளுக்கே பெருங்கேடுகளாகும்.

எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டு ஒரு மாபெரும் தலைவராகவே கலைஞரை இவ்வுலகம் கருதுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அவரது பங்களிப்பை மறுப்பவர்கள் உள்நோக்கம் கொண்டவர்களாகவோ அறியாமையில் உழல்பவர்களாகவோதான் இருக்க முடியும். அப்படி இருந்தும் இன்று அவருக்கு தமிழகம் முழுக்க கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் மூன்று: இவறல் – பெரும்பேராசை. முதலாவது, கலைஞருடைய பேராசை என்று நேரடியாகச் சொல்ல முடியாவிட்டாலும் அவர் ஆசி பெற்ற அவரது குடும்பத்தவரின் பேராசைதான் தமிழக மக்களை அச்சமடைய வைத்து அவருக்கு எதிராகத் திரும்பச் செய்தது. இரண்டாவது, மாண்பிழந்த மானம். சுயமரியாதைதான் அவரது அடிப்படை. ஆனால் கடந்த சில பத்தாண்டுகளில் அவர் வேகமாக இழந்துவந்தது அந்த ஒரு நற்குணத்தைத்தான். குறிப்பாக தில்லிக்கு முன்பு அவர் மானம்கெட்டு நின்றார். தில்லி மூச்சு விட்டால்கூட கோபாலபுரம் நடுங்கும் நிலைக்கு ஆனது. ஆட்சியைத் தக்கவைப்பதற்காகவும் தில்லியில் தன் குடும்பத்தவரின் பதவி நலம் கெடாமல் இருப்பதற்காகவும் 2ஜி நச்சரவம் தீண்டாமல் இருக்கவும் தன்னைக் கேவலத்திலும் கேவலமாக நடத்திய காங்கிரசிடம் கெஞ்சிக் கூத்தாடிக் கிடந்தார். காங்கிரஸ் செய்யாத ஊழல் இல்லை. ஆனால் கனிமொழியையும் ஆ.ராசாவையும் குற்றம்சாட்டிவிட்டு மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும் தப்பிவிட்டார்கள் என அவர் அடிக்கடி சிலாகிக்கும் “ஆங்கிலப் பத்திரிகைகளே” எழுதின. ஏன்? எவ்வளவு இழிவுபடுத்தினாலும் அவர் ஐமுகூ அரவணைப்பிலிருந்து வெளியேறமாட்டார் என்று தெரிந்துகொண்டுதான் 10, ஜன்பத் அவரை சிரித்து விளையாடியது. மானமும் மரியாதையும் நற்குணங்கள் மட்டுமல்ல, வலிமையின் அடையாளங்களும்கூட. மூன்றாவது மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி. இதில் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான். பச்சையாக குடும்ப அரசியலை அரங்கேற்றுவது, அதை அருவருப்படையும் விதத்தில் நியாயப்படுத்துவது, இதெல்லாம் அவருக்கு கைவந்த கலை. அவரது பாராட்டு விழா மோகம் இன்னொரு உதாரணம். கடந்த ஆட்சியின்போது அவரது விழா ஏற்பாட்டாளர்கள் அவரது வீழ்ச்சியை எவ்வளவு துரிதப்படுத்தினார்கள் என்பதை அறிந்துகொள்ள அவர் தனது கட்சித் தொண்டர்களைக் கேட்டிருந்தாலே தெரிந்துகொண்டிருக்கலாம். நான் இப்போது வந்ததுகூட அவரைத் துதிபாட அல்ல.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

கலைஞர் உரை:
வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்காவிட்டால் கோடிப் பொருள் குவித்தாலும் அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.

இதுதான் கலைஞர் சமீப காலங்களில் புரிந்துகொள்ள மறுக்கும் ஒரு ரகசியம். எல்லாவற்றுக்கும் முறை என்ற ஒன்று இருக்கிறது. கடந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் திருமங்கலம் ஃபார்முலாவை நடைமுறைப்படுத்த அவருக்கு வசதியிருந்தது. தேர்தல் அறிக்கையில் இலவசத் திட்டங்களும் பல இருந்தன. முந்தைய ஆட்சிக் காலத்தில் பல நலத் திட்டங்களை வெற்றிகரமாக நடத்திய நற்பெயர்கூட இருந்தது. ஆனால் மக்கள் கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை கலைஞரைக் கவிழ்த்துவிட்டார்கள். ஏனென்றால் ஒவ்வொன்றிலும் அவர் எல்லை மீறிவிட்டார், முறைதவறிவிட்டார் என மக்கள் நினைத்தார்கள். வாரிசு அரசியல் தவறுதான் என்றாலும் அவர்கள் ஸ்டாலினை அவரது வாரிசாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஸ்டாலினோடு நிற்காமல் தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அரை டஜன் பேரை அவர் மக்கள் முன் கொண்டுவந்து நிறுத்தினார். அவரது கட்சிக்காரனே திகைத்துப் போய்விட்டான். அதனால்தான் அவர் தோற்றபோது மகிழ்ச்சியடைந்தான். கலைஞர் ஊழல் செய்வார் என்பதை மக்கள் அறிவார்கள். தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா என்கிற அவரது வியாக்கியானத்தை எப்போதோ அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். ஆனால் 2ஜி ஊழலைத் தாங்கும் சக்தி அந்த மக்களுக்கு இல்லை. கருணாநிதி – மாறன் கூட்டுக் குடும்பத்தின் 3ஜி தலைவர்கள் சினிமாவிலும் ஊடகத்திலும் பெரும்புள்ளிகளாக வளர்ந்தபோது முதுகுத்தண்டு சில்லிடும் வகையிலான ஓர் அச்சம் தமிழ்நாட்டின் நடுத்தர வர்க்கத்தின் உளவியலின் மீது படியத் தொடங்கியது. சமூகங்கள் எப்போதும் நெகிழ்ச்சியுடையனவாகவே இருக்கின்றன. தலைவர்களின் தவறுகளை மன்னிக்கிறார்கள் மக்களும் தொண்டர்களும். ஆனால் அது எல்லை மீறிப் போகும்போதுதான் பொங்கி எழுகிறார்கள். இதன் விளைவாகவே இப்போது அவர் ஆட்சிப் பயனை அனுபவிக்க முடியாமல் போனார். அவரும் அவரது குடும்பத்தினரும் இதைத் தொடர்வார்களேயானால் என்ன நடக்கும்? அதை வேறு ஒரு குறளில் சொல்லியிருக்கிறேன்: அழக்கொண்ட எல்லாம் அழிப்போம்!

எற்றென்று இரங்குவ செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.

கலைஞர் உரை:
என்ன தவறு செய்துவிட்டோம் என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியத்தைச் செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்துவிட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று.

தான் செய்த தவறுகளை எதையாவது சொல்லி நியாயப்படுத்துவதில் கலைஞர் மாமன்னர். நீங்கள் ஏன் ஈழத் தமிழர் விவகாரத்தில் 2009ல் இப்படி முடிவெடுத்தீர்கள் என்று அவரிடம் கேட்டால், நான் எண்பதுகளில் டெசோ மாநாடுகளை நடத்தினேன் என்பார். முள்ளிவாய்க்கால் படுகொலை சமயத்தில் அவர் நடந்துகொண்ட விதம்தான் அவருக்கு மிகுந்த கெட்ட பெயரை உருவாக்கியது. அதை அவருமே அறிவார். அப்படியிருந்தும் அந்த பெரும்சோகம் முடிந்தும் முடியாமலுமிருந்த சில மாதங்களிலேயே பிரபாகரனின் தாயார் மருத்துவ உதவிக்காக சென்னை வந்த சமயத்தில் மீண்டும் தன் தவறை அரங்கேற்றினார். பிறகு செம்மொழி மாநாட்டைக் கூட்டி தவறுகளை மறைக்க முயன்றார். பிறகு மீண்டும் டெசோ என்றார். எல்டிடிஈயும் டிஎன்ஏயும் இணைந்து செயல்பட்டு பத்தாண்டுகள் கடந்த பிறகும் அய்யோ பிரபாகரன் சகோதரக் கொலைகள் செய்தாரே அதுதான் தவறு என்று கதறினார். ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூட மத்திய அரசின் அனுமதிக்குக் காத்திருக்கக்கூடிய சூழலுக்கு உள்ளானார். தொடர்ச்சியாகத் தவறுக்கு மேல் தவறு செய்த அவர் இறுதியில் மாணவர் போராட்டத்தின் போதுதான் ஒரு சரியான முடிவை எடுத்தார். ஆனால் என்ன பயன்? காலங்கடந்து எடுத்த முடிவு.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.

கலைஞர் உரை:
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச்சொல்லைக் கொண்டோ அல்லது பழிச்சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.

இந்தக் குறள் குறித்து நான் நேரிடையாக கலைஞரிடம் பேச நினைத்தேன். நான் அவரிடம் கேட்க நினைத்ததெல்லாம் இதுதான்: கலைஞரே, இந்த ஒரு குறளையாவது நீங்கள் பின்பற்றியிருக்கக்கூடாதா? நேற்று இருந்தவன் இன்று இல்லை என்கிற பெருமையுடைய இவ்வுலகில், ஒருநாள் நீங்களும் விடைபெறத்தான் போகிறீர்கள். உங்களுக்குப் பின் என்ன எஞ்சி நிற்கப்போகிறது? தண்டவாளத்தில் தலையை வைத்துப் படுத்த, பாளையங்கோட்டைச் சிறையில் வாடிய அந்தக் காலங்களா? மன்னிக்க வேண்டும். நாகூர் அனிபாவின் அந்தப் பாடல் வரிகளை இனி ஒலிபரப்பாதீர்கள். மக்கள் கண்டமேனிக்குக் கொதித்துப் போயிருக்கிறார்கள். உங்கள் தொலைக்காட்சியில் கட்டுமரமாக மிதப்பேன் என்று சொல்லும் விளம்பரத்தையும் இனி ஒளிபரப்பாதீர்கள். மக்கள் கையில் ரிமோட் என்று இப்போதைக்கு உங்கள் அடையாளமென்று எஞ்சி நிற்கும் எதுவும் சிறப்பு சேர்க்கக்கூடியவையாக இல்லை.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

கலைஞர் உரை:
ஊழ் என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வியடையச் செய்வார்கள்.

கலைஞரே, நீங்கள் நீடூழி வாழ வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன். “எதற்காக வள்ளவ?” என்று நீங்கள் கரகரக்கவும்கூடும். ஏனென்றால் நீங்கள் செய்து முடிக்க வேண்டிய பெருங்கடமை ஒன்று மிச்சமிருக்கிறது. அது உங்கள் மீது காலம் சுமத்தியுள்ள பழியை நீங்கள் அழித்துவிட்டுச் செல்வதுதான். செயல்திறன் மிக்க நீங்கள் இப்போது நினைத்தாலும் சில அதிசயங்களை நிகழ்த்திக் காட்ட முடியும். காந்தியின் வாழ்க்கைச் சேதி அவரது இறுதி நொடியில்தான் இருக்கிறது. பிரபாகரனின் புகழ் அவரது இறுதி நாளில் உருவானது. பெரியாரின் வாழ்க்கைச் சேதி அவரது இறுதிப் பேருரையில் கிடக்கிறது. உங்களுடைய வாழ்க்கைச் சேதியை இனிவரும் நாட்களில் நீங்களே உருவாக்குங்கள். துரோகியென்றும் குடும்ப நலனுக்காக இனத்தின் நலனைப் பறிகொடுத்தவர் என்றும் நீங்கள் பழிக்கப்படுகிறீர்கள். இந்த அவப்பெயருடன் விடைபெறுவதற்கா ஐம்பதாண்டு காலம் பொதுவாழ்க்கையில் போராடினீர்கள்? ஊழ் வலியது. பகுத்தறிவாளரான நீங்கள் விதி என்னும் கருத்தை ஏற்கமாட்டீர்கள் என்பதை அறிவேன். ஆனால் அந்த ஊழையும் வெல்ல முடியும் என்றும்தானே சொல்லியிருக்கிறேன். கட்சியை மேலிருந்து கீழாக மாற்றுங்கள். குடும்பத்தவரின் அதிகாரத்துக்கு ஒரு வரம்பையாவது நிர்ணயிங்கள். கோட்பாடுகளைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். முக்கிய கொள்கை விடயங்களில் தெளிவாகவும் தீர்க்கமாகவும் முடிவெடுத்த அந்தப் பழைய நாட்களைத் திரும்பக் கொண்டுவாருங்கள். உங்கள் உடன்பிறப்புகளின் உள்ளக் குமுறல்களுக்கு செவிசாய்த்திடுங்கள். எனது மிகச் சிறந்த மாணவன் ஒருவன் வையத்துள் வாழ்வாங்கு வாழாமல் போய்விடுவானோ என்று அஞ்சுகிறேன். அதைச் சொல்லத்தான் ஓடோடி வந்தேன். உடல்நிலையை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள். வருகிறேன்.