இரா.செழியன்: தமிழகம் அளித்த கொடை

புது டெல்லியில், 2010-ம் ஆண்டு குளிர்காலத்தில், இந்தியாவின் முக்கிய மூத்த அரசியல் தலைவர்கள் (இரண்டு முன்னாள் பிரதமர்கள் உள்பட), சட்ட வல்லுநர்கள், சமூகப் பிரமுகர்கள் என சுமார் இருபது பேரின் வீடுகளில் ஒரு ‘கூரியர் பாய்’போல நான் ஏறி இறங்கிக்கொண்டிருந்தேன். அதற்குக் காரணமாக இருந்தவர் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.செழியன். அவர் தொகுத்து, ஆழி பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட ‘ஷா கமிஷன் ரிப்போர்ட் லாஸ்ட் அண்ட் ரீகெய்ன்டு’ என்ற நூல் அப்போது டெல்லியின் பேரதிகார மட்டத்தில் பலருடைய புருவங்களையும் உயர்த்தியிருந்தது. நெருக்கடிநிலைக் கால அத்துமீறல்கள் மீதான விசாரணைக் குழுவொன்றின் அறிக்கையே அந்த ஆயிரம் பக்க நூல். அதை மேற்கண்ட “நெருக்கடிநிலைக் கால அனுபவஸ்தர்களுக்கு” நேரில் சென்று அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு தூதஞ்சல் மூலமாக செய்து முடிக்க வேண்டிய வேலையை நேரடியாகச் செய்யும்படி என்னைப் பணித்திருந்தார் செழியன்.

அப்போதுதான் செழியன் யார் என்பதை முழுமையாகத் தெரிந்துகொண்டேன். டெல்லி உயர்பீடத்தில் அத்தனை பேரும் அவர் மீது கொண்டிருந்த மதிப்பை நேரில் கண்டபோது வியப்பாக இருந்தது. “இரா, இரா” என்று அவரைக் குறித்து அவர்கள் உருகினார்கள். இந்த நூலை வெளியிட்டது இராவின் மாபெரும் வாழ்க்கைப் பங்களிப்பு என்று கூறினார்கள்.

ரகசியப் புத்தகம்
1975-77 ஆண்டு நெருக்கடிநிலைக் காலத்தில் இந்திரா காந்தி அரசு மேற்கொண்ட ஜனநாயகப் படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் விசாரிப்பதற்காக, 1977-ல் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜே.சி. ஷா தலைமையில் நியமிக்கப்பட்டிருந்த ஒரு கமிஷனின் மூன்று பாக அறிக்கை அது. அந்த அறிக்கை பல ஆண்டுகளாகக் கிடைக்காமல் இருந்தது. காரணம், ஷா அறிக்கை வெளிவந்து கொஞ்ச காலத்திலேயே அதற்கு எமன் வந்துவிட்டான், ஜனதாவின் அற்பாயுள் அரசு கவிழ்ந்து மீண்டும் இந்திராவே ஆட்சியேறியபோது, 1980-ல், அவர் செய்த காரியங்களில் ஒன்று ஷா கமிஷன் அறிக்கையின் நகல்களை எல்லா இடங்களிலிருந்தும் தேடித் தேடி அகற்றியதுதான்.

2010 பிற்பகுதியில் திடீரென ஒரு நாள் செழியன் என்னை அழைத்தார். அண்ணா நகரிலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்றபோது, மிகவும் பழையதாகவும், நைந்தும் போயிருந்த மூன்று வால்யூம் ஷா கமிஷன் அறிக்கையின் நகல்களை என் முன்பு வைத்து, அதன் அருமை பெருமைகளைச் சொன்னார். இதை நாங்கள் வெளியிட வேண்டும் என்றார். உண்மை என்னவென்றால் நான் அவ்வளவு பெரிய பதிப்பாளன் அல்லன். முன்னதாக அவரது கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருந்தேன். ஆனால், ஷா கமிஷன் அறிக்கையை மறுபதிப்பாகக் கொண்டுவருகிற அளவுக்கான பலமும் வீச்சும் எங்களிடம் இல்லை.

தொலைந்துபோனதாகக் கருதப்பட்ட அந்த ஷா கமிஷன் அறிக்கை, அவரது சொந்த நூலகத்தில் இருந்திருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பின்பு அதைத் தூசுதட்டித் தேடியெடுத்த செழியன், அதன் வரலாற்று முக்கியத்துவம் கருதி அதை வெளியிடுவதற்காகப் பிரபலப் பதிப்பகங்களை நாடியிருக்கிறார். ஆனால், இதை மறுபதிப்பு செய்வது ஆட்சியாளர்களிடம் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்கவைக்கும் என்பதை அறிந்த பல பதிப்பாளர்கள் அதை வெளியிட மறுத்திருக்கிறார்கள். இதைப் பதிப்பிக்க இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று நாசூக்காகக் கூறித் தவிர்த்திருக்கிறார்கள்.

எனவே, இந்தச் சிறிய பதிப்பகத்தானை அவர் அழைத்தார் “இது மிக முக்கியமான வரலாற்று ஆவணம். இதைப் பதிப்பித்தாக வேண்டும். நீங்கள் செய்கிறீர்கள்” என்றார். அக்கணமே சரியென்றேன். மிக மிக ரகசியமாக அந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.

பன்முக ஆளுமை
இரா.செழியன் கிட்டத்தட்ட மூன்று மாதம் தூங்கவேயில்லை. தொண்ணூற்றை நெருங்கிவந்த தன் வயதையும், ஏற்கெனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் எப்படியாவது அந்தத் தொகுப்பை வெளியே கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் வேகம் காட்டினார். அந்நூலுக்கு அவர் எழுதிய அறிமுக உரையே தனிப்பெரும் ஆவணம். நெருக்கடிநிலைக் காலத்தின் கதாநாயகர்களென அவர் நினைத்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோரை அழைத்து அதை வெளியிட்டார். அதன் பிறகு கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக நாடாளுமன்ற, ஊடக, உச்ச நீதிமன்ற அதிகாரவட்டங்களின் முக்கியப் புள்ளிகளிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் எங்களுக்கு வந்துகொண்டே இருந்தன.

மக்களுக்காகக் குரல் எழுப்புவதுதான் ஒரு நாடாளுமன்ற வாதியின் வேலை என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நாடாளுமன்றம் என்பது ஒரு அரசியல் யுத்தக் களம் மட்டுமல்ல, அரசியல் ஆக்கக் களமும்கூட. உரிமைக்கு குரல் கொடுப்பவராக, சட்டம் இயற்றுபவராக, அரசியல் சாசனத்தை வியாக்கியானம் செய்பவராக, பல்வேறு நாடாளுமன்றக் குழுவில் இணைந்து கொள்கைகளை உருவாக்குபவராக, நாடாளுமன்றத்தில் தான் சார்ந்த மாநிலத்தின் அல்லது மக்களின் சார்பாக முன்மொழிபவராக, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அதிகபட்ச எல்லைகளைத் தொட்டு, தமது சார்புக் கொள்கைகளுக்கு ஆதரவு திரட்டுபவராக, எதிர்க்கட்சிகளைக் களத்தில் ஒருங்கிணைப்பவராக, அச்சமின்றிப் போராடி வெற்றிகளைப் பெறுபவராகச் செயல்படுபவர்தான் ஒரு சிறந்த நாடாளுமன்றவாதி. செழியன் அப்படித்தான் இருந்தார். அப்படி ஒருசிலர்தான் இருந்தார்கள்.

தொடக்கத்தில் திமுக உறுப்பினராக அதன் கொள்கை களுக்காகக் குரல் கொடுத்தார். மாநில உரிமைகள், இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு, கச்சத்தீவு போன்றவை குறித்த அவரது விவாதங்கள் புகழ்பெற்றவை. பின்பு நெருக்கடிநிலைக் காலத்தில், இந்தியாவின் அத்தனை எதிர்க்கட்சிகளோடும் இணைந்து அவர் இந்திரா காந்திக்கே சிம்மசொப்பனமாக ஆனார். குறிப்பாக, ஜூலை 21, 1976-ல் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய நெருக்கடிநிலைக் கால எதிர்ப்புரை ஒன்று இந்திய நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் ஒரு முக்கியப் பதிவு.

பின்பு திமுகவிலிருந்து விலகி ஜனதா பரிவாரங்களோடு இணைந்து செயல்பட்ட காலங்களிலும்கூட அவர் தனது அடிப்படைகளுக்காகத் தொடர்ந்து இயங்கினார். வி.பி.சிங் தொடங்கிய ஜனதா தளத்தில் முக்கியப் பங்கெடுத்திருந்தவர் செழியன்; மண்டல் கமிஷன் அமலாக்கத்தின் பின்னணியில் இருந்த முக்கியப் புள்ளிகளில் இவரும் ஒருவர். பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியின் முகவர்களாகச் சென்னையில் செயல்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், சென்னையின் பிரதிநிதியாக டெல்லியில் செயல்பட்ட ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்களில் முக்கியமானவர் செழியன். செழியனின் முக்கியத்துவம் அதில்தான் அதிகம் அடங்கியிருக்கிறது.

ஆக்கபூர்வ அரசியல்வாதி
டெல்லி அரசியல்தான் அவருக்குப் பிரதானம் என்றாலும், மு. கருணாநிதியின் முதல் ஆட்சிக் காலத்தில் மாநில சுயாட்சிக்கான வியூகத்தை வகுத்ததில் அவரும் முரசொலி மாறனும் முக்கியமானவர்கள். 2001-ல் தீவிர அரசியலிலிருந்து விலகிய பிறகும் அவரது சீரிய அரசியல் பணி முடங்கிவிடவில்லை. தொடர்ச்சியாக எழுதினார். 2009 இனப்படுகொலையின்போது, போர்க்களத்தில் இழைக்கப்பட்ட, போர்க்குற்றங்கள் குறித்து, ஒரு விளக்க ஏட்டை வெளியிட்டு, இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 500 பேருக்கு விநியோகித்தார்.

செழியன் அசாதாரணமானவர். அண்ணாவின் அரசியல் தம்பி, நாவலரின் உடன்பிறப்பு, எம்ஜிஆரின் தோழரான அவருக்கும் திராவிட இயக்கத்தின் தலைவர்களுக்கே உரிய பல்முனை ஆற்றல்கள் உண்டு. தமிழ் இலக்கியம், கலை, சினிமா போன்றவற்றிலும் பெரும் ஆர்வம் காட்டியவர். எம்.கே. தியாகராஜ பாகவதர் பற்றி அவர் எழுதிய குறுநூல் ஒன்று பாகவதரின் சிறப்பை மட்டுமல்ல, செழியனின் எழுத்துச் சிறப்பையும்கூட வெளிக்காட்டக்கூடியது. அலங்காரமற்ற எழுத்துக்காரர் அவர். ஆக்கபூர்வ அரசியலுக்கான அரிய உதாரணங்களில் ஒருவர் அவர்.

தனது வாழ்வின் இறுதிப் பகுதியை அவர் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் அவரது நெருங்கிய நண்பரும் சக நாடாளுமன்றவாதியுமான கோ.விஸ்வநாதனுடன்தான் கழித்தார். மனமும் உடலும் இணைந்து செயல்பட்ட இறுதிநாள் வரை அவர் எழுதிக்கொண்டுதான் இருந்தார். எங்கள் மொழியுரிமைச் செயல்பாடுகளுக்கு அவரது வாழ்த்தும் வழிகாட்டலும் எப்போதுமிருந்தது. நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் உருவாகிய தோழமையின் காரணமாகவோ என்னவோ அவர் வலதுசாரி சக்திகளோடு காட்டிவந்த நெருக்கமும் அதிமுகவுக்கு அவர் அளித்துவந்த விமர்சனமற்ற ஆதரவும் என்னைப் போன்றவர்களுக்குச் சங்கடமாகத்தான் இருந்துவந்தது. ஆனால், அந்தப் பேராளுமையை முழுமையாக உள்வாங்கவோ பயன்படுத்திக்கொள்ளவோ தெரியாத இந்தச் சமூகத்தின் பிரதிநிதியான எனக்கு, அப்படிக் கோபம்கொள்ள எந்த அருகதையும் இல்லை.

வேலூர் பாலாற்றங்கரையில் அவரது இறுதிச் சடங்குகள் நடந்த இடத்துக்குச் சற்றுத் தாமதமாகவே என்னால் செல்ல முடிந்தது. ‘உடல் வெந்திருக்கும்’ என்றார் மின்தகன தொழிலாளி. தமிழகத்தின் தலைவர்கள் பலர் இரங்கல் அறிக்கைகளோடு தங்கள் கடமையை முடித்துக்கொண்டார்கள். எத்தனை ஆயிரம் பேர் கூடி, விடைதந்திருக்கவேண்டிய பெருஞ்சாவு இது! பாலாற்றங்கரையில் பெய்துகொண்டிருந்த மழையில் மட்டுமே கனம் இருந்ததாகத் தோன்றியது!

நன்றி: தி இந்து ( 08/06/2017) – இணைய இணைப்பு

Leave a Reply

Your email address will not be published.