பரவட்டும் மொழிப்போர்த் தீ!

தமிழ்த் தேசியப் பேரியக்கம் 2016 சனவரி 24 அன்று மதுரையில் நடத்திய ’மொழிப்போர்-50’ மாநாட்டில் தமிழ் மொழியுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் ஆற்றிய உரை:

தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்திக் கொண்டிருக்கிற மொழிப் போர்-50 என்கின்ற இந்த மாநாட்டு மேடையில் அமர்ந்திருக்கும் மதிப்பிற்குரிய தோழர்களே; அரங்கத்தில் திரளாக அமர்ந்திருக்கின்ற தமிழ் நெஞ்சங்களே; இந்திய ஒன்றியத்தில் மொழிகளின் நிலைமை பற்றி சில விடயங்களை – சரியாகச் சொல்வதென்றால் எனது அனுபவங்களை –  உங்களோடு பகிர்ந்துகொள்ளத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.

கடந்த 2014ஆம் ஆண்டின் இறுதியில், தமிழ்நாட்டில், மதுரை உட்பட பல நகரங்களுக்கும் சென்றேன். எதிர்வரும் 2015ஆம் ஆண்டு என்பது 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் 50ஆவது ஆண்டு. இந்த ஆண்டில் நமக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன. 1965ஆம் ஆண்டு இந்தி எதிப்புப் போராட்டத்தின் பலனை யார் அறுவடை செய்தார்களோ அவர்கள் அதனை மறந்துவிட்டார்கள். எதற்காக இங்கே மிகப் பெரிய போராட்டம் வெடித்ததோ, அதன் நோக்கங்களை அவர்கள் மறந்து கடந்து சென்று நெடுங்காலமாகிறது. நாமெல்லோரும்தான் இணைந்து அந்த ஈகியருக்கு வழக்கம்போல ஒரு சடங்காக சனவரி 25ஆம் தேதியன்று மூலக்கொத்தளத்திலுள்ள அந்த நடராசன்-தாளமுத்து நினைவகத்திற்குச் சென்று ஒரு மாலை போட்டு மரியாதை செய்கிறோம்; அன்றைய தினம் மாலை வேளையில் தமிழ்நாட்டில் சில இடங்களில் சில நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். அதோடு முடிந்துவிடுகிறது. மொழிப் போர் ஈகியர் நினைவு நாள் என்பது இவ்விதம் முடிந்துபோகாமல் இருக்க, இந்த 50ஆம் ஆண்டினை மொழிப் போருக்கு, மொழியுரிமைப் போராட்டத்துக்கு புத்துயிர் அளிக்கக்கூடிய ஒரு போராட்ட ஆண்டாக மாற்ற வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும், உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று கேட்கத்தான் மதுரை உட்பட பல நகரங்களுக்கும் சென்றிருந்தோம்.

அதன் பிறகு தமிழ்த் தேசியப் பேரியக்கம் உட்பட கிட்டத்தட்ட 20 தமிழ் அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள் மற்றும் தமிழ் மொழிக்காகப் போராடி வருகின்ற தனிநபர்கள் என்று எல்லோருமாகச் சேர்ந்துதான் இந்த 50ஆம் ஆண்டை ‘மொழியுரிமை ஆண்டு’ என கடைப்பிடிக்க வேண்டும் என்று ‘மொழியுரிமைக் கூட்டியக்கம்’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கிச் செயல்படத் தொடங்கியிருக்கிறோம்.

ஆனால் அந்த செயல்பாட்டுக்குப் பின்னால் சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வேறொரு நிகழ்வுக்குத் தொடர்பிருக்கிறது. அது இங்கே தலைமை உரையில் தோழர் வைகறை அவர்கள் குறிப்பிட்ட 2014 பிப்ரவரி 21 பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள் தொடர்பானது. அந்த 2014 பிப்ரவரி 21ஆம் நாளில் புது டெல்லியில், இந்தியாவின் வெவ்வேறு மொழிகளைப் பேசும் ஒரு 10 பேர் ஒன்றுசேர்ந்தோம். நாங்கள் மிகப் பெரிய அளவுக்குத் திட்டம் போடவில்லை. புது டெல்லியில் அப்போது நடந்துகொண்டிருந்த பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் அதன் ஓர் அங்கமாக இணைந்து அந்த பன்னாட்டுத் தாய்மொழிகள் நாளுக்காக ஒரு சிறிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வோம் என்று வேலையைத் தொடங்கினோம். அப்பொழுது எங்களுக்கு நாங்களே Movement for Multilingual India என்று பெயர் வைத்துக் கொண்டோம். கர்நாடகத்திலிருந்து, மேற்கு வங்காளத்திலிருந்து, பெருந்திரளாக பஞ்சாபிலிருந்து வந்திருந்த நண்பர்கள்; பிகாரின் பூர்வ மொழிகளில் ஒன்றான மைதிலி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நண்பர்; ஒரிசாவிலிருந்து அங்கே அதிகாரமற்றிருக்கும் கோசலம் என்ற மொழியைச் சேர்ந்த ஒரு நண்பர் என்று இணையத்தின் வழியாக அறிமுகமாகியிருந்த நண்பர்களுடனும் வேறு தோழர்கள் மூலமாக அறிமுகமாகியிருந்த தோழர்களுடனும் அப்போது பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் அந்தப் பேச்சின்போது இந்தித் திணிப்புப் பிரச்சனை, இந்தியைத் திணிப்பதால் வருகின்ற சிக்கல்கள் குறித்த எண்ணங்கள் போன்றவை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு வெளியிலும் இருக்கின்ற பிரச்சனைகள் என்பதை மிக எளிதில் புரிந்துகொண்டோம். இந்தியாவிலுள்ள மொழியுரிமையாளர்களை ஒன்றிணைக்கும் பணியை மேற்கொள்வது என்று அப்போது நான் முடிவெடுத்திருந்தேன்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு மொழிப் போரின் 50ஆவது ஆண்டான 2015ஆம் ஆண்டை மொழியுரிமை ஆண்டாக பறைசாற்றம் செய்து அந்த ஆண்டில் ஒரு சிறந்த நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். அந்தப்படிதான் 2015 செப்டம்பர் 20, 21 தேதிகளில் சென்னையில் மொழியுரிமை மாநாட்டை நடத்தி முடித்தோம். அந்த மாநாட்டிற்கு கேரளம், கர்நாடகா, மேற்கு வங்கம், மராட்டியம், பஞ்சாப், ஒரிசா ஆகிய மாநிலங்களிலிருந்து பேராளர்கள் வந்திருந்தார்கள்.

ஆக நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம், இந்தியாவில் இருக்கிற மொழிப் பிரச்சனை பற்றி; அதனால் நாம் இணைந்து செயல்படுவதற்கான ஓர் அமைப்பு வேண்டும் என்பது பற்றியும். சென்னை மாநாடு நடந்த நாள்களிலேயே அதன் விளைவாக ‘மொழி நிகர்மைக்கும் மொழி உரிமைக்குமான பரப்பியக்கம்’ (Campign for Language Equality And Rights – CLEAR) என்ற ஒரு அமைப்பினை உருவாக்கினோம். அதன் பிறகு நான் பஞ்சாபின் ஜலந்தர் நகரத்தில் பிராந்திய மொழிகளுக்கான அனைத்திந்திய மாநாடு என்கிற தலைப்பிலான ஒரு மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன் ஜார்க்கண்டின் தன்பாத் நகரத்தில் நடந்த, மொழியும் கல்வியும் வளர்ச்சியும் என்கிற தலைப்பிலான ஒரு மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். கொல்கத்தாவில், டெல்லியில், பெங்களூருவில் மொழியுரிமையாளர்களால் கூட்டப்பட்ட சில சந்திப்புகளுக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்தேன். தோழர் அருணபாரதி சொன்னதைப் போல இந்த முகநூல் போன்ற ஊடகங்களின் மூலமாகத்தான் எல்லா உறவுகளுமே உருவாகின்றன. அதன் மூலமாகவே நாங்கள் பலரையும் சந்தித்தோம், பேசியும் வருகிறோம்.

ஒட்டுமொத்தமான இந்த இரண்டாண்டு கால அனுபவங்களிலிருந்து நான் பிடிவாதமாக ஒரு விடயத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

முதலாவதாக – 1937 முதல் கிட்டத்தட்ட நான்காண்டுகள், அய்ந்தாண்டுகளுக்கொரு முறை தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் 1965ல் நடந்த அந்த மிகப் பெரிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து தமிழ்நாட்டுக்கு வெளியே நிறைய பேருக்குத் போதுமான அளவுக்கு தெரியவில்லை என்றாலும்கூட, மொழியுரிமை பற்றி பேசும் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் முக்கியமானதொரு போராட்டம் என்பதை நிச்சயமாகத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். அவர்களுடைய பாடப்புத்தகங்களில் அது பற்றி எதுவும் கிடையாதுதான். தமிழ்நாட்டுப் பாடப்புத்தகத்திலேயே அந்தப் போராட்டங்களுக்கு இடம் கிடையாது என்றால் மற்ற நாட்டுப் பாடப்புத்தகத்தில் எப்படி இடமிருக்கும்? அந்தப் போராட்டத்தைப் பற்றி தமிழ்நாட்டில் அதனால் பலனடைந்தவர்களேகூட ஆங்கிலத்தில் ஒரு நான்கு புத்தகங்களாவது எழுதாதபோது வெளி தேசங்களில் எழுதப்பட்டிருக்கும் என எப்படி எதிபார்க்க முடியும்? ஆக பெரிய அளவுக்குத் தரவுகள் இல்லாத நிலையிலும்கூட அவர்கள் தமிழ்நாட்டினுடைய இந்தப் போராட்ட்த்தைப் பற்றி ஓரளவுக்கேனும் தெரிந்துவைத்திருந்தார்கள்.

இதை சென்னை மொழியுரிமை மாநாட்டில் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அதில் அவர்கள் பேசும்போது மொழிப் பிரச்சனையில் அவர்களின் ஆதங்கம், இந்தித் திணிப்பு எதிப்புப் போராட்டம் குறித்த அவர்களின் பெருமதிப்பு, பெருமிதம் எல்லாமே வெளிப்பட்டன. மற்ற மாநிலத்தவர்கள் பொதுவாகவே ஒன்றை என்னிடம் சொல்வார்கள். “செந்தில், தமிழ்நாட்டில் நீங்கள் தப்பித்துவிட்டீர்கள்; 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மூலமாக ஏதோ ஒரு வகையில் இந்தியை ஓரளவுக்கு நீங்கள் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்” என்பார்கள். “நாங்கள் சென்னையில் வந்து பார்க்கும்போது இங்கு தமிழில் பேசுகிறார்கள் இல்லையென்றால் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்; பொதுவாகவே உங்கள் மாநிலத்தில் பிரச்சனைகள் அவ்வளவாகத் தெரியவில்லை; ஆனால் நாங்கள் இந்தியை ஏற்றுக் கொண்டதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்” என்றும் அவர்கள் சொல்வார்கள்.

உண்மை நிலவரம் இதுதான். கொல்கத்தாவில் இந்தி மொழி வங்க மொழியை பதிலீடு செய்கிறது. பெங்களூருவில் கன்னடத்தை விரட்டிவிட்டு இந்தி வந்து உட்கார்ந்துகொண்டிருக்கிறது. மும்பை என்பது அடிப்படையில் மராத்தி மாநகரம். அது முற்றிலும் இந்தி மாநகரமாகவே இருக்கிறது. இந்த சோகம், கோபம் என்பது ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எங்கள் பஞ்சாபி மொழி பேசுகிறவர்களில் பாதி பேரை இந்தி மொழிக்காரர்கள் என இந்திய அரசாங்கம் வரையறுத்து வைத்திருக்கிறது என்று பஞ்சாபியர்கள் துடிக்கிறார்கள். எண்ணிக்கை அடிப்படையில் இந்தியத் துணைக்கண்டத்திலேயே நாங்கள்தான் மிகப் பெரிய தேசிய இனம்; ஆனால் எங்கள் இடத்தில் இந்தி மொழி கோலோச்சுகிறது, எங்கள் வங்க மொழியைக் கொல்கிறார்கள்; கொல்கத்தாவிலேயே வங்க மொழியை ஓரங்கட்டுகிறார்கள் என்று பொங்குகிறார்கள் வங்காளிகள். மேற்கு வங்கத்திலும் பங்களாதேசிலும் அசாம் போன்ற இடங்களிலும் இருக்கக்கூடிய வங்காளிகளின் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால் 15 கோடிக்கும் மேல் வரும். இப்படித்தான் இருக்கிறது நிலைமை இந்தியத் துணைக்கண்டமெங்கிலும்.

அண்மைக் காலமாக இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் வலுவாகவும் மிகப் பரவலாகவும் அதேநேரம் நவீன முறையிலும் நடந்துவரும் இடம் என்றால் அது கர்நாடகம்தான். அங்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து போராட்டங்களை பல விதங்களிலும் வடிவமைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். கடந்த ஆண்டு இங்கே சென்னையில் சனவரி 25ஆம் நாள் நாம் மொழிப் போர் ஈகியர் நினைவேந்தல் செய்த அதே நேரத்தில் தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் சார்பாக இங்கு வந்திருக்கும் தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களும் தோழர் மணி மணிவண்ணன் அவர்களும் பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார்கள். 2015 சனவரி 25 அன்று பெங்களூருவில் நடந்ததும் தமிழ்நாட்டு மொழிப் போர் ஈகியருக்கு நினைவேந்தல் செய்யும் நிகழ்ச்சிதான்.

தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் காவிரிச் சிக்கல் உட்பட எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் தோழர் மணி மணிவண்ணன் அவர்கள் தமிழ்நாட்டில் நடந்த மொழிப் போரின் உக்கிரத்தை ஒரு சித்திரத்தைப் போல அந்த நிகழ்வில் எடுத்து வைத்தபோது கன்னட மக்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். இவ்வளவு கொடுமை நடந்ததா, இவ்வளவு பேர் பலியானார்களா, எங்களுக்குத் தெரியாதே என்று உறைந்துபோனார்களாம்,

நான் கொல்கத்தாவுக்குச் சென்றிருந்தபோது மொழியுரிமை தொடர்பான அந்த நிகழ்ச்சிக்கு இரண்டு முதியவர்களும் வந்திருந்தார்கள். அவர்களுக்கு 75, 80 வயதிருக்கும். அவர்கள் கையில் வங்க மொழியில் வெளியாகும் ’மாத்ரு பாஷா’ என்ற பத்திரிகையை. வைத்திருந்தார்கள். அதன் பழைய இதழ் ஒன்றை எங்களிடம் காண்பித்தார்கள். அதில் நமது மொழிப் போராட்டம் பற்றிய விரிவான ஒரு கட்டுரை இடம்பெற்றிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் வந்திருந்த இதழ் அது. மொழிப் பிரச்சனைக்கென்றே ஒரு பத்திரிகை நடத்துகிறார்களாம்! மொழிப் பிரச்சனையில் எங்களுக்கு துரோகமிழைத்த கட்சி சிபிஎம்தான் என்று அடித்துப் பேசினார்கள். மம்தா பானர்ஜி வந்த பிறகுதான் மொழி குறித்த விடயத்தில் கொஞ்சமாவது எங்களுக்கு அரசாங்கம் துணையாக இருக்கிறது; சிபிஎம் தொடர்ச்சியாக எங்களை ஏமாற்றி வந்தது என்று அந்த முதியவர்கள் கூறியபோது உண்மை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. நீங்களும் புரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் காங்கிரஸ், பிஜேபி, சிபிஎம் மூன்றுக்குமே மொழிப் பிரச்சனையில் ஒரே நிலைப்பாடுதான் என்று சொன்ன, மேற்கு வங்கத்தில் இந்தித் திணிப்பை எதிர்க்கும் அந்த முதியவர்கள், தமிழ்நாட்டில் நடந்த அந்த மாபெரும் இந்தி எதிப்புப் போராட்டத்தை வானளாவப் புகழ்ந்துதள்ளினார்கள்.

பஞ்சாப் பாஷா அகாதெமி உள்ளிட்ட அமைப்புகள் ஜலந்தரில் நடத்திய மூன்று நாள் மாநாட்டுக்கு சென்றிருந்த சமயத்தில்தான், தமிழ்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் தமிழுக்காக ஒரு போராட்டம் இங்கே நடந்துகொண்டிருந்தது. அந்தப் போராட்டத்தின் காரணமாக, இந்த மாநாட்டின் அடுத்த அமர்வில் வந்து கலந்துகொள்ளவிருக்கும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரான தோழர் பகத்சிங் உள்ளிட்ட சிலர் சிறையில் இருந்தார்கள். இந்திய வரலாற்றிலேயே புரட்சிகரமானதோர் இடம் வகிக்கக்கூடிய கத்தர் இயக்கத்தினுடைய ஒரு தலைமை அலுவலகம் போல இருந்த ஓர் இடத்தில் அந்த மாநாடு நடந்தது. வானளாவ பகத்சிங் படம் ஒன்று அங்கே வைக்கப்பட்டிருந்தது. நான் கூறினேன்: ”எங்கள் ஊரிலும் ஒரு பகத்சிங் இருக்கிறார்; அவர் சிறையில் இருக்கிறார்; மொழிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்.” அந்த மாநாட்டில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டின் இரண்டாவது தீர்மானம் “சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழி ஆக்கவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது” என்பதாகும். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற துணைநின்றவர் யார் தெரியுமா? பஞ்சாபின் முதன்மைப் நாளிதழ்களில் ஒன்றான ’அஜீத்’ நாளிதழின் நிர்வாக ஆசிரியர் சத்னாம் சிங் மனக் அவர்கள். நம் தமிழ்நாட்டிலுள்ள தினத்தந்தி, தினகரன் போன்ற வெகுமக்கள் பத்திரிகை அது.

சத்னாம் சிங் என்னிடம் கேட்டார்: “உயர் நீதிமன்றத்தில் தமிழுக்கான போராட்டம் தமிழ்நாட்டில் நடப்பதைப் போன்று மேற்கு வங்கத்திலும் நடக்கிறது; கர்நாடகத்திலும் நடக்கிறது; பஞ்சாபிலும் நடக்கிறது; நாம் ஏன் ஒன்றிணைந்து போராடக்கூடாது?” ஒன்றிணைந்து போராடத்தான் வந்திருக்கிறோம் என்றேன் நான்.

இதையெல்லாம் தெளிவுபடுத்தும் விதத்தில் அமைந்தது சென்னையில் நாம் நடத்திய மொழியுரிமை மாநாடு. அந்த மாநாட்டின் சிறப்பு என்பது அதில் ’மொழியுரிமைக்கான சென்னைப் பறைசாற்றம்’ (Chennai Declaration for Linguistic Rights) என்கிற ஓர் ஆவணத்தை வெளியிட்டதாகும். 1996ல் ஸ்பெயினின் பார்சிலோனா நகரத்தில் உலகெங்கிலுமிருந்து வந்த மொழியுரிமைப் போராளிகள் ஒன்றுசேர்ந்து Universal Declaration of Linguistic Rights என்றொரு ஆவணத்தை வெளியிட்டார்கள். அதை அடிப்படையாக வைத்து, இந்திய அரசியல் சட்டத்தின் 17ஆவது பிரிவை முழுமையாகக் கிழித்துத் தூக்கியெறிந்துவிட்டு மொழி சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு மாற்று திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதை வியூகமாகக் கொண்டே; தீர்வாக அல்ல – வியூகமாகக் கொண்டே – அந்த சென்னைப் பறைசாற்ற ஆவணத்தை வெளியிட்டோம்.

அந்த சென்னைப் பறைசாற்ற ஆவணத்தையும் மாநாட்டையும் மையப்படுத்தி ஆறு பக்க கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது கேரளப் பத்திரிகையான மாத்யமம். இது கேரளாவின் மிக முக்கியமான வார இதழாகும். ஆந்திராவிலிருந்து வரக்கூடிய அம்மநுடி என்கிற பத்திரிகை அந்த மாநாட்டின் புகைப்படத்துடன் அட்டைப்படக் கட்டுரையே வெளியிட்டிருந்தது. அதில் சென்னைப் பறைசாற்றத்தின் தெலுங்கு வடிவமும் பதிப்பிக்கப்பட்டிருந்தது. அம்மநுடி என்றால் தெலுங்கில் தாய்மொழி என்று பொருள்.

பெங்களூருவிலிருந்து வரக்கூடிய உதயவாணி என்கிற பத்திரிகையில், மொழியுரிமைப் போராட்டத்தில் நம்முடன் கைகோர்த்திருக்கும் நண்பரான வசந்த் ஷெட்டி, விரிவான ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் சென்னைப் பறைசாற்றத்தின் கன்னடப் பதிப்பும் இடம்பெற்றிருந்தது.

ஒரிசாவில் அங்குள்ள மூன்று பத்திரிகைகளில் மாநாட்டுச் செய்தி வெளிவந்திருந்தன. சென்னப் பறைசாற்றத்தின் ஒரிய, கோசல மொழிபெயர்ப்புகளும் அவற்றில் வந்திருந்தன.

அதேபோல மேற்கு வங்கத்திலிருந்து அந்த மாநாட்டுக்கு வந்திருந்த கோர்கா சாட்டர்ஜி என்கிற மிகச் சிறந்த எழுத்தாளர் அதைப் பற்றி டிஎன்ஏ என்கிற பத்திரிகையில் கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை டக்காவிலும் மணிப்பூரிலும் நேபாளத்திலும் பாகிஸ்தானிலும் மறுபதிப்பு செய்யப்பட்டது.

நண்பர்களே, அந்த மாநாட்டைப் பற்றிய செய்தியே வராத ஒரே இடம் தமிழ்நாடுதான்.

கோர்கோ சாட்டர்ஜியின் மேற்கு வங்க நண்பர் ஒருவர் இந்து நாளிதழில் பணிபுரிகிறார். அவர் கொல்கத்தா பதிப்பில் மாநாட்டுச் செய்தியை வெளியிட்டார். சென்னையில் வெளிவரும் இந்து ஆங்கில, தமிழ் பதிப்புகள் மாநாடு குறித்து எந்த செய்தியும் இல்லை. மாநாடு நடந்த்து ஞாயிற்றுக்கிழமை. என் ஊடகத்துறை நண்பர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் எப்போதும் எனக்கு ஆதரவு அளிப்பவர்கள். ஆனால் மாநாடு அவர்களை ஈர்க்கவில்லை. இதற்கு தனிநபர்களைக் காரணம் காட்டமாட்டேன். தமிழ்நாட்டில் மொழிப் பிரச்சினை இப்போது ஈர்க்கவில்லை. மற்ற மாநிலங்களிலோ அது புதிய பிரச்சினையாக வெடித்திருக்கிறது. அதுதான் காரணம். நான் ஊடகத் துறையைச் சேர்ந்தவன். இந்தியா டுடே பத்திரிகையில் தலைமை காப்பி எடிட்டராகப் பணியாற்றியிருக்கிறேன். தொடர்ச்சியாக எல்லா ஊடக நண்பர்களுடனும் எனக்குப் பழக்கம் இருக்கிறது. என்னை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் நீங்கள் பார்த்திருக்கலாம், தொலைக்காட்சி நிறுவனங்களுடனும் எனக்குப் பழக்கமுண்டு. வேண்டி அழைத்ததும் எல்லா மாநிலங்களிலிருந்தும் மொழியுரிமை பற்றிப் பேசுகிறவர்கள் வருகிறார்கள். ஒரு முக்கியமான நிகழ்வு, அது பற்றி ஒரு நாலு வரி எழுதுங்களேன், ஒரு பைட் போடுங்களேன் என்று கேட்டுக்கொண்டபோது தமிழ்நாட்டுப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எதுவும் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. இந்தக் கொடுமையை நான் சொல்லித்தான் ஆகவேண்டும். ஆனால் தமிழ்நாட்டுக்கு வெளியே அத்தனை பேரும் 1965ல் இரத்தம் சிந்தியவர்களைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார்கள். இதையும் நான் சொல்லியாக வேண்டும்.

ஒரு வாரம் கழித்து ஜூ.வி.யில் இரண்டு பக்க பதிவு வந்தது! அத்தோடு திருப்தி அடைந்துகொள்ளவேண்டிய நிலை. பிறகு ஒரு வாரம் கழித்து நானே அந்த மாநாட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி அது தமிழ் இந்துவில் வெளிவந்தது. அது வேறு விடயம்.

கேரளாவிலிருந்து வந்திருந்த ஒரு நண்பர். பவித்ரன் அவரது பெயர். காலடி சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அவர். அவரை அழைத்துவிட்டோம், என்ன பேசுவாரோ என்று உண்மையிலேயே பயந்துகொண்டுதானிருந்தேன். ஆனால் அவர் மிகச் சிறப்பாக தமிழர்களைப் பற்றிப் பேசினார். பேசிவிட்டுப் போய், மொழி விடயத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னோடியாக இருக்கிறது என்று ஒரு ஆறு பக்க கட்டுரையும் எழுதினார்.

மகாராஷ்டிராவிலிருந்து வந்திருந்த மும்பை பல்கலைக்கழகப் பேராசிரியர் தீபக் பவாருடைய கட்டுரையை சிவசேனாவின் சாம்னா ஏடு வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரையின் தலைப்பு ‘மீண்டும் தென்னகம் வழிகட்டுகிறது’ என்பது. சிவசேனாவுடன் எனக்கு உடன்பாடில்லைதான். ஆனால் சாம்னா வெளியிட்டிருந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றிய கட்டுரை, கடந்த ஓராண்டு காலமாக உழைத்து நாங்கள் நடத்திய அந்த மாநாட்டினுடைய விளைவு என்பதை நிச்சயம் பெருமிதமாகச் சொல்லிக் கொள்ள முடியும்.

அந்த மாநாடுக்குப் பின் மூன்று மாநாடுகள் நடந்தன; நான்கு சந்திப்புகள் நிகழ்ந்தன. பத்துக்கும் மேற்பட்ட பத்திரிகைகள் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50ஆம் ஆண்டு நிறைவைப் பற்றி எழுதின. இந்தியாவில் மொழியுரிமைப் போராளிகள் எல்லோரும் ஒன்றிணைகிறார்கள் என்ற கருத்து இந்தியா முழுக்க வெளிவந்தது.

இது நான் ஒருவன் மட்டுமே செய்த முயற்சியின் பலனில்லை. மூன்று ஆண்டுகளாக முயன்று இந்தியா முழுவதிலுமிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட மொழியுரிமை ஆர்வலர்கள் ஏறத்தாழ பத்தாயிரம் பேர் இந்த மரியாதைக்குச் சொந்தக்காரர்கள். Promote Linguistic Equality என்கிற முகநூல் குழு ஒன்று உள்ளது. அது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக பல்வேறு முகநூல் பரப்புரைகளை, டுவிட்டர் பரப்புரைகளை நடத்தி வருகிறது. 2015ல் அது #StopHindiImposition, #StopHindiImperialism என்று இரண்டு ட்விட்டர் பரப்புரைகளை நடத்தியது. சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றுகிற அந்த வெளையில், இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கணினி முன், மொபைல்போனுடன் அமர்ந்து Stop Hindi Imperialism பரப்புரையை மேற்கொண்டனர். இது பல நகரங்களில் டுவிட்டரின் முதல் பத்து ட்ரெண்டிங்கிலேயே அது வந்தது. ஆனால் இதைச் செய்தவர்களில் 95 விழுக்காட்டினர் தமிழ்நாட்டுக்கு வெளியேதான் உள்ளவர்கள்.

அதே ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழுக்கான போராட்டம் நடந்துகொண்டிருந்த சமயம். டிசம்பர் 3ஆம் தேதி என்று நினைக்கிறேன். தமிழ் இன் மெட்ராஸ் ஹைகோர்ட் (#TamilInMadrasHighcourt) என்ற டுவிட்டர் பரப்புரையை கர்நாடகத்திலிருந்து பெங்களூரு தோழர்கள் நடத்தினார்கள். அதாவது சென்னைப் போராட்டத்துக்கு பெங்களூருவிலிருந்து ஆதரவு! எங்கிருந்து வந்தது இந்த ஒற்றுமை? 1965 மொழிப் போரில் இறந்தவர்களின் ஆவி இன்று இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறது. அசாமில், பஞ்சாபில் எல்லா இடங்களிலும்.

சென்னைப் பறைசாற்ற ஆவணத்தின் பஞ்சாபி, இந்தி, பெங்காலி பதிப்புகளை ஜலந்தர் நிகழ்வின்போது விநியோகித்தோம். அப்போது மைதிலி, போஜ்புரி, புந்தேலி, ராஜஸ்தானி ஆகிய மொழிக்காரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மொழியை ஒழித்துக்கட்டிவிட்டு அதன் மீது இந்தி வந்து உட்கார்ந்திருப்பதை எடுத்துரைத்தனர். அதோடு, மொழிப் போராட்டத்தில் எங்கள் மொழியையும் சேர்த்திருப்பதற்காக நன்றி; உங்களோடு துணைநிற்போம் என்றனர். மைதிலியும் போஜ்புரியும் பிகாரில் பேசப்படும் மொழிகள். புந்தேலி மத்தியப் பிரதேசத்தில் ஜான்சி பகுதியில் பேசப்படும் மொழி. ராஜஸ்தானி ரஜஸ்தானில் பேசப்படுகிறது. இந்தி மொழி இவற்றை ஒழித்துக்கட்டிவருவதாக 80 ஆண்டுகளுக்கு முன்பே நமது பாவாணர் கூறிவிட்டார். அந்த மொழிக்காரர்கள் இப்போதுதான் உணர்கிறார்கள்.

ஜார்க்கண்டில் நடந்த மாநாட்டில் சந்தாலி, முண்டா போன்ற ஆக்ரோ ஆசியாட்டிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த உள்ளூர் பூர்வக்குடி, பழங்குடி மக்களின் மொழியைச் சேர்ந்தவர்களும் வட திராவிட மொழிகளான குருக், மால்டோவைச் சேர்ந்தவர்களும் பேசினார்கள். எங்களுடைய மொழிக்காகவும் சேர்த்து நீங்கள் குரல் கொடுக்கிறீர்கள், நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்கள்.

தோழர்களே, உங்களிடம் இரண்டு கோரிக்கைகள்: நாளை மறுநாள் சனவரி 26ல் காலை 9.30 மணி அளவில் ‘இது இந்திக் குடியரசு அல்ல’ (#NotHindiRepublic) என்ற டுவிட்டர் பரப்புரை முழக்கம் இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருந்து செய்யப்படவிருக்கிறது. இதில் கலந்துகொள்ளுங்கள், நண்பர்களுக்கும் சொல்லுங்கள். இந்தப் பரப்புரை நமது இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குச் சமமானது.

வரும் பிப்ரவரி 21ல் டெல்லியில் நமது சென்னைப் பறைசாற்றத்தை அடிப்படையாக வைத்து ஒரு பெரிய நிகழ்ச்சி நடத்துகிறோம். 25 மொழிகளைச் சேர்ந்த பேராளர்கள் அதில் கலந்துகொள்கிறார்கள். அந்தப் பேராளர்கள் அனைவரும் கையோடு கைகோர்த்து நமது நடராசன், தாளமுத்து, ராசேந்திரன், கீழ்ப்பழவூர் சின்னச்சாமி உள்ளிட்டவர்களின் படங்களைத் தாங்கி நிற்பார்கள். இந்தியா கேட் பகுதியில் மெழுகுவத்தி ஏந்தும் ஒரு நிகழ்வும் உண்டு. CLEAR அமைப்புதான் அதை நடத்துகிறது. அதன் கூட்டக ஒருங்கிணைப்பாளர் (Fedaral Co-ordinator) நான்.

மொழிப்போர்த் தீ அணைந்துவிடாது பற்றிப் படரச் செய்ய நாம் எடுத்த முயற்சி தொடரும். அனைவரும் இதற்கு கைகொடுக்க வேண்டும்.

நாளை பொள்ளாச்சியில் மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் நடக்கிறது. அய்யா மணியரசன் அவர்களும் வருகிறார்கள். 1965 போராட்டத்தில் மிக அதிக உயிர் பலி ஏற்பட்ட நகரங்களில் ஒன்று பொள்ளாச்சி. அங்கு உயிரிழந்தவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைப்பதற்கான முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. அங்குள்ளவர்களுடன் கலந்து பேசி அதற்கான தொடக்க விழாவை நாளை நடத்துகிறோம். தமிழகத்தில் பல இடங்களில் இந்த நினைவுச் சின்னம் இருக்கிறது. மொழிப்போரில் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பல இடங்கள் இன்னும் தெரியாமலே இருக்கின்றன. 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட ஆரணியை, 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட குடியாத்தத்தை நிறைய பேருக்குத் தெரியாது. இது போன்ற இடங்களையெல்லாம் தேடிக் கண்டறிந்து அங்கே நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.

இந்த மொழியுரிமைப் போராட்டம் தொடரும். மொழிப்போர்த் தீ பரவும். நன்றி!

Leave a Reply

Your email address will not be published.