கேடலோனியர்கள்; குர்திஷ்களின் விடுதலைப் போராட்டம்!

மீபத்தில் இராக்கில் உள்ள குர்திஷ் பிராந்திய அரசாங்கத்துக்குட்பட்ட பகுதியிலும் ஸ்பெயினில் உள்ள கேடலோனியா சுயாட்சி சமூகத்துக்குட்பட்ட பகுதியிலும் நடந்த கருத்துக்கேட்பு வாக்கெடுப்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. குர்திஸ்தான் தனி நாடு உருவாக வேண்டும் என்று குர்திஷ் மக்களும்; கேடலோனியா தனி நாடு உருவாக வேண்டும் என்று கேடலோனியா பிரதேச மக்களும் பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். எதிர்பார்த்தது போலவே, இந்த வாக்கெடுப்புகளை ஏற்க இராக்கும் ஸ்பெயினும் மறுத்துவிட்டன.

குர்திஷ்களும் கேடலோனியர்களும் இந்த உலகின் எதிரெதிர் துருவங்களில் வாழ்கின்ற இனங்கள் என்றாலும், அவர்களுடைய தலையெழுத்துகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஒரு இனம், ஜனநாயகத் தின் தொட்டில் என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் ஐரோப்பியக் கண்டத்தில் இருக்கிறது. மற்றொரு இனம், ஜனநாயகக் காற்று வீசாத பாலை எனக் கருதப்படும் மேற்காசியாவில் இருக்கிறது. கேடலோனியர்கள் ஆயிராமாண்டு காலமாக இருந்துவரும் தமது தாயகத்துக்கான சுயாட்சியை முன்பே வென்றெடுத்தார்கள். பெற்ற சுயாட்சி உரிமைகளை ஸ்பெயின் அரசு பறிக்க முயன்றபோது, சுதந்திரத்தை நோக்கி நகர்ந்தார்கள்.

சுதந்திர வேட்கை

குர்திஷ் மக்களின் நிலையோ படுமோசம். குர்திஸ்தான் என்றழைக்கப்படும் அவர்களது தாயகம் இராக், ஈரான், சிரியா, துருக்கி ஆகிய நான்கு நாடுகளால் துண்டாடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. மேற்காசியாவின் சாம்ராஜ்ய மும்மூர்த்திகளான துருக்கியர்களும் அரேபியர்களும் பாரசீகர்களும் குர்திஷ்களின் இன அடையாளத்தைக்கூட ஏற்கத் தயாராக இல்லாமல், இனப் படுகொலைகளினூடாக வும் ஒடுக்குமுறைகளினூடாகவும் அந்த இனத்தை அழித்துவந்தனர். 90-களில் இராக்கில் அமெரிக்கா நுழைந்த பிறகு, அமெரிக்காவின் உள்ளூர் வியூகத்தின் ஒரு பகுதியாகவே இராக்கிலுள்ள குர்திஷ் மக்களுக்கு என ஒரு பிராந்திய அரசு அமைந்தது. இப்போது தனி நாடாவதற்கான வாக்கெடுப்பை நடத்தியது அந்த அரசுதான்.

இராக்கில் உள்ள குர்திஷ் மக்கள் செப்டம்பர் 25-ல் நடந்த வெகுசன வாக்கெடுப்பில் கலந்துகொண்டு தங்களுக்குத் தனிநாடு வேண்டும் என வாக்களித்தார்கள். பல முறை நடத்தத் திட்டமிடப்பட்டு, ஆனால் முடியாமலேயே போயிருந்த நிலையில், இந்த முறை அது வெற்றிகரமாக நடந்தது. கேடலோனியாவைப் பொறுத்தவரை அக்டோபர் 1-ல் நடைபெற்ற வாக்கெடுப்பைச் சட்டவிரோதம் என்று ஸ்பெயின் அரசு கூறினாலும், கேடலோனிய அரசுத் தலைவர் கார்லஸ் பியூஜ்டிமாண்டின் உள்ளிட்டோர் அதைப் பற்றிக் கவலைப் படாமல் வாக்கெடுப்பை நடத்தினார்கள். ஸ்பெயின் பிரதமர் மரியானா ரஜோயின் மிரட்டல்களும் அவரது அரசின் போலீஸ் தாக்குதல்களும் ஸ்பானிய ஆளும் தலைகளின் ஆணவப்போக்கும் கேடலோனியாவில் சுதந்திரம் குறித்து முடிவெடுக்காமல் குழம்பியிருந்த மக்களைக்கூட சுதந்திரத்துக்கு ஆதரவானவர்களாக மாற்றியது. வாக்களித்த 43% மக்களில் 92% பேர் சுதந்திரம் வேண்டும் என்றே தேர்வு செய்திருந்தார்கள்.

எதிர்விளைவுகள்

இவ்விரு நிகழ்வுகளும் உலக அரங்கில் கடுமை யான எதிர்விளைவுகளை உருவாக்கியுள்ளன. பெரிய நாடுகள் இதுவரை கேடலோனியாவையோ குர்திஸ் தானையோ அங்கீகரித்துவிடவில்லை. குறிப்பாக, குர்திஸ்தான் வாக்கெடுப்பை முழுமையாக நிராகரித் தார் அமெரிக்க அரசுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன். இன்றைய உலக ஒழுங்கில் வல்லரசுகளின் போட்டிக்களத்தில் ஏதேனும் ஒரு அணியில் இருந்தால்தான், பிரிவினைப் போராட்டங்கள் வெற்றிபெறுகின்றன என்று பொதுவாகக் கருதப்படுகிறது. சமீபகாலத்தில் தனிநாடுகளாக ஆன தெற்கு சூடான், கோசாவா போன்றவைகூட அதற்கு எடுத்துக்காட்டுகளாகச் சொல்லப்படுகின்றன. எல்லா வல்லரசுகளும் ஒன்று திரண்டு எதிராக நின்றால், ஒரு விடுதலைப் போராட்டத் தைச் சுவடின்றி அழித்துவிட முடியும் என்று தமிழ் ஈழப் போராட்டத்தின் முடிவு காட்டுகிறது.

ஐரோப்பாவில் சுயநிர்ணய உரிமைகள் என்பது வரலாற்றுரீதியாக ஏற்கப்பட்டுவிட்ட ஒரு கோட்பாடு என்று கருதப்படுகிறது. ஆனால், ஆசியாவில் எந்த நாட்டிலும் அதற்கு ஏற்பு இல்லை என்பதும் வெளிப்படை. 90-களில் சோவியத் யூனியன், யூகோஸ்லேவியா, செக்கோஸ்லோவேகியா போன்ற கூட்டமைப்புகள் தகர்ந்து, பல நாடுகள் உருவாயின. அந்தச் சம்பவங்கள், ரஷ்யப் புரட்சியினூடாக விளதிமிர் லெனினும் முதல் உலகப் போருக்குப் பின் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனும் முன்வைத்த சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகள் மேற்குலகில் சட்டபூர்வமாக ஏற்கப்பட்டிருப்பதன் அடையாளம் என்றும் கருதப்பட்டது.

மத்திய, கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ஆதிக்கத்தை உடைப்பதற்கு சுயநிர்ணய உரிமை என்கிற ஆயுதத்தை எடுத்த எந்த மேற்கு, தெற்கு ஐரோப்பிய நாடும் தங்கள் நாட்டில் அதே கோரிக்கை எழுகிறபோது அதை ஏற்றுக்கொள்வதில்லை. பழைய சாம்ராஜ்யங்களோ புதிய வல்லரசுகளோ தங்களுடைய தேவைக் கும் நலனுக்கும் ஏற்பவே நாடுகளை உருவாக்கத் துணைபுரிகின்றன. இந்தப் பின்னணியில்தான் கேடலோனியாவில் வாக்கெடுப்பு, ஸ்பெயினில் விடுதலைக்குப் போராடும் பாஸ்க் இனத்தவர்க்கும், அருகே பிரிட்டனில் ஸ்காட்களுக்கும் உற்சாகத்தை அளித்தது. ஆனால், ஸ்பெயின் அரசின் மனநிலையையே பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற அரசுகள் பிரதிபலித்தன.

வல்லரசுகளுக்குச் சவால்

ஐரோப்பாவிலேயே இப்படி என்றால், குர்திஸ்தான் விவகாரத்தில் கேட்கவே வேண்டாம். உள்ளூர் தாதாக்களான இராக், ஈரான், சிரியா, துருக்கி போன்ற நாடு களுக்குள் ஆயிரம் போட்டியிருக்கலாம். ஆனால் குர்திஸ்தான் என்கிற ஒரு அரசு உருவாகிவிடக் கூடாது என்பதில் அவை ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றன. வாக்கெடுப்பு நடந்த நாள் முதலாகவே குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தின் மீது அனைத்துவிதமான தடைகளையும் அவை போடத் தொடங்கின. இராக்கிய குர்து அரசின் தலைநகரமான எர்பிலுக்கு பயணியர் விமானப் போக்குவரத்தைத் தடைசெய்தது இராக். அங்கேயிருந்து வெளிவரும் எண்ணெய் குழாய்களை அடைக்கப்போவதாக மிரட்டியது துருக்கி. குர்துப் பகுதியுடனான எல்லையை மூடியது ஈரான்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சதாம் உசைனின் இராக்கில் இனப்படுகொலைக்கு உள்ளான குர்திஷ் மக்களுக்கு பிராந்திய அரசை ‘உருவாக்கித் தந்த’ அமெரிக்காவும் தன்னுடைய நிஜ முகத்தைக் காட்டிவிட்டது. மசூத் பர்சானி தலைமையிலான குர்திஷ் பிராந்திய அரசு அமெரிக்காவின் கைப்பாவை என்று சொல்லக்கூடிய அளவுக்கு அமெரிக்க நலன்களுக்கு ஒத்தாசை செய்துவந்தது. அமெரிக்கர்களால் நேரடியாக எதிர்கொள்ள முடியாத ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டியதில் குர்திஷ்களின் பெஷ்மெர்கா படையினரின் பங்கு அதிகம். குர்திஷ் பகுதி தனிநாடாகச் செல்லவேண்டும் என்று அவர் உறுதியாக முடிவெடுத்தபோது. அவரைக் கைகழுவியது அமெரிக்கா.

அப்படியென்றால் கேடலோனிய, குர்திஷ் கனவுகள் என்ன ஆகும்? வல்லரசியவாதிகளின் முடிவு என்னவாக இருந்தாலும், மக்கள் முடிவெடுத்துவிட்டால், நீண்ட காலம் அதை மறுத்து நிராகரிக்கும் ஆற்றல் யாருக்குமே இல்லை என்பது வரலாறு. காலனிய சகாப்தத்தில் போடப்பட்ட எல்லைக் கோடுகளை மாற்றவிடக் கூடாது என்று வல்லரசுகள் விரும்புகின்றன. அதை மீறி சுதந்திரம் வேண்டுமானால், வல்லரசுப் போட்டிக்களத்தில் ஏதேனும் ஒரு அணியை அனுசரித்து சுதந்திர யாசகம் கேட்கவேண்டிய கட்டாயத்தை அவை உருவாக்கி வைத்திருந்தன. அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ள அதே நேரத்தில், குர்திஸ்தான்களும் கேடலோனியாக்களும் சுயநிர்ணய உரிமையை வெல்வதற்கான வழியைக்கூட சுயமாக நிர்ணயித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டன என்பதுதான் இப்போது வந்திருக்கும் புதிய செய்தி. இது உலக, வட்டார வல்லரசுகளுக்கு விடப்பட்டுள்ள புதிய சவாலும்கூட!

நன்றி: தி இந்து (தமிழ்) http://tamil.thehindu.com/opinion/columns/article19875305.ece

இராவணனுக்கு எத்தனை ஆதார் அட்டை?

இந்த ஆண்டு தசரா கொண்டாட்டங்களின்போது ராவணன் சமூக ஊடகங்களில் மிகப்பெரிய அளவுக்கு விவாதப் பொருளாக ஆனார். தசராவை முன்னிட்டு ஆதார் அட்டையை வழங்கும் UIDAI நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில் A time when the world sees the power of good governance.Let us continue this true spirit with Aadhaar…#HappyDussehra என்று தசரா வாழ்த்தினை வெளியிட்டிருந்தது. ஆதார் அட்டை திட்டத்தைக் கடுமையாக எதிர்த்துவரும் பல ட்விட்டர் குழுக்களின் ஒன்றான #DestroyTheAdhaar என்கிற குழுவிலிருந்து UIDAIஇன் இந்த வாழ்த்துக்கு எதிராக ஒரு கிண்டலான எதிர்வினை வந்தது.

Sir how many Aadhaar can Ravan get? 10 faces * 10 iris pairs = 100 at least? #DestroyTheAadhaar என்பதுதான் அந்த எதிர்வினை. ஆதார்காரர்களும் விடவில்லை. அதற்குப் பதில் எழுதினார்கள். “Not a resident of India. Not eligible to enroll for Aadhaar” என்பது ஆதாரின் பதில். அவ்வளவுதான், சமயோசிதமாக பதில் அளித்தமைக்காக UIDAIக்கு ஆதார் ஆதரவாளர்கள் லைக்குகளையும் ரிட்வீட்களையும் வாரி வழங்கினார்கள்.

அழகுதான்! ஆனால் ராவணன் இந்தியாவின் குடிமகனா இல்லையா என்று ராமராஜ்ய பக்தர்கள் தாங்களாகவே முடிவெடுத்துவிட முடியாது. ஏனென்றால் இந்தியாவில் ராவணனைக் கொளுத்தி மகிழும் ராம பக்தர்கள் மட்டும் குடிமக்களாக இல்லை. மாறாக, ராம்லீலா மைதானங்களுக்கு அப்பால், ராவணனைத் தங்கள் தெய்வமாக வழங்கும் மக்களும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். வட இந்தியாவிலும் மத்திய இந்தியப் பகுதிகளிலும் பல ஆதிவாசிச் சமூகத்தவர்கள் ராவணனைத் தன் முப்பாட்டானாகக் கருதுகிறார்கள். அவ்வளவு தூரம் ஏன்? இந்திரப் பிரஸ்தத்துக்கு அருகேயுள்ள நோய்டாவிலாயே ராவணனுக்குக் கோயில் இருக்கிறதாம்.

ராம் லீலா கொண்டாட்டங்களின்போது ராவணன் கொளுத்தப்படுவதைப் பார்த்து உற்சாகமடையும் கூட்டத்தினர் மத்தியில். ராவணன் உருவத்தைக் கொளுத்தாதே என்று கூறும் கூட்டமும் இருக்கிறது என்பதை நமது ஸோ-கால்டு நேஷனல் மீடியா இதுவரை கூறவில்லை.

மத்தியப்பிரதேசத்திலுள்ள ஆதிவாசிச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ராவணனைத் தங்கள் தெய்வம் என்றுகூறி தங்கள் தெய்வத்தை கொளுத்துவது தங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். தசராவின்போது ராவணன் உருவத்தைக் கொளுத்துபவர்கள்மீது வழக்குத் தொடரப்படும் என்றும் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். “விஜயதசமியின்போது ராவணன் உருவ பொம்மைகளைக் கொளுத்துவது குறித்து ஆதிவாசி மக்கள் மத்தியில் முன்பும் எதிர்ப்பு இருந்தது என்றாலும், மாநிலத்தின் ஒரு பகுதியில் வலுவான, ஒருங்கிணைக்கப்பட்ட பரப்புரை இயக்கம் ஒன்று முதன்முறையாக எழுந்திருக்கிறது” என்று ஹஃப்பிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தி குறிப்பிடுகிறது. மத்தியப்பிரதேசத்தில் பெதுல் மாவட்டத்தில் இந்தஆண்டு இந்த எதிர்ப்பு வலுவாக இருந்திருக்கிறது.

“உருவ பொம்மைகளை எரிப்பதைப் பார்க்கும்போது எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. நாங்கள் ராவணனையும் மேகநாதனையும் வழிபடுகிறோம். இவை எங்கள் தொல் மரபு, எங்கள் உணர்வுகள் புண்பட்டுள்ளன” என்று ஆதிவாசிகளின் தலைவர்களில் ஒருவரான திலீப் துருவே ஊடகத்தினரிடம் தெரிவித்திருக்கிறார். அதை ஆமோதித்திருக்கிறார்கள் பிற ஆதிவாசித் தலைவர்களான ஆர்.எஸ்.உய்கே, பிரேம் சிங் சலம் போன்றோர்.

ராவணன் உருவ பொம்மைகளைக் கொளுத்துவது என்பது இரு சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தை அதிகரிக்கிறது என்று ஆதிவாசி விகாஷ் பரிஷத் என்கிற அமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறது.

இரு சமூகங்கள்? ஹா! தசரா கொண்டாடுபவர்கள் ஒரு சமூகம், ராவணனைக் கொண்டாடுபவர்கள் மற்றொரு சமூகம். ‘இந்துக்கள்’ இந்த வார்த்தைகளை நம்பவே மாட்டார்கள்.

ராவணன் இந்தியனா, இல்லையா?

ராமனை இந்தியக் குடிமகனாக ஏற்கும் மத்திய அரசு ராவணனைத் தங்கள் நட்பு நாடான இலங்கையின் குடிமகன் என்று நினைத்துக்கொண்டுதான் ஆதார் அட்டையைத் தர மறுக்கிறது என்று தெரியவருகிறது. இது ஆறுதலையே தருகிறது. ராமனும் ராவணனும் இருந்தபோது தெற்காசியா ஒரே நாடாக இல்லை என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பரத கண்டம் என்கிற நாவலந்தீவு என்கிற இன்றைய இந்தியத் துணைக்கண்டம் பல்வேறு தேசங்களாகவே இருந்திருக்கிறது. அவனி ஐம்பத்தாறு தேசங்கள் என்று சொல்கிறார்கள். நல்லவேளையாக, அப்போது அகண்ட இந்தியா இருக்கக் காணோம். எனவே, இலங்கையின் ராவணனை இந்தியக் குடிமகனாக ஆதார் நிறுவனத்தார் நினைக்கவில்லை.

ஆனால், ராவணன் ராமஸ்வேரம் தாண்டி பாக் ஜலசந்திக்கு அப்பால் வன்னிக்காட்டில் இருந்தான் என்பது ஒரு கதை. இந்தியாவில் இன்னொரு கதையும் உண்டு. அது ராமயணம் கூறும் லங்கா என்பது இன்றைய சத்தீஸ்கர் – ஒரிசா பகுதியைச் சேர்ந்த ஒரு நிலப்பகுதி என்று கூறுகிறது. ராவணன் மத்திய இந்தியப் பழங்குடிகளின் மூதாதையருள் ஒருவன் என்றும் அந்தக் கதையில் சொல்லப்படுகிறது.

மத்தியப்பிரதேசத்தின் கோண்டு பழங்குடியினரிடம் அப்படி ஒரு ஐதீகம் இருக்கிறது. இப்போது அவர்களிடம் வேகமாக வளர்ந்துவரும் கோண்டுவானா கண தந்திரக்கட்சியும் ராவணனை அவமதிக்கும் திருவிழாக்களுக்கு எதிராகச் சட்டபூர்வ நடவடிக்கையை எடுக்கப்போவதாகக் கூறியுள்ளது. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த கோண்டு பழங்குடியினருக்குத் தனி மாநிலம் வேண்டும் என்று போராடி வருகிறது கோண்டுவானா கண தந்திரக்கட்சி. கோண்டுவானா என்பது தமது ஆதி நிலம் என்பதையும் இந்தியாவின் பூர்வீக நாகரிகங்களில் அதுவுமொன்று என்பதையும் வலியுறுத்திவரும் இந்தக் கட்சி, ராவணனைக் கொண்டாடும் கலாசாரம் தம் மக்களிடம் நெடுங்காலமாகவே உண்டு என்று கூறுகிறது. ஆரியர்கள் தங்களைத்தான் அசுரர்கள் என்று கூறுகிறார்கள் என்று இவர்கள் நம்புகிறார்கள். ஆதிவாசிகளின் அரசியல் உணர்வு அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் ராவணனைக் கொண்டாடும் அரசியல் உணர்வு பரவிவருகிறது.

ராவணனைத் தமிழனாகப் பார்க்கும் பழக்கமுடைய தமிழ்நாட்டில் இந்தச் செய்திகள் ஆரவாரத்துடன் வரவேற்கப்படலாம். வேறு எந்த இதிகாச மரபையும்விட அதிகமாக திராவிட இயக்கத்தவரால் விமர்சிக்கப்பட்ட மரபு ராமகாதை. திராவிட இயக்கத் தலைவர்களும் அறிவுஜீவிகளும் ராமன் என்கிற உத்தம புருஷன் ஓர் உத்தம புருஷன்தானா என்று கேள்வி கேட்டார்கள். ராவணனை மையப்படுத்திய எதிர்ப்புனைவுகளும் உருவாக்கப்பட்டன. ராவண காவியத்தையே எழுதினார் புலவர் குழந்தை.

தென்திசையைப் பார்க்கின்றேன் என்சொல்வேன் என்தன்

சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடடா

அன்றந்த லங்கையினை ஆண்ட மறத்தமிழன்

ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்

குன்றெடுக்கும் நெடுந்தோளான் கொடைகொடுக்கும் கையாளன்

குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்

என்தமிழர் மூதாதை என்தமிழர்பெருமான்

ராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்

என்று பாடினார் பாரதிதாசன். (திராவிட இயக்கப் பற்றாளரான எனது உறவினர் ஒருவர் தன் மகனுக்கு ராவணன் என்று பெயரிட்டார்). ராமாயணத்தைக் கொளுத்தும் தீ பரவட்டும் என்றார் அண்ணா. கம்ப ரசத்தைப் பிழிந்து கேலி செய்தார். ராமாயணத்தின் மீதான திராவிட இயக்க விமர்சனத்தின் தாக்கம் மிகத்தீவிரமாக இருந்தபோது, ராமனையும் கம்பனையும் காக்கத் தீவிரமாக வேலை செய்தார்கள் சில தமிழ்ப் புலவர்கள். ஆனாலும்கூட “ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது அறமா மறமா” என்று கேள்விகேட்டுக் கோயில் பந்தல்களிலேயே வழக்காடு மன்றம் நடத்திய காலமாக அந்தக் காலம் இருந்தது என்பது இந்தத் தலைமுறையினருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

எதிர்க்கலாசாரமும் ஆதிக்கலாசாரமும்

ஆனால், தமிழகம் ராவணனைக் கொண்டாடியதற்கும் இன்று கோண்டுகள் உள்ளிட்ட பழங்குடியினர் அதைக் கொண்டாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ராவணனைக் கொண்டாடியது ஓர் எதிர்க்கலாசார நடவடிக்கை. ஆனால், கோண்டுகளைப் பொறுத்தவரை அது அவர்களுடைய ஆதிக்கலாசாரம்.

அயோத்திக்கும் லங்காபுரிக்கும் இடையிலான தொலைவு குறைவு என்பது மட்டுமல்ல; அவ்விரு ராஜ்ஜியங்களும் இப்போது மோதலிலும் இருக்கின்றன. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்டு, பீஹார் பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் தங்களுடைய அரசியல் அதிகாரத்துக்காகவும் மொழி உரிமை உள்ளிட்ட இன உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மாவோயிஸ்ட்களின் தாக்கத்தால் தீவிர அரசியல் அவர்களிடம் நுழைந்து இரு பல்லாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பழங்குடி மக்களிடமிருந்தே நேரடியான அரசியல் அமைப்புகள் தமது வரலாற்றை மீட்டுருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளன. அதுதான் இன்று ராம் லீலாவுக்கு எதிரான சட்டப் போராட்டமாகவும் வெடித்திருக்கிறது.

ராவணன் இந்தியக் குடிமகனில்லை என்று ஆதார் அமைப்பு கருதலாம். அப்படியானால் கோண்டுவானா இந்தியா இல்லையா என்று கோண்டுகள் கேட்டால் அவர்களிடம் பதில் இருக்க வேண்டும்.

நன்றி:  மின்னம்பலம் https://minnambalam.com/k/2017/10/08/1507401030

எங்கே போனது யாழ் கருவி?

எங்கே போனது யாழ் கருவி?

வேலைக்கடுமையின் இடையில் அவ்வப்போது யூட்யூபுக்குச் சென்று செவ்வியல் இசைத் துணுக்குகளைக் கேட்பதுண்டு. அப்படித்தொடங்கிய ஒரு இசைப்பயணத்தில் harp கருவியின் இசையில் சற்று மூழ்கிப்போனேன்.

டைட்டானிக் திரைப்படத்தின் தீம் பாடலான My Heart Will Go on இசையை ஹார்ப்பிலும் வயலினிலும் இசைத்த ஒரு வீடியோயும் பார்த்தேன்! கேட்கவும் பார்க்கவும் அழகு.

ஒரிஜினல் பாடலின் வரிகளைப் பார்த்தேன், இதோ சில வரிகள்:

Love can touch us one time
And last for a life time.
And never let go till we are gone.

எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தது.

“இந்த மானிடக் காதல் எல்லாம்
ஒரு மரணத்தில் மாறிவிடும்…….

நாம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூடவரும்”

வீடியோவில் ஹார்ப் கம்பிகளில் நடமாடியன அந்தப் பெண்களின் விரல்கள்….

ஆனால் அந்த வீடியோ ஒரு கேள்வியை எழுப்பிவிட்டது.

பாபிலோனிய, அசிரீய காலத்திலிருந்து ஹார்ப் வகை கருவிகள் உலகில் இருந்திருக்கின்றன. ஹார்ப் புதிய வடிவங்களில் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதன் தமிழ் வடிவமான யாழ் எப்போது நம்மை விட்டு அகன்றது?

யாழ் இங்கே மாபெரும் செல்வாக்கோடு இருந்திருக்கிறது. ஆனால் பிறகு என்ன ஆனது?

வீணைதான் யாழை ஒழித்துவிட்டது என்று கருத்து நிலவுவதாக தமிழ் விக்கிபீடியா சொல்கிறது. அப்படியா?

யாழின் இசை கடைசியாக தமிழ்நிலத்தில் கேட்டது எப்போது? ஆதாரமுண்டா?

இறுதியாக, இந்த யாழுக்கு புத்துயிர்க்கொடுக்க முடியுமா?

 https://www.youtube.com/watch?v=RigyRr5B_gY

ஒரே நாடு ஒரே ஃப்யூஸ்! – மோடியின் செளபாக்யா திட்டம்

டிசம்பர் 2018க்குள் இந்தியாவிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சார வழங்கீட்டை நிறைவு செய்ய வேண்டும் என்று கூறி ஒரு திட்டத்தைச் சில நாள்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ரூ.16,320 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தின் மூலமாக, ஏழைகளுக்கு மின்சாரத்தை இலவசமாக வழங்கவும் ‘பிறருக்கு’க் குறைந்த விலையில் வழங்கவும் திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசாங்கம் அறிவித்தது. செளபாக்யா திட்டம் என்று அழைக்கப்படும் பிரதான் மந்திரி சகஜ் பிஜ்லி ஹர் கர் யோஜ்னா என்கிற இந்தி பெயராலேயே எல்லா மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தை மோடி அறிவித்தபோது நாட்டு மக்கள் அப்பாடா என்று பெருமூச்சுவிட்டார்கள். முன்னதாக, ஆறரை மணிக்கு மோடி பேசப்போகிறார் என்றச் செய்தியைக் கேட்டு கதிகலங்கி போயிருந்தார்கள் மக்கள்.

இந்த செய்தியைக் கேட்டவுடன் தமிழ்நாட்டுச் சமூக ஊடக வட்டாரம் ஒரேயடியாக குதூகலத்தில் மூழ்கியது. “அடே, இதையெல்லாம் நாங்க போன நூற்றாண்டிலேயே செய்து முடித்து விட்டோமடா!” என்று சமூக ஊடகத்தில் தமிழர்கள் எகத்தாள சிரிப்பு சிரித்தார்கள். மோடியோ, யோகியோ, காவி பரிவாரத்தின் வேறு எந்த முகமோ தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் நல்ல பேர் எடுக்க வேண்டும் என்றால் அது கிட்டத்தட்ட சாத்தியமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக மக்கள் நலத் திட்டங்கள் என்று வந்தால் சமூக ஊடகத் தமிழர்கள் புள்ளிவிவரம் சகிதமாக வந்து கிழிக்கிறார்கள்.

மே 2017 வாக்கில், தமிழ்நாட்டில் ஊரக மின்சாரமயமாக்கத்தின் சதவிகிதம் 100. அதாவது எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி அளிக்கப்பட்டுவிட்டது. அதைப் போலவே உத்தரப்பிரதேசத்தில் ஊரக மின்சாரமயமாக்கத்தின் சதவிகிதம் 99.99. பெரிய வித்தியாசமில்லை.

ஆனால், மின் தொடர்பு பெற்ற எல்லா வீடுகளுக்கும் மின்வசதி இருக்கிறதா? இல்லை. இதில் அனைத்திந்திய சராசரி 88.2 சதவிகிதம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் மின் தொடர்புள்ள வீடுகளின் சதவிகிதம் 100ஐ எட்டிவிட்டது. ஆனால், 99.99 சதவிகிதக் கிராமங்கள் மின் தொடர்புள்ள உத்தரப்பிரதேசத்தில் மின்வழங்கீடுள்ள வீடுகளின் சதவிகிதம் 51. பீகாரில் 47 சதவிகிதத்துக்கும் குறைவான கிராம வீடுகளே மின்வழங்கீடு பெற்றுள்ளன. ஜார்க்கண்ட் 44%, மத்தியப் பிரதேசம் 60%,

ஆனால் மற்ற மாநிலங்களில் எப்படி? தெற்கே கேரளம் 100%, ஆந்திரம் 100%, தெலங்கானா 93.1%, கர்நாடகா 92%, கிழக்கே மேற்குவங்கம் 99%, வடக்கே பஞ்சாப் 100%, உத்தராகண்ட், இமாச்சல் பிரதேசங்களிலும் நல்ல முன்னேற்றம். இவை அனைத்தும் மத்திய அரசின் புள்ளிவிவரங்களே.

இந்தப் புள்ளிவிவரங்கள் சில உண்மைகளைச் சொல்கின்றன. மின்வசதி பெற்ற ஊர்கள், மின்வசதி பெற்ற வீடுகள் என இரண்டு காரணிகளிலும் தென்னிந்திய மாநிலங்களும் ஒரு சில வட இந்திய மாநிலங்களும் தமது இலக்குகளில் நிறைவை எட்டியிருக்கின்றன என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

சமூக நீதி என்னும் மின்தடம்

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற இந்தி மாநிலங்களே இதில் பெரிதும் பின்தங்கியுள்ளன. மின்வசதி பெற்ற ஊர்கள் என்கிற கணக்கில் இங்கே நல்ல முன்னேற்றம் இருக்கிறது. ஆனால், மின்வசதி பெற்ற வீடுகள் என்று வரும்போது இவை மிகவும் பின்தங்கியுள்ளன. இதன் அர்த்தம், ஊருக்கு வந்த மின்சாரம் பாதி வீடுகளுக்குப் போய்ச் சேரவில்லை என்றால், சமூகநீதி மின்தடம் அந்த வீட்டுக்குச் செல்லவில்லை என்றுதான் பொருள். வறுமையின் அதிர்ச்சியையும் அது சுட்டுகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின்படி மின்சாரம் பொதுப் பட்டியலில் இருக்கிறது. பல மாநிலங்களில் மின்துறை – அவற்றுக்கேயுரிய ஊழல் இத்யாதி பிரச்னைகளுடன்தான் என்றாலும் – பலமாக இருக்கிறது. இந்த மாநிலங்களில் அனைவருக்கும் மின்சாரம் என்பது எப்போதோ முடிவெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்ட கதையாகும் (விதிவிலக்குகள் இருக்கலாம்). ஆனால் உ.பி., பீகார், ம.பி. போன்ற மாநிலங்களோ இன்னமும் தங்களுடைய அடிப்படை வசதிகளைக்கூடச் செய்து முடிக்காத மாநிலங்களாகும்.

மோடி அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும்? தமது கட்சியால் ஆளப்படும் உத்தரப்பிரதேசத்திலும் தமது கூட்டாளியால் ஆளப்படும் பீகாரிலும் அந்தந்த மாநிலங்களிலுள்ள அரசாங்கங்களை விளாசித்தள்ளி, உங்கள் மாநிலத்தில் மின்வசதியைப் பெருக்கு என்றுதானே சொல்லியிருக்க வேண்டும்? தமிழ்நாட்டையோ, பஞ்சாபையோ பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்?

அதை விட்டுவிட்டு, மத்திய அரசே நேரடியாக அந்தக் களத்தில் இறங்குவது முட்டாள்தனமானதும் மாநில உரிமைகளைப் பறிக்கிற வேலையுமாகும். (இதுவும்கூட வழக்கம்போல காங்கிரஸ் அரசாங்கத்தின் கைங்கர்யம்தான். இதை நீட்டுவது பாஜகவின் வேலை. எனவே, இந்தக் குற்றச்சாட்டு பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் ஒருசேரப் பொருந்தும்).

தேசிய நிதியை மடைமாற்றும் மோசடி

மத்திய அரசு இதுபோன்ற பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு நிதியுதவிகளைச் செய்வதில் தவறில்லை. ஆனால் நான்கைந்து பின்தங்கிய மாநிலங்களுக்காக ஒட்டுமொத்த நாட்டின் நிதியைத் திசை திருப்புவது என்பது அயோக்கியத்தனம்.

இத்தனையாயிரம் கோடி இதற்குக் கொட்டியழும்போது. உத்தரப்பிரதேசங்களின் இதுநாள் வரையிலான தவறுகளைத் திருத்துவதற்கான வழி ஏதேனும் கூறப்பட்டிருக்கிறதா? இல்லை. ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தைகள் கொல்லப்பட்டபோதுகூட மோடி அரசு எதையும் சொல்லவில்லை.

மாநிலங்களவையில் அண்ணா உறுப்பினராக இருந்த காலத்திலிருந்து, மத்திய – மாநில உறவுகளில் உள்ள இந்தப் பாரபட்சங்களைத் தமிழகம் எதிர்த்துக் கேள்விகேட்டிருக்கிறது. தென் மாநிலங்களின் முதல்வர்களும் இந்தியாவெங்கும் உள்ள இந்தி பேசாத மாநிலங்களிலுள்ள மாநிலக் கட்சியினரும் பல சமயங்களை இந்தப் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். எங்கள் பணத்தில் இந்தி மாநிலங்களை வளர்த்துக்கொண்டிருக்காதீர்கள் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். ஆனால், இந்தி பேசுகிற மாநிலங்களின் கலாசாரமே இந்தி பேசாத மாநிலங்களின் நிதியை மத்திய அரசினூடாக ‘அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே’ என்று திருடிச் செல்வதுதான்.

நமது மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி இல்லையா, தமிழ்நாட்டுக்குப் போய் அதை எடுத்துக்கொள். நமக்கு வேலை இல்லையா, பெங்களூருக்குச் சென்று அதையும் பிடுங்கிக்கொள் – இதுதான் அவர்களது “திட்டமிடலாக” இருக்கிறது. பாட்னாவைப் பெங்களூராக மாற்றுவதற்குப் பதில் பெங்களூரைப் பாட்னாவாக மாற்றுவது சுலபம் என்று அவர்களுக்குத் தவறாகப் பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசும் ஒற்றை அரசும்

இந்தச் சிக்கலைப் பொறுத்தவரை, வேறு இரண்டு கோணங்களிலும் பார்க்க வேண்டிய நிர்பந்தமும் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. நீட் விவகாரத்திலிருந்தே அதைப் புரிந்துகொள்ள முடியும். நரேந்திர மோடி ஒன்றிய அரசாங்கத்தை (union government) ஓர் ஒற்றை அரசாங்கமாக (unitary government) மாற்றிக்கொண்டிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை பொதுப் பட்டியல், மாநிலப் பட்டியல் எல்லாமே சாரம்சத்தில் ஒன்றியப் பட்டியல் மட்டுமே.

ஆனால், சில குறிப்பிட்ட துறைகளில் திட்டமிடலும் நிறைவேற்றமும் உள்ளூர் அளவில் இருப்பதே வெற்றிக்கு வழியாகும். கல்வி, தொழில், மின்சாரம் போன்றவை அப்படிப்பட்டவை. இதை வரலாறும் புள்ளிவிவரங்களும் நிரூபித்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, தொழில் மாநிலப் பட்டியலில் இருந்த காரணத்தால்தான் தென் மாநிலங்கள் ஒரு காலத்தில் போட்டிப் போட்டுக்கொண்டு தகவல்நுட்பத்துறையில் பல்வேறு திட்டங்களைத் தீட்டி உலக நிறுவனங்களை ஈர்த்து வளர்ந்தன. ஆனால் இன்றைய மோடி அரசு எல்லாவற்றையும் மத்திய அரசாங்கத்தின் உருப்படிகளாக மாற்றும்போது, இந்த வரலாற்று நிரூபணங்கள் மறக்கப்படுகின்றன. இது மாநிலங்களை அதிகாரமிழக்கச்செய்து, இறுதியில் மத்திய அரசையும் திறனிழக்க வைக்கும் என்பதுதான் உண்மை. இந்தியாவில் மத்திய – மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகளை ஆராய்ந்தவர்கள் அனைவரும் கூறும் உண்மை இது. எப்படிக் கல்வியில் நீட் தேர்வும் யுஜிசியின் புதிய விதிகளும் புதிய தேசியக் கல்விக் கொள்கையும் மாநில அரசுகளின் அஸ்திவாரத்தைத் தகர்க்கின்றனவோ, அதுபோல கிராமப்புற உள்கட்டமைப்பு வசதியில் மாநில மற்றும் உள்ளூர் அதிகார மையங்களுக்கு இருக்கக்கூடிய ஃப்யூஸைப் பிடுங்குகிறது மோடியின் செளபாக்யா திட்டம்.

கார்ப்பரேட் ஏகபோகத்தை நோக்கி…*

இரண்டாவது விஷயம், இது ஏன் செய்யப்படுகிறது? மத்தியில் அதிகாரக் குவிப்பு என்பது வெறுமனே அதிகாரக் குவிப்பு மட்டுமே அல்ல. ஸ்மார்ட் சிட்டி, தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி. நீட், செளபாக்யா உள்ளிட்ட எல்லாத் திட்டங்களுக்கும் பின்னால் இருப்பது ஒரே நோக்கம்தான். நாட்டை கார்ப்பரேட் ஏகபோகமயமாக்குவது.

மாநில அல்லது உள்ளூர் அளவிலான சிறு, குறு தொழில்களை முடக்கி, எல்லாத் திட்டங்களையும் மேலிருந்து திணித்து, அதை நிறைவேற்றும் பொறுப்பை ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏகபோகமாக மாற்றுவதற்கு வழிசெய்வதே இதற்குப் பின்னாலுள்ள நிஜமான நோக்கமாகும்.

ஒன்றை இங்கே புரிந்துகொள்ள வேண்டும். தனியார்மயமாக்கம் என்பது வேறு, கார்ப்பரேட் ஏகபோகம் என்பது வேறு. உள்ளூரில் சாலை அமைக்கும் ஒப்பந்தக்காரரும் தனியார்தான். அதானியும் தனியார்தான். ஆயிரக்கணக்கான உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் பங்குபெறும் நகர வளர்ச்சித் திட்டங்களை நான்கைந்து அதானிகளுக்குக் கைமாற்றிக் கொடுக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை நடைமுறைப்படுத்த நினைக்கிறது மோடி அரசாங்கம். ஒரு தனியார் கார்ப்பரேட் தன்மையோடு செயல்படுவதிலேயே நாம் பல சிக்கல்களைச் சந்திக்கிறோம். ஆனால் ஒட்டுமொத்த நாடே சில கார்ப்பரேட்களின் சிஸ்டங்களுக்குள் வந்தால்?

அதைத்தான் செய்கிறார் மோடி. அதற்கு என்ன தேவை? ஸ்மார்ட் சிட்டியா?

நகர்ப்புற மேம்பாட்டு வளர்ச்சிக்கான சட்ட அதிகாரத்தை நகராட்சிகளிடமிருந்தும் மாநிலங்களிடமிருந்தும் பிடுங்க வேண்டும். அதாவது அதிகாரத்தை மத்திய அரசிடம் குவிக்க வேண்டும். கல்வியா? மாநிலங்களிடமிருந்த அதிகாரத்தைப் பிடுங்கி புரோமெட்ரிக் போன்ற நிறுவனங்களுக்கும் கோச்சிங் சென்டர் மாஃபியாக்களுக்கும் தர வேண்டும்.

வீட்டுக்கு மின்சாரமில்லையா? சரி. அதற்கும் திட்டம் தயாராகிவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள சில ஆயிரம் கிராமங்களில் பல்ப் மாட்டவா இந்தத் திட்டம்? இல்லை. நாடெங்கிலும் உள்ள மின்வழங்கீட்டைச் சில பெரிய ஏகபோகங்களின் கையில் மாற்றிக்கொடுப்பதற்கான திட்டம். தமிழ்நாடு நூறு சதவிகிதம் மின் மாநிலமாக ஆனாலும்கூட நாளை இந்தத் திட்டம், ஒரு சட்டமாகவே மாறி, மேலிருந்து கீழ்நோக்கி வந்து மாநில அரசாங்கத்தைத் தூக்கியெறிந்துவிட்டு நம்முன் வந்து நிற்கும்.

அப்போது, “ஒரே நாடு ஒரே ஃப்யூஸ்” என்று சொல்லப்போகிறார்கள். நாமும் கேட்டுக்கொள்ளத்தான் போகிறோம்.

வியாழன், 28 செப் 2017

நன்றி: மின்னலம்பலம்.காம்

https://minnambalam.com/k/2017/09/28/1506537033

மொழியுரிமைகளுக்கான சென்னைப் பறைசாற்றம்

 மொழியுரிமைகளுக்கான சென்னைப் பறைசாற்றம்

மொழியுரிமை மாநாடு
19-20, செப்டம்பர், 2015
சென்னை

”சென்னைப் பறைசாற்றம்” என்று அறியப்படும் இந்த மொழியுரிமைகளுக்கான சென்னைப் பறைசாற்றத்தில், கையொப்பமிட்ட அமைப்பினரும் தனிநபர்களும் சென்னையில் செப்டம்பர் 20, 2015 அன்று ஒன்றுகூடி,

மனித உரிமைகளைப் பறைசாற்றும் முன்னோடிகளான 1948 அனைத்துலக மனித உரிமைகள் பறைசாற்றம், 1966 குடிமை மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு உடன்படிக்கை, 1992 ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுமன்றத்தின் தீர்மானம் 47/135, 1989 பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் மரபாவணம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு மற்றும் வட்டார பறைசாற்றங்கள், சட்டங்கள், உடன்பாடுகள், மரபாவணங்கள் ஆகியவற்றின் உச்சமாக 1996 ஜூன் 9ஆம் நாள் ஸ்பெயினில் பார்சிலோனா நகரில் வெளியிடப்பட்ட மொழியுரிமைகளுக்கான அனைத்துலகப் பறைசாற்றம் என்ற இவற்றைக் கருத்தில் கொண்டும்,

எந்த ஒரு மொழியையும் மற்ற எந்த மொழியின் மீதும் திணிப்பதையும் அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் ஒருதலைச்சார்பாக முன்னிலைப்படுத்தப்படுவதையும் தடுப்பது அல்லது நீக்குவது பற்றி இந்திய ஒன்றியத்தின் பல்வேறு மொழிச் சமூகங்கள் உருவாக்கிய பல்வேறு தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகளையும் மொழி உரிமைகளையும் கருத்தில் கொண்டும்,

இந்திய ஒன்றியத்திலுள்ள பல்வேறு குடிகள் பேசும் மொழிகள் உயிர்ப்போடு இருப்பதற்கும் வளர்வதற்கும் ஊறு விளைவிப்பதாக இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் தற்போதைய மொழிக்கொள்கைகள் இருக்கின்றன என்பதைக் கருத்தில் கொண்டும்,

இந்திய ஒன்றியத்திலுள்ள மொழிகள் தொடர்பான இந்திய அரசமைப்புச்சட்டத்தின் நடப்புக் கூறுகளும், அவற்றின் அடிப்படையிலான சட்டங்கள், விதிகள், வழிகாட்டு முறைகள் ஆகியவை அனைத்தும் மொழி நிகர்மையையும் மொழி உரிமைகளையும் அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்பதுடன், அவை பல்வேறு மொழியினங்களைச் சேர்ந்த மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் இருப்பவை அல்ல என்பதைக் கருத்தில் கொண்டும்,

ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பையும், அதற்கு பல்வேறு அனைத்திந்திய அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஊடகங்கள் உள்ளிட்ட அதிகார மையங்களும் மாநில அரசுகளும் துணைநிற்பதையும் முன்னெடுத்துச்செல்வதையும் கருத்தில் கொண்டும் இந்தித் திணிப்புக்கு எதிராக பல்வேறு மொழிச் சமூகங்கள் நடத்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இயக்கங்களைக் கருத்தில் கொண்டும்,

வளர்ச்சியின் பெயரால் ஆங்கிலத்துக்குக் கூடுதல் அழுத்தம் தரப்படுவதையும் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கூறின் மீதும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துவதும் எங்கும் ஊடுருவிப் படர்வதும் மிகுந்துவரும் நிகழ்வாக இருப்பதையும் பொது மற்றும் தனி வெளிகளில் இந்திய ஒன்றியத்திலுள்ள எல்லா மொழிகளையும் பெயர்த்து அவற்றின் இடத்தை அது நிரப்புவதையும் அதன் வழியாக நமது மொழி சார்ந்த, பண்பாடு சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த தேர்வுகள் கட்டுப்படுத்தப்படுவதையும் கருத்தில் கொண்டும்,

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாம் அட்டவணையில் பட்டியிலிடப்பட்டுள்ள மொழிகளின் சார்பாக முறையிடும் மக்கள் தங்கள் மொழிகளை இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக ஆக்கவேண்டும் என்று கோருவதையும் வேறு பல மொழிகளின் சார்பாக முறையிடும் மக்கள் தங்கள் மொழிகளை மேற்கண்ட அட்டவணையில் இணைக்கவேண்டும் என்று கோருவதையும் எண்ணிக்கையளவில் சிறிய மக்கள்தொகையினராக உள்ள நூற்றுக்கணக்கான மொழிச் சமூகங்கள் தங்கள் இனமொழிகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் போராடுவதையும் கருத்தில் கொண்டும்,

இந்திய ஒன்றியத்தின் மொழிகள் இந்திய ஒன்றியத்திலுள்ள மக்களின் பன்மைத்தன்மையைக் குறிக்கின்றன என்பதையும் இந்த மொழிகள் அந்தந்த மொழிச் சமூகங்களைப்பொறுத்தவரை அவற்றின் வரலாற்று, சமூக, பண்பாட்டு மற்றும் புவிப்பரப்பு முறையிலான உறுப்புகளாகவும் அவற்றிலிருந்து பிரிக்கப்படமுடியாத கூறுகளாகவும் இருந்துவருகின்றன என்பதைக் கருத்தில் கொண்டும்,

இந்திய ஒன்றியத்திலுள்ள மொழிகள் அவர்களின் சொந்தச் சூழல்கள், நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படைகளில் பல நூற்றாண்டுகளாக முகிழ்த்துவந்த மரபார்ந்த அறிவுமுறைகளைக் கொண்ட பேழைகள் என்பதையும் அவற்றை இழப்பது என்பது நமது மரபு, அறிவுத்தளம், மரபு சார்ந்த துறையறிவு ஆகியவற்றை இழப்பதாக ஆகிவிடும் என்பதைக் கருத்தில் கொண்டும்

பின்வருமாறு பறைசாற்றினர்

இந்திய ஒன்றியத்திலுள்ள எல்லா மொழிகளும் நிகரானவை என்றே கருதப்படுகிறது;  அத்துடன், ஒவ்வொரு மொழிக் குடும்பமும் அவரவர் மொழிகளை, ஒரு குடியாட்சிப் பின்புலத்தில், செய்யக்கூடிய எல்லா வழிகளையும் முறைகளையும் கடைப்பிடித்து, பாதுகாக்கவும், மேம்படுத்தவும், அதிகாரம் பெறும்படிச்செய்யவும் உரிமைகளைக் கொண்டிருக்கின்றன.

இந்திய ஒன்றியத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அரசாங்கத்தின் நிறைவேற்றுகை, நீதி மற்றும் சட்டமியற்றும் பிரிவுகளோடு தமது எல்லா உறவாடல்களையும் தன் தாய்மொழியைப் பயன்படுத்தி மேற்கொள்வதற்கான அடிப்படையான, அகற்றவியலாத உரிமை இருக்கின்றது, அவ்வாறே, அக்குடிமகனுடன் தன் எல்லா உறவாடல்களையும் தொடர்புப்பாடுகளையும் மேற்கொள்ள அவரது தாய்மொழியையே அரசாங்கமும் பயன்படுத்தவேண்டும். இந்திய ஒன்றியத்தின் எல்லா குடிமக்களும் தத்தம் தாய்மொழிகளில் கல்வி பெறுவதற்கான உரிமைகளை பெற்றிருக்கவேண்டும். இந்திய ஒன்றியத்தின் எல்லாக் குடிமக்களும் வணிக மற்றும் பொதுச் சேவைகளை தத்தம் தாய்மொழிகளில் பெறுவதற்கான உரிமைகளையும் உடையவர்களாக இருக்கவேண்டும்.

இந்திய ஒன்றியத்தின் எல்லா மொழிச் சமூகங்களும் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலும் கோரிக்கைகளின் அடிப்படையிலும், புதிய மொழிக்கொள்கை ஒன்றை உருவாக்கும் பொருட்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதி 17 மற்றும் தொடர்புடைய பிற கூறுகளை மீளாய்வு செய்யவும் திருத்தம் செய்யவும் ஒரு புதிய மொழி ஆணையத்தை உருவாக்கவேண்டும் என்று நாங்கள் அறைகூவல் விடுக்கிறோம்.

பின்வரும் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் அவற்றுக்கு உடனடியாக ஏற்பளிக்குமாறும் ஒன்றிய அரசை நாங்கள் கோருகிறோம்.
அ.  இந்திய அரசியல்சாசனத்தின் எட்டாம் அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளையும் ஒன்றிய அரசாங்கத்தின் அலுவல் மொழிகளாக ஆக்கவேண்டும்.
ஆ.  தற்போது ஒன்றிய அரசிடம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, பல மொழிச் சமூகங்களால் எழுப்பப்பட்டிருக்கிற கோரிக்கைகளுக்கு இணங்க, அவற்றின் மொழிகளை அரசியல் சாசனத்தின் எட்டாம் அட்டவணையில் சேர்க்கவேண்டும்.
இ.   தனிச்சிறப்பான அரசாங்க அமைப்பு ஒன்றின் மூலம், மிகக் குறைவான எண்ணிக்கையுள்ள மக்களால் பேசப்படுகிற மரபின, உள்நாட்டு மற்றும் பிற மொழிகளுக்கு ஆதரவளிப்பதுடன், அவற்றை அழிவிலிருந்தும் பிறமொழிகளோடு கரைந்து போவதிலிருந்தும் காப்பாற்ற அவசர நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்.

 

தாய்மொழியில் கல்வி பெறும் உரிமையை எந்த மட்டத்திலும் புறக்கணிக்கக்கூடாது என்பதை எல்லா அரசாங்கங்களும் உறுதிப்படுத்தவேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

ஏற்கனவே நிலவுகின்ற சட்டபூர்வமான மொழிச் சட்டங்களையும் கொள்கைகளையும் முழுமையாக நிறைவேற்றுமாறு எல்லா மாநில அரசுகளிடமும்ம் நாம் கோருகிறோம். அவ்வாறான கொள்கைகள் இல்லாத மாநிலங்கள் அவற்றை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்றும் கோருகிறோம்.

மேற்கண்ட கோரிக்கைகளை பறைசாற்றுவதைத் தொடர்ந்து, மேற்கண்ட இலக்கை அடைவதற்காக, நாடாளுமன்றத்தில் மொழி நிகர்மை மற்றும் உரிமைகள் சட்டமுன்வரைவு ஒன்றைக் கொண்டுவரவும் அதை நிறைவேற்றவும் வழிசெய்யுமாறு, அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட குடிமைச் சமூக அமைப்புகள், கல்வி மற்றும் பண்பாட்டு அமைப்புகள், ஊடக நிறுவனங்கள் ஆகியவற்றின் உறுதுணையை நாடுகிறோம். மேற்கண்ட மூன்று உரிமைகளை குறிப்பாகக் கோரியும், மொழியுரிமைகள், மொழிக் கொள்கைகள், மொழித் திட்டமிடல்கள் தொடர்பான பல்வேறு அம்சங்களை எதிர்கொள்வதற்குரிய புதிய மொழி ஆணையம் ஒன்றை உருவாக்கக் கோரியும் சட்டத்தின் அடிப்படையில் வலுவான தீர்மானங்களை நிறைவேற்றும்படி மாநில அரசாங்கங்களையும் உள்ளூர் அரசாங்கங்களையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

 

வரைவு செய்தவர்கள்:

 

ஆனந்த் ஜி, கர்நாடகம், (கன்னடம்), உமாகாந்தன் பி, கர்நாடகம், (கன்னடம், தமிழ்), கணேஷ் சேத்தன், கர்நாடகம், (கன்னடம்), கர்கா சாட்டர்ஜி, மேற்கு வங்கம், (வங்காளம்), கோமக்கம்பேடு ஹிமாகிரண் அனுகுலா, தமிழ் நாடு, (தமிழ், தெலுங்கு), ச.செந்தில்நாதன் (ஆழி செந்தில்நாதன்), தமிழ் நாடு, (தமிழ்), சாகேத் சிறீபூசண் சாகு, ஓடிஷா, (கோசலி), தமிழ்நெறியன், தமிழ் நாடு,  (தமிழ்), தீபக் பவார், மகாராட்டிரம், (மராத்தி), பி.பவித்திரன், கேரளம், (மலையாளம்), பிரியங்க் கே.எஸ்., கர்நாடகம், (கன்னடம்), மணி மு. மணிவண்ணன், தமிழ் நாடு, (தமிழ்), ரவிசங்கர் அய்யாக்கண்ணு, தமிழ் நாடு, (தமிழ்), வசந்த் ஷெட்டி, கர்நாடகம், (கன்னடம்), விவேக் வி, கர்நாடகம், (கன்னடம்), ஜோகா சிங் விர்க், பஞ்சாப், (பஞ்சாபி)