பின்–திராவிடத் தமிழகத்தின் எழுச்சி

தமிழ் ஆழி ஏப்ரல் 2013

கவர் ஸ்டோரி / தமிழக மாணவர் போராட்டம்

பின்–திராவிடத் தமிழகத்தின் எழுச்சி

தமிழகத்தைக் குலுக்கிய மாணவர் போராட்டம் தமிழக வரலாற்றில் முக்கிய இடத்தை வகிக்கும். இது ஈழ ஆதரவுப் போராட்டம் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் புதிய அரசியல் எழுச்சி பிறந்திருப்பதற்கான அறிகுறியும்கூட. இதன் மூலம் திராவிடக் கட்சிகளின் அரசியல் கலாச்சாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. நவீன தமிழ்த் தேசிய அரசியல் தமிழகத்தின் மைய நீரோட்ட அரசியலுக்குள் நுழைந்திருக்கிறது. இது பழைய பாணியிலான திராவிட, தமிழ் இன அரசியல்களைத் தாண்டிச் செல்கிறது. தன்னம்பிக்கையும் உலக அறிவும் பொறுப்புணர்வும் நிதானமும் கொண்ட தமிழ் மாணவர்கள் நடத்தும் இந்தப் போராட்டம் தமிழ் அரசியலை மறுவரையறை செய்யும் சக்தி கொண்டது. சாத்தியமுள்ள மாற்றுகள் என்ன?

செ.ச.செந்தில்நாதன்

காலங்கள் சந்திக்கும் கூட்டுச்சாலை

இடம்: செய்யாறு – ஆரணி கூட்டுச்சாலை. தமிழ்நாட்டில் புது வரலாறு படைத்திருக்கும் மாணவர்களின் ஈழ ஆதரவுப் போராட்டத்தின் ஒரு பகுதியாக செய்யாறு நகரில் மார்ச் 24ந் தேதி மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் சுமார் இருபத்தைந்து நடுத்தர வயதுக்காரர்களும் கலந்துகொண்ட அந்த நிகழ்வுக்கு நானும் போயிருந்தேன். தமிழ் ஆழியின் ஆசிரியராகத்தான் அங்கே போனேனா என்பது எனக்கே சந்தேகமான விடயம்தான்.

செய்யாறு அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியைச் சுற்றியுள்ள  இதே பகுதியில்தான் 1988 – 90 ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களில் நான் முன்னணி மாணவனாகக் கலந்துகொண்டேன். முற்போக்கான எண்ணங்களையும் தமிழ்த் தேசிய உணர்வையும் ஏந்தி நானும் வேறு சில மாணவத் தோழர்களும் சிறு அணியாகச் செயல்பட்ட காலம் அது. தமிழீழமே தீர்வு எனச் சுவரொட்டி ஒட்டினோம். பிரபாகரன் படங்களைத் தாங்கிய பத்திரிகைகளை விநியோகித்தோம். ஈழத்தை ஆதரித்தது மட்டுமல்ல கூடங்குளத்தை எதிர்த்து (ஆமாம், 1989 – 90லேயே!), ஈராக்கில் அமெரிக்காவின் யுத்தத்தை எதிர்த்து, மண்டல் கமிஷனை ஆதரித்து என நாங்கள் நடத்திய பல போராட்டங்களை இந்த ஆரணி – செய்யாறு கூட்டுச்சாலை பார்த்திருக்கிறது.

புன்செய் நிலங்கள் பரவிய அந்தத் தொண்டை மண்டலப் பகுதியில் பெரிய நகரமாக வளர்ந்துகொண்டிருக்கும் செய்யாறில் இளங்கோடைக் காலத்தின் மாலைச் சூட்டை நீண்ட நாட்களுக்குப் பின் அனுபவித்தபடி நிற்கிறேன். ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய அந்த இளம் மாணவனைப் பார்க்கிறேன். அவனுக்கு இருபது வயதுக்குள்தான் இருக்கும். பிரபலமான பல்கலைக்கழகமொன்றில் இன்று கணிப்பொறியியல் படிக்கிறான். ராஜபட்சே அரசு மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று முழங்கும் அவனது முகம் என்னைத் தொந்தரவு செய்கிறது. அந்தக் காலத்தில் எங்களோடு இணைந்து போராடிய தோழர் ஒருவரின் மகன்தான் இவன்! முகத்திலும் அகத்திலும் அவனிடத்தில் நான் அவனது தந்தையைப் பார்க்கிறேன். அதே இளமை முறுக்கு. அதே வாதப் பிரதிவாதக் குரல். அந்தக் கூட்டத்துக்கு அவன் தந்தையும் வந்திருந்தார். எந்த இடத்தில் நானும் என் தோழரும் ஈழத்தை ஆதரித்துப் போராடினோமோ, எந்த இடத்தை விட்டு நாங்கள் வாழ்க்கைப் படகிலேறி வெவ்வேறு திசைகளில் அகன்று போனோமோ அதே இடத்தில் அவருடைய மகன் இன்று எங்களைச் சந்திக்கச் செய்திருக்கிறான்.

1990க்கும் 2013க்கும் இடையில் இந்தியா எவ்வளவோ மாறிவிட்டிருக்கிறது. தமிழ்நாடு இன்னமும் அதிகமாக மாறியிருக்கிறது. இன்று செய்யாறு தனக்கு அருகிலேயே பெரிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தைப் பெற்றுள்ளது. அறுபதுகளில் திராவிட இயக்கக் கோட்டையாக இருந்த இந்த ஊரில் இன்று உள்ளவர்களுக்குப் புலவர் கா.கோவிந்தனைப் பற்றி ஏதாவது தெரியுமா என்பதுகூட ஐயமே. தொண்ணூறுகளில் பாமக, அதன் பிறகு விடுதலைச் சிறுத்தைகள், சில ஆண்டுகளாக தேமுதிக என புதுமுகங்களைப் பார்த்துக் கொண்டே வந்த செய்யாறு இப்போது மேலும் ஒரு புதிய அரசியல் முகத்தைப் பார்க்கிறது: தமிழ்த் தேசிய அரசியல் முகம். கூட்டுச்சாலையில் மாணவர்களின் பேச்சும் ஆர்ப்பாட்ட முழக்கமும் அவர்களது அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. போராட்டத்தைப் பிசுபிசுக்க வைக்க கல்லூரிகளையும் விடுதிகளையும் மூடி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியது ஜெயலலிதா அரசு. பாவம் அம்மா!  மேற்படி ஊர் திரும்பிய பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த (செய்யாறை சொந்த ஊராகக் கொண்ட) மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்துகிறார்கள்.

1990களின் தொடக்கத்துக்கும் இன்றைக்கும் இடையில் எத்தனையோ மாற்றங்கள். ஆனால் அந்த இடத்தில் நானும் என் தோழர்களும் எழுப்பிய முழக்கத்திலிருந்து இன்று என் தோழரின் மகன் எழுப்பும் முழக்கம் மாறவேயில்லை.

“தமிழர்களின் தாகம் தமிவீழத் தாயகம்!”

“மத்திய அரசே, மத்திய அரசே, மானங்கெட்ட மத்திய அரசே!”

வரலாறு படைத்த தலைமுறை

இந்தத் தலைமுறையைப் பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. மார்ச் இரண்டாம் வாரத் தொடக்கத்தில் சிறு நிகழ்வாகத் தொடங்கிய லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் ஒரே வாரத்தில் தமிழகம் தழுவிய மாணவர் இயக்கமாக மாறியது. தன் இறுதி நேரப் பார்வைகளால் தமிழ்ச் சமூகத்தின் ஆழ்மனத்தை அசைத்த பாலச்சந்திரன் புகைப்படங்கள்தான் தொடக்கப் புள்ளியாக இருந்தன. அது தீப்பொறியாக மாறி சட்டெனப் பற்றிக் கொண்டது.

ஆனால் அப்படிப் பற்றிக் கொள்ளும் நிலைமையில்தான் நம் மாணவர் சமூகம் இருந்ததா என்னும் கேள்வி எழுகிறது. ஈழத்திலிருந்து வெளிவந்த முதல் புகைப்படம் அல்லது வீடியோ இதுவல்ல. இரண்டாண்டுகளுக்கு முன் வெளிவந்த சேனல்-4ன் த கில்லிங் ஃபீல்ட்ஸ் ஆஃப் சிறீலங்கா ஏன் நம்மை உக்கவில்லை? இசைப்பிரியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுக் கிடந்த அந்தக் காட்சி நம் மனசாட்சியை ஏன் அன்று கொதிப்படையச் செய்யவில்லை? ஒருவேளை பாலச்சந்திரன் பிரபாகரனின் மகன் என்பதால் இருக்குமோ? அப்படியானால் பிரபாகரனின் உடலே நந்திக் கடலோரம் தலை பிளக்கப்பட்ட நிலையில் காட்டப்பட்டபோது தமிழகம் கொதித்தெழவில்லையே? இடையில் நடந்தது என்ன?

2009ல் தண்ணீர் ஏரியாக இருந்த தமிழ் மாணவர் சமூகம் 2013க்குள் பெட்ரோல் ஏரியாக மாறியிருக்க வேண்டும். அதனால்தான் ஒரு தீப்பொறி அதன் மேல் விழுந்தவுடன் சட்டென்று தீப்பிடித்துக் கொண்டது. 2011 அரபு வசந்தப் போராட்டங்களை யார் முன்னறிவித்தார்கள்? திடீரென எகிப்து, துனீசியா, லிபியாவில் அரசியல் சமன்பாடுகள் மாற்றமடைந்தன. இங்கே ஏற்பட்டிருப்பதும் வசந்தப் புரட்சிதான். தமிழ் வசந்தம். உள்ளொடுங்கி உறையவைத்த குளிர்காலம் முடிந்துவிட்டது. விரிந்து மலரும் இளவேனில் தொடங்கியிருக்கிறது. ஆனால் 2013ன் நெடுங்காலத் தாக்கத்தை உணர நாம் பொறுத்திருக்க வேண்டும்.

2009 மே நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசும் திமுகவும் வெற்றி பெற்றபோது, ஈழப் பிரச்சனை தமிழ்நாட்டில் ஒரு அரசியல் பிரச்சனையே அல்ல என அப்போது வலது கோடியிலிருந்தவர்கள் முதல் இடது கோடியிலிருந்தவர்கள் வரை பேசினார்கள். அது காட்சிப் பிழை என்பது இப்போது தெரிகிறது. அந்தக் கொடூரமான யுத்தம் ஒரு விடுதலைப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த நிலையில் எதிர்வினையாற்ற இயலாத கையறு நிலையில் தமழகம் இருந்தது என வேண்டுமானால் கூற முடியும். எப்படியாவது போர் முடிந்து அமைதி திரும்பினால் போதும் என்ற நிலையில் மக்கள் இருந்தார்கள். தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக அந்தப் பிரச்சனை இருந்தது. விடுதலைப் புலிகள் மீதும் விமர்சனம் இருந்தது. எல்லாம் விதிவசப்பட்ட நிலையில் நடந்ததாகத் தோன்றியது. அப்போது யாருடைய முகத்திரையும் கிழித்தெறியப்பட்டிருக்கவில்லை.

2009ல் இருந்த கையறு நிலையும் ஆற்றாமையும் மனக்குமைவும் நீங்கி கோபமும் சீற்றமும் தெளிவும் தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கின்றனவா? அதுதான் என் தோழரின் மகனைக் களமிறங்கச் செய்ததா? அதனால்தான் படிக்கிற பிள்ளைக்கு இதெல்லாம் எதற்கு என நினைக்காமல் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் போராட்டங்களை ஆசீர்வதித்தார்களா?

500கும் மேற்பட்ட கல்வி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் களமிறங்கினர். ஐடிஐ முதல் ஐஐடி வரை கொடி தூக்கிய பேரதிசயம். சாதி, மத, மொழி (ஆமாம் மொழிதான்) பேதங்களைக் கடந்த ஓர் இணைவு. பெரும்பாலும் ஒரே மாதிரியான கோரிக்கைகள். கட்சிகள், அமைப்புகளின் பின்னால் போகாமல் சுயமாக தங்கள் போராட்ட முனைகளையும் திட்டங்களையும் வடிவமைத்துக் கொண்ட பாங்கு. வன்முறைக்கு இடமே தராமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய ஒழுக்கம். ஒருநாள் உண்ணாவிரதம் என்கிற அடையாளப் போராட்டங்களுக்குப் பதிலாக தொடர்ச்சியாக பல நாட்கள் பட்டினி கிடந்த வைராக்கியம். தேர்வு வரப்போவது தெரிந்து ஜெனீவா கூட்டத்தை முன்னிறுத்தி அலை அலையாகக் கிளம்பிய துணிபு நம்ப முடியவில்லை! அரசியல் தெரியாத, சமூக நோக்கமற்ற, சுயநலம் பிடித்த தலைமுறை என்று நமது அறிவுஜீவிகளாலும் அரசியல் இயக்கங்களாலும் விமர்சிக்கப்பட்ட சமூகமா இது?

பல மாணவர்களிடம் நேரிலும் தொலைபேசியிலும் உரையாடினேன். நூற்றுக்கணக்கான ஃபேஸ்புக் தகவல்களையும் அலசினேன். சந்தேகமேயில்லை. தமிழகம் 1965ல் கண்ட இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைப் போல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமே இதுவும்.

அரசும் அரசியல் கட்சிகளும் இதை எதிர்பார்க்கவில்லை. போராட்டத்தின் மீது கைவைக்க ஜெயலலிதா அரசு தயங்கியது. விதிவிலக்கான சில சம்பவங்களைத் தவிர பெரும்பாலும் சர்வ ஜாக்கிரதையாக அரசு இதைக் கையாண்டது. இது காங்கிரஸ் – திமுகவுக்கு எதிரான போராட்டம் எனக் கருதி ஜெ. அப்படி நடந்துகொண்டிருக்கலாம். அதனால்தான் மாணவர் போராட்டங்களின் கோரிக்கைகளை மையமாக வைத்து மார்ச் 27ல் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தையும் அவர் நிறைவேற்றினார். மே 2009லிருந்தே துரோகிப் பட்டத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் திமுக, ஐமுகூ அரசை விட்டு வெளியேறும் நிலைக்கு உள்ளானது. காங்கிரஸ், பாஜக, சிபிஎம் தவிர கிட்டத்தட்ட பிற கட்சிகள் அனைத்துமே மாணவர்களின் பின்னால் சென்றன. மற்ற திராவிட அமைப்புகளும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் இடதுசாரி அமைப்புகளும்கூட உற்சாகமடைந்து போராட்டம் நடந்த இடங்களில் மாணவர் தலைவர்களை வென்றெடுக்கும் பொருட்டு வரிசையில் நின்றன.

புதுதில்லியும் திகைத்துப் போனது. ஆனால் அசைந்து கொடுக்கவில்லை. மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது குறித்து என்றுமே ஆர்வம் காட்டாத சோனியா – மன்மோகன் – சிதம்பரம் கூட்டணிக்கு இதெல்லாம் வெறும் தொந்தரவு மட்டுமே. தேசியக் கட்சிகளும் ஊடகங்களும்கூட இதை எதிர்பார்க்கவில்லை. தமிழகம் உட்பட இந்தியா முழவதும் உள்ள தேசிய ஊடகங்கள் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பியக்கம், தில்லியில் நடந்த பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான போராட்டம் ஆகியவை தொடர்பாக மேற்கொண்ட அணுகுமுறைகளும் தமிழக மாணவர் போராட்டம் தொடர்பாக எடுத்த அணுகுமுறையும் நேரெதிரானவை. இந்தப் போராட்டத்தை மறைப்பதும் திரிப்பதுவுமே அவர்களின் ஊடக உத்திகளாக இருந்தன. போராட்டம் தொடங்கி இரு வாரங்கள் கழிந்த நிலையில், சென்னையிலிருந்து வெளிவரும் ஃபிரண்ட்லைனின் ஏப்ரல் 5 தேதியிட்ட இதழ் மாணவர்கள் போராட்டம் குறித்து ஒரு வரிகூட எழுதவில்லை. ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு எழுந்தபோது அதை விமர்சிக்க தேசிய ஊடகங்கள் பயன்படுத்திய வாசகங்கள் அனைத்தும் வெறுப்பும் காழ்ப்பும் கலந்த எதிர்வினைகளாகவே இருந்தன. அதாவது பாகிஸ்தான் விடயம் என்றால் அவர்கள் காட்டும் தேசபக்த எதிர்வினைக்கு எதிரான விதத்தில் அவை இருந்தன. ஆனால் மாணவர்களும் தமிழக மக்களும் இவற்றைப் பொருட்படுத்தவேயில்லை.

மாற்றம் நிகழும் தருணத்தில்

அடுத்த பாத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நடைபெறச் சாத்தியமுள்ள மிக முக்கியமான அரசியல் திருப்பங்களுக்கான தொடக்கப் புள்ளியாக இன்றைய மாணவர் போராட்டம் இருக்கக்கூடும். இந்தப் போராட்டத்தைக் குறைத்தோ மிகையாகவோ மதிப்பிடாமல், முன்அபிப்பிராயங்களற்ற நிலையில் புறவயமாக நின்று பார்த்தால், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மூன்று புதிய அம்சங்களை அறிய முடிகிறது.

முதலாவது, இந்தப் போராட்டம் திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் காலம் முடிந்துபோனதை அறிவித்திருக்கிறது. அவற்றுக்கு மாற்றாக ஏற்றுக் கொள்ளத் தக்க கட்சிகளாக தேமுதிகவோ தேசியக் கட்சிகளோ இல்லை என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது. இன்றைய இளம் தலைமுறைத் தமிழர்களின் விருப்பங்களுக்கு ஈடு கொடுக்கும் அரசியலை முன்னெடுக்க இங்கே யாரும் இல்லை. பிரதான அரசியல் கட்சி ஒன்றுக்கான இடம் காலியாக இருக்கிறது. ஆனால் அதை நிரப்புவதற்கான திராணி கொண்ட அரசியல் கட்சிகளோ குழுக்களோ இருப்பதாகத் தெரியவில்லை.

இரண்டாவது, தமிழ்ச் சமூகத்தில் எதிர்ப்பு அரசியல் அழிந்துவிடவில்லை என்பது நல்ல செய்தி. பொது விவகாரங்களுக்காக மாணவர்கள் போராட முன்வருவார்கள் என்பதும் அப்படிப்பட்ட போராட்டங்கள் தமிழகம் தழுவிய போராட்டங்களாக அமையக்கூடும் என்பதும் இதன் மூலம் தெரியவந்திருக்கின்றன.

மூன்றாவது, இந்தப் போராட்டம் தமிழ்த் தேசிய அரசியலை மைய நீரோட்ட அரசியலாக மாற்றியிருக்கிறது. ஆனால் இது பிற்போக்கான, இனவாதத் தமிழ்த் தேசியமல்ல. மாறாக நவீனமான, இனவுரிமை சார்ந்த தமிழ்த் தேசியம். சாதியத் தமிழ்த் தேசியமல்ல. சர்வதேசத் தமிழ்த் தேசியம்.

இந்த மூன்று அம்சங்களின் ஊடாகப் பின்-திராவிட யுகம் ஒன்றுக்குள் தமிழகம் நுழைகிறது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் எனும் மீனைக் கருவாடாக்கிய ஆண்டு 1965 என்றால், திராவிடக் கட்சிகளைக் குப்பைத்தொட்டிக்குள் வீசிய ஆண்டாகவே 2013 வரலாற்றில் பதிவாகும் (ஆனால் திமுகவும் அதிமுகவும் உடனே காணாமல் போய்விடும் என்று இதற்கு அர்த்தமல்ல). 1990களில் அம்பேத்கர் பிறந்த நாள் நூற்றாண்டுக்குப் பின் தமிழ்நாட்டில் உருவான தலித் இயக்கம் திராவிட இயக்கத்தின் மீது தீவிரமான விமர்சனங்களை முன்வைத்தது. திராவிட இயக்கத்தின் உள்ளார்ந்த குறைபாடுகளையும் போதாமைகளையும் அது அம்பலப்படுத்தியது. ஆனால் அவற்றை எழுப்பியது தலித்துகள் என்பதால் அந்த விமர்சனங்கள் அவ்வளவாகப் பொருட்படுத்தப்படவோ அங்கீகரிக்கப்படவோ இல்லை. 2009க்குப் பிறகு திராவிடக் கட்சிகளுக்கு எதிராகத் தமிழ்த் தேசிய எதிர்ப்பியக்கம் ஒன்று உருவானது. ஆனால் அது வெறுமனே திராவிட எதிர்ப்பு அரசியலாக இருந்தது. திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பங்கை அது நிராகரித்தது. முன்னோக்கிப் போவதற்குப் பதில் பின்னோக்கிச் சென்ற அந்தத் திடீர் தமிழ்த் தேசியம் இனவாத, பிற்போக்கு, சாதிவாத அமைப்புகளின் சந்தர்ப்பவாதக் கூட்டணியாகவும் உருவெடுத்தது.

ஆனால் 21ஆம் நூற்றாண்டின் தமிழ்த் தேசிய அரசியலுக்கான விவாதங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருந்தன. கடவுள் மகத்தானவர்தான் போலும்! தமிழ்த் தேசிய அரசியல் எந்த பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே இந்த மாணவர் போராட்டத்தை அவர் உருவாக்கியருளியிருக்கிறார். தமிழக அரசியலில் சமீப காலத்தில் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கான விடைகளை இந்தப் போராட்டம் சூசகமாகத் தந்திருக்கிறது. அதற்கு முன் இந்தப் போராட்டத்தின் தன்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். யார் இந்த மாணவர்கள்? இவர்களது சமூகப் பின்புலம் என்ன? இவர்கள் எந்த சமூக இயக்கப் போக்கைப் பிரதிபலிக்கிறார்கள்? இந்தப் போராட்டம் விதிவிலக்கானதா?

போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கத்து மாணவர்கள். இவர்கள் திராவிட இயக்கத்தால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பலன் பெற்று சமூக முன்னேற்றமடைந்தவர்களின் வாரிசுகள். ஆனால் இவர்கள் வகைமாதிரியான திராவிட அரசியலின் பிரதிநிதிகள் அல்ல. எதற்கெடுத்தாலும் ஸ்டிரைக் செய்யும் மாணவர்களும் அல்ல. படிப்பிலும் வேலையிலும் தங்களுக்கான பாதையைத் தெரிவுசெய்துகொண்டு முன்னேறக்கூடிய மனநிலை கொண்டவர்களாக இருந்தாலும், முக்கிய தறுவாயில் களத்தில் இறங்கத் தயங்கவும் மாட்டார்கள் என்பதை இப்போது நிரூபித்திருக்கிறார்கள். மதிப்பிழந்துபோன, முன்மாதிரியாகக் கொள்ள முடியாத அரசியல் கட்சிகளுக்கு வெளியே தமக்கென சுயமான அரசியல் வெளியை உருவாக்கும் விளைவு இவர்களிடம் தென்படுகிறது. சமூகத்தில் இதற்கு அடுத்த படிநிலையில் இருக்கும் உழைக்கும் வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்களும்கூட அரசியல், கலாச்சார ரீதியில் புதிய முகத்தை இந்தப் போராட்டத்தில் காட்டியிருக்கிறார்கள். அரசுக் கலைக் கல்லூரி முதல் அண்ணா பல்கலைக்கழகம் வரை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தன்மைதான் தெரிந்தது.

அவர்கள் தமக்கிடையில் உறவையும் அமைப்பாக்கத்தையும் உருவாக்கத் தவறவில்லை. தங்கள் சொந்தப் பணத்தை செலவழித்து, ஃபேஸ்புக் போன்ற புதிய தொடர்பு முறைகளைப் பயன்படுத்தித் தகவல்களையும் ஆதரவையும் பகிர்ந்துகொண்டார்கள். அதன் மூலம் கட்சிகளாலும் உருவாக்க முடியாத சீர்மையான அரசியல் இயக்கத்தை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய முழக்கங்கள் உடனடி கோரிக்கைகளும் அதீதமான லட்சியங்களும் கலந்தவையாக உள்ளன. ஆனால் அவர்களுக்கு அதில் தெளிவு இருக்கிறது. யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்த வாசகங்களை அவர்கள் தூக்கிச் செல்லவில்லை என்பது தெளிபு.

தங்களுடைய போராட்டம் அனைத்திந்திய அளவிலும் சர்வதேசிய அளவிலும் தாக்கம் செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில் வன்முறை இல்லாமல் போனதற்கு அச்சமோ ஜெ அரசின் திட்டமிட்ட மென்மைப் போக்கோ காரணமல்ல. மாறாக ஒரு துளிகூட எல்லை மீறிவிடக்கூடாது என மாணவர்கள் நினைத்ததே முக்கிய காரணம். புத்த பிக்குகளும் அரவிந்த ஆசிரமும் தாக்கப்பட்டது போன்றவை தமிழ்த் தேசிய அமைப்புகளின் கைவரிசையே ஒழிய அவை மாணவர்களால் ஏற்கப்பட்டவை அல்ல.

எந்தப் புலிக்கொடியைக் கண்டு திராவிடக் கட்சிகள் அஞ்சினவோ அதை இவர்கள் உயர்த்திப் பிடித்தார்கள். மத்திய அரசைக் கண்டு நடுங்கி ஈழம் என்று சொல்வதற்குக்கூட பெரிய கட்சிகள் அஞ்சிய நிலையில் அந்தச் சொல்லைத் தமிழ்நாட்டின் தாரகமந்திரமாக்கினார்கள். புதுதில்லியிடமும் வாஷிங்டனிடமும் எந்த மொழியில் பேச வேண்டுமோ அந்த மொழியில் பேசினார்கள். பான் கீ மூனை சந்திக்கு இழுத்தார்கள். ஆனால் நவிபிள்ளையை வரவேற்றார்கள். தமிழக மாணவர்களின் போராட்டம் ஒபாமா கோட்பாடு (Obama octrine) என்றழைக்கப்படும் நடப்பு அமெரிக்க உலக அரசியலுக்கு விடப்பட்ட சவால் என்பதை ஒரு ராஜதந்திரியால் புரிந்துகொள்ளாமலிருக்க முடியாது.

நகர்மயமாதல், கல்வி, வேலைவாய்ப்பு, சமூக அதிகாரம் ஆகியவை மூலம் இன்றைய நிலைக்கு இவர்கள் வந்திருப்பதற்குத் திராவிட இயக்கமே காரணம். ஆனால் அந்த இயக்கத்தின் மூன்றாம் தலைமுறை துரோகமிழைத்த நிலையில், அதைத் தாண்டிச் செல்கிறார்கள் பெரியாரின் பேரன்கள். அதைப் போலவே தமிழ்த் தேசியத்தை இனவாத, சாதிவாதச் சிறையிலிருந்து மீட்பார்கள் என்றும் இந்தப் பிராந்தியத்தின் புவிசார் அரசியலின் முக்கிய சக்தியாக தமிழர்களை ஆக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.

பணமும் சாதியுமே இனி தமிழக அரசியலை ஆளும் என்னும் அவநம்பிக்கையை கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மக்கள் உடைத்தெறிந்தபோதே சில நல்ல அறிகுறிகள் புலப்பட்டன. கூடங்குளம் எதிர்ப்பியக்கம் தமிழகத்தில் மாற்று அரசியல் ஒன்றை மைய அரசியலாக மாற்றியது. பஸ்களை உடைத்தும் கடைகளை அடைத்தும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு மாற்றாக கோரிக்கையின் பலத்தை மட்டுமே நம்பி அரசாங்கத்தை ஆத்மபலத்தோடு எதிர்கொள்ளும் அரசியலை அதுதான் தொடங்கிவைத்தது. இன்றைய மாணவர் போராட்டத்திலும் அதைப் பார்க்க முடிகிறது.

தர்மபுரியில் நடந்த சாதி வெறியாட்டத்துக்குப் பிறகு தமிழகம் வெளிப்படையாகவே சாதிவெறிச் சமூகமாகவே மாறிவிடுமோ என்று அச்சம் ஏற்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட தலித்களுக்கு ஆதரவாக தலித் அல்லாதவர்கள் நின்றதையும் திராவிட அமைப்புகளே வெளிப்படையாக தலித்களுடன் இணைந்து நின்றன என்பதையும் பாமகவிலிருந்து பிரிந்த பண்ருட்டி வேல்முருகனும் பேராசிரியர் தீரனும் டாக்டர் ராமதாஸை வெளிப்படையாகவே எதிர்த்ததையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இறுதியில் ராமதாஸ்களும் மணிகண்டன்களும் காமெடி வில்லன்களாவார்கள் என்பதையே இன்றைய சமூகச் சூழல் காட்டுகிறது.

சுப.உதயகுமாரன் முன்வைத்த ‘ஆபத்தான ஆறு, ஆதரவான நூறு’ என்கிற கருத்தாக்கம் நிஜமாகி வருகிறது. நேற்று வரை fringe groups என்று இளக்காரமாகப் பார்க்கப்பட்ட அமைப்புகள்தாம் இன்று தமிழ்நாட்டின் பிரதான அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறியுள்ளன. மே 17 இயக்கம், நாம் தமிழர் கட்சி, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி போன்றவை சில உதாரணங்கள். 2009 முதல் இவை நடத்திவந்த ஈழ ஆதரவு இயக்கங்களினூடாகப் போடப்பட்ட விதைகளே தமிழகம் முழுவதும் முளைத்துள்ளன. இப்படித்தான் தண்ணீர் ஏரி பெட்ரோல் ஏரியாக மாறியிருக்கிறது.

புதிய அரசியல் கலாச்சாரம்

நாளை என்ன ஆகும்? இன்றைய மாணவர் போராட்டம் தந்த உத்வேகத்தால் அல்ல; மாறாக அதை நடத்தியவர்களின் தன்மைகளை வைத்துப் பார்க்கும்போது, நம்பிக்கை பிறக்கவே செய்கிறது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தைத் திராவிட இயக்கம் வரையறுத்தது என்றால் இருபத்தியோராம் நூற்றாண்டுத் தமிழகத்தை இப்போது உருவாகிவரும் இந்தப் புதிய போக்கிலிருந்து முளைக்கும் அரசியல் நிர்ணயிக்க முடியும். திராவிட இயக்கத்தால் உருவான சாதகமான விளைவுகளை அங்கீகரித்து, பாதமான விளைவுகளை நிராகரித்து, இன்றைய எதார்த்தங்களுடன் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்கும் சக்தி இந்தத் தலைமுறைக்கு உள்ளது. அதாவது பின்-திராவிட அரசியல் (எதிர் திராவிட அரசியலை அல்ல) அவர்கள் முன்னெடுக்க முடியும்.

மத்திய, மாநில உறவுகளில் இது நிச்சயமாகப் புதிய வியூகத்தை வகுக்கும். இன்றைய தலைமுறை இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் தமிழகத்தின் பங்கை நிச்சயம் கோரும். அனைத்திந்திய அரசியலில் கூட்டணி அரசியல் என்னும் சந்தர்ப்பவாத அரசியலுக்கு மாறாக ஃபெடரலிச அல்லது கான்ஃபெடரேஷன் முறையிலான அரசியலுக்காக இந்தியாவின் பிற மாநிலங்களிலுள்ள மாநில உரிமை அல்லது தேசிய இன உரிமைச் சக்திகளுடன் சேர்ந்து செயல்படுவதற்கான பரந்த மனப்பான்மையும் திறமையும் உடையவர்களாக இவர்கள் விளங்குவார்கள்.

மொழி அரசியலில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து, தமிழுக்கான உரிமையை இந்தத் தலைமுறை கோரும். ஆனால் மொழி அடிப்படைவாதக் கண்ணோட்டத்தை ஏற்பதற்கான எந்த அறிகுறியும் இவர்களிடம் இல்லை. செய்யாறில் அன்று நான் கண்ட தட்டிகளில் சரிபாதி ஆங்கிலத்தில் இருந்தன. போராடும் மாணவர்களில் பலர் தனியார் கல்வி நிறுவனங்களில் இந்தி படித்தவர்கள்.

சாதி ஒழிப்பு எனச் சொல்லிக் கொண்டே சாதி நிர்ணயவாத அரசியலில் சரணடைந்த திராவிடக் கட்சிகளின் அரசியலை இவர்களால் மாற்ற முடியுமா என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியவில்லை. இந்தப் போராட்டம் திராவிடக் கட்சிகளின் மீது மட்டும் விழுந்த அடியல்ல. குறுகிய மனப்பான்மைகளாலான சிறையில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியத்தை விடுவிக்கும் போராட்டமும்தான். பல்வேறு சமூகத்தவர்களுடன் மெய்யுலகிலும் மெய்நிகர் உலகிலும் பழகிக் கொண்டிருக்கும் இந்தத் தலைமுறையிடம் ஒற்றை மொழிவாதமோ சாதி அல்லது மொழி ரீதியாக ஒரு தப்பினரை ஒதுக்கும் அரசியலோ வெற்றி பெற வாய்ப்பில்லை. சுதந்திரமாக வாழும் பல சமூகத்தவர்களுடன் பழக நேர்வதாலேயே அப்படிப்பட்ட சுதந்திரம் தங்களுக்கு இல்லையே என யோசிப்பவர்களாக இவர்கள் இருப்பார்கள். ஆனால் மற்றொருவரின் சுதந்திரத்தைப் பறிக்கும் இனவாத அரசியலை ஏற்பதற்கான சமூக, கலாச்சார அடிப்படை இவர்களிடம் இல்லை. தன்னம்பிக்கையும் உலக அறிவும் இருப்பதால்தான், இவர்கள் உரிமை மறுப்புக்கும் பாரபட்சத்துக்கும் எதிராகப் போராடுகிறார்கள். தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு என்பதால் அல்ல.

இந்த மாணவர் போராட்டத்தின் முக்கிய அம்சம் மாணவிகளின் பங்கேற்பு. தலைமை வகிப்பதிலும் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்களில் கலந்துகொள்வதிலும் அவர்களின் பங்கேற்பு முழுமையாக இருந்தது. தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் பங்கேற்பு இணையாக இருந்த போராட்டங்களே அரசியல் மாற்றங்களைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றன. பெற்றோர்களின் முழு சம்மதத்துடன் பாலச்சந்திரன் புகைப்படங்களையும் முகமூடிகளையும் சுமந்து வந்த குழந்தைகள் இப்போராட்டம் எவ்வளவு ஆழமாக இச்சமூகத்தில் ஊடுருவியிருப்பதற்கான சாட்சியங்களாக இருக்கிறார்கள்.

இந்தப் பொருளில் பின்-திராவிட, புதிய தமிழ்த் தேசிய அரசியல் தமிழகத்தில் தொடங்கியிருப்பதாகவே தோன்றுகிறது. அது ஒரு சகாப்தத்தின் தொடக்கமாக இருக்குமா, கணநேர நீர்க்குமிழியாக உடைந்துபோய்விடுமா என்பதை வரலாறு தீர்மானிக்கும் என்று சொல்லித் தப்பித்துவிடலாம். ஆனால் மாற்றத்தை விழைபவர்கள் அப்படித் தப்பிக்கமாட்டார்கள்.

“களத்தில் இறங்கினோம் தமிழர்களுக்காக”: டிரவர் கிராண்ட் நேர்காணல்

தமிழ் ஆழி, பிப்ரவரி 2013

உலகம் / இலங்கை கிரிக்கெட் புறக்கணிப்பு இயக்கம்

களத்தில் இறங்கினோம் தமிழர்களுக்காக

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் இயக்கம் நடத்துகிறார் அந்த நாட்டின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் எழுத்தாளர் டிரவர் கிரான்ட். அவருடன் ஒரு நேர்காணல்.

 

 

ஆஸ்திரேலிய மக்கள், குறிப்பாக அங்கேயுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் டிரவர் கிரான்ட்டை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நாற்பதாண்டு காலமாக ஆஸ்திரேலியாவின் பிரபலமான கிரிக்கெட் எழுத்தாளராக அவர் இருந்துவருகிறார். ஆனால் இப்போது டிரவர் கிரான்ட்டின் பெயர் செய்தித்தாள்களில் இடம்பெறுவது வேறு ஒரு காரணத்துக்காக.

2009 முள்ளிவாய்க்கால் படுகொலைக்குக் காரணமான இலங்கையின் ராஜபக்ஷே அரசுக்கு எதிராகவும் அவருக்குத் துணைபோகும் ஆஸ்திரேலியாவின் லேபர் கட்சி அரசுக்கு எதிராகவும் களமிறங்கியுள்ள டிரவர், இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிப்போம் (Boycott Sri Lanka Cricket Campaign) என்ற பெயரில் ஒரு இயக்கத்தைத் தொடங்கி நடத்திவருகிறார். கடந்த மாதம் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தில் இருந்த இலங்கை அணி போகுமிடங்களிலெல்லாம் டிரவரின் எதிர்ப்பு அணியைச் சந்தித்தது.

ஆஸ்திரேலியாவிலுள்ள இலங்கை தமிழ் அகதிகளுடன் இணைந்து செயல்படும் டிரவரின் இந்த பிரச்சார இயக்கம் அந்த நாட்டின் உயர் பீடங்களிலேயே அதிர்வலைகளை உருவாக்கியிருப்பதுடன், மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதாக உள்ளூர் பத்திரிகைகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்தப் போராட்டம் வெகுவிரைவில் உலகம் முழுமைக்கும் பரவக்கூடும் எனத் தெரிகிறது.

ஜனவரி 20ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சிட்னியில் நடந்த சர்வதேச ஒருநாள் போட்டியின்போது தமிழர்களுக்காகக் களமிறங்கி போராட்டத்திலிருந்த டிரவர் கிரான்ட்டை தமிழ் ஆழி ஆசிரியர் செ.ச.செந்தில்நாதன் தொடர்புகொண்டார். டிரவர் மிக உற்சாகமாக பேசினார். அவருடனான மின்-நேர்காணலிலிருந்து:

தமிழ் ஆழி: திரு. கிரான்ட், இலங்கையில் நிலவும் பதற்றமான சூழலை வெளியுலகிற்குத் தெரியாமல் மறைக்கவே அந்த நாடு தன் கிரிக்கெட் அணியை ஒரு அரசியல் கருவியாகத் தொடர்ந்து பயன்படுத்திவருவதாக நீங்கள் கூறியுள்ளீர்கள். கிரிக்கெட் வட்டாரத்தில் ஆஸ்திரேலியாவிலும் பிற நாடுகளிலும் இது குறித்த விழிப்புணர்வு ஏற்கனவே இருந்ததா, அல்லது உங்கள் போராட்டத்தால் இப்போது அது ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதா? இலங்கையுடனான கிரிக்கெட் உறவைத் துண்டிக்க வேண்டும் என்பது தொடர்பான பிரச்சாரத்தில் நீங்கள் ஈடுபடும்போது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கிரிக்கெட் வட்டாரத்தில் ஆதரவு கிடைக்கிறதா?

டிரவர்: தனது நாட்டின் இமேஜை வளர்க்கவே இலங்கை அரசு தன் தேசிய கிரிக்கெட் அணியை ஒரு பிரச்சார சாதனமாகப் பயன்படுத்துகிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு ஆஸ்திரேலியாவில் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. தமிழர்கள் மீது இலங்கை அரசு கொடூரமாக இழைத்த கொடுமைகள், அந்த அரசால் தமிழர்கள் தண்டனைக்குள்ளாக்கப்படுவது ஆகியவை பற்றியெல்லாம் சமீப காலம் வரை ஆஸ்திரேலிய ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. இலங்கையிலிருந்து பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தவுடன்தான் இங்குள்ள அரசியல்வாதிகள் இவ்விஷயத்தைப் பற்றிப் பேசவே ஆரம்பித்தனர். வழக்கம் போல இனவெறுப்பு காட்டுவதுதான் அவர்களுடைய முதல் எதிர்வினாயாக இருந்தது.

இந்தக் கோடைக்காலத்தில் இலங்கையின் நடப்பு நிலவரத்தை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்தியபோதும் அது பற்றிய துண்டறிக்கைகளை விநியோகம் செய்தபோதும் ரசிகர்கள் பலர் அங்கு (இலங்கையில்) நடப்பவை பற்றி தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று கூறினர். மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பணிபுரியும் ஒருவர் நாங்கள் தந்த துண்டறிக்கையைப் படித்த பின்னர் எங்களது பிரச்சார மையத்துடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு “இலங்கை அரசு இத்தகைய அட்டூழியங்கள் செய்திருக்கிறது என்று எனக்கு இதுவரை தெரியாது. உங்களது போராட்டத்திற்கு உதவும்படியாக நான் எனது ஒருநாள் சம்பளத்தைத் தரட்டுமா?” என்று கேட்டார்.

கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கிடைத்த சாதகமான எதிர்வினைகளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். ஆயினும் “மனித உரிமைகளைப் பற்றியெல்லாம் நாண் கண்டுகொள்வதே இல்லை” என்று பொறுப்பற்ற வகையில் சொல்லக்கூடிய சில ‘மேதாவிகள்’ இருக்கின்றனர் (தங்களது மனித உரிமைகள் மீறப்படும்போதுதான் அவர்கள் அதுபற்றி கவலைகொள்வார்கள்). நாங்கள் தந்த துண்டறிக்கைகளைப் படித்து, இவ்விஷயம் குறித்து எங்களிடம் பேசி முழுமையாகத் தெரிந்துகொள்ள விரும்பியவர்களின் எண்ணிக்கை எங்களுக்கு மிகுந்த தெம்பைத் தந்துள்ளது. கிரிக்கெட் போட்டி நடக்கும் ஐந்து மைதானங்களில் இதுவரை நாங்கள் 17,000 துண்டறிக்கைகளை விநியோகித்திருக்கிறோம்.

‘பாக்ஸிங் டே’ அன்று (கிறிஸ்துமஸுக்கு மறுநாள்) மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய டெஸ்ட்  போட்டியின் முதல் நாள் மைதானத்திற்கு வெளியே நாங்கள் போராட்டம் நடத்தினோம். அதற்கு ஒரு நாள் கழித்து, ஆஸ்திரேலியாவில் மிகவும் மதிக்கப்படும் நாளிதழ்களில் ஒன்றான மெல்பர்ன் ஏஜ் பத்திரிகை, வாசகர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. ‘கிரிக்கெட் விளையாட்டிலிருந்து இலங்கை அணியை மற்ற நாடுகள் தள்ளிவைக்க வேண்டுமா?’ என்ற கேள்வியைக் கேட்டிருந்தது. 66% பேர் ‘ஆம்’ என்றும் 34% பேர்  ‘வேண்டாம்’ என்றும் பதில் தந்தனர்.

மெல்பர்ன் ஏஜ் சில மாதங்களுக்கு முன் தன் வாசகர்களிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்காது. அப்படி ஒரு முடிவும் அவர்களுக்குக் கிடைத்திருக்காது. எனவேதான் ஊடகங்களில் மிகப் பரவலாக இடம்பெற்ற ‘இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிப்போம்’ என்ற முழக்கத்துடனான எங்களது பிரச்சாரம் நல்ல பலனைத் தர ஆரம்பித்துவிட்டது என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரிந்தது.

கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட்டை நிர்வகிக்கும் அதிகாரிகளும் இப்பிரச்சனைக்கு ஆதரவளிக்க ஓரணியில் ஒன்றுதிரளவில்லை என்றே நான் நினைக்கிறேன். அது கிட்டத்தட்ட நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். அரசியல் பிரச்சனையைப் பற்றி கிரிக்கெட் வீரர்கள் ஏதாவது சொன்னால் அவர்கள் தத்தம் நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை மீறியவர்களாக ஆகிவிடுவார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தற்போது கிரிக்கெட்டுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால், எந்தெந்த வழிகளில் தம்மால் பணம் சம்பாதிக்க முடியுமென்ற யோசனையில் இருக்கிறார்களே தவிர, ‘இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிப்போம்’ என்பது போன்ற பிரச்சாரங்களுக்கு வரமாட்டார்கள். அவற்றில் தலையிட்டால் தங்களது பணவரவும் கௌரவமும் பாதிக்கப்படுமோ என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.

முரளீதரன் இதற்கான ஒரு சிறந்த உதாரணம். தமிழராக (இந்தியத் தமிழர்) இருந்தபோதிலும் தன் இன மக்களுக்கு ஆதரவாக அவர் எப்போதும் எதையும் கூறியதில்லை. இலங்கையின் மேல்தட்டு வர்க்கத்தில் பணப்பிரச்சனை எப்போதும் இருந்திராத ஒரு பிரிவில் இருப்பதாலும் அவரது சமூக அந்தஸ்தும் அவரை அவ்வாறு கட்டிப் போட்டிருக்கின்றன. சொல்லப்போனால், ஒரு முறை யுத்தத்தில் மறைந்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்ட புகைப்படம் ஒன்றை நான் பார்க்க நேரிட்டபோது, எங்கே தன் பிழைப்பு தடங்கலின்றி நடக்கும் என்பதை அவர் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவே எனக்குத் தோன்றியது. கொடுமை என்னவென்றால் அதே போரில் மாண்ட தன் இன மக்களுக்கு அஞ்சலி செலுத்த அவர் சென்றிருந்தால், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் அனைத்துப் பிரிவுகளின் கீழும் அவர் மேல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடும்.

நாங்கள் அரசியல் பேச விரும்பவில்லை என்கிறார்கள். ஆனால் குமார் சங்ககாரா போன்றவர்கள் எப்போது பத்திரிகையாளர்களை சந்தித்தாலும் எங்கள் நாட்டில் எல்லாம் அமைதியாக இருக்கிறது, நாங்கள் நல்லிணக்கத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று பேசிக் கொண்டையிருக்கிறார். ஒரு கொடூரமான சர்வாதிகாரிக்கு பிரச்சார ஏஜெண்டாக மாறியிருக்கிறார்கள். அவரும் பிற இலங்கை வீரர்களும் அரசியல் சாயம் விழுந்துவிடுமோ என்று அஞ்சுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இது அரசியல் இல்லையா? இதைவிட மோசமாக அரசியல் செய்ய முடியுமா?

 

தமிழ் ஆழி: நீங்கள் இந்த பிரச்சார இயக்கத்தை எப்போது தொடங்கினீர்கள்? இப்படி ஒரு இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்ற உந்துதல் எப்படி உங்களுக்கு வந்தது? உங்களுடைய நாற்பது ஆண்டுகால இதழியல் வாழ்க்கையில் இது ஒரு புதிய இன்னிங்ஸாக இருக்கிறதே.

டிரவர்: நான் ஒரு விளையாட்டு எழுத்தாளர்தான். ஆனால் சர்வதேச விவகாரங்களில் எனக்கு ஆழமான ஆர்வம் எப்போதுமுண்டு. கிரிக்கெட். ஒலிம்பிக்ஸ், உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என எப்போதும் நான் உலகைச் சுற்றியவாறு இருப்பேன்.

பல ஆண்டுகளாக இலங்கைச் சூழலைக் கவனித்து வருகிறேன். யுத்தத்தின் இறுதியில் தமிழர்களைக் கொத்துக் கொத்தாக ராஜபக்ஷே ஆட்சி கொன்று குவித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். என் பத்திரிகைக்கார புத்தியைப் பயன்படுத்தி என்ன நடந்தது என்பதை ஆராய்ச்சி செய்தேன். அந்த தீய அரசு பற்றிய முழு உண்மைகளையும் நான் விரைவில் தெரிந்துகொண்டேன்.

ஆனால் தமிழ் அகதிகள் சிலருக்கு உதவத் தொடங்கியதுதான் இந்த விவகாரத்தில் நான் தீவிரமாகச் செயல்படுவதற்கான பிரதான காரணமாக இருந்தது. வடக்கிலும் கிழக்கிலும் இளைஞர்கள் ராணுவத்தால் எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்கிற கண்ணீர்க் கதைகளை நான் அவர்களிடமிருந்து தெரிந்துகொண்டேன். ஒரு கிராமத்தை ஒரு முழு பட்டாலியனும் சுற்றிவளைத்த சம்பவத்தை ஒருவர் கூறினார். ஊரில் நுழைந்த ராணுவ வீரர்கள் அங்கே இளம் ஆண்கள் கிடைத்தால் அவர்களை சிறைக்குள் தள்ளியதையும் இளம் பெண்களைக் கண்டால் பெரும்பாலும் அவரவர் குடும்பத்தினர் முன்னிலையிலேயே ரேப் செய்ததையும் கூறினார். குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களைப் பார்த்தால் அவர்களுடைய மார்பகங்களை வெட்டி எறிந்ததையும் அவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் பலரைச் சந்தித்தேன். ஒவ்வொருவரும் இதுபோல் அதிர்ச்சிகரமான சம்பவங்களைச் சொன்னார்கள். எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்த பின்பு இந்த மக்களுக்காக உதவுவதைவிட வேறு வழியில்லை என்று முடிவெடுத்தேன். நான் 1975ல் இருந்து கிரிக்கெட் எழுத்தாளராக இருந்து வருகிறேன். இந்த ஆட்டத்தின் அரசியல் எனக்கு அத்துபடி.

இந்தப் பிரச்சனையைப் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமானால் கிரிக்கெட் மூலமாக அதைச் செய்வதே நல்ல வழி என்று உணர்ந்தேன். அப்போதுதான் மீடியாவுக்கு உறைக்கும். பொதுமக்கள் என்ன என்று கேட்பார்கள் என எனக்குத் தெரியும்.

எனது வாழ்க்கையில் இது ஒரு புதிய அத்தியாயம். மைய நீரோட்ட இதழியலாளராக இருக்கிறேன். இதுவரை நான் வேலை செய்துவந்த சூழல்களிலேயே மிகவும் உற்சாகமான சூழல் இதுதான் என்பதை நான் உங்களுக்கு உறுதிபடச் சொல்ல முடியும்.

தமிழ் ஆழி: உங்களுக்கு யார் உறுதுணையாக இருக்கிறார்கள்? அரசியல் கட்சிகளும் மக்களும் உங்கள் அழைப்புக்கு எப்படி எதிர்வினை புரிகிறார்கள்?

டிரவர்: பல்வேறு இடங்களிலிருந்து எங்களுக்குக் கிடைத்த ஆதரவு அபாரமானவை. உலகப் புகழ் பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் தாமஸ் கெனீல்லி எங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார். இலங்கைக்கான ஆஸ்திரேலிய ஹைகமிஷனர் ப்ரூஸ் ஹை, நார்வேயைச் சேர்ந்த திரைஞர் பீட் ஆர்ன்ஸ்டட், புகழ் பெற்ற அமெரிக்க சட்ட வல்லுநர் பிரான்சிஸ் ஏ.பாய்ல் போன்றவர்களின் ஆதரவு கிடைத்தது. சிட்னி பீஸ் பவுண்டேஷன் தலைவர் ஜுலியன் பர்ன்ஷைட் கிரீன் பார்ட்டியைச் சேர்ந்த பல எம்.பிக்கள் என அந்த ஆதரவுத் தளம் விரிந்துகொண்டே செல்கிறது.

நாங்கள் மக்கள் மத்தியில்தான் வேலை செய்கிறோம். ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளை ஈர்ப்பது கடினம். கடந்த மாதம் இலங்கை சென்ற எங்கள் வெளியுறவுத் துறை அமைச்சர் பாப் கார் அந்த சர்வாதிகாரியுடன் சேர்ந்து கூத்தடித்துவிட்டு வந்திருக்கிறார். இலங்கை அகதிகள் ஆஸ்திரலியாவுக்கு வரக்கூடாது என்பதுதான் அவருடைய ஒரே லட்சியம். ஏனென்றால் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் வரப்போகிறது. அதனால் போர்க்குற்றம் சாட்டப்பட்ட ஒரு அரசோடு சமரசம் செய்துகொள்வதில் ஆஸ்திரேலிய அரசுக்குத் தயக்கமே இல்லை. இலங்கை கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டுமா என பல தடவை அவரிடம் கேட்கப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்தபடியே அவரும் கூடாது என்றுதான் பதில் சொன்னார். ஆனால் பல தடவை அந்தக் கேள்வியை அவர் எதிர்கொள்ள நேரிட்டது என்பதுதான் இந்த இயக்கத்தின் வெற்றி.

 

 

தமிழ் ஆழி: இலங்கை அரசும் சற்று ஆடிப்போயிருக்கிறது. உங்களையும் உங்கள் ஆதரவாளர்களையும் கண்காணிக்க தன் புலனாய்வு ஏஜென்சிகளை அது ஏவிவிட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டோம். இது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.

டிரவர்: நான் கவலைப்படவில்லை. அவர்கள் என்னை வந்து புகைப்படம் எடுத்தபோதெல்லாம் நான் அவர்களை புகைப்படம் எடுத்தேன். இதுபோன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளால்தான் புலம்பெயர் தமிழர்கள் இதுவரை கோழைகளைப் போல மவுனமாக இருக்க நேரிட்டது. அவர்களின் நடவடிக்கைகளைப் புகைப்படம் எடுத்து பிறகு இலங்கையில் அவர்களது உறவினர்கள் வீட்டில் நுழைந்து துன்புறுத்துவது போன்ற சம்பவங்கள் முன்பு நடந்திருக்கின்றன. ஆனால் 2009 படுகொலைக்குப் பிறகு இந்த அச்சம் போய்விட்டது. இனி தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். தமிழர்கள் என்று பெருமைப்பட சொல்லிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கே ஆஸ்திரேலியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் வந்திருக்கிறார்கள். இனி ஓரடியையும் அவர்கள் பின்னோக்கி வைக்கமாட்டார்கள். தங்களைப் படமெடுக்க வந்த இலங்கை அரசின் கைக்கூலிகளை இவர்கள் திரும்பி படமெடுத்தவுடன் அந்தக் கைக்கூலிகள் ஓடி ஒளியப் பார்த்தார்கள். வேடிக்கையாக இருந்தது.

தமிழ் ஆழி: காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை (சிஎச்ஓஜிஎம்) இலங்கையில் கூட்டவதைத் தடுக்க வேண்டுமென உங்கள் அரசை நீங்கள் நிர்பந்தித்திருக்கிறீர்கள். இதற்கு பலன் இருக்கிறதா?

டிரவர்: காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தை எப்படி நடத்துவது என ஆஸ்திரேலிய அரசு இலங்கை அரசுக்கு வழிகாட்டியாக செயல்டுவதைக் கண்டு பல ஆஸ்திரேலியர்களைப் போலவே நாங்களும் அதிர்ந்து போயிருக்கிறோம். இது ஒரு லேபர் கட்சி அரசாங்கமாம்! 2009 போர்க்குற்றம் தொடர்பாக இலங்கையின் மீது சுயாதீனமான விசாரணை மேற்கொள்வதில் உறுதியான முன்னேற்றம் இல்லாவிட்டால் இந்தக் கூட்டத்துக்கு வரமாட்டோம் என்று கனடாவின் வலதுசாரி கன்சர்வேடிவ் அதிபரான ஸ்டீபன் கார்ப்பரே கூறியிருக்கிறார். ஆனால் கார்ப்பரை சந்தித்து அவரை இணங்க வைப்போம், ராஜபக்ஷேவுடன் பேசவைப்போம் என்கிறார் எங்களுடைய அமைச்சர் கார். ஆனால் தங்கள் அரசு முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றும் தங்கள் கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் கார்ப்பர் கண்டிப்பாக கலந்துகொள்ளமாட்டார் என்றும் கனடிய குடிபுகல்வு அமைச்சர் தெளிவாக சோல்லிவிட்டார். இது எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி அரசுக்கு கனடாவிலுள்ள கன்சர்வேடிவ் அரசு மனித உரிமைகள் குறித்து பாடம் எடுக்க வேண்டிய அளவுக்கு நிலைமை இங்கே விநோதமாக இருக்கிறது.

தமிழ் ஆழி: தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் முறை நிலவியபோது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி புறக்கணிக்கப்பட்டது. ஐசிசி கூட அங்கே சுற்றுப்பயணம் செல்வதற்கு தடை விதித்தது. நாம் இன்னமும் அது போன்ற ஒரு காலகட்டத்தில்தான் வாழ்கிறோமோ? விளையாட்டில் தார்மீகம் என்கிற விழுமியத்துக்கு கிரிக்கெட் உலகில், கிரிக்கெட் அமைப்புகளிடையில் இப்போதும் மதிப்பிருக்கிறதா?

டிரவர்: இன்று கிரிக்கெட் துறையில் தார்மீகம் என்பதற்கெல்லாம் அர்த்தமிருப்பதாகத் தோன்றவில்லை என்றே நினைக்கிறேன். கிரிக்கெட் அணிகள் மது நிறுவனங்களிடமும் பாஸ்ட்புட் நிறுவனங்களிடமும் ஸ்பான்சர் வாங்குவதை நீங்களும் பார்க்கலாம். ஆஸ்திரேலியாவில் உடல் பருமனும் ஆல்கஹாலும்தான் தடுக்கப்படக்கூடிய மரணங்களுக்கு இரண்டு மிகப் பெரிய பிரதான காரணங்களாக உள்ளன.

1971ல் வெள்ளையர்களை மட்டுமே கொண்டிருந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியுடன் விளையாட, பயணம் செய்ய ஆஸ்திரேலியாவில் எதிர்ப்பு எழுந்தது. அதனால் 1971 – 72 போட்டிகள் ரத்தாயின. போட்டிகள் நடக்க வேண்டும் என்றுதான் கிரிக்கெட் அமைப்புகளும் அரசும் விரும்பின. ஆனால் போராட்டங்களைக் கண்டு அவர்கள் அஞ்சினார்கள். தென்னாப்பிரிக்காவில் இன ஓதுக்கல் முடிவுக்கு வரும் வரை அந்தத் தடை தொடர்ந்தது.

இலங்கையை தென்னாப்பிரிக்காவுடன் ஒப்பிட முடியாதுதான். ஆனால் இன ஒதுக்கல் என்கிற தீமைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அரசியல் நோக்கத்துக்காக புறக்கணிப்பு என்கிற உத்தி மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. அது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றிகரமாக செயல்படுமானால் அது ராஜபக்ஷேவுக்கு எதிராகவும் வெற்றிகரமாக செயல்பட முடியும். இலங்கையின் மிகப் பிரதானமான விளையாட்டே கிரிக்கெட்தான். அதில் ஒரு அடி விழுந்தால் மாற்றங்கள் உருவாகலாம்.

தமிழ் ஆழி: இந்த பிரச்சார இயக்கம் ஆஸ்திரேலியாவுக்கு வெளியேயும் பரவுமா?

டிரவர்: இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிப்போம் என்கிற இந்த இயக்கம் உலகு தழுவியதாக மாறப்போகிறது. இனி உலகின் எந்த கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் அணி கால் வைத்தாலும் தமிழ் மக்களைக் கொல்கிற, சித்திரவதை செய்கிற, சிறையில் இடுகிற, தண்டிக்கிற அரசின் ஒரு பகுதிதான் நீங்கள் என இலங்கை அணிக்கு நினைவுபடுத்துகிற ஒரு போராட்டம் அங்கே நிச்சயம் நடந்தே தீரும்.

20011ல் பிரிட்டனில் உள்ள தமிழ் இளைஞர் அமைப்பு கிரிக்கெட் மைதானத்தில் தனது எதிர்ப்பைத் தெரிவித்து பிரமாதமாக செயல்பட்டது. அவர்களோடு நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். ஐசிசி சேம்பியன்ஸ் டிராபிக்காக இலங்கை அணி இங்கிலாந்துக்குச் செல்லும்போது அது போராட்டக்காரர்களை எதிர்கொள்ளும். இந்தியாதான் இந்த இயக்கத்துக்கு மிகவும் உகந்த நாடாக இருக்கும். எங்கள் இயக்கம் குறித்து இந்தியாவில் பலருக்கும் தெரிந்திருக்கிறது. அவர்கள் எங்களைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் உள்ள எங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். ‘இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணிப்போம்‘ இயக்கத்தின் இனி வரும் செயல்பாடுகளை நீங்கள் உற்று கவனித்து வாருங்கள். ஆட்டம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.

ரிஸானா : ஒரு குழந்தையின் மரணம்

ரிஸானா / ஒரு குழந்தையின் மரணம்

சவூதி அரேபியாவில் தலை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிஸானா நஃபீக் வழக்கு பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அது சவூதியில் நடைமுறையிலுள்ள நீதிமுறை மற்றும் ஷரீஆ பற்றிய விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. இலங்கை அரசு இவ்விவகாரத்தில் அம்பலப்பட்டு நிற்கிறது. பல்வேறு ஆவணங்களின் உதவியுடன் ரிஸானாவுக்கு அநீதி இழைக்கப்பட்டது எப்படி என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த சிறப்புக் கட்டுரை. இதனுடன் தொடர்புடைய ஒரு நேர்காணலும் மூன்று சிறப்பு பத்திகளும் பிரச்சனையை முழுமையாக புரிந்துகொள்ள உதவுகின்றன.

செ.ச.செந்தில்நாதன்

“நான் எப்போது ஊருக்குப் போவேன்?” என்று சிறையில் தன்னைப் பார்க்க வந்த மௌலவி ஏ.ஜே.எம் மக்தூமிடம் கேட்டார் ரிஸானா நஃபீக். ஏழாண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தையைக் கொன்றுவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு மரணை தண்டனை விதிக்கப்பட்டு சவூதி அரேபியாவின் தவாத்மி சிறையில் வாடிய ரிஸானா என்னும் 25 வயது இலங்கைத் தமிழ் முஸ்லிம் பெண் அந்தக் கேள்வியைக் கேட்டபோது மக்தூம் உள்ளம் உருகி நின்றார்.

கடந்த மாதம் (ஜனவரி 2013) 9ந் தேதி புதன்கிழமை காலை மக்தூம் ரிஸானாவைச் சந்தித்ததன் நோக்கமே வேறு. இன்னும் சில மணி நேரங்களில் ரிஸானாவின் தலையை வெட்டிக் கொல்லப் போகிறார்கள். இதோ அவளைக் கொலைக்களத்திற்கு அழைத்துச் செல்ல அரசு அதிகாரிகள் தயாராக நிற்கிறார்கள். ஆனால் அன்றைய தினம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ரிஸானாவுக்கு சட்டப்படி சவூதி அரசு கூறவேயில்லை. மக்தூமைப் பார்த்தவுடன் எப்படியாவது சிறையிலிருந்து தன்னை அவர் மீட்டுவிடுவாரோ என்றுதான் ரிஸானா எதிர்பார்த்திருக்கிறார். ரிஸானாவை அந்த நிமிடத்தில்கூட காப்பாற்றிவிட முடியுமா என்றுதான் மக்தூம் நினைத்திருக்கிறார். ஆனால் அவருக்குப் பணிக்கப்பட்டிருந்த கடமை வேறு. ரிஸானாவின் இறுதி ஆசைகள் என்ன என்று கேட்பதற்காகவும் அவரது மரண சாசனத்தை (வசிய்யத்) பெறுவதற்காகவுமே மௌலவி மக்தூத் ரிஸானாவைச் சந்தித்தார்.

அந்த சந்திப்பின்போது ரிஸானாவுக்கும் தனக்கும் இடையில் நடந்த உரையாடலையும் அங்கே நிலவிய சூழலையும் மக்தூம் பிறகு ரிஸானாவின் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் விவரித்திருந்தார்.

“உங்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படப் போகிறது. அதுவும் இன்றைக்கு” எனத் தடுமாற்றத்துடன் ரிஸானாவிடம் கூறினார் மக்தூம். ரிஸானாவால் பேச முடியவில்லை. எந்தத் தவறையும் நான் செய்யவில்லை என ரிஸானா மறுபடியும் கூறினார். இதை அவர் கடந்த ஐந்தாண்டு காலமாக சொல்லிக் கொண்டிருந்தார். உலகம் அதை ஏற்றது. ஆனால் மரணமடைந்த குழந்தையின் பெற்றோர்கள் அதை ஏற்கத் தயாராக இல்லை. சவூதி அரேபிய அரசும் அதை ஏற்கத் தயாராக இல்லை.

மக்தூம் தொடர்ந்து ரிஸானாவிடம் பேசினார். “நான் உங்கள் பெற்றோர், சகோதரிகளுக்கு ஏதும் சொல்ல வேண்டுமா? என்ன சொல்வது?” என்று பதற்றத்துடன் மக்தூமிடம் தாழ்ந்த குரலில் பதில் கேள்வி கேட்டார் ரிஸானா. “மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த உலகில் யாரும் நிரந்தரமாக வாழ்வதற்கு வரவில்லை. மறு உலக வாழ்வே நிரந்தரமானது என்பதைப் புரியப்படுத்தினேன்” என்று ரிஸானாவிடம் கூறியதாக தனது கடிதத்தில் மக்தூம் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த வார்த்தைகளின் அர்த்தங்கங்களைப் புரிந்துகொள்ளும் நிலையிலா ரிஸானா இருந்தார்?

“என்னை மன்னித்து விட்டுட சொல்லுங்க…. நானா…?” என்று ரிஸானா மரணத்தின் விளிம்பில் இருந்த நிலையில் உருக்குலைந்து கெஞ்சினார். மக்தூம் துடித்துப் போனார். மக்தூம் பிறகு அங்கே இருந்த அதிகாரிகளிடம் ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டார். அந்த அதிகாரிகளும் ரிஸானாவைக் காப்பாற்றவே விரும்பியிருப்பார்கள் போலும். மரணமடைந்த குழந்தையின் பெற்றோர்களிடம் பேசி ரிஸானாவைக் காப்பாற்ற முயற்சி எடுக்கிறோம் என்று அவர்கள் மக்தூமிடம் வாக்குறுதி கொடுத்தார்கள்.

சவூதி அரேபியாவில் நடைமுறைப்படுத்தப்படும் ஷரீஆ சட்டத்தின்படி ரிஸானாவை மரண் தண்டனையிலிருந்து விடுவிக்க ஒரே வழி அவர் மீது கொலைக் குற்றம் சாட்டி மரண தண்டனை வாங்கித் தந்த அந்த குடும்பத்தினரே அவரை மன்னிப்பது மட்டுமே. ஆனால் அந்த இறுதி தருணத்திலும்கூட மௌலவியும் ரிஸானாவும் எதிர்பார்த்த அந்த மன்னிப்பு கிடைக்கவேயில்லை.

ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகிவிட்டது. தொடர்ந்து நிகழ்ந்ததை மக்தூம் எடுத்துரைக்கிறார்: “உங்களிடம் ஏதாவது பணம், போருட்கள் இருந்தால் அதனை என்ன செய்வது என்று வினவியபோது, மொத்தம் ஐநூறு சவூதி ரியால்கள் சொச்சம் இருப்பதாகவும் அதனை சதகா (தர்மம்) செய்திடுமாறும் (ரிஸானா) வேண்டிக் கொண்டார். அவற்றை யாருக்கு எங்கு எந்த வழியில் சதகா செய்வது என்று கேட்டபோது, இங்கேயே எந்த வழியிலேனும் சதகா செய்திடுங்கள் என்று உறுதிப்பட கூறி அவரே தனக்கு அறிமுகமான இரு பெண்களை பொறுப்பு சாட்டினார். அவருக்கு ஷஹாதா என்னும் சாட்சிப் பிரகடனம் கூற சொல்லிக் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டு ரகஅதுகள் தொழவும் துஆசெய்யவும் அவருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.”

மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள இடத்துக்கு ரிஸானாவை அழைத்துச் சென்றார்கள். “அங்கிருந்த அனைவரின் எதிர்பார்ப்பும் ரிஸானா மன்னிக்கப்பட வேண்டும் என்பதே. நீண்ட நேர உரையாடல் எந்த பலனும் அளிக்காதபோதும் அவரின் தண்டனையை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோதுகூட, கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த உயரதிகாரியிடம் ‘மன்னித்துவிட்டீர்களா?’ என்று ஒருவர் கேட்டார். ‘இன்ஷா அல்லாஹ், மன்னித்துவிடுவார்கள்’ என்றே அவர் அதற்கு பதிலளித்தார். அதாவது இறுதி நேரத்திலாவது மன்னித்துவிடுவார்கள் என்பதே அவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.”

ரிஸானாவை மன்னித்துவிடுமாறு மரணித்த குழந்தையின் பெற்றோரை சவூதியின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸும்கூட கேட்டுக் கொண்டனர் என மக்தூம் கூறுகிறார். ஆனால் எந்த முயற்சியும் கைகூடவில்லை. மக்தூம் தொடர்ந்து தன் கடிதத்தில் எழுதினார்: “அல்லாஹ்வின் நாட்டத்துடன் சென்ற புதன்கிழமை காலை 11 மணி அளவில் அவரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து, அவரை சுவர்க்கத்திற்கு சொந்தக்காரியாக ஆக்கியருள்வானாக. இப்போது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி எனக்கு ஞாபகம் வந்தது. அது: ‘முழு உலகமும் சேர்ந்து உனக்கு ஒரு நன்மையைச் செய்திட முயற்சி  செய்தாலும், இறைவனின் ஏற்பாட்டை மீறி ஒன்றும் செய்திட முடியாது. மேலும் முழு உலகமும் சேர்ந்து உனக்கு ஒரு தீமையை செய்திட நினைத்தாலும் இறைவனின் ஏற்பாட்டை மீறி எந்தவொன்றும் செய்திட முடியாது”

மௌலவி மக்தூமின் கடிதம் உலகெங்கிலும் ரிஸானாவின் விடுதலைக்காகப் போராடியவர்களின் உள்ளக்கிடக்கையை கொந்தளிப்புடன் வெளிப்படுத்தியது. மரண தண்டனை நிறைவேற்றம் குறித்து அதற்கு ஒருநாள் முன்பாகவே மக்தூமுக்குத் தெரியவந்திருக்கிறது. “…சந்திப்பிற்கான அழைப்பு வந்தபோது அந்த நேரத்திலிருந்து ஒவ்வொரு கணமும் அவருக்காக துஆ செய்தேன். எனக்கும் அந்த நேரத்தில் அவருக்காக துஆ செய்வதைத் தவிர வேறு வழியொன்றும் தென்படவில்லை. இறுதி பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்த பிறகு அவரை தண்டனை நிறைவேற்ற கொண்டுசெல்லும்போது இறைவா! இவர் அநியாயமாக தண்டிக்கப்படுகிறார் என்றால் அநியாயக்காரர்கள் மீது உனது தண்டனையை உடனே இறக்கிவிடுவாயாக என்றுகூட பிரார்த்தித்தேன்” என்றார் மக்தூம்.

ரிஸானா! எத்தனை லட்சம் பேருடைய தொழுகைக்கு பலனின்றி கொலைக்களம் ஏகினார்! ரிஸானாவின் தலையை வெட்டி எறிந்தது சவூத் அரசு வெட்டவெளியில், பலரும் பார்க்க அது நடந்தது. அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து யூ ட்யூபில் உலவவிட்டிருந்தார்கள். இன்னமும் மத்திய காலத்தில்தான் இவ்வுலகம் இருக்கிறது என்பதற்கு சாட்சியாக இருந்தன அந்த வீடியோவின் காட்சிகள். குரானிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வாசகத்துடன் அந்த தண்டனை நிறைவேற்றம் தொடங்கியது என சவூதி செய்தி முகவாண்மை தனது குறிப்பில் தெரிவித்தது. “விசுவாசிகளே, கொலைக்கு எதிர்வினையாக சமத்துவத்தின் விதியே உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது” என்பதுதான் அந்த வாசகம். ஆனால் உண்மையில் சமத்துவத்தின் விதி அங்கே பின்பற்றப்பட்டதா, அவ்வாறு சொல்லிக் கொள்வதற்கு அந்தக் குடும்பத்திற்கோ சவூதி மன்னராட்சிக்கோ தகுதி இருக்கிறதா என்பதுதான் பலரும் எழுப்பும் கேள்வி.

ஆனாலும் கேள்வி கேட்டு என்னதான் பயன்? ஒரே ஒரு வெட்டு. ரிஸானா இரு கூறானார்.

ஒரு பணிப்பெண்ணின் இறுதிப் பயணம்

ரிஸானா கொல்லப்பட்டு இரண்டு வாரங்கள் கழித்து தமிழ் ஆழி ரிஸானாவின் குடும்பத்தைத் தொடர்பு கொண்டது. கிழக்கிலங்கையிலுள்ள திரிகோணமலை மாவட்டத்தின் மூதூர் ஷாபி நகரில் அக்குடும்பம் ஒரு குடிசையில் வாழ்ந்து வருகிறது. ரிஸானா பற்றி பேச்சு எழுந்தவுடனேயே “இயலாது” என ஒரே வார்த்தையில் பதில் சொன்னார் ரிஸானாவின் தாயார் அகமது செய்யது பரீனா. “தாங்க முடியாத வேதனையில் இருக்கிறோம்” என்று கூறிய அவரை பிறகு நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஆனால் இயலாது என்று கூறிய அவரது ஒற்றை வார்த்தை, தமிழ் ஆழி கேட்கவிருந்த எல்லாக் கேள்விக்குமான பதிலாக இருந்தது. இயலாமைதானே எல்லாமும்? ரிஸானா கொல்லப்பட்ட செய்தி வந்தபோது, அவர்கள் குடும்பத்தில் இயலக்கூடியதென ஏதேனும் மிச்சம் இருந்ததா? தங்கள் செல்ல மகளுக்காக அந்தக் குடும்பத்தினர் எடுத்த எல்லா முயற்சிகளும் வீணடிக்கப்பட்டுவிட்டன.

ரிஸானா தனது 17 வயதில், 2005 மே 4ல் சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலை செய்யச் சென்றார். சவூதியை நோக்கிய அவரது பயணத்தின் தொடக்கமே பிரச்சனைக்குரியதாக இருந்தது. 1988 பிப்ரவரி 2ல் பிறந்த ரிஸானாவின் பிறந்த நாளை 1982 பிப்ரவரி 2 என மாற்றி கடவுச்சட்டு வாங்கப்பட்டிருக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது என்கிற நிலையில், இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான குழந்தைத் தொழிலாளர்கள் கடவுச்சீட்டு முகவர்களின் தில்லுமுல்லு வேலைகளால்தான் மேற்காசியாவுக்கு தொழில்புரியச் செல்கிறார்கள். இது ரிஸானாக்களின் பெற்றோர்களுக்கும் தெரியும், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கும் தெரியும்.

சவூதியின் ஒட்டுமொத்த வாழ்க்கையுமே புலம்பெயர் தொழிலாளர்களின் உழைப்பினால்தான் நின்றுகொண்டிருக்கிறது. அந்த நாட்டின் அரபு எஜமானர்களுக்கு அடிமையைப் போல வேலை செய்யக்கூடிய, சுரண்டலைப் பொறுத்துக் கொள்ளக்கூடிய, அவ்வப்போது பாலியல் ரீதியிலான மீறல்களை சகித்துக் கொள்ளக்கூடிய “வேலைக்காரிகள்” தேவைப்படுகின்றனர். இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலுள்ள ஏழைக் குடும்பத்தவர்கள் மேற்காசியாவுக்குப் புலம்பெயரும்போது வறுமையும் அறியாமையும் கண்ணை மறைத்துவிடுகிறது.

ரியாதிலிருந்து 400 கிமீ தொலைவிலுள்ள தாவதமிஸ்ஸா நகரில், நைஃப் ஜிஸியான் ஹலாஃப் அல் குதைபி என்பவரின் வீட்டில், ஒரு பழமைப் போக்குள்ள குடும்பத்தில், வீட்டு வேலை பணியாளராகச் சேர்ந்தார் ரிஸானா. சேர்ந்து சில வாரங்கள்கூட ஆகியிருக்கவில்லை. மே 22ந் தேதி நைஃபின் நான்கு மாத குழந்தை ரிஸானாவின் பொறுப்பில் இருக்கும்போது இறந்துபோனது. ஒரு பாட்டிலில் பால் கொடுத்தபோது குழந்தைக்கு அடைப்போ திணறலோ ஏற்பட்டு, அதன் மூக்கிலிருந்து பால் வழிந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த ரிஸானா – எந்த அனுபவமும் இல்லாத பணிப்பெண் –  குழந்தையின் தொண்டை, கழுத்து, முகப் பகுதிகளை அழுத்தி நீவிக் கொடுத்திருக்கிறார். ஆனால் குழந்தை கண்ணை மூடியிருந்தது. அது மயக்கத்தாலா மரணத்தாலா என்றுகூட தெரியாத நிலையில் இருந்தார் ரிஸானா.

குதைபி குடும்பத்தின் இல்லத்தரசி இது ஒரு எதிர்பாராத சம்பவமாக இருக்கலாம் என்பதை அறியாமல் ரிஸானா திட்டமிட்டு தங்கள் குழந்தையைக் கொன்றுவிட்டதாக உடனே முடிவெடுத்துவிட்டார். தன் குழந்தையின் மரணத்தால் ஏற்பட்ட துக்கத்திலும் கோபத்திலும் எடுத்த முடிவாக அது இருந்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில், ஏழு ஆண்டுகள் அதன்பின் கடந்தும்கூட, இறுதி வரை குதைபி குடும்பத்தினர் தங்கள் முடிவை மார்றிக்கொள்ளவேயில்லை. இறுதி நாள் வரை அவர்கள் மனம்மாறவில்லை.

“சட்டத்தின்படியும் அல்ல, ஷரீஆவின்படியும் அல்ல”

குதைபி குடும்ப வாரிசைக் கொன்றுவிட்டதாக ரிஸானாவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்கிற ஒரே ஒரு நிரூபிக்கப்படாத ஆதாரத்தை வைத்துதான் இந்த சாபகரமான கொலைவழக்கில் சவூதியின் காட்டுமிராண்டி கால நீதிமன்றங்கள் தீர்ப்பைக் கூறியிருக்கின்றன.

அன்று நிகழ்ந்தது என்ன? பாதிக்கப்பட்ட தப்பின் சொற்களை முதலில் கேட்போம். அதை ரிஸானா, 30.01.2007 எனத் தேதியிட்ட ஒரு கடிதம் மூலம் பதிவு செய்திருந்தார்:

“முதலில் நான் 2005.04.01ல் சவூதி வந்தேன். எனது சவூதி (…) வீட்டில் ஒன்றரை மாதம் வேலை செய்தேன். குறிப்பிடத்தக்க பிரச்சனைகள் இருக்கவில்லை. இந்த வீட்டில் சமைத்தலுக்கு ஆக்கும் வேலை உட்பட கழுவுதல், 4 மாத பில்லையை பார்த்தல் ஆகியவற்றை செய்தேன். இவ்வீட்டிற்கு வந்தது முதல் இக்குழந்தையை பார்க்கும் வேலை செய்தேன். இவ்வீட்டாருடன் நன்றாக இருந்தேன். குறித்த சம்பவ தினம் ஞாபகமில்ல. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை (…) 12.30 இருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. (…) வழமையாக நான்தான் குழந்தைக்கி பால் கொடுக்கின்றேன். வழமபோல் பால் ஊட்டிக் கொண்டிருந்தபோது குழந்தையின் வாயி மூக்கு மூலம் பால் கொட்ட ஆரம்பித்தபோது குழந்தையின் தொண்டையை மெதுவாக தடவினேன். அப்போது குழந்தை கண் மூடி இருந்தபடியால் நான் அக்குழந்தை தூக்கம் என நினைத்தேன். எனவே (…) 1.30 மணிக்கு (…) வந்து பார்த்துவிட்டு பில்லையை பார்த்துவிட்டு எனக்கு செருப்பால் வாயில் அடித்திட்டு குழந்தையை எடுத்துப் போனார். என் வாயி மூக்கு இரத்தம் வந்தது. பின்பு பொலிஸ் வீட்டுக்கு வந்து என்னை எடுத்துச் சென்றன. பொலிஸில் வைத்து எனக்கு அடித்தனர். ஒரு (…) அடித்து குழந்தையின் கழுத்தை நெருக்கியதாக கூருமாரு அடித்து வட்புருத்தினர். அவ்வாரு கூராவிடில் கொல்லுவதாயும் கரண்ட் பிடிப்பதாகவும் கூறினர். எனவே அவர்கள் எழுதிய பேப்பர்ல கையொப்பமிட்டேன். என்ன வேறு இடத்துக்கு கொண்டுபோறி கேட்டபோது பயம் காரணமா (…) ஞாபக சக்தி அப்போது இல்லாதபடியிருக்க நான் கழுத்தை நெரிச்சதாக கூறினேன். அல்லா மீது சத்தியமாக குழந்தயை கொல்ல (…) கழுத்தை நெரிக்கவில்லை.மேற்படி எனது வாக்குமூலத்தை (…) வழங்கிய பின் உண்மையென உறுதி செய்து கையொப்பமிடுகின்றேன்.” (கடிதத்திலிருந்து பெயர்த்தெழுத முடியாத வார்த்தைகள் அடைப்புக்குறிக்குள்) புள்ளியிடப்பட்டுள்ளன).

குற்றம்சாட்டப்பட்டவரின் தற்காப்பு வாதங்களை முழுமையான நிரூபணமாக ஏற்றுக் கொள்ள இயலாது. ஆனால் குற்றம்சாட்டியவர்களோ அது கொலைதான் என்பதை முழுமையாக நிரூபிக்கவில்லை. ரிஸானா தரப்பு வாதங்கள் புறக்கணிக்கப்பட்டனவே ஒழிய, தோற்கடிக்கப்படவில்லை. மாறாக அவரே கூறியிருந்ததைப் போல அச்சுறுத்தி வாக்குமூலம் வாங்கப்பட்டிருக்கிறது என்று மனித உரிமை அமைப்புகள் பிறகு கூறின. ரிஸானா தரப்பினரும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் இந்த வழக்கு நடத்தப்பட்ட முறையை முற்றிலும் அநீதியானது என்றே கருதுகிறார்கள். ஹாங்காங்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமை ஆணையம் (ஆ.ம.உ.ஆ: Asian Human Rights Commission ) ரிஸானா வழக்கில் தீவிரமாக இயங்கிவந்தது.

குழந்தை இறந்த அன்றே தவாத்மி போலீஸால் ரிஸானா கைது செய்யப்பட்டார். அடுத்த இரண்டாண்டுகள் அவரது வழக்கு நீடித்தது. ஆனால் ரிஸானாவுக்கு சாதகமாக ஒன்றுகூட நடக்கவில்லை. தொடக்கத்தில் ரிஸானா வழக்கு எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்து, ரிஸானாவின் மரண தண்டனை நிறைவேற்றத்துக்குப் பிறகு ஆ.ம.உ.ஆ இலங்கை அதிபருக்கும் ஐ.நா. ஹைகமிஷனருக்கும் எழுதிய ஒரு கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: “ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்த வழக்கு விசாரிக்கப்பட்ட முறை குறித்தும் அளிக்கப்பட்ட தண்டனை குறித்தும் சர்வதேச அளவில் குரல்கள் எழுந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள் என்று ஆ.ம.உ.ஆ உறுதியாகக் கருதுகிறது. ரிஸானாவுக்கு தமிழ் மட்டுமே பேசத் தெரிந்திருந்தது என்பதையும் ஆனால் சவூதி காவல்துறை ரிஸானாவுக்கு எழுதவோ படிக்கவோ பேசவோ தெரியாத அரபி மொழியிலேயே விசாரணை நடத்தியது என்பதையும் ஆ.ம.உ.ஆ உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் ரிஸானா ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்திருக்க முடியாது. விசாரணையின்போதோ புலனாய்வின்போதோ ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளர் ரிஸானாவுக்காக நியமிக்கப்பட்டது என்று ஒரு ரிப்போர்ட் கூறுகிறது. அவர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு கன்னடம் மட்டுமே பேசத் தெரியும், தமிழ் தெரியாது என்றும் தெரியவருகிறது. அது மட்டுமல்ல விசாரணையின்போது ரிஸானாவுக்கு எந்த சட்ட உதவி சேவையும் அளிக்கப்படவில்லை.”

வழக்கின் தொடக்க நிலையில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன: இறந்த குழந்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா என்பதும் இறப்புக்கான மருத்துவரீதியிலான காரணம் அது ஒரு கொலைதான் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நிரூபிக்கப்பட்டதா என்பதும் பிரதான கேள்விகள். ஆனால் இந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லை. “ ரிஸானாவுக்காக வாதாடிய சட்ட நிறுவனமான காதெப் அல்ஷம்மாரி இந்த பிரேத பரிசோதனை விவகாரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டதா இல்லையா என்பதே தெரியவில்லை” என்று சந்தேகம் எழுப்பினார் இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் லத்தீஃப் பரூக். சவூதி அரேபிய அரசை காட்டுமிராண்டித்தனமான அரசு என்று விளாசித் தள்ளும் லத்தீஃப் பரூக், அந்தக் குழந்தையைக் கொல்வதற்கான உள்நோக்கம் ரிஸானாவுக்கு எப்படி வந்தது, அதுவும் வேலைக்குச் சேர்ந்த குறைந்த காலத்திலேயே அப்படி ஒரு மனநிலை எப்படி ஏற்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை என்று தன் கட்டுரை ஒன்றில் குற்றம்சாட்டினார். ஏனென்றால் தம் குழந்தையை ரிஸானா கழுத்தை நெரித்துக் கொன்றார் என்றே குதைபி குடும்பத்தினர் கூறினார்கள். திடீர் குழந்தை மரண அறிகுறி (Sudden Infant Death Syndrome) அல்லது பால் குடிக்கும்போது எதிர்பாராமல் ஏற்படக்கூடிய விழுங்குதல் பிரச்சனையால் இந்த சம்பவம் சம்பவித்திருக்கலாம் என மருத்துவ உலகம் கருதுகிறது. முறையாக பிரதே பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தால் குதைபி குடும்பத்தினரின் பழி உணர்வுக்கு ரிஸானா ஆளாகியிருக்கமாட்டார்.

கொடுமைப்படுத்தப்பட்டு வாக்குமூலங்கள் வாங்கப்பட்டன என்ற குற்றச்சாட்டுகளுக்கு சவூதி நீதிமன்றங்களின் எதிர் நடவடிக்கைகள் என்ன? ரிஸானாவின் வயது 24 அல்ல, 17தான் என்று சான்றிதழ் மூலமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் ஏன் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை? கொலை செய்வது தொடர்பான மனநிலைக் காரணிகள் குறித்து சவூதி நீதிமன்றங்களின் கருத்து என்ன? ரிஸானா சார்பில் விசாரணையின்போது வழக்கறிஞர்களின் பங்கே இல்லாமல் போயிருந்தது குறித்து நீதித்துறையின் கருத்து என்ன? இவ்வாறாக பல கேள்விகளை ஆ.ம.உ.ஆணையம் முன்வைத்தது.

ரிஸானாவின் வயது குறித்த விவகாரம் இந்த வழக்கில் புறந்தள்ளப்பட்ட ஒரு முக்கிய விடயம். ஒருவேளை சவூதி அரசு ரிஸானாவின் உண்மையான வயதை ஏற்பதாக இருந்தால், அது கையெழுத்திட்டிருக்கும் சர்வதேச சட்டங்களின்படி, ரிசானாவை மைனர் எனக் கருதி வழக்கிலிருந்துவிடுவித்திருக்கக்கூடிய நிலை வந்திருக்கும். ஆனால் இவ்விடயத்தில் அது ஒதைபி கோத்திரத்துக்கு இசைவான முறையிலேயே நடந்துகொள்ள முடிவெடுத்தது.

சர்வதேச நீதிமுறைகளின்படி எழுப்பப்பட்ட எந்தக் கோரிக்கைக்கும் சவூதி செவிசாய்க்கவில்லை. இஸ்லாமிய நீதிமுறையான ஷரீஆவின் அடிப்படையிலேயே தாங்கள் நடந்துகொள்வதாக சவூதி கூறிவந்தது. ஆனால் அதையாவது அவர்கள் உண்மையிலேயே பின்பற்றினார்களா?

2007 ஜூன் 16ல், தவாத்மி உயர் நீதிமன்றத்தில், மூன்று நீதிபதிகளைக் கொண்ட ஒரு பெஞ்ச் ரிஸானாவுக்கு மரண தண்டனை விதித்தது. அதன் பிறகு ரிஸானாவின் தரப்பில் மனித உரிமையாளர்கள் அந்த மரண தண்டனையை எதிர்த்து மூன்றாண்டு காலம் போராடி ரியாதிலுள்ள உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில் ரிஸானா வழக்குக்கு ஏற்பட்ட கதி நியாயத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அந்த நம்பிக்கையை இழக்கச் செய்துவிடக்கூடியது. ரிஸானா விவகாரத்தில் ஷரீஆ முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என்று இஸ்லாமிய அறிஞர்களிடமும் முஸ்லிம் மக்களிடமும் வலுவான ஒரு கருத்து நிலவுகிறது (பார்க்க: ஏ.பி.எம்.இத்ரீஸ் மற்றும் எச்.பீர்முஹம்மது பத்திகள்).

இலங்கையைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் ஷாமிலா ஷெரீப் பின்வரும் கருத்துக்களை முன்வைக்கிறார்: “இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தின் பார்வையில் சில அம்சங்கள் கவனிப்புக்குரியன. மஹ்ரம் துணையின்றி ஒரு பெண் இன்னொருவர் வீட்டில் இருக்க முடியாது (மஹ்ரம் என்பது திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட உறவுக்காரர்). கடந்த வருடம் நைஜீரியாவிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்த பெண்கள் இப்படியான மஹ்ரம் துணையின்றி வந்தார்கள் என்ற அடிப்படையில் ஹஜ் கடமையை நிறைவேற்றவிடாது திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் அதேவேளை பணிப்பெண்களை அவர்கள் மஹ்ரம் இன்றி அனுமதிப்பது வேடிக்கையானது. அது ஷரீஆவுக்கு முரணானது. ஒரு தாய் இரண்டு வருடங்கள் பூரணமாக குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும். இங்கு தாய் தனது கடமையைப் புறக்கணித்து நான்கு மாதக் குழந்தைக்கு வீட்டுப் பணிப்பெண்ணிடம், அதுவும் குழந்தைப் பராமரிப்புக்காக பயிற்றுவிக்கப்படாத ஒருவரிடம், புட்டிப்பால் ஊட்டப் பணித்தது ஷரீஆவுக்கு முரணானது. ஒருவர் குற்றம்சாட்டப்பட்டு அவர் நிரபராதியாக இருந்து அதை நிரூபிக்க முடியாவிட்டால் இறைவன் மீது ஆணையாக இதை நான் செய்யவில்லை என்று சத்தியம் செய்வதும், அப்படித்தான் பொய் சத்தியம் செய்திருந்தால் தன் மீது இறைவனின் சாபம் இறங்கட்டும் எனச் சுய சாபம் இடுவதும் ஷரீஆவில் உள்ளது. தான் செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவிப்பதாகவும் அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கொலை செய்யவில்லை என்றும் ரிஸானா கூறிய பின்னரும் அவர் மீது தண்டனை பாய்ந்திருப்பது ஷரீஆவுக்கு முரணானது” என்று தமிழ் ஆழியிடம் கூறினார் ஷாமிலா.

இது ஒருபுறமிருக்க, ரிஸானா பெரும்பாலும் தனது வழக்கில் என்னதான் நடக்கிறது என்பதையே தெரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறார் என்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது. சட்டம் ஒரு இருட்டறை என்பது அவரது விடயத்தில் முழுமையாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ரியாதில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த பல் மருத்துவரான டாக்டர் கிஃபாயா இஃப்திகார் சிறையில் அடிக்கடி ரிஸானாவைச் சந்தித்தவர்களில் ஒருவர். ஏப்ரல் 2012ல் அவர் ரிஸானாவைச் சந்திக்கச் சென்றபோது தனது தலைவிதி பற்றி ஏதும் தெரியாதவராக இருப்பதை ஏஷியன் ட்ரிப்யூனுக்கு அளித்த பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். உச்ச நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை நிராகரித்த விவரம்கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருப்பதையும் எந்த நேரத்திலும் அவர் சிரச்சேதம் செய்யப்படலாம் என்பதையும் அவருக்கு அதிகாரிகள் கூறியிருக்கவில்லை. “எனக்கு சுதந்திரம் வேண்டும் என ரிஸானா என்னிடம் வலியுறுத்தினார்” என கிஃபாயா அந்தப் பேட்டியில் கூறியிருந்தார். அவர் மட்டுமல்ல ரிஸானாவின் பெற்றோர்களுக்கும் தொடக்க கால வழக்கு நடவடிக்கைகள் தெரியாமல்தான் இருந்தது. இறுதியிலும் அப்படித்தான். ரிஸானாவின் மறைவுச் செய்தி மூதூரை அடைந்தபோது அவரது தாய் பரீனா அதை நம்ப மறுத்தார். “எனது மகள் விடுதலை பெற்று வீட்டுக்கு வருவாள். நான் கடந்த மாதம் மகளுடன் தொலைபேசியூடாகக் கதைத்தேன். நான் எப்போது வீடு வருவேன் என்று என்னிடம் கேட்டாள். நீங்களும் மகளுக்காக துஆ செய்யுங்கள் என்று தெரிவித்தார்” என்று இலங்கை இணையதளமான விடிவெள்ளி.காமுக்கு அளித்த நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார்.

குதைபி குடும்பத்தினரின் பிடிவாதமான குணம்தான் ரிஸானா கதையின் மிகப் பெரிய வெளிப்பாடாகும். இலங்கையிலிருந்து ரிஸானாவின் பெற்றோர்களும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் பலரும் குதைபி குடும்பத்தினரிடம் நேரடியாகவும் சவூதி அரசு மூலமாகவும் ரிஸானாவை மன்னிக்கும்படி கோரியதை அவர்கள் ஏற்கவேயில்லை. சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகமும் ரியாத் பிரதேச அரசு அமைப்புகளும் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியை அடைந்தன. குறிப்பாக ரியாத் பிரதேச மீள்பரிசோதனைக் குழு ஒன்று குதைபி குடும்பத்தினரை பல தடவைகள் சந்தித்தது. சர்வதேச அளவில் பல அமைப்புகளும் பிரபலங்கலும் சவூதி அரசை நிர்பந்தம் செய்தார்கள். 2010ல் பிரிட்டன் வேல்ஸ் இளவரசர் சார்லஸ் ரிஸானாவைக் காப்பாற்றுமாறு சவூதி அரசருக்கு வேண்டுதல் அனுப்பியிருந்தார்.

சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது நவீன சட்ட மரபு மட்டுமல்ல, ஷரீஆவும் அதையே சொல்கிறது என்கிறார்கள் இஸ்லாமி அறிஞர்கள். “சந்தேகம் எழுந்தால் தண்டனையைத் தவிர்த்திடுங்கள் என்று நபிகள் நாயகம் கூறியிருக்கிறார். முற்றிலும் நிரூபிக்கப்படாத எந்த ஒன்றும் சந்தேகத்துக்குட்பட்டதே என்று கூறப்படுகிறது. ஷரீஆவின் ஐந்து அடிப்படை இலக்குகளில் முதலாவது சமயத்தைப் பேணுதல் என்றால் இரண்டாவது உயிரைக் காத்தல் என்பதாகவே இருக்கிறது” என்று ஜோர்டானிலுள்ள அல் பல்கா பயன்கலை பல்கலைக்கழகத்தில் ஷரீஆ பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் ஹேம்டி முராத், ரிஸானா குறித்தஒரு பதிவில் குறிப்பிட்டார். ஆனால் மிரட்டி வாக்குமூலத்தை வாங்கிக் கொண்டே ரிஸானா சிரச்சேதம் செய்யப்பட்டிருக்கிறார்.

இலங்கை அரசின் துரோகம்

ரிஸானா விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே ராஜபக்ஷே அரசு ஒரு நாடகத்தை ஆடி வந்தது. ரிஸானாவை விடுதலை செய்யப் போராடிக் கொண்டிருப்பதாக அது கூறிவந்தது. இருமுறை அவர் சவூதி அரசரிடம் இது குறித்து கோரிக்கை வைத்ததும் உண்மையே. ஆனால் வழக்கின் முக்கியமான கட்டங்களில் அது துரோகமே இழைத்தது. இலங்கை அரசின் இந்த நாடகத்தை நேரடியாகப் பார்த்துக் கொதித்துப் போயிருந்தது ஆ.ம.உ.ஆ (பசில் ஃபெர்னாண்டோ நேர்காணல்).

2010 அக்டோபர் 26ல் ஆணையம் ராஜபக்ஷேவுக்கு எழுதிய கடிதம் இலங்கையின் முத்தைக் கிழித்தெறிகிறது. “ரிஸானாவுக்கு மரண தண்டனை மறுஉறுதி செய்யப்பட்டமை குறித்து (இலங்கையின்) வெளியுறவு  அமைச்சகம் மற்றும் ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள் ரகசியம் காத்தார்கள் என்பதும் அது குறித்து வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை என்பதும் பீதியளிக்கின்றன… சம்பந்தப்பட்ட ஒரு நபர் தற்செயலாக வருகை புரிந்தபோதுதான் இந்த முழு விவரமும் தெரியவந்தது. இல்லையென்றால் இது ரகசியமாக வெளியே தெரியாமலேயே நீடித்திருக்கக்கூடும். துரதிருஷ்டசாலியான அந்தப் பெண், அவரது குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமலேயே, அந்த இறுதித் தண்டனாக்கு உள்ளாகியிருப்பார். பிச்சனையின் இந்த அம்சத்தின் மீதும் நீங்கள் கவனம் செலுத்துமாறு தங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்” என்று ராஜபக்ஷேவுக்கு ஆணையம் கோரிக்கை விடுத்தது.

குறிப்பாக மேல்முறையீடு தொடர்பான விடயத்தில் இலங்கையின் பொய்முகம் நன்றாக அம்பலப்பட்டுப்போனது. ரிஸானாவுக்கு அளிக்கப்பட்ட மரணை தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல முடிவெடுக்கப்பட்டது. சவூதியின் சட்டப்படி மேல்முறையீடு செய்ய 150,000 சவூதி ரியால்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஆ.ம.இ.ஆணையம் மேல்முறையீட்டுக்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. அதற்காக ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தை அணுகியது. ஆனால் அதற்கான எந்த சாதகமான எதிர்வினையையும் ஆணையத்தால் இலங்கையிடமிருந்து பெற முடியவில்லை.

ஆணையத்தின் ஆவணங்கள் இதை அம்பலப்படுத்துகின்றன. ஜூலை 17, 2007 மேல்முறையீட்டுக்காக விண்ணப்பிப்பதற்கான கெடு நாள். அந்த நாள் வரை இலங்கை அரசு மேல்முறையீட்டுக்கான விண்ணப்பத் தொகையை அளிக்க முன்வரவில்லை. ஆ.ம.உ.ஆணையம் வேகமாக செயல்பட்டு சட்ட  நிறுவனமான காதெப் ஃபதாத் அல்ஷம்மாரி மூலம் மேல்முறையீட்டுக்கான முதல் தவணையாக 50,000 சவூதி ரியால்களைக் கட்டியது. பல மனித உரிமை அமைப்புகளும் தனிநபர்களும் அளித்த நன்கொடைதான் அது. தங்கள் நாட்டுப் பிரஜைக்காக மேல்முறையீடு செய்வதற்கான எண்ணம் ராஜக்ஷே அரசிடம் இருக்கவில்லை. இலங்கை அரசு அந்தக் கோரிக்கையை ஏற்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால் நாங்கள் கட்டுகிறோம், நீங்கள் இசைவைத் தெரிவியுங்கள் என்கிற அளவுக்கு இறங்கினார்கள் ஆ.ம.உ.ஆ செயல்பாட்டாளர்கள். அதற்கும்கூட எந்த உருப்படியான பதிலையும் கூறவில்லை என்கிறது ஆணையம்.

2010 டிசம்பர் 24ல் ஆணையம் ராஜபக்ஷேவுக்கு ஒரு அவசரக் கடிதத்தை அனுப்பியது. ரிஸானா விரைவில் மரண தண்டனைக்குள்ளாகக்கூடிய நிலையைக் குறிப்பிட்டு, ராஜபக்ஷேவிடம் கிட்டதட்ட ஆணையம் மன்றாடியது. “மேல்முறையீட்டுக்காகக் கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்தி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வெளியறவு அமைச்சகம் எந்த செயல்பாட்டையும் தொடங்கவில்லை. அந்தத் தருணத்தில் மேல்முறையீட்டுக்காக விண்ணப்பிக்க கட்டவேண்டிய தொகையைக்கூட மனித உரிமை அமைப்புகளே திரட்டிக் கட்டின. ஒரு விடயம் கிட்டத்தட்ட உறுதியானது. அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக தீர்மானகரமான எந்த முடிவையும் எடுக்காவிட்டால், ரிஸானா நஃபீக் பார்க்கக்கூடிய கடைசி கிறிஸ்துமஸ் இதுவாகத்தான் இருக்க முடியும். காலம் அவருக்கு எதிராக இருக்கிறது. இப்போதைய தேவையெல்லாம் இலங்கை அரசின் தீர்மானகரமான செயல்பாடுகள்தான்” என்று ஆணையத்தின் கடிதம் கூறுகிறது.

ஆனால் எந்த தீர்க்கமான செயல்பாட்டிலும் இலங்கை இறங்கவில்லை. சவூதி அரசரிடம் வேண்டுகோள் விடுப்பதைத் தவிர அதனிடம் வேறு எந்த உத்திகளும் இல்லை. “ரிஸானா 18 வயதைத் தாண்டாதவர் என்ற உண்மை நிரூபிக்கப்பட்டும் கடவுச்சீட்டில் வயது மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டு இலங்கை நீதிமன்ற விசாரணைகளின் முடிவில் தண்டனையளிக்கப்பட்ட பிறகும் இது தொடர்பான உத்தியோகப்பூர்வமான ஆவணங்கள் இலங்கை அரசால் சவூதி அரேபிய நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. ஆக மொத்தத்தில் ரிஸானாவின் கொலையில் இலங்கை அரசிற்கும் பங்கிருக்கிறது. ரிஸானாவின் மரணம் இலங்கைச் சூழலில் மிகக் கனதியான அதிர்வுகளை உண்டுபண்ணியிருக்கிறது” என்கிறார் ஷாமிலா.

அதனால்தான் ரிஸானா கொல்லப்பட்ட பிறகு, ஆணையம் எந்த தயவுதாட்சணியமும் குழப்பமும் இன்றி ராஜபக்ஷே அரசையே இந்த விவகாரத்தின் முதல் குற்றவாளியாக பகிரங்கமாக அறிவித்தது. ஜனவரி 19, 2013ல் ஆசிய மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது: “இந்த அப்பாவி இலங்கைப் பெண்ணின் மரணத்துக்கு தனியொருவராகப் பொறுப்பேற்க வேண்டியவர் குடியரசுத்தலைவர் திரு.மகிந்த ராஜபக்ஷேதான் என ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தீர்க்கமான வாசகங்களில் கூற விரும்புகிறது. மே 2005ல் இருந்து வெளிநாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த அப்பாவி இலங்கைப் பெண்ணின் உயிரை அவரது அலுவலகமும் அவர் தலைமை தாங்கும் அரசும் அவமானகரமான முறையில் அலட்சியப்படுத்திவிட்டன.”

அனைத்து இலங்கை மக்களும் இந்த நாளை ஒரு அவமான தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என்றும் ஆணையம் கோரியது. மேல்முறையீடு செய்கையில் வழக்கறிஞருக்குத் தரவேண்டிய கட்டணத்தைக்கூட தர முடியாமல் போன ராஜபக்ஷே அரசை ஆணையம் சந்தி சிரிக்க வைத்தது. “தனது மக்களின் உரிமைகள் மீது எந்த அக்கறையும் காட்டாத ஒர் அரசு நிலவும் வரை இலங்கையில் இதுபோன்ற துயர சம்பவம் நடக்கத்தான் செய்யும்” என்று எச்சரித்தது அந்த அறிக்கை.

‘நடக்கத்தான் செய்யும்’ என்கிற ஆணையத்தின் எச்சரிக்கை ஒர் அபசகுனமாகவே ஒலிக்கிறது. இப்போது ஆணையம் வேறு ஒரு வழக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. கத்தார் தலைநகரான தோஹா நகரில் கைது செய்யப்பட்டு சிரச்சேதத்தை எதிர்நோக்கியிருக்கிறார் வெங்கடாசலம் கதேஷ்கர் என்கிற 22 வயது இலங்கை இளைஞர். அவரது குடும்பத்தாரும் ஆணையமும் வழக்கம்போல ராஜபக்ஷே அரசின் உதவியைக் கோரி நிற்கின்றன. ரிஸானா கொலைக்கள காதை மீண்டும் அரங்கேறாது என்று என்ன உத்தரவாதம்?

அடையாளங்களின் தோல்வி

ரிஸானா விவகாரத்தில் இலங்கையிலும் வேறு பல நாடுகளிலும் சவூதி அரசு முஸ்லிம்கள் மத்தியில் பலமான எதிர்ப்பைச் சந்தித்திருக்கிறது. ரிஸானாவின் மரணத்துக்குக் காரணம் சவூதி அரசும் அதன் நீதித்துறையும்தான் என்கிறார் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய அறிவுத் துறையில் முக்கிய இடம் வகிக்கும் ஏ.பி.எம் இத்ரீஸ் (பார்க்க: பத்தி). சவூதியிடம் தொழிற்படுவது இஸ்லாம் அல்ல, நபிகளின் போதனையை இருட்டிப்பு செய்யும் “அரபு தேசியவாத உணர்வு” என்று விமர்சிக்கிறார். முஹம்மது இப்னு அப்துல் வஹாப் தோற்றுவித்த வஹாபியிஸம் அரபு தேசியவாதமே தவிர வேறில்லை என முனைவர் தாதா ஹுஸைன் கருதுவதை இத்ரீஸ் சுட்டிக் காட்டுகிறார்.

தண்டனைகள் அளிப்பதில் பாரபட்சமும் இருக்கிறது. “ரிஸானாக்களுக்குத் தண்டனை கிடைக்கிறது. ஆனால் பணிப்பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்யும் எந்த சவூதி குடிமகனுக்கு இதுவரை தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது” என்று கேட்கிறார் ஈழத்தைச் சேர்ந்த கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இது பெரிய சோகத்தை உருவாக்கியிருக்கிறது என்றாலும், இது தமிழ் பேசும் மக்களிடையே உள்ள மத ரீதியிலான பிளவு கிட்டத்தட்ட நிரந்தரமாகிவிட்டதோ என்கிற அச்சத்தையும் காட்டியிருக்கிறது. ஒரு தமிழ் முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக, அதற்குத் துணைபோன ராஜபக்ஷே அரசுக்கு  எதிராக வடக்கிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள ஈழத்தமிழர்களிடம் பெரிய அளவுக்கு அதிர்வுகள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. “முள்ளிவாய்க்கால் சம்பவங்களின்போது லட்சக்கணக்கில் சனங்கள் இறந்தபோது முஸ்லிம்கள் மத்தியில் பெரிய அதிர்வுகள் ஏற்படவில்லை. இப்போது ஒரே ஒரு உயிருக்காக அவர்களிடமிருந்து நாங்கள் என்ன எதிர்பார்க்க முடியும்” என சோகத்துடன் கேட்கிறார் தமிழ் முஸ்லிம் எழத்தாளர் ஒருவர்.

அந்தப் பிளவு தமிழகத்திலும் எதிரொலிப்பதாகவே தெரிகிறது. ஒரு தமிழ்ப்பெண் மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த காலத்தில் நமது தமிழினத் தலைவர்களும் போராளிகளும் செய்தது என்ன என்கிற கேள்வியை எழப்பாமல் இருக்க முடியவில்லை. அவருக்காக தமிழ்நாட்டில் சொல்லிக் கொள்கிற அளவுக்கு தமிழ் அமைப்புகளும் போராடவில்லை, முஸ்லிம் அமைப்புகளும் போராடவில்லை என்பது அதிர்ச்சியூட்டுவதாகவே இருக்கிறது.

1995 டிசம்பர் 12ந் தேதி ஈழத்தமிழர்களுக்காக முதன்முதலில் ஒரு தமிழ்நாட்டுத் தமிழன் தீக்குளித்து இறந்தான். 24 வயதான அவனை தமிழ்ச்சமூகம் இன்றும் ஒரு தியாகியாகவே மதிக்கிறது. பெரம்பலூரைச் சேர்ந்த அவன் பெயர் அப்துல் ரவூஃப். சுவனத்தில் ஒருவேளை ரிஸானா, ரவூஃபை சந்திக்கக்கூடும். சந்தித்தால் ரிஸானா இப்படித்தான் கேட்பார்: “அண்ணா, எனக்காக ஏன் உங்கள் ஊரில் யாரும் போராடவில்லை? நாங்கள் தமிழர்கள் இல்லையா?”

 

தொடர்புடைய பிற பகுதிகள்

 

Right Livelihood Award 2014 Stockholm 12/ 2014 Photo: Wolfgang Schmidt

ஜனாதிபதி ராஜபக்ஷேதான் பிரதான பொறுப்பாளி

ரிஸானா விவகாரத்தில் செயல்பட்ட முக்கியமான மனித உரிமை செயல்பாட்டாளரான ஆசிய மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்த டபிள்யூ.ஜே.பசில் ஃபெர்னாண்டோ இலங்கையின் பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர், கவிஞர். நீத்துறை வல்லுநரும்கூட. ராஜபக்ஷே அரசின் அலட்சியமும் இலங்கை ஆட்சிமுறையின் குளறுபடிகளுமே ரிஸானாவின் மரணத்துக்கு பிதான காரணம் என்று இவர் வாதாடிவருகிறார். இது தொடர்பாக தமிழ் ஆழிக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலிலிருந்து:

த.ஆ. ரிஸானா விஷயத்தில் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு சவூதி அரசின் எதிர்வினை எப்படி இருந்தது? இந்த விடயம் இத்தோடு முடிந்துபோய்விடுகிறதா? சவூதியின் செயல்பாடுகள் இப்படியே தொடருமா?

பசில். உண்மையில் ரிஸானா விவகாரம் தொடர்பாக சவூதி அரேபிய அரசையும் குறிப்பாக அதன் மன்னரையும் ஆயிக்கணக்கான மக்கள் அணுகி, அவரை மன்னித்துவிடுமாறு கோரினார்கள். அநேகமாக சவூதி அரேபியாவின் மரண தண்டனை வழக்குகளில் உலகம் முழுக்க இந்த அளவுக்கு பிரபலமாக பேசப்பட்ட ஒன்று வேறு எதுவும் இல்லை. இலங்கையைப் பொறுத்தவரை இந்த விவகாரம்  தேசத்தின் கவனத்தையும் உலகின் கவனத்தையும் ஈர்த்த பிறகுதான் ஜனாதிபதி ராஜபக்ஷே சவூதி மன்னருக்கு தனது வேண்டுகோளை விடுத்தார். ஆனால் சவூதி அரசிடமிருந்து இது குறித்து எந்த அதிகாரபூர்வமான பதிலும் வந்ததற்கான அறிகுறியே இல்லை.

எங்களைப் பொறுத்தவரை, ரிஸானாவின் வழக்கு குறித்த அக்கறையுள்ளவர்களைப் பொறுத்தவரை, ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்டுவிட்டதால் இந்த வழக்கு முடிந்துவிட்டது என்று பொருளில்லை. இந்த வழக்கு முழுமையாக மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும். இறந்த குழந்தையின் பெற்றோர் இதில் எந்த அளவுக்கு குற்றமிழைத்திருக்கிறார்கள் என்பதும் ஆராயப்பட வேண்டும். சவூதி அரேபியாவின் சட்டவியல் நடைமுறைகளும் நன்கு விசாரிக்கப்பட வேண்டும்.

த.ஆ. இந்த விவகாரத்தில் இலங்கை அரசு தீவிரமாக செயல்படாமல் போனதுதான் பிரதான காரணம் என்பதை நீங்கள் தொடர்ந்து கூறிவருகிறீர்கள். இதை விளக்க முடியுமா?

பசில். மரண தண்டனையே அடிப்படை ஆதாரமற்றது. இருந்தபோதிலும் வேறு ஒரு வழியில் ரிஸானாவின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். சவூதி அரேபியாவில் உயிரீட்டுத் தொகை என்று கூறப்படும் பிராயச்சித்த அபராதத்தை அளிப்பதன் மூலம் அதைச் செய்திருக்க முடியும். இந்த விடயத்தில் இலங்கை அரசு முற்றிலும் தன் கடமையிலிருந்து தவறிவிட்டது.

சவூதியிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள்தான் இந்த விவகாரத்தில் மிக முக்கிய பங்கினை ஆற்றக்கூடிய நிலையில் இருந்தவர்கள். இது மிகவும் சிக்கலான ராஜதந்திர செயல்பாடாக இருந்தது. இதை இலங்கை அரசுதான் தன் முனையிலிருந்து தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் எடுத்த முயற்சிகளுக்குக்கூட அசாதாரணமான முறையில் தயக்கங்களுடனேயே எதிர்வினை புரிந்துவந்தது அந்த அரசு. முறையான விசாரணைக்கு மாற்றாக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உயிரீட்டுத் தொகை அளிப்பது என்ற கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லைதான். ஆனால் ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காக என்கிறபோது இலங்கை அரசு அதை அளித்திருக்க வேண்டும். இவ்விஷயம் குறித்து சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு  கொழும்பு எந்த வழிகாட்டலையும் செய்யவில்லை. அவர்களுக்கு எந்த நிதியாதாரத்தையும் அதற்காக ஒதுக்கவில்லை.

த.ஆ. இலங்கை அரசு அப்படி நடந்துகொண்டதற்குக் காரணங்கள் இருந்தனவா?

பசில். 1978 முதல் இங்கையில் நிலவி வருகின்ற ஜனாதிபதிக்கே சகல அதிகாரங்களும் என்கிற ஒரு நிர்வாக முறையின் படுதோல்விதான் ராஜதந்திர விவகாரத்தில் ஏற்பட்டிருக்கும் இந்தத் தோல்விக்குக் காரணம். இலங்கையின் இன்றைய அரசியல் சாசனப்படி அனைத்து செயல்பாடுகளுக்கும் ஜனாதிபதியின் நேரடி வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இது நிர்வாகத் துறையை பெரிய நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கிறது. இதுதான் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணம். இந்த முறை நீடிப்பதன் காரணமாக அதிகாரிகள், தங்களுக்கான செயல் முனைப்பை இழக்கிறார்கள்; காரண காரிய அறிவுடன் செயல்படாமல் போகிறார்கள். ஜனாதிபதிக்கு இந்த செயல்பாடு சந்தோஷத்தைத் தருமா அல்லது அவர் இதைக் கண்டு கோபப்படுவாரா என்று யாருக்கும் தெரியாது. இலங்கையை ஆள்வது ஒர் அரசு அல்ல, ஒரு தனி மனிதர்தான். இத்தகைய அரசியல் சாசன முறைமையின் பலிகடாதான் ரிஸானா.

த.ஆ. ரிஸானா மரண தண்டனைக்குப் பிறகு நீங்கள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் அவர்தான் பிரதான பொறுப்பாளி என நேருக்கு நேராக குற்றம்சாட்டியிருந்தீர்கள்.

பசில். அரசின் தலைவர் என்கிற முறையில் இலங்கையின் ராஜதந்திர செயல்பாடுகளை முறையாகவும் உரிய நேரத்திலும் ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்த துன்பியல் சம்பவம் நடந்திருக்காது. முதலில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். சம்பவம் நடந்து, அதுவும் மரண தண்டனை அளிக்கப்பட்ட பிறகே, இந்த விவகாரம் பற்றி இலங்கை அரசுக்குத் தெரியவந்தது. தங்கள் நாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்படுகிறார் எனும்போது கைதான அந்த நொடியிலேயே அவரது நாட்டின் தூதரகத்துக்கு அந்தத் தகவல் சென்று சேர்கிறது என்றால் அதுதான் முறையான தூதரக செயல்பாடாகும். இலங்கையின் ராஜதந்திர அமைப்புமுறை திறனின்றி இயங்குகிறது என்பதையே இது காட்டுகிறது. இது ஜனாதிபதியின் தோல்வி.

1078 அரசியல் சாசனத்தின் அடிப்படை இயல்பே இப்படித்தான் இருக்கிறது. ஆளும் தனிநபரிடம் எல்லா அதிகாரங்களும் குவிந்திருக்கின்றன. ஆனால் அவர் தனது அதிகாரங்களை அரசு அதிகாரிகள் மூலம் நிறைவேற்றுவதற்குரிய அமைப்பு முறை காணப்படவில்லை. அரசின் சின்னச் சின்ன விஷயங்களைக்கூட நாட்டின் அதிபர் நேரடியாகக் கையாளக்கூடிய ஒரு ஆட்சிமுறை எப்படி வேலை செய்யும்? ரிஸானாவுக்கு ஆதரவாக ஜனாதிபதி தன் நிர்வாகிகளை உரியவாறு செயல்பாட்டில் ஈடுபடுத்த முடியாமைக்கு இந்த முறைதான் காரணம்.

பிரச்சனை உலகின் கவனத்தைப் பெற்ற பிறகு, சங்கடனத்துக்குள்ளான ஜனாதிபதி அடிக்கடி சவூதி அரசுக்குத் தம் பிரதிநிதிகளை அனுப்பிவைத்துக் கொண்டிருந்தார். அவர்கள் வந்தார்கள். திரும்பினார்கள். நடைமுறையில் எந்த முடிவுகளுமே எட்டப்படவில்லை. தன்னைத் தவிர வேறு யார் மீதும் ஜனாதிபதி பழி போட்டுத் தப்பிக்க முடியாது.

ரிஸானா விவகாரத்தில் சவூதி அரேபியாவில் இருந்த எல்லா மேலை நாடுகளின் தூதரகங்களும் முன்முயற்சி எடுத்து ரிஸானாவை விடுதலை செய்ய வேண்டும் என களத்தில் இறங்கின. ஆனால் கொழும்பு எந்த முன்முயற்சியையும் எடுக்கவில்லை. ரிஸானாவுக்கு ஆதரவாக அனைவரையும் திரட்டுவதில் ஆர்வமும் அதனிடம் இல்லை.

த.ஆ. இதில் இந்தியா எப்படி நடந்துகொண்டது? இதைப் புதுதில்லி கண்டுகொண்டதாகவே தெரியவில்லையே.

பசில். நாங்கள் அறிந்தவரை இந்தியா இதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை; முன்முயற்சியும் எடுக்கவில்லை. மேற்கத்திய தூதரகங்களும் அரசுகளும் காட்டிய அக்கறையை நெருங்கிய நாடான இந்தியா காட்டியதாக எந்தத் தகவலும் இல்லை. ஆனால் இலங்கையே ஆர்வம் காட்டாதபோது இந்தியாவைக் குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

த.ஆ. இலங்கையின் சமூகமும் பிற கட்சிகளும் எப்படி எதிர்வினையாற்றின?

பதில். மக்கள் மிகச் சிறப்பாகவே எதிர்வினையாற்றினார்கள். தென்னிலங்கையில் பெண்கள் அமைப்புகள் உள்பட பல அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை எடுத்தன. அரசை நிர்பந்திப்பது, சவூதி மன்னருக்கு வேண்டுதல் விடுப்பது, ரிஸானா குடும்பத்தினரிடம் தொடர்பில் இருப்பது என அவை செயல்பட்டன. ரிஸானா பிறந்த கிழக்கிலங்கையில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. உண்மையில் இந்த விவகாரம் பிளவுண்டிருந்த மக்களை இணைத்தது. ஆனால் தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் போதுமான அளவுக்கு முன்முயற்சிகளை எடுக்கவில்லை. அவர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் சொல்லிக் கொள்ளும்படி எதையும் செய்யவில்லை.

ஆனால் மிகமிக மோசமான விடயம் என்னவென்றால், அடிக்கடி சில அமைச்சர்கள் கூறிவந்த பொய் வாக்குறுதிகள்தான். குறிப்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டுத்துறை அமைச்சர் இதில் குறிப்பிடத்தக்கவர். ரிஸானா விவகாரத்தில் முன்னேற்றம் இருக்கிறது என்றும் அவர் விரைவில் விடுதலை செய்யப்பட்டுவிடுவார் என்றும் பொய்யான சித்திரத்தை அவர் வரைந்துகொண்டிருந்தார். நாங்கள் மேற்கொண்டுவந்த செயல்பாடுகள் இலங்கை அரசு மேற்கொண்டுவரும் நுட்பமான ராஜதந்திர செயல்பாடுகளுக்குத் தீங்கு விளைவித்துவிடும் என்றுகூட அந்த அமைச்சர் கூறினார். எதையும் செய்யாமல் பொய்சத்தியங்களைப் பரப்புவதை மட்டுமே அவர் செய்துவந்தார் என்பதுதான் உண்மை.

 

ரிஸானா:

சவூதி அரசும் அதன் பழங்குடியின நீதிமுறையுமே முதல் குற்றவாளிகள்

ஏ.பி.எம்.இத்ரீஸ்

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர். பதிப்பாளர். இஸ்லாமிய நெறிமுறைகள் குறித்து விரிவாக விவாதித்து வருபவர்.

ரிஸானா விவகாரம் தொடர்பாக இலங்கை உட்பட உலக அளவில் பல்வேறு மனித உரிமைக் குழுக்களும் நிறுனங்களும் அவ்வப்போது குரல் எழுப்பியும் தம்மால் இயன்ற முயற்சிகளை முன்னெடுத்தும் வந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. ரிஸானா விவகாரத்தில் முதல் நிலை பொறுப்பாளியாக ஆக்கப்பட வேண்டிய தரப்பு சவூதி அரசும் பழங்குடித் தன்மை வாய்ந்த அதன் நீதிமுறையுமே என்பதில் எமக்கு எள்ளளவும் சந்தேகமும் இல்லை. ரிஸானா விவகாரம் முதலாவதும் அல்ல, இந்நிலை தொடருமானால் இறுதியானதாகவும் இருக்கமாட்டாது. இது ஏழாண்டுகள் இழுத்தடிக்கப்பட்டதால்தான் சவூதி பழங்குடி நீதியின் கோரமுகம் வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது. இதை நடந்து முடிந்துவிட்ட துன்பியில் முடிவாகக் கருதி விட்டுவிடாமல் தொடக்கமாகக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் ரிஸானா என்பது ஒரு குறியீடுதான். ஒடுக்கப்படும் தலித் மக்களுக்கான குறியீடு. ஒடுக்குபவர்கள் எந்த மதத்தின் பெயரால் அதை நியாயப்படுத்தினாலும் அது கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியதே. பணத்திமிர் பிடித்த அரைநிலப்பிரபுத்துவ சவூதியின் பழங்குடிச் சட்டங்களைக் கேள்விக்குட்படுத்துவது அவசியமாகும். ஒட்டுமொத்த சமூகச் சூழலையும் அதில் ஏற்படும் மாற்றங்களையும் கருத்திற் கொண்டுதான் இஸ்லாமிய நியாயவியல் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. 14 நூற்றாண்டுகளாக நீதியை நிலைநாட்டுவதற்கு பல்வேறு வழிமுறைகளையும் கையாண்ட அதன் புத்துயிர்ப்புச் செயல்பாடுகள் அத்தனையையும் குழிதோண்டிப் புதைக்கும் வகையிலேயே சவூதி நீதித்துறை அமைந்துள்ளது. எனவே ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் சேர்ந்துதான் இப்போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும். இதை நாம் மதசார்பாகக் குறுக்குவதன் மூலம் மேலும் மேலும் தலித் ஒடுக்கப்படும் நிலை வலுப்பெறவே ஆரம்பிக்கும்.

அடிமை முறையும் பழங்குடி மனோபாவமும் நிறைந்த நாடோடித்தன சமூக அசைவியக்கத்தின் மத்தியிலேயே நபிகள் தனது நீதிக் கருத்துக்களை முன்வைத்து ஒரு நல்ல சமூக அமைப்பை தன் வாழ்நாளிலேயே உருவாக்கிக் காட்டினார். அவரது அவ்வுழைப்புக்கு விசுவாசிகள் மட்டும் பங்களித்து உருக் கொடுக்கவில்லை. மாறாக புறச் சமயத்தவர்கள், நேச உறவு பூண்ட அக்கால யூத, கிறிஸ்தவ சமூகங்கள் எல்லோரும் நபிகளின் அறிவியலையும் போராட்டத்தையும் ஆதரித்து அணி திரண்டதை மறுக்க முடியாது. உலகளவில் வாழும் முஸ்லிம் சமூகங்கள் அனைத்தும் ஒரு படித்தானவை அல்ல. கடும்போக்காளர்களின் கையிலேயே அதிகாரம் இருக்கிறது. இதனால் மற்றமைகள் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன. விளிம்பு நிலை மக்களின் குரலைப் பலப்படுத்துவதே தற்காலத் தேவையாகும்.

பழங்குடிச் சமூகத்துக்கு மத்தியில் தோன்றிய இஸ்லாம், அச்சமூகத்தின் பழக்கவழக்கங்களையும் தற்காலிக ஏற்பாடாக அங்கீகரித்த நிலையிலேயே தீர்வுகளையும் பேசியது. நபிகளின் போதனைகள் இரண்டு பகுதிகளாகக் காணப்படுகின்றன. ஒன்று, தான் வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்வது. மற்றது, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியது. இவ்விரண்டும் இணைந்ததாகத்தான் நபிகளின் வாழ்வியல் அமைந்துள்ளது. ஆனால் அல்குர்ஆனின் அற மதிப்பீடுகள் மானுட சமத்துவத்தையும் ஒற்றுமையையும் மிகவும் வலியுறுத்தி கருணை, தயாளம், அன்பு போன்ற நிலையான அறங்களையே போதிக்கின்றது. தண்டனைகள் என்பவை இஸ்லாத்தில் தற்காலிக ஏற்பாடுகளே. அவை என்றென்றைக்குமான அறங்கள் அல்ல.

கொடுந்தண்டனையும் அடிமை முறையும் நிலவிய ஒரு சமூகத்தில் உடனடியாக அனைத்திலும் பாரிய மாற்றங்களைச் செய்ய முடியாவிட்டாலும் தண்டனை என்பவற்றில் மன்னிப்பின் பங்கை அதிகப்படுத்தியதன் மூலமும் தண்டனைக் குறைப்பை வலியுறுத்தியதன் மூலம் எதிர்காலத்தில் இத்தகைய விடயங்களில் முஸ்லிம் சமூகம் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை இது சுட்டிக் காட்டுகின்றது. அந்த நெறிமுறையின் தர்க்கபூர்வமான நீட்சியாகச் சிந்திப்பதே நமது இன்றைய தேவையாகும்.

 

சவூதியின் நவீன நாட்டாமைகளும் அடிமைகளும்

யோ.திருவள்ளுவர்
பெல்ஜியத்திலிருந்து இயங்கும் யோ.திருவள்ளுவர் வீட்டுவேலை
பணியாளர்கள் குறித்து உலகளாவிய ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர்.
எழுத்தாளர்.

ஷரீஆவில் மாற்றம் கோருகிறது இன்றைய இஸ்லாமிய சமூகம்

அரேபிய செல்வந்தரின் வீட்டில் வேலை செய்யச் சென்ற ரிஸானா நஃபீக்கை சவூதி அரேபிய நீதிமன்றம் கொலை செய்தது அநீதியானது. இளம் குற்றவாளிகளுக்கு கொடூரமான தண்டனைகளிலிருந்து விலக்களிக்கிற சர்வதேச சிறார் உரிமைச் சட்டத்தை மீறியுள்ளது சவூதி அரசு. ரிஸானா நான்கு மாத அரேபியக் குழந்தையைக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு. பதினேழு வயது ரிஸானாவுக்கு குழந்தை வளர்ப்பு அனுபவமில்லை. குழந்தையின் இறப்புக்கான காரணங்களை பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வுகளில் கண்டறிய முடியும். ஆனால் தவாத்மி காவல்துறையினர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கும் தடயவில் சோதனைக்கும் உட்படுத்தவே இல்லை. புலன் விசாரணை மற்றும் வழக்கு விசாரணையில் ரிஸானாவுக்கு மொழிபெயர்ப்பு வசதியும் செய்யப்படவில்லை. வழக்கறிஞர் ஏற்பாடு செய்யவில்லை. வழக்கு ஆவணங்களை வழங்கவில்லை. நவீன அறிவியலின் புலனாய்வு, தடவியல், மருத்துவ சோதனைகள் எனவும் இல்லை. இந்தியக் கிராமங்களின் நாட்டாண்மை பஞ்சாயத்து முதியவர்களின் அடாவடித்தனம் போன்ற தீர்ப்பு இது.

சவூதி அரேபியாவில் மட்டும் 15 லட்சம் அயல்நாட்டுப் பெண்கள் வீட்டுவேலை செய்கிறார்கள். அதில் இலங்கைப் பெண்கள் மட்டும் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர். அயல்நாட்டுத் தொழிலாளர்களின் சேவையில்லாமல் போனால் சவூதி செல்வந்தர்களின் வீடுகள் வழக்கம்போல சொகுசாக இயங்க முடியாது. ஆனாலும் சவூதிக்கு வீட்டுவேலைக்குச் செல்கிற பெண்கள் அரேபிய செல்வந்தர்களின் வீடுகளில் அனுபவிக்கிற கொடுமைகளும் துயரங்களும் வேதனைகளும் ஏராளம். முதலில் அவர்களது கடவுச்சீட்டு உட்பட அனைத்து ஆவணங்களும் பறிக்கப்படுகின்றன. வீடுகளுக்கு உள்ளேயே அவர்கள் முடக்கப்படுகிறார்கள். வெளியாட்களோடு தொடர்புகொள்ளவோ வெளியே செல்லவோ அனுமதிப்பதில்லை. உறங்குகிற சில மணிநேரங்கள் தவிர ஓய்வு என்பதே இல்லை. எந்நேரமும் ஓய்வில்லாத வேலை வேலை. முறையாக ஊதியம் கொடுப்பதில்லை. அவர்கள் நவீன அடிமைகள். இன்னும் 50க்கும் மேற்பட்ட வீட்டுவேலை தொழிலாளர்கள் மரண தண்சனையை எதிர்நோக்கி சவூதி அரேபிய சிறைகளில் வாடுகிறார்கள். அவர்களில் எத்தியோப்பிய, இந்திய, பிலிப்பைன்ஸ், இந்தோனேசிய பெண்களும் உண்டு. சவூதி அரேபியாவின் நீதிபரிபாலனமும் விசாரணை அமைப்புகளும் தொடர்ந்து மனித உரிமை அமைப்புகளின் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. கிராம நீதிமன்றங்களும் கோத்திரத் தலைவர்களின் கூட்டங்களும் சொல்பவை நீதியாகிறது. கை, கால்களை வெட்டுதல், தலை வெட்டுதல் என்று நிகழ்கால சமூகத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் ஷரீஆவின் பெயரால் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஷரீஆ சட்டம் பாதிக்கப்பட்டவருக்குத் தண்டனையைக் கோரவும் மன்னிக்கவும் அதிகாரம் வழங்குகிறது அது எவ்வகையிலும் நீதி வழங்க உதவாது. இத்தைய சட்டங்களால்தான் ரிஸானாக்கள் பலியாடாக்கப்படுகிறார்கள்.

நபிகள் வாழ்ந்த காலத்தில் அன்றைய அரேபிய சூழலில் உருவாக்கப்பட்ட சட்டத்தை இன்றைய காலத்திற்கு அப்படியே பொருத்துவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. மெக்காவிலிருந்து 70 தோழர்களோடு மெதீனாவுக்குச் சென்று அரசை உருவாக்கினார் நபிகள் நாயகம். அங்கே அவர் பழங்குடி மக்களை வழிமுறைப்படுத்த ஷரீஆவை நெறிப்படுத்தினார். 1440 ஆண்டுகளுக்கு முந்தைய அரேபிய சமூகத்தின் பிரச்சனைகளுக்கும் சவால்களுக்கும் ஷரீஆ பொருந்தியிருக்கலாம். அதனால்தான் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப ஷரீஆவில் மாற்றம் செய்வது அவசியமென்கிற குரல் இஸ்லாமிய மதத்திற்குள் எழுப்பப்படுகிறது. ஆனால் நீதிபரிபாலனையிலும் தண்டனை மற்றும் கண்காணிப்பிலும் ஈடுபடுகிற ஆண்மைவாத அடிப்படைவாதிகள் இக்குரல்களை இஸ்லாத்துக்கு எதிரானதாக திசைதிருப்புகிறார்கள். ஆனால் மனித உரிமைக் கோட்பாடுகளை உள்வாங்குகிற சமூகங்களும் சட்டங்களுமே நவீன உலகில் வளர்ச்சிப் பாதையில் மற்ற சமூகங்களோடு இணையாகப் பயணிக்க முடியும். இனியும் ரிஸானாக்களின் உயிர் வாழும் உரிமையைப் பழமைவாதமும் சட்டங்களும் கொலை செய்ய அனுமதிக்கக்கூடாது.

 

தண்டனை அளிக்க சவூதிக்கு தகுதி உண்டா?

எச்.பீர்முஹம்மது
இஸ்லாமிய உலகம் பற்றி நூல்களையும் கட்டுரைகளையும் எழுதிவரும்
இக்கட்டுரையாளர் அரபுலக அனுபவம் மிக்கவர்.

வீட்டுவேலைப் பணியாளர்களைக் கொடுமைப்படுத்துவதில் முதலிடம் சவூதிக்குத்தான்

என் பத்தாண்டு கால வளைகுடா அனுபவத்தில் நான் அரபு நாடுகளுக்கு வீட்டுவேலைக்காகச் செல்லும் பல பெண்களைப் பார்த்திருக்கிறேன். இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் ஆறாயிரம் சம்பளத்திற்காக பல கனவுகளைச் சுமந்து செல்பவர்கள் இவர்கள். தன் வீட்டில் குழந்தை பராமரிப்பிற்குக்கூட வெளிநாட்டினரைச் சார்ந்து வாழும் வாழ்க்கை அரபுநாட்டினுடையது. இதில் நடுத்தர வர்க்க அரபிகளும் அடக்கம். இவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இது மாறிவிட்டது. ஐம்பதுகளுக்குப் பிறகான அரபுநாடுகள் குறிப்பாக வளைகுடா நாடுகள் வெளிநாட்டினரை வேலைக்கமர்த்தும் முறைக்குள் நுழைந்தன. இதன் ஒரு பகுதியாக வீட்டுவேலையும் உள்நுழைந்தது. ஆரம்ப காலங்களில் ஓரளவு நல்ல வேலைச்சூழல் நிலவியபோதும் பிந்தைய காலங்களில் அது மோசமான நிலைமையைத் தழுவிக் கொண்டது. குறைந்த சம்பளம், தொடர் சித்திரவதை, சம்பளத்தைக் கொடுக்காமல் இழுத்தடிப்பு, வீட்டில் இருக்கும் ஆண்களின் பாலியல் தொந்தரவு போன்றவைகளால் இந்தப் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள் (மசாஜ் செய்யும்போது கொஞ்சம் எண்ணெய் குறைந்தால் அதற்காகவும் மோசமாகத் திட்டுவார்கள்). கைநிறைய பணம் என்பது மனம் நிரம்பிய வலியாகவும் மாறிப்போனது. பெருங்கனவு ஒன்றை சிதைத்த கொடுமைக்கு அவர்கள் ஆளானார்கள். புல்ளிவிவரப்படி சவூதி அரேபியாதான் இந்த வீட்டுவேலைக் கொடுமைகளில் முதலிடம் வகிக்கிறது. இது குறித்து 2004ல் நடந்த அரபு நாடுகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் தோற்றப்பாடுகள் 1400 ஆண்டுகளுக்கு முந்தைய அரபு பழங்குடி வாழ்க்கை முறைமையின் அடிப்படையானது. அன்றைய காலகட்டத்தில் அடிப்படையிலான நீதிபரிபாலன முறை இல்லை. அதிகாரபூர்வ நீதிமன்றங்கள் என்ற வடிவங்கள் இல்லை. சிறைச்சாலை என்ற அரசதிகார வடிவம் இல்லை. வழக்கு (Case) என்ற சொல்கூட உருவாகவில்லை. பழங்குடி இனத்தவரின் முன் கொண்டுவரப்படும் குற்ற நடவடிக்கைகள் எல்லாம் உடனுக்குடன் தீர்ப்பளிக்கப்பட்டன. தமிழ் சமூகத்தின் நாட்டாமை முறையோடு இயைந்த ஓர் அமைப்புமுறை அது. அன்றைய காலகட்டத்தில் நிலவியிருந்த சட்டங்கள்கூட முந்தைய செமிட்டிக் நாகரிக சமூக அமைப்பின் அல்லது பாபிலோனிய நாகரிகத்தின் அடிப்படையிலானதுதான். அன்றைய கால சமூக இயங்கியலின் அடிப்படையே இம்மாதிரியான தண்டனை முறையில்தான் இருந்தது. அது அவர்களின் வாழ்க்கைமுறையியலுக்கு உகந்ததாகக்கூட இருந்திருக்கலாம். மனித உரிமை என்ற சொல்லாடல் உருவாகியிருக்காத, அறியப்படாத காலம் அது (இந்திய நாகரிகங்களின் வரலாற்றில்கூட இம்மாதிரியான தகவல்கள் நிரம்பியிருக்கின்றன. கழுவேற்றல், குதிரையின் காலில் கட்டி இழுத்தல், எதிர்திசையில் மனித உடம்பைக் கட்டி உடலை இரண்டாகப் பிளக்க வைத்தல் போன்றவை). இன்று காலம் பல பரிணாமங்களை எடுத்திருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் என்றைக்குமானதாக சவூதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்வது உலக அளவில் நாகரிகங்களின் மோதலையும் மனித உரிமை சார்ந்த முரண்களையுமே அதிகம் தோற்றுவிக்கும். சவூதியைத் தவிர மற்ற இஸ்லாமிய நாடுகள் அதன் குற்றவியல் சட்டங்களை மைய நீரோட்ட நாடுகளின் சட்டங்களை ஒத்ததாக மாற்றிவிட்டன.

சவூதி அரேபியாவைக் குறித்து பரவலாக அறியப்படாத ஒன்று என்பது அது மேற்கத்தியவர்கள் விடயத்தில் தன் குற்றமும் தண்டனையும் குறித்த முழு அளவுகோல்களையும் பொருத்துவதில்லை என்பதுதான். ரிஸானா தெற்காசியாவைச் சார்ந்தவர் என்பதால் இது எளிதில் சாத்தியமாகியிருக்கிறது. மேலும் இஸ்லாம் என்ற சட்டகத்திற்குள் வைக்கப்படும் அதே வாதம் சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை செல்லத்தக்க ஒன்றல்ல. காரணம் இஸ்லாமிய அடிப்படையின்படி பரம்பரை மன்னர் ஆட்சி முறை என்பதே கூடாத ஒன்று. அது இஸ்லாத்துக்கு விரோதமான ஒன்று. இந்த அளவுகோலின்படி பார்த்தால் அதன் குற்றவியல் சட்டங்களும் அதன் அடிப்படையிலான தீர்ப்புகளும்கூட செல்லுபடியாகாதவை.

(கட்டுரையாளர்கள் ஏ.பி.எம்.இத்ரீஸ், யோ.திருவள்ளுவர், எச்.பீர்முகமது ஆகியோருக்கு நன்றி).