நீலத் தமிழ்க்கொடி பறப்பது சாத்தியமா?

தமிழ்த்தேசியத்துக்கும் தலித் அரசியலுக்கும் இடையிலான உறவு அல்லது முரண் குறித்து பேசுவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் அண்மையில் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அனிதாவின் உயிர்த்துறப்பு, அவருக்காக நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வு ஒன்றில் இயக்குநர் பா.ரஞ்சித் கூறிய சில வாசகங்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சையும் விவாதங்களும், செப்டம்பர் 21இல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மாநில சுயாட்சி மாநாடு போன்றவை அவற்றில் சில. ஆனால் இந்தக் கட்டுரை இந்த நிகழ்வுகளைப் பற்றிய அலசல் அல்ல. இவற்றுக்குப் பின்னால் உள்ள அரசியல் போக்குகள் குறித்த ஒரு பார்வை.

தமிழ்த்தேசியத்தையும் தலித் அரசியலையும், அதிலும் குறிப்பாக, தமிழ் அடையாளத்தையும் தலித் அடையாளத்தையும், ஒன்றுக்கொன்று முரணாகவோ எதிராகவோ நிறுத்தும் போக்கு அதிகரித்துவருகிறது. இந்த இரு அடையாளங்களுக்கும் இடையிலான முரண்பாடு முன்பு முன்னுரிமை வித்தியாசம் என்று புரிந்துகொள்ளப்பட்டிருந்தது. இப்போது இது அடிப்படை முரண்பாடு என்று கருதுமளவுக்கு நிலைமை சீரழிந்திருக்கிறது. இளம் தலைமுறையினரிடம் இந்த மோசடிக் கருத்து மிகவேகமாக பரவிவருகிறது.

நவீன அரசியல் போக்குகள் என்கிற அளவில், ஒடுக்கப்பட்டோர் விடுதலை அரசியலும் தமிழ் உரிமை அரசியலும் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்துக்கும் மேற்பட்ட வரலாற்றை உடையவை. திராவிட, இடதுசாரி அரசியல் வெளிகளும் இவற்றின் இணைப்போக்குகளாகவே இருந்துவருகின்றன. இந்த நான்கும் ஒன்றையொன்று ஒட்டியும் வெட்டியுமே தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளன. ஒன்றின் பிறப்பிலும் வளர்ச்சியிலும் மற்றதைக் காணமுடியும் என்கிற உண்மையும் இதில் ஒளிந்திருக்கிறது. ஆனால் அண்மைக் காலத்தில் இந்த நான்கு அரசியல் களங்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை, முரண்பட்டவை, ஒன்றின் இருப்புக்கு மற்றொன்று குந்தகமானது என்பது போன்ற குரல்கள் அதிகம் கேட்கின்றன. அத்தகைய குரல்கள் இவ்வரசியல் களங்களில் இயங்கும் அமைப்புகளின் தலைமைகளிலிருந்தும் அறிவுஜீவிகளிடமிருந்தும் தொண்டர்களிடமிருந்தும் என மூன்று விதமான வெளிப்பாடுகளாக நம்மை வந்தடைகின்றன. (தமிழ்த்தேசியத்துக்கும் தலித் அரசியலுக்கும் இடையில் உருவாக்கப்படுகிற முரண்கள் பற்றி மட்டுமே இங்கே நாம் விவாதிக்க இருக்கிறோம்).

தமிழ்த்தேசியம் மட்டுமல்ல எந்த ஒரு தேசிய அரசியலும் ஒற்றைப் பரிமாணம் உடையதாக இருக்கமுடியாது. அவ்வாறு இருப்பது என்பதே தேசியம் என்கிற அரசியல் சாத்தியப்பாட்டுக்கு ஒவ்வாத ஒன்று. இந்திய தேசிய அரசியலோ அல்லது பாலஸ்தீன தேசிய அரசியலோ அப்படி இருந்ததுண்டா? ஆனால் ஒற்றைப்பரிமாணவாதிகள் அதிகம் இருப்பதும் தேசிய அரசியல் களங்களில்தான். தேசியக் களிமண்ணை அவரவர் உருட்டி அவரவர் உருப்படிகளைச் செய்கிறார்கள். பார்வையற்ற நால்வர் அறியமுற்பட்ட அந்தப் புகழ்பெற்ற யானையும்கூட தேசிய யானைதான்.

தமிழ்த்தேசிய அரங்கைப் பொறுத்தவரை, அதில் பல அரசியல் மரபுகள் தொழிற்படுகின்றன. தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கம், ஒடுக்கப்பட்டோர் இயக்கம் என்று நான்குவிதமான தமிழ்த்தேசிய மரபுகளும் போக்குகளும் அதில் மயங்கியுள்ளன. இவற்றோடு இன அடையாளத்தை மட்டுமே மையம்கொள்கிற (மற்றவற்றை ஒதுக்குகிற) ஒரு புது மரபு முப்பதாண்டுகளுக்கு முன்பு தோன்றி (பெங்களூர் குணாவின் தாக்கத்தால்) கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த்தேசிய சக்திகளிடம் எண்ணிக்கை அளவில் பெரிய சக்தியாக உருப்பெற்றிருக்கிறது. பின்பு தமிழர் என்கிற இன அடையாளத்துக்கான அடிப்படையானது சாதி மட்டுமே என்கிற முன்னிபந்தனையுடனும் தமிழ்ச்சாதிகள் சாதிகளாக இணைவதே எல்லாவற்றுக்கும் தீர்வு என்கிற வியூகத்துடனும் உருவான சாதிமையவாதம், தமிழ்த்தேசிய அரசியலை பூதாகரமாக கவ்விப்பிடித்தது. (இதை புறக்கணிக்கக்கூடிய அல்லது முற்றிலும் நிராகரித்துவிடக்கூடிய ஒரு நிகழ்ப்பாடாக நான் நினைக்கவில்லை என்பது வேறு ஒரு விவாதத்துக்கான களமாகும்).

இந்த புதிய சாதிமையவாதிகளின் சப்தம் காதைப் பிளந்தபோது, கடந்தகால தமிழ் அரசியல் பற்றி எந்த அறிமுகமும் புரிதலும் அற்ற பிற அரசியல் செயல்பாட்டாளர்களும்கூட தமிழ்த்தேசியம் என்பதே சாதி அரசியல்தான் என்கிற தவறான புரிதலுக்கு வந்துசேர்ந்தார்கள். அனுபவமற்ற களச் செயல்பாட்டாளர்களிடம் இத்தகைய புரிதல் வந்திருந்தால் அதில் ஆச்சரியப்பட்டிருக்கவேண்டியதில்லை. ஆனால் அது அறிவுஜீவிகளிடமும் அனுபவமுள்ள அரசியல் செயல்பாட்டாளர்களிடமும்கூட வந்திருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.

அதே சமயம், ஆட்சியிலும் அனைத்து வெளிகளிலும் இந்துத்துவ – ஆதிக்க சாதிவாதிகள் பலம் பெற்றுள்ள இந்த நிலையில், ஓர் ஒற்றுமைப் போக்கைக் குலைப்பதற்கு எல்லாத் தரப்புகளிலும் சில சக்திகள் முயல்கின்றன என்பதையும் நாம் குறிப்பிடவேண்டும். எல்லாப் பழிகளையும் ஒரு தரப்பின்மீதே போட்டுவிடக்கூடிய அபாயம் தவிர்க்கப்படவேண்டும்.

நான்கு அரசியல் தளங்கள் ஒன்றோடு ஒன்று இடைவெட்டி உறவாடும் தமிழ்வெளியில், அறியப்பட்ட தலித் நலன்களுக்கும் தமிழ்த்தேசிய நலன்களுக்கும் இடையில் தோன்றியுள்ள முரண்கள் எப்படிப்பட்டவை என்பதை அறிய அவற்றுக்கிடையில் முன்பிருந்த உறவுகளையும் அறியவேண்டும். நேரடியாக ஒரு கேள்விக்கு வருவோம்: நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில தமிழ்த்தேசிய சக்திகள் திராவிடம், கம்யூனிசம், தலித்தியம் ஆகிய மூன்றையும் தம் மூன்று பிரதான எதிரிகளாக வரையறுத்து செயல்படுகின்றனவே, ஆனால் தமிழ்த்தேசிய அரசியல் என்பது காலம்காலமாக இப்படி இருந்ததுண்டா?

இல்லை. தேசிய அரசியல் என்பது பல்வேறு சக்திகளின் நலன்களை உள்ளடக்கியது என்கிற பொதுப்பார்வையோடு, நமது வரலாற்றையும் இணைத்தால் வெகுசுலபமாக இதைப் புரிந்துகொள்ள இயலும். இங்கே தலித் பார்வையுடனான தமிழ்த்தேசியம், இடதுசாரி பார்வையுடனான தமிழ்த்தேசியம், பெரியாரிய பார்வையுடனான தமிழ்த்தேசியம் ஆகியவையும் உண்டு நண்பர்களே.

தமிழ்த்தேசியத்துக்கும் தலித் சமூகங்களுக்கும் இடையிலான பிணைப்பு என்பது தமிழுக்கும் தமிழ்த்தேசியத்துக்கும் இடையிலான அதே பிணைப்புதான். குறிப்பாக, தொல்தமிழர், பழந்தமிழர் என்று அழைக்கப்படும் பறையர் சமூகம்தான் அவைதிக மரபை பூர்வத் தமிழ் மரபாக முன்வைத்து, தமிழ்நாட்டின் முதல் தமிழ் அரசியலைத் தொடங்கிவைத்தது. இணைப்போக்கில் உருவான வேளாளத் தமிழ் மரபு பின்பு பெருஞ்செல்வாக்கு பெற்று தமிழ் அரசியலுக்கு உருக்கொடுத்திருந்தாலும், ஆரிய வைதிக மரபுக்கு எதிரான தனித் தமிழன் சேரியில்தான் பிறந்தான். திராவிட இயக்க அரசியல் தோன்றுவதற்கு முன்பு அதற்கான விதைகளைத் தூவி வைத்தவர் அயோத்திதாசர் என்பதை இன்று பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் அவர் தமிழ்த்தேசியத்தின் தோற்றுவாய்களில் ஒருவராக இருந்தார் என்பதை தலித் களத்துக்கு வெளியே பலர் காண்பதில்லை. அதுமட்டுமின்றி, தொண்ணூறுகளுக்குப் பிறகு அவர் மீண்டெழுந்தபிறகு, தமிழ்நாட்டின் புதிய அரசியல்சக்தியாக உருவான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரே நேரத்தில் தலித் கட்சியாகவும் தமிழ்த்தேசிய கட்சியாகவும் உருப்பெற்றதை நாம் பார்க்கவேண்டும். (அதன் தமிழ்த்தேசிய வியூகம் வெற்றிபெற்றதா என்ற கேள்வி முக்கியமானதுதான். ஆனால் அதற்கான பதிலும் வேறானது).

அம்பேத்கர் நூற்றாண்டும் மண்டல் அரசியலும் இந்தியா முழக்க தலித் அரசியலை முன்னுக்குக் கொண்டுவந்து சேர்த்த காலத்தில், தமிழ்நாட்டில் அது புதிய அரசியலாக இல்லாமல், பழைய அரசியலின் மறுமல்ர்ச்சியாகவே இருந்தது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உருவான பெரும்பாலான தலித் அமைப்புகள் போர்க்குணமிக்க இயக்கங்களாக இருந்தன. மார்க்சிய லெனினிய பின்புலத்திலிருந்து வந்திருந்த இடதுசாரியினரால் வழிநடத்தப்பட்ட இயக்கங்களும் அவற்றில் சில. சோவியத் முகாமின் வீழ்ச்சி, நக்சல்பாரி இயக்கத்தின் முடிவு, ஈழ விடுதலை இயக்கத்தின் எழுச்சி ஆகிய காரணிகளும் தலித் அல்லது சாதி ஒழிப்பு அரசியல்மீது தாக்கம் செலுத்தின. தமிழ் அறிவுப்பரப்பில் தலித் அரசியல், தலித் கலாச்சாரம், தலித் இலக்கியம் உருவாக்கிய அதிர்வலைகளும் விவாதங்களும் திராவிட இயக்கத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை எழுப்பின. அந்த விவாதங்களினூடாக கேள்விக்குள்ளாக்கப்பட்ட பலவற்றில் தமிழ் அடையாளமும் இருந்தது (அப்போது தமிழும் திராவிடமும் இருவேறானவை என்கிற முரண் பெரிதாக்கப்படவில்லை). ஆதித் தமிழர்களுக்கும் சாதித் தமிழர்களுக்கும் இடையிலான முரண்பாட்டை பூசிமெழுகமுடியாது என்கிற கேள்வியை சிறுத்தைகள் முன்வைத்தன. ஆனால் இருவரும் தமிழர்கள்தான் என்கிற புரிதலை யாரும் கேள்விக்குள்ளாக்கவில்லை.

இந்த பின்னணியில்தான் தொல்.திருமாவளவன், மார்க்சிய லெனினிய அரசியல்களத்திலிருந்து வந்த மற்றுமொரு ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான அரங்க குணசேகரன், பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தமிழின அரசியல் மரபின் தொடர்ச்சியாக செயல்பட்ட பொழிலன் உள்ளிட்டோர் ஒரே காலத்தில் புதிய தலித் அரசியலை செதுக்குபவர்களாகவும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு புது இலக்கணம் கொடுப்பவர்களாகவும் இருந்தார்கள். புலவர்களின் அறைகளில் தூங்கிக்கொண்டிருந்த தமிழ்த்தேசியத்தை இவர்கள் விடுவித்தார்கள். தமிழ்த்தேசியத்துக்கு தலித் தலைமை அளிப்பதற்கான இவர்களது முயற்சி மரபுவழி தமிழ்த்தேசியர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றாலும், நீண்டகாலமாக தமிழ்வெளியை பீடித்திருந்த வேளாள பிடிப்பிலிருந்து தமிழ்த்தேசியம் விடுபெற்றது. இன்றைய நவீனத் தமிழ்த்தேசியத்துக்கான வித்துகள் இங்கிருந்துதான் தொடங்குகிறது என்பது பல தம்பிகளுக்கு இப்போது தெரியவே தெரியாது.

மற்றொரு பக்கம், எண்பதுகளில், நக்சல்பாரி இயக்கத்தில் தேசிய பிரச்சினை குறித்த விவாதங்களினூடாக, அனைத்திந்தியப் புரட்சி சாத்தியமில்லை என்று முடிவெடுத்து வெளியேறியிருந்த தமிழரசன், கலியபெருமாள் உள்ளிட்ட மார்க்சிய லெனினியவாதிகளும் இதே சாதிச் சிக்கலை எதிர்கொண்டார்கள். பழைய தென்னாற்காடு, தஞ்சை, திருச்சிப் பகுதிகளில் செயல்பட்ட இவர்கள், வன்னியர்களுக்கும் பறையர்களுக்கும் இடையிலான முரண்கள் கூர்மையடைந்துவருவதை எதிர்கொண்டார்கள். அப்போது வன்னியர் சங்கத்தின் இட ஒதுக்கீடு போராட்டம் அரும்பிவந்த தருணமாகும். அப்போதுதான் தமிழரசன் தனது கோட்பாட்டு மேதைமையுடனும் அனுபவத்துடனும் பொருத்தி, தாங்கள் எதிர்கொண்ட சிக்கலுக்கு விடையளிக்கத் தொடங்கினார். வர்க்கப் போராட்டம், தேசிய இனப் போராட்டம், சாதியப் போராட்டம் என்கிற மூன்று களங்களும் ஒன்றுக்கொன்று எதிரான களங்கள் அல்ல, சம காலத்தில் போராடவேண்டிய இணை களங்கள் என்கிற முடிவுக்கு அவர் அப்போது வந்திருந்தார். எனவே, பாட்டாளி வர்க்க ஒற்றுமையைக் காரணம்காட்டி தேசிய இனங்களின் விடுதலையைப் புறக்கணிக்கிற வறட்டுவாதத்தை எதிர்த்து அனைத்திந்திய கட்சியில் போராடிக்கொண்டிருந்த அதே வேளையில், இன ஒற்றுமையைக் காரணம்காட்டி சாதியொழிப்பு அரசியலை புறக்கணிக்கும் வறட்டுவாதத்தை எதிர்த்து தமிழ்த்தேசியவாதிகளிடத்தில் போராடிக்கொண்டிருந்தார்.

அயோத்திதாசர்-அம்பேத்கர் மரபு, இடதுசாரி-தமிழரசன் மரபு ஆகியவற்றுக்கு அப்பால் தனித்தமிழ் இயக்க மரபில் வந்த தமிழ்த்தேசியம் தலித் அடையாளத்துடன் ஒன்றியும் முரணியும் வளர்ந்திருக்கிறது என்பதையும் பார்க்கமுடியும். தனித்தமிழ் இயக்கம் வேளாள அரசியல் என்று எளிமைப்படுத்திப் பார்த்தவர்கள்கூட, அந்த மரபின் தாக்கம் பெற்றிருந்தவர்கள் மத்தியில் பிற்காலத்தில் எப்படி தேவநேயப் பாவாணரும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும் ஏற்றம் பெற்றார்கள் என்பதை சரியாக விளக்கமுடியாமல் போனது. பாவாணரும் பாவலரேறுவும் இல்லாத ஒரு தமிழின இயக்கத்தை கற்பனைகூட செய்யமுடியாது. ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பின்புலத்திலிருந்து வந்த இவ்விரு தமிழறிஞர்களும்தான் கிட்டத்தட்ட ஒரு தலைமுறை காலத்துக்கு தமிழ்த்தேசியச் சுடரை அழியாமல் காத்தவர்கள். இதில் குறிப்பாக பெருஞ்சித்திரனாரின் பணியை இன்றைய தமிழ்த்தேசியவாதிகள் பலர் அறியமாட்டார்கள். தமிழ்த்தேசியம், பெரியாரியம், ஒடுக்கப்பட்டோர் விடுதலை, இடதுசாரி அரசியல் ஆகிய நான்கு அரசியல் களங்களிலும் உள்ள பொதுத்தன்மைகளை தனக்கேயுரிய பாணியில் ஒன்றிணைத்த பெரும்பணியைச் செய்தவர் அவர். எனவே தொண்ணூறுகளில் தமிழ்த்தேசிய அரங்கில் மாட்டப்பட்டிருந்த ஒரு பெரிய கித்தானில், மார்க்ஸ், லெனின், மாவோ, பெரியார், அம்பேத்கர், அயோத்திதாசர், சாரு மஜும்தார், பிரபாகரன், பாவாணர் என எல்லோரும் சித்திரமாகியிருந்தார்கள். இந்த ஜனநாயகச் சித்திரத்தைத்தான் 2009க்கு பின் வந்த குறுகிய நோக்கிலான ஒரு சில தமிழ்த்தேசியவாதிகள் சிதைக்கமுயன்றார்கள். இந்த சிதைவுதான் தலித் – எதிர்- தமிழ் என்கிற முரணை முன்னுக்கு கொண்டுவந்தது.

இரண்டு அடிப்படையான கோட்பாடுகள் இங்கே மோதுகின்றன. தேசமென உருவாகும் ஒரு பரப்பில் பல சமூக சக்திகள் தங்களுடைய தனிப்பட்ட நலன்களையே தேச நலன்கள் என்று முன்வைக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் தேசங்கள் அல்லது தேசியங்கள் அப்படியே – அவர்களின் விருப்பங்களின்படியே – உருவாக்கப்பட்டுவிடுவதில்லை. தேசம் என்கிற அரசியல் பரப்பில் ஆகப் பெரும்பான்மையோரின் கூட்டுத்துவத்தைச் சாதித்தவர்களே வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். குறுகிய தேசியவாதங்கள் பெரும்பாலும் நடுவழியில் இற்றுப்போயிருக்கின்றன. முன்னதற்கு பத்து உதாரணங்களையும் பின்னதற்கு நூறு உதாரணங்களையும் சொல்லமுடியும். தமிழ்நாட்டிலும் அதுதான் நடக்கிறது. அது குறுகிய தேசியவாதிகளின் கையில் மாட்டிக்கொண்டிருப்பதால் இன்று தமிழ்த்தேசியம் அதற்குரிய பிரதான அரசியல் இடத்தைப் பெறமுடியாமல் தவிக்கிறது.

2009 இனப்படுகொலைக்குப்பின், திராவிட இயக்கத்தின் மீதான உண்மையான குற்றச்சாட்டுகளையும் கற்பிதமான குற்றச்சாட்டுகளையும் கலந்துவைத்த ஒரு சில சக்திகள், பிறகு மெல்ல மெல்ல அனைத்து முற்போக்கு அரசியல் இயக்கங்களையும் தமிழர்க்கு எதிரானது என்று வரையறுத்துவந்தார்கள். இச்சந்தர்ப்பத்தில் தமிழ் அடையாள அரசியலில் நுழைந்த வெகு சில நபர்கள், குறுகியகாலத்தில் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்தார்கள். பெங்களூர் குணாவின் நல்லாசியுடன் தொடங்கப்பட்ட இந்தச் செயல்பாடுகள் முதலில் தமிழரல்லாதோரை குறிவைத்தன. பிறகு தமிழர்களிலேயே தலித் சமூகத்தின் மீது குறிவைக்கப்பட்டது. தலித்களின் தனிப்பட்ட தேவைகளை நிராகரிப்பதை தனது வியூகங்களில் ஒன்றாக ஆக்கிக்கொண்டது குறுந்தேசியவாதம்.

சில வரலாற்று நிகழ்வுகளை ஊதிப்பெருக்கியும் தவறாக சித்தரித்தும் அல்லது தவறாக புரிந்துகொண்டும் சூழலுக்கு வெளியே வியாக்கியானமளித்தும் தமிழ்த்தேசிய அரங்கில் தலித்களின் இடத்தை மறுக்கும்போக்கு தொடங்கியது. ஆனால் இது புதிதல்ல. தொண்ணூறுகளிலேயே ஏற்படத்தொடங்கிய ஒன்றுதான். அப்போது தலித் தலைமை என்ற கருத்தாக்கத்தை மறுப்பதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு விவாதத்தில் அது வெளிப்பட்டது. பின்பு அது தலித் அரசியலையே மறுப்பதற்கான கோட்பாடாக ஆக்கப்பட்டது. இடைநிலைச்சாதிகளைச் சேர்ந்த தமிழ்த்தேசியவாதிகள் பலரிடம் ஆழமாக வேரூன்றிய இந்தக் கருத்துக்களில் இரண்டு பிரதான அம்சங்களை மட்டும் விவாதிக்க முயல்வோம். ஒன்று தலித் என்கிற அடையாளம் தொடர்பானது, மற்றொன்று தலித்கள் முழுமையாக தமிழ்த்தேசிய அரசியலுக்குள் பொருந்துவார்களா, அல்லது அவர்களின் தலைமையை ஏற்கமுடியுமா என்பது. இவை குறித்து எந்த அளவுக்கு வெளிப்படையாக விவாதங்கள் நடந்திருக்கிறதோ அதைவிட பல மடங்கு அளவுக்கு அவை அமைப்புகளுக்குள்ளாக உள் உரையாடல்களாக இடம்பெற்றிருக்கின்றன. இன்றைய தமிழ்த்தேசிய அமைப்புகள பலவற்றின் அரசியல் மரபணுக்கள் இவ்விதமே உருவாக்கப்பட்டன.

“நாங்கள் இந்தியத்தை எதிர்க்கிறோம் எனவே இந்திய அடையாளங்களை எதிர்க்கிறோம், அப்படித்தான் இந்திய அடையாளங்களில் ஒன்றான தலித் அடையாளத்தை எதிர்க்கிறோம். மற்றபடி இது தமிழ்நாட்டின் எஸ்.சி சமூகத்தவர்க்கு எதிரானது அல்ல” என்பது ஒரு விவாதப்புள்ளி. அனைத்திந்திய அளவிலான அடையாளங்கள் மீதான சந்தேகத்தை எழுப்புவது என்கிற பெயரில் இவ்வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்த விவாதங்களுக்கு பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. எல்லா அனைத்திந்திய அடையாளங்களும் ஒரேவிதமானவை அல்ல. தலித் அரசியலின் பொருத்தப்பாடு இந்திய அளவையும் தாண்டி, இலங்கை, நேபாளம் உள்பட தெற்காசியா முழுமைக்குமான ஒன்று. மிகவும் எளிமைப்படுத்திச் சொல்லவேண்டுமானால், எங்கேயெல்லாம் தீண்டாமைக் கொடுமை நிலவுகிறதோ, எந்தச் சமூகங்களிலெல்லாம் தீண்டத்தகாதோர் என்று ஒரு மக்கள்பிரிவு இருக்கிறதோ அந்த மக்களின் கூட்டு அடையாளம்தான் தலித் அடையாளம். சில சமயம் இந்தியர்கள் புலம்பெயர்ந்து செல்கிற நாடுகளில்கூட அதற்கு தேவை ஏற்பட்டுவிடுகிறது. தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கிற எல்லா சாதியினரும் மொழி, இன எல்லைக்கு அப்பால் தங்களுக்கிடையிலான ஓர் உறவைப் பேணவேண்டிய அவசியம் இருக்கிறது. பிற களங்களில் நடப்பதைப் போலவே தலித் களத்திலும் பல நடைமுறைச் சிக்கல்கள், போதாமைகள், தவறுகள் இருக்கின்றன. தலித் என்கிற களத்தையே நீங்கள் வேறு ஒரு களத்தை முன்னிட்டு நிராகரிக்கமுடியாது. தேவை எப்போது அழியுமோ அப்போதுதான் அது அழியும். பாட்டாளி வர்க்கம், பெண்கள் என்பது போன்ற அடையாளங்கள் எப்படி இனம் கடந்தவையோ அவ்வாறே தலித் என்கிற அடையாளமும் இனம் கடந்த ஒன்று. அம்பேத்கரை மராத்தியராகவும் தலித் என்பதை தமிழ் அடையாளத்துக்கு எதிரானதாகவும் நிறுத்தும் சில தமிழ்த்தேசியவாதிகளின் கூச்சல், டெசிபல் அளவில் இவர்கள் போடும் சப்தம் அதிகமாக இருக்கிற காரணத்தால், மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதான், “நான் உங்களை தமிழனாக பார்க்கிறேன், நீங்கள் உங்களை தலித்தாக பார்க்கிறீர்கள்” என்று ஒரு தமிழ்த்தேசியத் தலைவரைப் பேசவைக்கிறது. அதே சமயம், இந்த பொய்யான எதிர்வுநிலையை ஏற்றுக்கொள்ளக்கூடிய சில தலித் அரசியல் செயல்பாட்டாளர்களாலும் இந்த பிளவு மேலும் ஆழமாகிறது என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்.

மனிதர்கள் பல்வேறு அடையாளங்களில் இருக்கநேர்கிறது என்பதையும் அவற்றினூடான இயங்கியலை அறிந்தே நாம் அரசியல் செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்கிற புரிதல் இல்லாமல், ஒற்றை அடையாளத்தில் அனைவரையும் வீழ்த்திய பெருமை, அடையாள அரசியல் என்கிற கோட்பாட்டை ஊதிப்பெருக்கிய பல அறிஞர்களையே சாரும். சமூகத்தை அறிவதில் மரபுவழி மார்க்சியர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களை தீர்க்கத் தொடங்கிய ஒரு அறிவுஜீவி தலைமுறை, அடையாள அரசியலை தலைமீது தூக்கிவைத்துக்கொண்டு ஆடியது. ஒன்றின் தேவை அல்லது பொருத்தப்பாட்டை அதன் எல்லைக்கு அப்பாலும் நீட்டிய பிறகு, அதன் வரம்புக்குள் மாட்டிக்கொண்டது.

தமிழ், திராவிடம், தலித், பெண்கள், இஸ்லாம் போன்ற தனித்தன்மை வாய்ந்த அடையாளங்கள் ஒரே நபரின்மீது சமகாலத்தில் தொழிற்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளாமல், அவற்றை தனித்தனியான, அதே சமயம் ஒன்றையொன்று விலக்குகிற அடையாளங்களாக மாற்றிய புண்ணியவான்களின் கைங்கரியம் செய்திருக்கும் தீங்கு மிகப்பெரியது. ஒருவரே ஏன் ஒரே சமயத்தில் தமிழராகவும் தலித்தாகவும் பெண்ணாகவும் ஆரிய எதிர்ப்பு திராவிடவாதியாகவும் இருக்கமுடியாது?

(மொழியுரிமைக் களத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். “நீங்கள் பேசுகிற மொழியுரிமைக்கும் தலித் உரிமைகளுக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கிறது?” என்று கேட்டார் ஒரு தோழர். “ஒரு மத்திய அரசு அலுவலகத்தில் ஒரு வேலைவாய்ப்பு உருவாகிறது. அந்த வாய்ப்பு இடஒதுக்கீட்டின்படி எஸ்.சி ஒருவருக்கானது. சரி, இப்போது இடைநிலைச்சாதியைச் சேர்ந்த ஒருவர் பொய்ச்சான்றிதழ் கொடுத்து அந்த இடத்தை அபகரிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது தமிழர் என்பதால் நீங்கள் அவருக்கு அந்த இடத்தை விட்டுக்கொடுங்கள் என்று உங்களிடம் யாராவது சொன்னால், நீங்கள் என்ன பதில்சொல்வீர்கள்?” என்று கேட்டேன். “கடுமையாக எதிர்ப்பேன் இல்லையா? இதில் என்ன ஆச்சரியம். ஏனென்றால், தமிழன் என்கிற அடையாளத்தால் நான் பாதிக்கப்படுகிறேன்” என்றார் அவர். “சரி, அந்தப் பணியிடம் தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள ஒரு வங்கி என்று வைத்துக்கொள்ளுங்கள். எந்த எஸ்.சி பணியிடத்தில் உள்ளூர் எஸ்.சி ஒருவருக்கு வரவேண்டிய வாய்ப்பை பிஹாரிலிருந்து வரும் ஒரு பாஸ்வான் சமூகத்தவர் எடுத்துக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது என்ன செய்வீர்கள்?” என்று கேட்டேன். உண்மையில் தோழரிடம் இதற்கு சரியான பதில் இல்லை. ஒற்றை அடையாள அரசியல் அவரிடம் குடிகொண்டிருப்பதன் காரணமாக, “அதையும் நான் எதிர்ப்பேன்” என்று உறுதியாக அவரால் பேசமுடியவில்லை. “மொழியுரிமையின் தீவிரமான கேள்வி மொழி படிப்பது தொடர்புடையது அல்ல, மொழி காரணமாக நாம் இரண்டாந்தர குடிமக்களாக மாற்றப்படக்கூடாது என்பதுதான் என்பதை நீங்கள் இப்போது புரிந்துகொள்வீர்கள்” என்று நான் பதில்கூறி முடித்தேன். ஒற்றைப் பரிமாண அரசியலின் ஈர்ப்பு அலாதியானது. குறிப்பாக வேகமாக அமைப்புகளைக் கட்டுவதற்கும், மற்ற அமைப்புகளோடு போட்டியிடவும்கூட அது தோதானது. தீர்க்கமுடியாத பிரச்சினைகள் எதுவுமே ஒற்றை அடையாளவாதிகளிடம் இல்லை.

தலித் அரசியலுக்கு எதிராக தமிழ்த்தேசிய அரங்கில் நெடுங்காலமாக – சில சமயம் நேரடியாகவும் சில சமயம் மறைமுகமாகவும் – பேசப்பட்ட மற்றொரு விஷயம் சற்று ஆழமானது. சொல்லப்போனால், நிகழ்கால தேசிய அரசியலின் எல்லையை இது குறிக்கிறது. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தினூடாக முன்வைக்கப்பட்ட இந்திய தேசியம் குறித்தும் காந்தியின் அரசியல் தொடர்பாகவும் காங்கிரஸில் மேலோங்கியிருந்த பார்ப்பன / சாவர்ண ஆதிக்கம் குறித்தும் அம்பேத்கர் கேள்விகள் எழுப்பியதும் அதனால் பல இந்திய தேசிய வெறியர்கள் அவரை தேசவிரோதியாக காட்டமுயன்றதையும் வரலாற்றில் நாம் பார்த்திருப்போம். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்திய தேசிய காங்கிரஸ் மூலமாக உருவான பார்ப்பனிய / சாவர்ண மேட்டிமை ஆதிக்க அரசியலுக்கு எதிர்வினையாக, ஒடுக்கப்பட்ட/பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களின்பொருட்டு அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை முழுமுதல் எதிரியாக கருதாமல், அவர்களுடன் செயல்பட்டு சில உரிமைகளை வென்றெடுக்கவும் செய்தார்கள். இதன் காரணமாக இந்திய தேசியவாதிகள் இவர்களை பிரிட்டிஷாரின் அடிமைகள் என்று ஏளனம்செய்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அரசியல் தேசிய விடுதலை இயக்கத்தை குலைத்துவிடும் என்கிற கருத்தாக்கம் இந்தப் பின்னணியில்தான் உருவானது.

இந்தச் சிக்கல் தமிழ்த்தேசிய அரசியலிலும் எதிரொலிக்காமல் இல்லை. தமிழ்த்தேசிய வெளியில் மட்டுமல்ல இந்தியாவில் பல மொழிவழி தேசியங்களின் அரசியல்வெளிகளிலும் தலித் அரசியல் குறித்த ஐயங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தலித் அரசியல் பேசுவோர் தேசிய அரசியலுக்கு கற்புடையவர்களாக இருக்கமாட்டார்கள் என்கிற கருத்து தமிழகத்தில் வலுவாக ஊன்றப்பட்டு வருவதை நாம் கவலையோடு எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. (இதை பஞ்சாப், கர்நாடாகா, மகாராஷ்ட்டிரா, வங்கம் போன்ற இடங்களிலும் என் வரம்புக்குட்ட அனுபவங்களினூடாக பார்த்திருக்கிறேன்). இது ஜனநாயகபூர்வமான தேசிய அரசியலை முன்வைப்போருக்கு கூடுதல் சுமையைத் தருகிறது.

ஆனால் வரலாறு, இவர்கள் காட்டும் ஒரு பக்கத்தை மட்டுமே கொண்டிருக்கவில்லை. இந்திய தேசிய காங்கிரஸின் சனாதன இந்தியாவை அம்பேத்கரும் பெரியாரும் எதிர்க்கிறார்கள் என்றால், அதற்கு மாற்றாகவும் அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். பெரியாருக்கு அரையும்குறையுமாக தனி திராவிட நாடு அல்லது தனித்தமிழ்நாடு கோரிக்கை இருந்தது.

அம்பேத்கரைப் பொறுத்தவரை இந்திய தேசியத்தைக் கட்டமைப்பதில் மிகப்பெரிய பங்கையே பிறகு ஆற்றினார். எந்த இந்திய தேசிய பார்ப்பனீய/சாதி இந்து அரசியலை அவர் உடைத்தெறிய முற்படுகிறாரோ, அதே இந்தியத் தேசத்துக்கான அரசுக் கட்டமைப்பை யாத்த போது அவர் மிகப்பெரிய இந்திய தேசியவாதியாக இருந்தார். ஒரு தீண்டத்தகாதோர் என்கிற அடையாளத்துக்கான போராளி என அவர் ஒற்றையடையாள வாதியாக இருந்திருக்கவுமில்லை, அப்படி ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தி அவருக்குத் தரவேண்டிய பொறுப்பை தராமல் இந்திய தேசியவாதிகளும் இருக்கவில்லை. இன்றைய நோக்கில், அம்பேத்கரின் அதீத இந்திய தேசிய நிலைப்பாட்டைத்தான் நாம் கேள்விக்குள்ளாக்கமுடியுமே ஒழிய, தேசியம் என்கிற கருத்தாக்கத்தையே அவரது ஒடுக்கப்பட்டோர் அரசியல் ஏற்கவில்லை என்று கூறவேமுடியாது.

நிலைமை இவ்வாறு இருக்க, தமிழ்த்தேசியக் களத்தில் தலித் அரசியலுக்கும் அடையாளத்துக்கும் கோரிக்கைகளுக்கும் மையமான இடமிருக்கிறது என்கிற அடிப்படையை சாதிமைய தமிழ்த்தேசியவாதிகள் ஏற்றுக் கொள்ளாமலிருப்பதை நாம் உடைத்தெறியவேண்டியிருக்கிறது.

தனித்தனியாக அடையாள வாள்களைச் சுழற்றிக்கொண்டிருக்கும் சில தமிழ்த்தேசியவாதிகளிடமும் சில தலித் இயக்கவாதிகளிடமும் உரையாடுவதற்கு மற்றொரு முக்கியமான கருத்தாக்கமும் உண்டு. தேசியத்துக்கும் தேசத்தின் ஒரு பிரிவுக்கும் இடையிலான உறவை எல்லாத் தேசியங்களும் ஒரேமாதிரி கட்டமைப்பதில்லை. தேசிய அரசியலின்வழி அதைக் கட்டமைக்கும் வரலாற்று வாய்ப்பு நம்மிடமே அதிகமிருக்கிறதே ஒழியே, வரலாறு என்பது வெறும் முன்மாதிரிகளின் தொகுப்பு அல்ல. எடுத்துக்காட்டாக, பலரும் கருதுவதுபோல, இந்திய தேசியத்தின் சுருக்கப்பட்ட வடிவமல்ல தமிழ்த்தேசியம்.

ஒரு நிலப்பரப்பில் வாழ்கின்ற பல்வேறு மக்கள் பிரிவினரின் தனி அடையாளங்களும் கூட்டு அடையாளங்களும் பொது அடையாளங்களும் தொழிற்புரியும் ஜனநாயக வெளியாக தேசியம் மாற்றப்படவேண்டும் என்பதையே தேசியத்தின் முற்போக்கான சாத்தியப்பாடு. காந்தி, நேரு, அம்பேத்கர், தாகூர் போன்றோர் அத்தகைய தன்மையை இந்திய தேசியத்துக்கு அளிக்கவிரும்பினர் என்பது உண்மை. ஆனால் அதன் தன்னியல்பு காரணமாக அத்தகைய அடையாளத்தை ஒருக்காலும் அடையமுடியாத தன்மையுடையதாக இந்திய தேசியம் இருந்தது. காலனியாதிக்கத்துக்கு எதிரான முற்போக்கு பாத்திரத்தை வகிப்பதில் ஒரு வெற்றியைக் கண்ட இந்திய தேசியம், ஆகஸ்ட் 15, 1947இலேயே முழுமையாக பின்வாங்கத் தொடங்கி, இன்று ஒரு சாம்ராஜ்ய. தேசியமாக (IMPERIAL NATIONALISM) ஆக ஆகியிருக்கிறது. நவீன இந்தியாவின் ஜனநாயகச் சாத்தியப்பாடுகள் வெகுவிரைவாக இந்துத்துவ கட்டமைப்புகளாக மாறிவிடுகின்றன. ஏன் என்பதற்கு, இந்தியாவை ஒரு தேசமாக பார்ப்பதென்பது பார்ப்பனீய பார்வை என்பதைத் தவிர வேறல்ல என்பதே விடை. ஏனென்றால் நவீன இந்திய தேசியத்தின் அனைத்து வேர்களும் அங்கிருந்தே தொடங்குகின்றன. நேருவிய சோஷலிசமும் இந்து மகாசபையின் இந்துராஷ்ட்டிரமும் காந்தியின் ராமராஜ்யமும் இந்திய இடதுசாரிகளின் அனைத்திந்திய புரட்சியும் சேரும் புள்ளியாக அந்தப் பார்ப்பனீயமே இருக்கிறது.

மாறாக நவீன தமிழ்த்தேசியமோ தொடக்கத்திலிருந்தே, இந்தியத் துணைக்கண்டத்தின் “பிறிதொன்றாக” இருக்கிறது. ஆரிய எதிர்ப்பு, வைதிக எதிர்ப்பு, மதம்சாரா தன்மை, ஒப்புரவு உள்ளிட்ட பொது அறங்களினூடாக அது தனது வேர்களைக் கண்டறிந்தது. வள்ளலாரிடமிருந்து வைகுந்தரிடமிருந்தும் அது தன் ஆன்மீக வேரைத்தேடியது. சங்க இலக்கியங்கள் அச்சேறிய காலம் முதல் கீழடி அகழ்வாய்வு காலம்வரை, அது சாதிமத சார்பற்ற தன் பழைய பொற்காலத்தைத் தேடுகிறது. அயோத்திதாசர், சிங்காரவேலர் முதலான அறிஞர்களின் சிந்தனை மரபாலும் பெரியார், அண்ணா போன்றோரின் அரசியல் செயல்பாடுகளாலும் தமிழரசன், பெருஞ்சித்திரனார் போன்றோரின் தமிழ்த்தேசிய அரசியலாலும் சாதியவாதத்துக்கு எதிரானதாகவே தன்னை அது தகவமைத்துக்கொண்டிருக்கிறது. அதை அவ்வப்போது “கடத்திச்செல்ல” முயலும் சாதிய சக்திகளிடமிருந்து விரைவில் அது தன்னை விடுவித்துக்கொள்கிறது. தன்னிடம் அடைக்கலம் புகும் பிற்போக்கு சக்திகளோடு அது நெடுங்காலம் குடும்பம் நடத்துவதில்லை. தேசிய இயக்கம் ஒன்றுக்கான அத்தனை சிக்கல்களும் கொண்டதுதான் தமிழ்த்தேசியமும் என்றாலும், நெடுங்கால தமிழ் மரபு ஒன்று அதை ஜனநாயகப்படுத்தி வைத்திருக்கிறது. மதம் சார்ந்து யோசிப்போம் என்றால், நவீன தமிழ்த்தேசியத்தை கட்டமைத்தவர்கள் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயங்களிலிருந்து ஏக காலத்தில் அதற்குள் நுழைந்தவர்கள். பெளத்த, நாத்திக மரபால் தாக்கமுற்றது நவீன தமிழ்த்தேசியம். இந்தியாவின் வேறெந்த மொழிவாரி தேசியத்தைக் காட்டிலும் அதிக அளவுக்கு இடதுசாரிகளினாலும் செழுமையுற்றது அது.

இந்திய தேசியத்தின் வேர் பார்ப்பனியத்திலிருப்பது போல தமிழ்த்தேசியத்தின் வேர் வேளாள அல்லது இடைநிலைச்சாதியத்திலிருக்கிறதா என்கிற கேள்வியை இங்கே எழுப்பிக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஒரு தலித் பார்வையிலிருந்து பார்க்கையில் நிச்சயமாக இந்த ஒப்பீடு நியாயமானதே என்றாலும், நிஜத்தில் தமிழ்த்தேசியத்தின் வேர்கள் ஓரிடத்திலிருந்து கிளம்பியவை அல்ல. இன்றையத் தமிழ்த்தேசிய அரங்கை நிறைக்கும் சமூகப்பிரிவுகள் தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளிலிருந்து வருபவர்கள்தான் என்கிற புறநிலை ஒன்றிருக்க, முன்பே கூறியதுபோல தமிழ்த்தேசியத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதற்கான உரிமை தலித் சமூகத்தினரிடம் முன்பாகவே கையளிக்கப்பட்டுமிருக்கிறது.

இந்திய தேசியம் என்பது சாவர்ண தேசியமாக உருவாக்கப்பட்டது போல தமிழ்த்தேசியம் எந்த ஒரு பிரிவினராலும் அவ்வாறு உருவாக்கப்படவில்லை. உருவாக்கப்பட்டிருந்தால் இந்நேரம் அது மிகப்பெரிய அரசியல் சக்தியாகவும் ஆகியிருந்திருக்கக்கூடும். அது சாதி கடந்த அடையாளத்தை வலியுறுத்தியதன் காரணமாகவே இன்னமும் வலுப்பெறாமல் இருக்கிறது.

தமிழுக்கும் சைவத்துக்கமான உறவு ஒரு வேளாள தமிழ்த்தேசியத்தை உருவாக்கியிருந்திருக்கலாம். ஆனால் வேளாளர்கள் அதில் வெற்றிபெறவுமில்லை. பார்ப்பனரல்லாத தமிழ் ஆதிக்கசாதியினரான வேளாளர்கள், செட்டியார்கள் உள்ளிட்டோரிடம் தமிழ்க் கலாச்சார அரசியல் நிலவிய அளவுக்கு தேச அரசு ஒன்றை அமைப்பது தொடர்பான தேசிய விடுதலை அரசியல் வேரூன்றவில்லை. வேளாளத் தமிழ் அரசியல், ம.பொ.சி – குணாவழி இன அடையாள அரசியலைக் காட்டிலும், பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றோர் வழி உருவான தமிழ்த்தேசியம், அடித்தட்டு மக்களின் நலன்களோடும் பெரியாரிய சமூக நீதிக் கோட்பாட்டுடனும் இடதுசாரி முற்போக்கு முகாமின் தேசிய இன சுயநிர்ணய அரசியலுடன் எப்போது இணைந்ததோ அப்போதே நவீனத் தமிழ்த்தேசியத்தின் திசைவழி தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. சாதிமைய தேசியவாத அரசியலின் தற்கால எழுச்சியானது ஒரு நீர்க்குமிழிதான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அந்தக் குமிழி உடையத் தொடங்கிவிட்டது என்பதையும் உணரத் தொடங்கவேண்டும்.

சாதியவாதம் அல்லது ஆரிய அடிமைத்தனத்தோடு தமிழ்த்தேசியத்தைக் கட்டமைக்க முயன்ற யாரும் அதில் ஒரு அடிகூட முன்னேறியதில்லை என்பதுதான் வரலாறும்கூட. இவர்கள் வெகுசீக்கிரத்திலேயே அம்பலப்பட்டுப் போய் பாரப்பன ஜோதியில் கலந்துவிடுகிறார்கள். ம.பொ.சி ஓர் உதாரணம். எல்லைப் போராட்டம் என்கிற ஒரு தளம் தவிர மீதி தளங்களில் அவர் அவரே கட்டமைத்த தமிழ்த்தேசியத்தை பாரத மாதாவிடம் பலிகொடுத்தார். இறுதியில் அவரால் தமிழ்த்தேசிய தலைமை எதையும் வகிக்க இயலவில்லை.

சாதிமைய “ஆண்ட பரம்பரை” போலித் தேசியவாதிகளின் கருத்துகளையே தமிழ்த்தேசிய கருத்து என்று கூறி, தமிழ் அரசியலை அவர்களின் மடியில் போட்டுவிட்டு வருவது மடத்தனம். “தமிழ்த்தேசியம் என்றாலே அண்ணன் சீமான்தான்” என்று எப்படி நாம் தமிழர் தம்பிகள் பார்க்கிறார்களோ அதைப் போலவேதான் அதை விமர்சிக்கும் பலரும் “சீமான்தானே தமிழ்த்தேசியம்” என்று பார்க்கிறார்கள்.

“இருக்கிற தமிழ்த்தேசிய அமைப்புகளிலேயே நாம் தமிழர்தான் பெரியது, அதனுடைய கருத்துதானே தமிழ்த்தேசியத்தின் பொதுக்கருத்தாக இருக்கமுடியும்” என்று இவர்கள் சொல்கிறார்கள். இதைவிட அபத்தம் வேறொன்றுமில்லை. தமிழ்த்தேசியத்தை தம் கொள்கைப் பிரடனங்களில் சேர்த்துக்கொண்டு, சாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம் என முழங்கி, 1990-2000களில் மத்திய, மாநில அரசுகளின் கொடூரமான அடக்குமுறைகளுக்கு நடுவிலும் பிரபாகரனின் பெரும்படங்களைத் தாங்கி தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியலை தொடர்ச்சியாக பேணி, லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு தனித்தமிழ்ப் பெயர்களைச் சூட்டிவந்த விடுதலைச் சிறுத்தைகளைவிடவா வேறு ஒரு தமிழ்த்தேசியக்கட்சி இங்கே இருக்கிறது? பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து பிரிந்துவந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட எத்தனையோ அரசியல் கட்சிகள், தங்களுடைய பல சந்தர்ப்பச் சூழ்நிலைகளையும் கடந்து, தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியலை ஓங்கி வளர்த்துவருகின்றன. தன்னுடைய பசுமை அரசியலை பசுமைத் தமிழ்த்தேசிய அரசியலாக இனம்காண்கிறார் சுப.உதயகுமாரன். பழ. அதியமான், நாகை திருவள்ளுவன், அரங்க குணசேகரன், பொழிலன், திருமுருகன் காந்தி, சந்திரபோஸ், கண குறிஞ்சி போன்றோரும் இவர்களோடு இணைந்து செயல்படுகிற பேராசிரியர் ஜவாஹிருல்லா, தெஹ்லான் பாகவி போன்றோரின் அரசியலும் தமிழ்த்தேசியத்தை வரையறுக்கவில்லையா? இவர்களோடு இணைந்து பெரியாரிய அமைப்பினரான கோவை ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி போன்றோர் செயல்படவில்லையா? புரட்சிர இளைஞர் முன்னணி, மக்கள் விடுதலை போன்ற மா-லெ அமைப்புகளும் இந்த அணிகளுடன்தானே இருக்கிறார்கள்? தனியாகவும் கூட்டாகவும் இவர்கள் அனைவரும் சேர்ந்துதான் நடப்பு தமிழ்த்தேசிய அரசியலுக்கு உருக்கொடுத்துவருகிறார்களே ஒழியே நாம் தமிழர் கட்சியோ அல்லது வேறு ஏதோ ஒரே ஒரு சிறு அமைப்போ மட்டுமல்ல.

இந்த சாதிமைய தமிழ் அமைப்புகளிலும் வேறு சில பரிமாணங்கள் உண்டு என்பதை பார்க்கத் தவறக்கூடாது. எடுத்துக்காட்டாக, தலித் அரசியல் வேண்டாம், பறையர் பறையராகவே அடையாளம் காணப்பட்டு பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கவேண்டும் என்றும் கூறுபவர்கள் இருக்கிறார்கள். சாதி ஒழிப்பு அரசியல் தமக்கு எந்த பலனையும் தரவில்லை என்றும் தலித் அடையாளம் கைகொடுக்கவில்லை என்றும் வெளிப்படையாக கூறும் பறையர் சமூகத்தவர்களும்; பறையர்களே எங்கள் பார்ப்பனர்கள் என்றும் அசலான தமிழர்கள் பறையர்களே, அவர்களை வீழ்த்தியது ஆரியமும் வடுகமும்தான் என்றும் கூறும் பிற சாதியினரும் வேறு தளத்தில் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிற உண்மையையும் நாம் மூடிமறைக்கக்கூடாது. இந்த கருத்து தமிழ்த்தேசிய / தலித் சமூக இளைஞர்கள் மத்தியில் எடுபடத் தொடங்கியிருக்கிறது என்பதையும் இதற்கும் குணாயிசம்தான் காரணம் என்பதையும் பார்க்கவேண்டும். இந்தப் போக்கை கவனமாகவும் அக்கறையோடு அணுகாமல் புறந்தள்ளுவோமானால், அதைவிட தவறு வேறெதுவும் இருக்கப்போவதில்லை. மாறாக இதை புறந்தள்ளுவதற்கான மனநிலையே கூட சாதியமனநிலையாக இருக்கலாம்.

தலித் செயல்பாட்டாளர்களுக்கும் நாம் ஒரு கோரிக்கை வைக்கவேண்டியிருக்கிறது. அம்பேத்கரையும் பெரியாரையும் ஏற்கிற, அதே சமயம் தமிழ்த்தேசியத்தையும் ஏற்கிற தமிழ்த்தேசியவாதிகளை தமிழ்த்தேசியவாதிகள் என்று அடையாளம்காட்டாமல், அம்பேத்கரையும் பெரியாரையும் நிராகரிக்கிற சிலரை மட்டுமே தமிழ்த்தேசியவாதிகளாகக் காட்டுகிற பணியில் ஒருபோதும் அம்பேத்கரியவாதிகள் (பெரியாரியவாதிகளும்) இறங்கக்கூடாது.

அம்பேத்கரையும் பெரியாரையும் ஏற்றுக்கொள்கிற தலித் அல்லாத தமிழ்த்தேசியவாதிகள் சாதி ஒழிப்பு அரசியலை முழுமையாக புரிந்துகொண்டவர்கள் என்று கூறுவதற்கில்லை. அதை அவர்கள் முதல் முன்னுரிமையாக கொண்டிருக்கவும் வாய்ப்பில்லை. ஆனால் நிச்சயமாக தமிழ்த்தேசியத்தினூடாக சாதி ஒழிப்பு அரசியலை முன்னெடுப்பது குறித்த அக்கறை அவர்களிடமுமிருக்கிறது. ஆனால் அதை ஒரு முன்நிபந்தனையாக பார்க்கச் சாத்தியமில்லை. தேசிய அரசியல், சாதிய ஒழிப்பு அரசியல் என்பது ஒன்றுக்கொன்று பதிலீடு செய்கிற அரசியல் அல்ல என்பதும் ஒன்றை ஒன்று நிரப்புகிற அரசியல் என்பதுமே அதற்குக் காரணம்.

நமது முன்னுரிமைகளுக்கு மாறாக வேறு ஒரு நிகழ்ப்பாடு ஒரு சமூகத்தில் தோன்றும்போது அந்த நிகழ்ப்பாட்டிலும் நமது முன்னுரிமைக்கான வேலையைச் செய்யவேண்டும். அதுதான் நமது முன்னுரிமை குறித்து நாம் கொண்டிருக்கும் பற்றுறுதியின் வெளிப்பாடு. மாறாக அந்த நிகழ்ப்பாடுகளை வெளியேயிருந்து பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது.

இந்த அவல நேரத்திலும் ஒரு நல்வாய்ப்பாக, கடந்த சில மாதங்களாக இந்துத்துவ அரசு தமிழ்நாட்டில் நடத்திவரும் அதிகாரப்பறிப்பு வெறியாட்டமும் நீட் விவகாரமும் சாதிமைய தமிழ்த்தேசியவாதிகளை முற்றிலும் பலவீனப்படுத்திவருகிறது. வெற்று இனவாத கோஷங்களின் பின்னால் ஒளிந்திருக்கும் இனவெறி/சாதிவெறி உளவியல் முழுமையாக அம்பலப்பட்டுவிடவில்லை என்றாலும், அதன் வரம்பை இன்றைய நிகழ்வுகள் சுட்டிக்காட்டிவிட்டன. மீண்டும் தமிழ்த்தேசிய அரசியல் தமிழ்நாட்டின் மற்ற அரசியல் களங்களுடனான உறவைப் புதுப்பிக்கத் தொடங்கியிருக்கிறது.

கழகங்களுக்கு மாற்றாக தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் இந்துத்துவ சக்திகளும் ஏற்கனவே கடந்த இருபதாண்டுகளில் உருவாகியிருந்த சாதி மாஃபியா கும்பலும் தமிழ்த்தேசியத்தில் ஊடுருவி அதைப் பறிக்கமுயல்கிற போது, அவர்களின் சதியை நிறைவேற்றவிடாமல் எதிர்வினையாற்றுவதுதான் உண்மையான சாதி ஒழிப்பாளரின் கடமையாக இருக்கமுடியும். மாறாக எதிரிகளை அந்தக் கோட்டைக்குள் ஊடுருவ வைப்பதற்கு ஒத்தாசை செய்வது துரோகமாகும். சொல்லப்போனால், தமிழ்த்தேசியம் நம் முன்னோர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து கட்டிய கோட்டை!
விடலாமா?

 

  • ஆழி செந்தில்நாதன்
  • உயிர்மை, அக்டோபர் 2017