ஒரே நாடு ஒரே ஃப்யூஸ்! – மோடியின் செளபாக்யா திட்டம்

டிசம்பர் 2018க்குள் இந்தியாவிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சார வழங்கீட்டை நிறைவு செய்ய வேண்டும் என்று கூறி ஒரு திட்டத்தைச் சில நாள்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ரூ.16,320 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்தின் மூலமாக, ஏழைகளுக்கு மின்சாரத்தை இலவசமாக வழங்கவும் ‘பிறருக்கு’க் குறைந்த விலையில் வழங்கவும் திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசாங்கம் அறிவித்தது. செளபாக்யா திட்டம் என்று அழைக்கப்படும் பிரதான் மந்திரி சகஜ் பிஜ்லி ஹர் கர் யோஜ்னா என்கிற இந்தி பெயராலேயே எல்லா மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தை மோடி அறிவித்தபோது நாட்டு மக்கள் அப்பாடா என்று பெருமூச்சுவிட்டார்கள். முன்னதாக, ஆறரை மணிக்கு மோடி பேசப்போகிறார் என்றச் செய்தியைக் கேட்டு கதிகலங்கி போயிருந்தார்கள் மக்கள்.

இந்த செய்தியைக் கேட்டவுடன் தமிழ்நாட்டுச் சமூக ஊடக வட்டாரம் ஒரேயடியாக குதூகலத்தில் மூழ்கியது. “அடே, இதையெல்லாம் நாங்க போன நூற்றாண்டிலேயே செய்து முடித்து விட்டோமடா!” என்று சமூக ஊடகத்தில் தமிழர்கள் எகத்தாள சிரிப்பு சிரித்தார்கள். மோடியோ, யோகியோ, காவி பரிவாரத்தின் வேறு எந்த முகமோ தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் நல்ல பேர் எடுக்க வேண்டும் என்றால் அது கிட்டத்தட்ட சாத்தியமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக மக்கள் நலத் திட்டங்கள் என்று வந்தால் சமூக ஊடகத் தமிழர்கள் புள்ளிவிவரம் சகிதமாக வந்து கிழிக்கிறார்கள்.

மே 2017 வாக்கில், தமிழ்நாட்டில் ஊரக மின்சாரமயமாக்கத்தின் சதவிகிதம் 100. அதாவது எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி அளிக்கப்பட்டுவிட்டது. அதைப் போலவே உத்தரப்பிரதேசத்தில் ஊரக மின்சாரமயமாக்கத்தின் சதவிகிதம் 99.99. பெரிய வித்தியாசமில்லை.

ஆனால், மின் தொடர்பு பெற்ற எல்லா வீடுகளுக்கும் மின்வசதி இருக்கிறதா? இல்லை. இதில் அனைத்திந்திய சராசரி 88.2 சதவிகிதம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் மின் தொடர்புள்ள வீடுகளின் சதவிகிதம் 100ஐ எட்டிவிட்டது. ஆனால், 99.99 சதவிகிதக் கிராமங்கள் மின் தொடர்புள்ள உத்தரப்பிரதேசத்தில் மின்வழங்கீடுள்ள வீடுகளின் சதவிகிதம் 51. பீகாரில் 47 சதவிகிதத்துக்கும் குறைவான கிராம வீடுகளே மின்வழங்கீடு பெற்றுள்ளன. ஜார்க்கண்ட் 44%, மத்தியப் பிரதேசம் 60%,

ஆனால் மற்ற மாநிலங்களில் எப்படி? தெற்கே கேரளம் 100%, ஆந்திரம் 100%, தெலங்கானா 93.1%, கர்நாடகா 92%, கிழக்கே மேற்குவங்கம் 99%, வடக்கே பஞ்சாப் 100%, உத்தராகண்ட், இமாச்சல் பிரதேசங்களிலும் நல்ல முன்னேற்றம். இவை அனைத்தும் மத்திய அரசின் புள்ளிவிவரங்களே.

இந்தப் புள்ளிவிவரங்கள் சில உண்மைகளைச் சொல்கின்றன. மின்வசதி பெற்ற ஊர்கள், மின்வசதி பெற்ற வீடுகள் என இரண்டு காரணிகளிலும் தென்னிந்திய மாநிலங்களும் ஒரு சில வட இந்திய மாநிலங்களும் தமது இலக்குகளில் நிறைவை எட்டியிருக்கின்றன என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

சமூக நீதி என்னும் மின்தடம்

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற இந்தி மாநிலங்களே இதில் பெரிதும் பின்தங்கியுள்ளன. மின்வசதி பெற்ற ஊர்கள் என்கிற கணக்கில் இங்கே நல்ல முன்னேற்றம் இருக்கிறது. ஆனால், மின்வசதி பெற்ற வீடுகள் என்று வரும்போது இவை மிகவும் பின்தங்கியுள்ளன. இதன் அர்த்தம், ஊருக்கு வந்த மின்சாரம் பாதி வீடுகளுக்குப் போய்ச் சேரவில்லை என்றால், சமூகநீதி மின்தடம் அந்த வீட்டுக்குச் செல்லவில்லை என்றுதான் பொருள். வறுமையின் அதிர்ச்சியையும் அது சுட்டுகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின்படி மின்சாரம் பொதுப் பட்டியலில் இருக்கிறது. பல மாநிலங்களில் மின்துறை – அவற்றுக்கேயுரிய ஊழல் இத்யாதி பிரச்னைகளுடன்தான் என்றாலும் – பலமாக இருக்கிறது. இந்த மாநிலங்களில் அனைவருக்கும் மின்சாரம் என்பது எப்போதோ முடிவெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்ட கதையாகும் (விதிவிலக்குகள் இருக்கலாம்). ஆனால் உ.பி., பீகார், ம.பி. போன்ற மாநிலங்களோ இன்னமும் தங்களுடைய அடிப்படை வசதிகளைக்கூடச் செய்து முடிக்காத மாநிலங்களாகும்.

மோடி அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும்? தமது கட்சியால் ஆளப்படும் உத்தரப்பிரதேசத்திலும் தமது கூட்டாளியால் ஆளப்படும் பீகாரிலும் அந்தந்த மாநிலங்களிலுள்ள அரசாங்கங்களை விளாசித்தள்ளி, உங்கள் மாநிலத்தில் மின்வசதியைப் பெருக்கு என்றுதானே சொல்லியிருக்க வேண்டும்? தமிழ்நாட்டையோ, பஞ்சாபையோ பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள் என்றல்லவா கூறியிருக்க வேண்டும்?

அதை விட்டுவிட்டு, மத்திய அரசே நேரடியாக அந்தக் களத்தில் இறங்குவது முட்டாள்தனமானதும் மாநில உரிமைகளைப் பறிக்கிற வேலையுமாகும். (இதுவும்கூட வழக்கம்போல காங்கிரஸ் அரசாங்கத்தின் கைங்கர்யம்தான். இதை நீட்டுவது பாஜகவின் வேலை. எனவே, இந்தக் குற்றச்சாட்டு பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் ஒருசேரப் பொருந்தும்).

தேசிய நிதியை மடைமாற்றும் மோசடி

மத்திய அரசு இதுபோன்ற பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு நிதியுதவிகளைச் செய்வதில் தவறில்லை. ஆனால் நான்கைந்து பின்தங்கிய மாநிலங்களுக்காக ஒட்டுமொத்த நாட்டின் நிதியைத் திசை திருப்புவது என்பது அயோக்கியத்தனம்.

இத்தனையாயிரம் கோடி இதற்குக் கொட்டியழும்போது. உத்தரப்பிரதேசங்களின் இதுநாள் வரையிலான தவறுகளைத் திருத்துவதற்கான வழி ஏதேனும் கூறப்பட்டிருக்கிறதா? இல்லை. ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தைகள் கொல்லப்பட்டபோதுகூட மோடி அரசு எதையும் சொல்லவில்லை.

மாநிலங்களவையில் அண்ணா உறுப்பினராக இருந்த காலத்திலிருந்து, மத்திய – மாநில உறவுகளில் உள்ள இந்தப் பாரபட்சங்களைத் தமிழகம் எதிர்த்துக் கேள்விகேட்டிருக்கிறது. தென் மாநிலங்களின் முதல்வர்களும் இந்தியாவெங்கும் உள்ள இந்தி பேசாத மாநிலங்களிலுள்ள மாநிலக் கட்சியினரும் பல சமயங்களை இந்தப் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். எங்கள் பணத்தில் இந்தி மாநிலங்களை வளர்த்துக்கொண்டிருக்காதீர்கள் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். ஆனால், இந்தி பேசுகிற மாநிலங்களின் கலாசாரமே இந்தி பேசாத மாநிலங்களின் நிதியை மத்திய அரசினூடாக ‘அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே’ என்று திருடிச் செல்வதுதான்.

நமது மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி இல்லையா, தமிழ்நாட்டுக்குப் போய் அதை எடுத்துக்கொள். நமக்கு வேலை இல்லையா, பெங்களூருக்குச் சென்று அதையும் பிடுங்கிக்கொள் – இதுதான் அவர்களது “திட்டமிடலாக” இருக்கிறது. பாட்னாவைப் பெங்களூராக மாற்றுவதற்குப் பதில் பெங்களூரைப் பாட்னாவாக மாற்றுவது சுலபம் என்று அவர்களுக்குத் தவறாகப் பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசும் ஒற்றை அரசும்

இந்தச் சிக்கலைப் பொறுத்தவரை, வேறு இரண்டு கோணங்களிலும் பார்க்க வேண்டிய நிர்பந்தமும் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. நீட் விவகாரத்திலிருந்தே அதைப் புரிந்துகொள்ள முடியும். நரேந்திர மோடி ஒன்றிய அரசாங்கத்தை (union government) ஓர் ஒற்றை அரசாங்கமாக (unitary government) மாற்றிக்கொண்டிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை பொதுப் பட்டியல், மாநிலப் பட்டியல் எல்லாமே சாரம்சத்தில் ஒன்றியப் பட்டியல் மட்டுமே.

ஆனால், சில குறிப்பிட்ட துறைகளில் திட்டமிடலும் நிறைவேற்றமும் உள்ளூர் அளவில் இருப்பதே வெற்றிக்கு வழியாகும். கல்வி, தொழில், மின்சாரம் போன்றவை அப்படிப்பட்டவை. இதை வரலாறும் புள்ளிவிவரங்களும் நிரூபித்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, தொழில் மாநிலப் பட்டியலில் இருந்த காரணத்தால்தான் தென் மாநிலங்கள் ஒரு காலத்தில் போட்டிப் போட்டுக்கொண்டு தகவல்நுட்பத்துறையில் பல்வேறு திட்டங்களைத் தீட்டி உலக நிறுவனங்களை ஈர்த்து வளர்ந்தன. ஆனால் இன்றைய மோடி அரசு எல்லாவற்றையும் மத்திய அரசாங்கத்தின் உருப்படிகளாக மாற்றும்போது, இந்த வரலாற்று நிரூபணங்கள் மறக்கப்படுகின்றன. இது மாநிலங்களை அதிகாரமிழக்கச்செய்து, இறுதியில் மத்திய அரசையும் திறனிழக்க வைக்கும் என்பதுதான் உண்மை. இந்தியாவில் மத்திய – மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகளை ஆராய்ந்தவர்கள் அனைவரும் கூறும் உண்மை இது. எப்படிக் கல்வியில் நீட் தேர்வும் யுஜிசியின் புதிய விதிகளும் புதிய தேசியக் கல்விக் கொள்கையும் மாநில அரசுகளின் அஸ்திவாரத்தைத் தகர்க்கின்றனவோ, அதுபோல கிராமப்புற உள்கட்டமைப்பு வசதியில் மாநில மற்றும் உள்ளூர் அதிகார மையங்களுக்கு இருக்கக்கூடிய ஃப்யூஸைப் பிடுங்குகிறது மோடியின் செளபாக்யா திட்டம்.

கார்ப்பரேட் ஏகபோகத்தை நோக்கி…*

இரண்டாவது விஷயம், இது ஏன் செய்யப்படுகிறது? மத்தியில் அதிகாரக் குவிப்பு என்பது வெறுமனே அதிகாரக் குவிப்பு மட்டுமே அல்ல. ஸ்மார்ட் சிட்டி, தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி. நீட், செளபாக்யா உள்ளிட்ட எல்லாத் திட்டங்களுக்கும் பின்னால் இருப்பது ஒரே நோக்கம்தான். நாட்டை கார்ப்பரேட் ஏகபோகமயமாக்குவது.

மாநில அல்லது உள்ளூர் அளவிலான சிறு, குறு தொழில்களை முடக்கி, எல்லாத் திட்டங்களையும் மேலிருந்து திணித்து, அதை நிறைவேற்றும் பொறுப்பை ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏகபோகமாக மாற்றுவதற்கு வழிசெய்வதே இதற்குப் பின்னாலுள்ள நிஜமான நோக்கமாகும்.

ஒன்றை இங்கே புரிந்துகொள்ள வேண்டும். தனியார்மயமாக்கம் என்பது வேறு, கார்ப்பரேட் ஏகபோகம் என்பது வேறு. உள்ளூரில் சாலை அமைக்கும் ஒப்பந்தக்காரரும் தனியார்தான். அதானியும் தனியார்தான். ஆயிரக்கணக்கான உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள் பங்குபெறும் நகர வளர்ச்சித் திட்டங்களை நான்கைந்து அதானிகளுக்குக் கைமாற்றிக் கொடுக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை நடைமுறைப்படுத்த நினைக்கிறது மோடி அரசாங்கம். ஒரு தனியார் கார்ப்பரேட் தன்மையோடு செயல்படுவதிலேயே நாம் பல சிக்கல்களைச் சந்திக்கிறோம். ஆனால் ஒட்டுமொத்த நாடே சில கார்ப்பரேட்களின் சிஸ்டங்களுக்குள் வந்தால்?

அதைத்தான் செய்கிறார் மோடி. அதற்கு என்ன தேவை? ஸ்மார்ட் சிட்டியா?

நகர்ப்புற மேம்பாட்டு வளர்ச்சிக்கான சட்ட அதிகாரத்தை நகராட்சிகளிடமிருந்தும் மாநிலங்களிடமிருந்தும் பிடுங்க வேண்டும். அதாவது அதிகாரத்தை மத்திய அரசிடம் குவிக்க வேண்டும். கல்வியா? மாநிலங்களிடமிருந்த அதிகாரத்தைப் பிடுங்கி புரோமெட்ரிக் போன்ற நிறுவனங்களுக்கும் கோச்சிங் சென்டர் மாஃபியாக்களுக்கும் தர வேண்டும்.

வீட்டுக்கு மின்சாரமில்லையா? சரி. அதற்கும் திட்டம் தயாராகிவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள சில ஆயிரம் கிராமங்களில் பல்ப் மாட்டவா இந்தத் திட்டம்? இல்லை. நாடெங்கிலும் உள்ள மின்வழங்கீட்டைச் சில பெரிய ஏகபோகங்களின் கையில் மாற்றிக்கொடுப்பதற்கான திட்டம். தமிழ்நாடு நூறு சதவிகிதம் மின் மாநிலமாக ஆனாலும்கூட நாளை இந்தத் திட்டம், ஒரு சட்டமாகவே மாறி, மேலிருந்து கீழ்நோக்கி வந்து மாநில அரசாங்கத்தைத் தூக்கியெறிந்துவிட்டு நம்முன் வந்து நிற்கும்.

அப்போது, “ஒரே நாடு ஒரே ஃப்யூஸ்” என்று சொல்லப்போகிறார்கள். நாமும் கேட்டுக்கொள்ளத்தான் போகிறோம்.

வியாழன், 28 செப் 2017

நன்றி: மின்னலம்பலம்.காம்

https://minnambalam.com/k/2017/09/28/1506537033