கேடலோனியர்கள்; குர்திஷ்களின் விடுதலைப் போராட்டம்!

மீபத்தில் இராக்கில் உள்ள குர்திஷ் பிராந்திய அரசாங்கத்துக்குட்பட்ட பகுதியிலும் ஸ்பெயினில் உள்ள கேடலோனியா சுயாட்சி சமூகத்துக்குட்பட்ட பகுதியிலும் நடந்த கருத்துக்கேட்பு வாக்கெடுப்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. குர்திஸ்தான் தனி நாடு உருவாக வேண்டும் என்று குர்திஷ் மக்களும்; கேடலோனியா தனி நாடு உருவாக வேண்டும் என்று கேடலோனியா பிரதேச மக்களும் பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள். எதிர்பார்த்தது போலவே, இந்த வாக்கெடுப்புகளை ஏற்க இராக்கும் ஸ்பெயினும் மறுத்துவிட்டன.

குர்திஷ்களும் கேடலோனியர்களும் இந்த உலகின் எதிரெதிர் துருவங்களில் வாழ்கின்ற இனங்கள் என்றாலும், அவர்களுடைய தலையெழுத்துகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஒரு இனம், ஜனநாயகத் தின் தொட்டில் என தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் ஐரோப்பியக் கண்டத்தில் இருக்கிறது. மற்றொரு இனம், ஜனநாயகக் காற்று வீசாத பாலை எனக் கருதப்படும் மேற்காசியாவில் இருக்கிறது. கேடலோனியர்கள் ஆயிராமாண்டு காலமாக இருந்துவரும் தமது தாயகத்துக்கான சுயாட்சியை முன்பே வென்றெடுத்தார்கள். பெற்ற சுயாட்சி உரிமைகளை ஸ்பெயின் அரசு பறிக்க முயன்றபோது, சுதந்திரத்தை நோக்கி நகர்ந்தார்கள்.

சுதந்திர வேட்கை

குர்திஷ் மக்களின் நிலையோ படுமோசம். குர்திஸ்தான் என்றழைக்கப்படும் அவர்களது தாயகம் இராக், ஈரான், சிரியா, துருக்கி ஆகிய நான்கு நாடுகளால் துண்டாடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. மேற்காசியாவின் சாம்ராஜ்ய மும்மூர்த்திகளான துருக்கியர்களும் அரேபியர்களும் பாரசீகர்களும் குர்திஷ்களின் இன அடையாளத்தைக்கூட ஏற்கத் தயாராக இல்லாமல், இனப் படுகொலைகளினூடாக வும் ஒடுக்குமுறைகளினூடாகவும் அந்த இனத்தை அழித்துவந்தனர். 90-களில் இராக்கில் அமெரிக்கா நுழைந்த பிறகு, அமெரிக்காவின் உள்ளூர் வியூகத்தின் ஒரு பகுதியாகவே இராக்கிலுள்ள குர்திஷ் மக்களுக்கு என ஒரு பிராந்திய அரசு அமைந்தது. இப்போது தனி நாடாவதற்கான வாக்கெடுப்பை நடத்தியது அந்த அரசுதான்.

இராக்கில் உள்ள குர்திஷ் மக்கள் செப்டம்பர் 25-ல் நடந்த வெகுசன வாக்கெடுப்பில் கலந்துகொண்டு தங்களுக்குத் தனிநாடு வேண்டும் என வாக்களித்தார்கள். பல முறை நடத்தத் திட்டமிடப்பட்டு, ஆனால் முடியாமலேயே போயிருந்த நிலையில், இந்த முறை அது வெற்றிகரமாக நடந்தது. கேடலோனியாவைப் பொறுத்தவரை அக்டோபர் 1-ல் நடைபெற்ற வாக்கெடுப்பைச் சட்டவிரோதம் என்று ஸ்பெயின் அரசு கூறினாலும், கேடலோனிய அரசுத் தலைவர் கார்லஸ் பியூஜ்டிமாண்டின் உள்ளிட்டோர் அதைப் பற்றிக் கவலைப் படாமல் வாக்கெடுப்பை நடத்தினார்கள். ஸ்பெயின் பிரதமர் மரியானா ரஜோயின் மிரட்டல்களும் அவரது அரசின் போலீஸ் தாக்குதல்களும் ஸ்பானிய ஆளும் தலைகளின் ஆணவப்போக்கும் கேடலோனியாவில் சுதந்திரம் குறித்து முடிவெடுக்காமல் குழம்பியிருந்த மக்களைக்கூட சுதந்திரத்துக்கு ஆதரவானவர்களாக மாற்றியது. வாக்களித்த 43% மக்களில் 92% பேர் சுதந்திரம் வேண்டும் என்றே தேர்வு செய்திருந்தார்கள்.

எதிர்விளைவுகள்

இவ்விரு நிகழ்வுகளும் உலக அரங்கில் கடுமை யான எதிர்விளைவுகளை உருவாக்கியுள்ளன. பெரிய நாடுகள் இதுவரை கேடலோனியாவையோ குர்திஸ் தானையோ அங்கீகரித்துவிடவில்லை. குறிப்பாக, குர்திஸ்தான் வாக்கெடுப்பை முழுமையாக நிராகரித் தார் அமெரிக்க அரசுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன். இன்றைய உலக ஒழுங்கில் வல்லரசுகளின் போட்டிக்களத்தில் ஏதேனும் ஒரு அணியில் இருந்தால்தான், பிரிவினைப் போராட்டங்கள் வெற்றிபெறுகின்றன என்று பொதுவாகக் கருதப்படுகிறது. சமீபகாலத்தில் தனிநாடுகளாக ஆன தெற்கு சூடான், கோசாவா போன்றவைகூட அதற்கு எடுத்துக்காட்டுகளாகச் சொல்லப்படுகின்றன. எல்லா வல்லரசுகளும் ஒன்று திரண்டு எதிராக நின்றால், ஒரு விடுதலைப் போராட்டத் தைச் சுவடின்றி அழித்துவிட முடியும் என்று தமிழ் ஈழப் போராட்டத்தின் முடிவு காட்டுகிறது.

ஐரோப்பாவில் சுயநிர்ணய உரிமைகள் என்பது வரலாற்றுரீதியாக ஏற்கப்பட்டுவிட்ட ஒரு கோட்பாடு என்று கருதப்படுகிறது. ஆனால், ஆசியாவில் எந்த நாட்டிலும் அதற்கு ஏற்பு இல்லை என்பதும் வெளிப்படை. 90-களில் சோவியத் யூனியன், யூகோஸ்லேவியா, செக்கோஸ்லோவேகியா போன்ற கூட்டமைப்புகள் தகர்ந்து, பல நாடுகள் உருவாயின. அந்தச் சம்பவங்கள், ரஷ்யப் புரட்சியினூடாக விளதிமிர் லெனினும் முதல் உலகப் போருக்குப் பின் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனும் முன்வைத்த சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகள் மேற்குலகில் சட்டபூர்வமாக ஏற்கப்பட்டிருப்பதன் அடையாளம் என்றும் கருதப்பட்டது.

மத்திய, கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ஆதிக்கத்தை உடைப்பதற்கு சுயநிர்ணய உரிமை என்கிற ஆயுதத்தை எடுத்த எந்த மேற்கு, தெற்கு ஐரோப்பிய நாடும் தங்கள் நாட்டில் அதே கோரிக்கை எழுகிறபோது அதை ஏற்றுக்கொள்வதில்லை. பழைய சாம்ராஜ்யங்களோ புதிய வல்லரசுகளோ தங்களுடைய தேவைக் கும் நலனுக்கும் ஏற்பவே நாடுகளை உருவாக்கத் துணைபுரிகின்றன. இந்தப் பின்னணியில்தான் கேடலோனியாவில் வாக்கெடுப்பு, ஸ்பெயினில் விடுதலைக்குப் போராடும் பாஸ்க் இனத்தவர்க்கும், அருகே பிரிட்டனில் ஸ்காட்களுக்கும் உற்சாகத்தை அளித்தது. ஆனால், ஸ்பெயின் அரசின் மனநிலையையே பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற அரசுகள் பிரதிபலித்தன.

வல்லரசுகளுக்குச் சவால்

ஐரோப்பாவிலேயே இப்படி என்றால், குர்திஸ்தான் விவகாரத்தில் கேட்கவே வேண்டாம். உள்ளூர் தாதாக்களான இராக், ஈரான், சிரியா, துருக்கி போன்ற நாடு களுக்குள் ஆயிரம் போட்டியிருக்கலாம். ஆனால் குர்திஸ்தான் என்கிற ஒரு அரசு உருவாகிவிடக் கூடாது என்பதில் அவை ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றன. வாக்கெடுப்பு நடந்த நாள் முதலாகவே குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தின் மீது அனைத்துவிதமான தடைகளையும் அவை போடத் தொடங்கின. இராக்கிய குர்து அரசின் தலைநகரமான எர்பிலுக்கு பயணியர் விமானப் போக்குவரத்தைத் தடைசெய்தது இராக். அங்கேயிருந்து வெளிவரும் எண்ணெய் குழாய்களை அடைக்கப்போவதாக மிரட்டியது துருக்கி. குர்துப் பகுதியுடனான எல்லையை மூடியது ஈரான்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சதாம் உசைனின் இராக்கில் இனப்படுகொலைக்கு உள்ளான குர்திஷ் மக்களுக்கு பிராந்திய அரசை ‘உருவாக்கித் தந்த’ அமெரிக்காவும் தன்னுடைய நிஜ முகத்தைக் காட்டிவிட்டது. மசூத் பர்சானி தலைமையிலான குர்திஷ் பிராந்திய அரசு அமெரிக்காவின் கைப்பாவை என்று சொல்லக்கூடிய அளவுக்கு அமெரிக்க நலன்களுக்கு ஒத்தாசை செய்துவந்தது. அமெரிக்கர்களால் நேரடியாக எதிர்கொள்ள முடியாத ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டியதில் குர்திஷ்களின் பெஷ்மெர்கா படையினரின் பங்கு அதிகம். குர்திஷ் பகுதி தனிநாடாகச் செல்லவேண்டும் என்று அவர் உறுதியாக முடிவெடுத்தபோது. அவரைக் கைகழுவியது அமெரிக்கா.

அப்படியென்றால் கேடலோனிய, குர்திஷ் கனவுகள் என்ன ஆகும்? வல்லரசியவாதிகளின் முடிவு என்னவாக இருந்தாலும், மக்கள் முடிவெடுத்துவிட்டால், நீண்ட காலம் அதை மறுத்து நிராகரிக்கும் ஆற்றல் யாருக்குமே இல்லை என்பது வரலாறு. காலனிய சகாப்தத்தில் போடப்பட்ட எல்லைக் கோடுகளை மாற்றவிடக் கூடாது என்று வல்லரசுகள் விரும்புகின்றன. அதை மீறி சுதந்திரம் வேண்டுமானால், வல்லரசுப் போட்டிக்களத்தில் ஏதேனும் ஒரு அணியை அனுசரித்து சுதந்திர யாசகம் கேட்கவேண்டிய கட்டாயத்தை அவை உருவாக்கி வைத்திருந்தன. அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ள அதே நேரத்தில், குர்திஸ்தான்களும் கேடலோனியாக்களும் சுயநிர்ணய உரிமையை வெல்வதற்கான வழியைக்கூட சுயமாக நிர்ணயித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டன என்பதுதான் இப்போது வந்திருக்கும் புதிய செய்தி. இது உலக, வட்டார வல்லரசுகளுக்கு விடப்பட்டுள்ள புதிய சவாலும்கூட!

நன்றி: தி இந்து (தமிழ்) http://tamil.thehindu.com/opinion/columns/article19875305.ece

பின்–திராவிடத் தமிழகத்தின் எழுச்சி

தமிழ் ஆழி ஏப்ரல் 2013

கவர் ஸ்டோரி / தமிழக மாணவர் போராட்டம்

பின்–திராவிடத் தமிழகத்தின் எழுச்சி

தமிழகத்தைக் குலுக்கிய மாணவர் போராட்டம் தமிழக வரலாற்றில் முக்கிய இடத்தை வகிக்கும். இது ஈழ ஆதரவுப் போராட்டம் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் புதிய அரசியல் எழுச்சி பிறந்திருப்பதற்கான அறிகுறியும்கூட. இதன் மூலம் திராவிடக் கட்சிகளின் அரசியல் கலாச்சாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. நவீன தமிழ்த் தேசிய அரசியல் தமிழகத்தின் மைய நீரோட்ட அரசியலுக்குள் நுழைந்திருக்கிறது. இது பழைய பாணியிலான திராவிட, தமிழ் இன அரசியல்களைத் தாண்டிச் செல்கிறது. தன்னம்பிக்கையும் உலக அறிவும் பொறுப்புணர்வும் நிதானமும் கொண்ட தமிழ் மாணவர்கள் நடத்தும் இந்தப் போராட்டம் தமிழ் அரசியலை மறுவரையறை செய்யும் சக்தி கொண்டது. சாத்தியமுள்ள மாற்றுகள் என்ன?

செ.ச.செந்தில்நாதன்

காலங்கள் சந்திக்கும் கூட்டுச்சாலை

இடம்: செய்யாறு – ஆரணி கூட்டுச்சாலை. தமிழ்நாட்டில் புது வரலாறு படைத்திருக்கும் மாணவர்களின் ஈழ ஆதரவுப் போராட்டத்தின் ஒரு பகுதியாக செய்யாறு நகரில் மார்ச் 24ந் தேதி மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் சுமார் இருபத்தைந்து நடுத்தர வயதுக்காரர்களும் கலந்துகொண்ட அந்த நிகழ்வுக்கு நானும் போயிருந்தேன். தமிழ் ஆழியின் ஆசிரியராகத்தான் அங்கே போனேனா என்பது எனக்கே சந்தேகமான விடயம்தான்.

செய்யாறு அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியைச் சுற்றியுள்ள  இதே பகுதியில்தான் 1988 – 90 ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்களில் நான் முன்னணி மாணவனாகக் கலந்துகொண்டேன். முற்போக்கான எண்ணங்களையும் தமிழ்த் தேசிய உணர்வையும் ஏந்தி நானும் வேறு சில மாணவத் தோழர்களும் சிறு அணியாகச் செயல்பட்ட காலம் அது. தமிழீழமே தீர்வு எனச் சுவரொட்டி ஒட்டினோம். பிரபாகரன் படங்களைத் தாங்கிய பத்திரிகைகளை விநியோகித்தோம். ஈழத்தை ஆதரித்தது மட்டுமல்ல கூடங்குளத்தை எதிர்த்து (ஆமாம், 1989 – 90லேயே!), ஈராக்கில் அமெரிக்காவின் யுத்தத்தை எதிர்த்து, மண்டல் கமிஷனை ஆதரித்து என நாங்கள் நடத்திய பல போராட்டங்களை இந்த ஆரணி – செய்யாறு கூட்டுச்சாலை பார்த்திருக்கிறது.

புன்செய் நிலங்கள் பரவிய அந்தத் தொண்டை மண்டலப் பகுதியில் பெரிய நகரமாக வளர்ந்துகொண்டிருக்கும் செய்யாறில் இளங்கோடைக் காலத்தின் மாலைச் சூட்டை நீண்ட நாட்களுக்குப் பின் அனுபவித்தபடி நிற்கிறேன். ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய அந்த இளம் மாணவனைப் பார்க்கிறேன். அவனுக்கு இருபது வயதுக்குள்தான் இருக்கும். பிரபலமான பல்கலைக்கழகமொன்றில் இன்று கணிப்பொறியியல் படிக்கிறான். ராஜபட்சே அரசு மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று முழங்கும் அவனது முகம் என்னைத் தொந்தரவு செய்கிறது. அந்தக் காலத்தில் எங்களோடு இணைந்து போராடிய தோழர் ஒருவரின் மகன்தான் இவன்! முகத்திலும் அகத்திலும் அவனிடத்தில் நான் அவனது தந்தையைப் பார்க்கிறேன். அதே இளமை முறுக்கு. அதே வாதப் பிரதிவாதக் குரல். அந்தக் கூட்டத்துக்கு அவன் தந்தையும் வந்திருந்தார். எந்த இடத்தில் நானும் என் தோழரும் ஈழத்தை ஆதரித்துப் போராடினோமோ, எந்த இடத்தை விட்டு நாங்கள் வாழ்க்கைப் படகிலேறி வெவ்வேறு திசைகளில் அகன்று போனோமோ அதே இடத்தில் அவருடைய மகன் இன்று எங்களைச் சந்திக்கச் செய்திருக்கிறான்.

1990க்கும் 2013க்கும் இடையில் இந்தியா எவ்வளவோ மாறிவிட்டிருக்கிறது. தமிழ்நாடு இன்னமும் அதிகமாக மாறியிருக்கிறது. இன்று செய்யாறு தனக்கு அருகிலேயே பெரிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தைப் பெற்றுள்ளது. அறுபதுகளில் திராவிட இயக்கக் கோட்டையாக இருந்த இந்த ஊரில் இன்று உள்ளவர்களுக்குப் புலவர் கா.கோவிந்தனைப் பற்றி ஏதாவது தெரியுமா என்பதுகூட ஐயமே. தொண்ணூறுகளில் பாமக, அதன் பிறகு விடுதலைச் சிறுத்தைகள், சில ஆண்டுகளாக தேமுதிக என புதுமுகங்களைப் பார்த்துக் கொண்டே வந்த செய்யாறு இப்போது மேலும் ஒரு புதிய அரசியல் முகத்தைப் பார்க்கிறது: தமிழ்த் தேசிய அரசியல் முகம். கூட்டுச்சாலையில் மாணவர்களின் பேச்சும் ஆர்ப்பாட்ட முழக்கமும் அவர்களது அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. போராட்டத்தைப் பிசுபிசுக்க வைக்க கல்லூரிகளையும் விடுதிகளையும் மூடி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியது ஜெயலலிதா அரசு. பாவம் அம்மா!  மேற்படி ஊர் திரும்பிய பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த (செய்யாறை சொந்த ஊராகக் கொண்ட) மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்துகிறார்கள்.

1990களின் தொடக்கத்துக்கும் இன்றைக்கும் இடையில் எத்தனையோ மாற்றங்கள். ஆனால் அந்த இடத்தில் நானும் என் தோழர்களும் எழுப்பிய முழக்கத்திலிருந்து இன்று என் தோழரின் மகன் எழுப்பும் முழக்கம் மாறவேயில்லை.

“தமிழர்களின் தாகம் தமிவீழத் தாயகம்!”

“மத்திய அரசே, மத்திய அரசே, மானங்கெட்ட மத்திய அரசே!”

வரலாறு படைத்த தலைமுறை

இந்தத் தலைமுறையைப் பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. மார்ச் இரண்டாம் வாரத் தொடக்கத்தில் சிறு நிகழ்வாகத் தொடங்கிய லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் ஒரே வாரத்தில் தமிழகம் தழுவிய மாணவர் இயக்கமாக மாறியது. தன் இறுதி நேரப் பார்வைகளால் தமிழ்ச் சமூகத்தின் ஆழ்மனத்தை அசைத்த பாலச்சந்திரன் புகைப்படங்கள்தான் தொடக்கப் புள்ளியாக இருந்தன. அது தீப்பொறியாக மாறி சட்டெனப் பற்றிக் கொண்டது.

ஆனால் அப்படிப் பற்றிக் கொள்ளும் நிலைமையில்தான் நம் மாணவர் சமூகம் இருந்ததா என்னும் கேள்வி எழுகிறது. ஈழத்திலிருந்து வெளிவந்த முதல் புகைப்படம் அல்லது வீடியோ இதுவல்ல. இரண்டாண்டுகளுக்கு முன் வெளிவந்த சேனல்-4ன் த கில்லிங் ஃபீல்ட்ஸ் ஆஃப் சிறீலங்கா ஏன் நம்மை உக்கவில்லை? இசைப்பிரியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுக் கிடந்த அந்தக் காட்சி நம் மனசாட்சியை ஏன் அன்று கொதிப்படையச் செய்யவில்லை? ஒருவேளை பாலச்சந்திரன் பிரபாகரனின் மகன் என்பதால் இருக்குமோ? அப்படியானால் பிரபாகரனின் உடலே நந்திக் கடலோரம் தலை பிளக்கப்பட்ட நிலையில் காட்டப்பட்டபோது தமிழகம் கொதித்தெழவில்லையே? இடையில் நடந்தது என்ன?

2009ல் தண்ணீர் ஏரியாக இருந்த தமிழ் மாணவர் சமூகம் 2013க்குள் பெட்ரோல் ஏரியாக மாறியிருக்க வேண்டும். அதனால்தான் ஒரு தீப்பொறி அதன் மேல் விழுந்தவுடன் சட்டென்று தீப்பிடித்துக் கொண்டது. 2011 அரபு வசந்தப் போராட்டங்களை யார் முன்னறிவித்தார்கள்? திடீரென எகிப்து, துனீசியா, லிபியாவில் அரசியல் சமன்பாடுகள் மாற்றமடைந்தன. இங்கே ஏற்பட்டிருப்பதும் வசந்தப் புரட்சிதான். தமிழ் வசந்தம். உள்ளொடுங்கி உறையவைத்த குளிர்காலம் முடிந்துவிட்டது. விரிந்து மலரும் இளவேனில் தொடங்கியிருக்கிறது. ஆனால் 2013ன் நெடுங்காலத் தாக்கத்தை உணர நாம் பொறுத்திருக்க வேண்டும்.

2009 மே நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசும் திமுகவும் வெற்றி பெற்றபோது, ஈழப் பிரச்சனை தமிழ்நாட்டில் ஒரு அரசியல் பிரச்சனையே அல்ல என அப்போது வலது கோடியிலிருந்தவர்கள் முதல் இடது கோடியிலிருந்தவர்கள் வரை பேசினார்கள். அது காட்சிப் பிழை என்பது இப்போது தெரிகிறது. அந்தக் கொடூரமான யுத்தம் ஒரு விடுதலைப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த நிலையில் எதிர்வினையாற்ற இயலாத கையறு நிலையில் தமழகம் இருந்தது என வேண்டுமானால் கூற முடியும். எப்படியாவது போர் முடிந்து அமைதி திரும்பினால் போதும் என்ற நிலையில் மக்கள் இருந்தார்கள். தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக அந்தப் பிரச்சனை இருந்தது. விடுதலைப் புலிகள் மீதும் விமர்சனம் இருந்தது. எல்லாம் விதிவசப்பட்ட நிலையில் நடந்ததாகத் தோன்றியது. அப்போது யாருடைய முகத்திரையும் கிழித்தெறியப்பட்டிருக்கவில்லை.

2009ல் இருந்த கையறு நிலையும் ஆற்றாமையும் மனக்குமைவும் நீங்கி கோபமும் சீற்றமும் தெளிவும் தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கின்றனவா? அதுதான் என் தோழரின் மகனைக் களமிறங்கச் செய்ததா? அதனால்தான் படிக்கிற பிள்ளைக்கு இதெல்லாம் எதற்கு என நினைக்காமல் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் போராட்டங்களை ஆசீர்வதித்தார்களா?

500கும் மேற்பட்ட கல்வி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் களமிறங்கினர். ஐடிஐ முதல் ஐஐடி வரை கொடி தூக்கிய பேரதிசயம். சாதி, மத, மொழி (ஆமாம் மொழிதான்) பேதங்களைக் கடந்த ஓர் இணைவு. பெரும்பாலும் ஒரே மாதிரியான கோரிக்கைகள். கட்சிகள், அமைப்புகளின் பின்னால் போகாமல் சுயமாக தங்கள் போராட்ட முனைகளையும் திட்டங்களையும் வடிவமைத்துக் கொண்ட பாங்கு. வன்முறைக்கு இடமே தராமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய ஒழுக்கம். ஒருநாள் உண்ணாவிரதம் என்கிற அடையாளப் போராட்டங்களுக்குப் பதிலாக தொடர்ச்சியாக பல நாட்கள் பட்டினி கிடந்த வைராக்கியம். தேர்வு வரப்போவது தெரிந்து ஜெனீவா கூட்டத்தை முன்னிறுத்தி அலை அலையாகக் கிளம்பிய துணிபு நம்ப முடியவில்லை! அரசியல் தெரியாத, சமூக நோக்கமற்ற, சுயநலம் பிடித்த தலைமுறை என்று நமது அறிவுஜீவிகளாலும் அரசியல் இயக்கங்களாலும் விமர்சிக்கப்பட்ட சமூகமா இது?

பல மாணவர்களிடம் நேரிலும் தொலைபேசியிலும் உரையாடினேன். நூற்றுக்கணக்கான ஃபேஸ்புக் தகவல்களையும் அலசினேன். சந்தேகமேயில்லை. தமிழகம் 1965ல் கண்ட இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைப் போல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமே இதுவும்.

அரசும் அரசியல் கட்சிகளும் இதை எதிர்பார்க்கவில்லை. போராட்டத்தின் மீது கைவைக்க ஜெயலலிதா அரசு தயங்கியது. விதிவிலக்கான சில சம்பவங்களைத் தவிர பெரும்பாலும் சர்வ ஜாக்கிரதையாக அரசு இதைக் கையாண்டது. இது காங்கிரஸ் – திமுகவுக்கு எதிரான போராட்டம் எனக் கருதி ஜெ. அப்படி நடந்துகொண்டிருக்கலாம். அதனால்தான் மாணவர் போராட்டங்களின் கோரிக்கைகளை மையமாக வைத்து மார்ச் 27ல் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தையும் அவர் நிறைவேற்றினார். மே 2009லிருந்தே துரோகிப் பட்டத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் திமுக, ஐமுகூ அரசை விட்டு வெளியேறும் நிலைக்கு உள்ளானது. காங்கிரஸ், பாஜக, சிபிஎம் தவிர கிட்டத்தட்ட பிற கட்சிகள் அனைத்துமே மாணவர்களின் பின்னால் சென்றன. மற்ற திராவிட அமைப்புகளும் தமிழ்த் தேசிய அமைப்புகளும் இடதுசாரி அமைப்புகளும்கூட உற்சாகமடைந்து போராட்டம் நடந்த இடங்களில் மாணவர் தலைவர்களை வென்றெடுக்கும் பொருட்டு வரிசையில் நின்றன.

புதுதில்லியும் திகைத்துப் போனது. ஆனால் அசைந்து கொடுக்கவில்லை. மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது குறித்து என்றுமே ஆர்வம் காட்டாத சோனியா – மன்மோகன் – சிதம்பரம் கூட்டணிக்கு இதெல்லாம் வெறும் தொந்தரவு மட்டுமே. தேசியக் கட்சிகளும் ஊடகங்களும்கூட இதை எதிர்பார்க்கவில்லை. தமிழகம் உட்பட இந்தியா முழவதும் உள்ள தேசிய ஊடகங்கள் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பியக்கம், தில்லியில் நடந்த பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான போராட்டம் ஆகியவை தொடர்பாக மேற்கொண்ட அணுகுமுறைகளும் தமிழக மாணவர் போராட்டம் தொடர்பாக எடுத்த அணுகுமுறையும் நேரெதிரானவை. இந்தப் போராட்டத்தை மறைப்பதும் திரிப்பதுவுமே அவர்களின் ஊடக உத்திகளாக இருந்தன. போராட்டம் தொடங்கி இரு வாரங்கள் கழிந்த நிலையில், சென்னையிலிருந்து வெளிவரும் ஃபிரண்ட்லைனின் ஏப்ரல் 5 தேதியிட்ட இதழ் மாணவர்கள் போராட்டம் குறித்து ஒரு வரிகூட எழுதவில்லை. ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு எழுந்தபோது அதை விமர்சிக்க தேசிய ஊடகங்கள் பயன்படுத்திய வாசகங்கள் அனைத்தும் வெறுப்பும் காழ்ப்பும் கலந்த எதிர்வினைகளாகவே இருந்தன. அதாவது பாகிஸ்தான் விடயம் என்றால் அவர்கள் காட்டும் தேசபக்த எதிர்வினைக்கு எதிரான விதத்தில் அவை இருந்தன. ஆனால் மாணவர்களும் தமிழக மக்களும் இவற்றைப் பொருட்படுத்தவேயில்லை.

மாற்றம் நிகழும் தருணத்தில்

அடுத்த பாத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நடைபெறச் சாத்தியமுள்ள மிக முக்கியமான அரசியல் திருப்பங்களுக்கான தொடக்கப் புள்ளியாக இன்றைய மாணவர் போராட்டம் இருக்கக்கூடும். இந்தப் போராட்டத்தைக் குறைத்தோ மிகையாகவோ மதிப்பிடாமல், முன்அபிப்பிராயங்களற்ற நிலையில் புறவயமாக நின்று பார்த்தால், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மூன்று புதிய அம்சங்களை அறிய முடிகிறது.

முதலாவது, இந்தப் போராட்டம் திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் காலம் முடிந்துபோனதை அறிவித்திருக்கிறது. அவற்றுக்கு மாற்றாக ஏற்றுக் கொள்ளத் தக்க கட்சிகளாக தேமுதிகவோ தேசியக் கட்சிகளோ இல்லை என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது. இன்றைய இளம் தலைமுறைத் தமிழர்களின் விருப்பங்களுக்கு ஈடு கொடுக்கும் அரசியலை முன்னெடுக்க இங்கே யாரும் இல்லை. பிரதான அரசியல் கட்சி ஒன்றுக்கான இடம் காலியாக இருக்கிறது. ஆனால் அதை நிரப்புவதற்கான திராணி கொண்ட அரசியல் கட்சிகளோ குழுக்களோ இருப்பதாகத் தெரியவில்லை.

இரண்டாவது, தமிழ்ச் சமூகத்தில் எதிர்ப்பு அரசியல் அழிந்துவிடவில்லை என்பது நல்ல செய்தி. பொது விவகாரங்களுக்காக மாணவர்கள் போராட முன்வருவார்கள் என்பதும் அப்படிப்பட்ட போராட்டங்கள் தமிழகம் தழுவிய போராட்டங்களாக அமையக்கூடும் என்பதும் இதன் மூலம் தெரியவந்திருக்கின்றன.

மூன்றாவது, இந்தப் போராட்டம் தமிழ்த் தேசிய அரசியலை மைய நீரோட்ட அரசியலாக மாற்றியிருக்கிறது. ஆனால் இது பிற்போக்கான, இனவாதத் தமிழ்த் தேசியமல்ல. மாறாக நவீனமான, இனவுரிமை சார்ந்த தமிழ்த் தேசியம். சாதியத் தமிழ்த் தேசியமல்ல. சர்வதேசத் தமிழ்த் தேசியம்.

இந்த மூன்று அம்சங்களின் ஊடாகப் பின்-திராவிட யுகம் ஒன்றுக்குள் தமிழகம் நுழைகிறது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் எனும் மீனைக் கருவாடாக்கிய ஆண்டு 1965 என்றால், திராவிடக் கட்சிகளைக் குப்பைத்தொட்டிக்குள் வீசிய ஆண்டாகவே 2013 வரலாற்றில் பதிவாகும் (ஆனால் திமுகவும் அதிமுகவும் உடனே காணாமல் போய்விடும் என்று இதற்கு அர்த்தமல்ல). 1990களில் அம்பேத்கர் பிறந்த நாள் நூற்றாண்டுக்குப் பின் தமிழ்நாட்டில் உருவான தலித் இயக்கம் திராவிட இயக்கத்தின் மீது தீவிரமான விமர்சனங்களை முன்வைத்தது. திராவிட இயக்கத்தின் உள்ளார்ந்த குறைபாடுகளையும் போதாமைகளையும் அது அம்பலப்படுத்தியது. ஆனால் அவற்றை எழுப்பியது தலித்துகள் என்பதால் அந்த விமர்சனங்கள் அவ்வளவாகப் பொருட்படுத்தப்படவோ அங்கீகரிக்கப்படவோ இல்லை. 2009க்குப் பிறகு திராவிடக் கட்சிகளுக்கு எதிராகத் தமிழ்த் தேசிய எதிர்ப்பியக்கம் ஒன்று உருவானது. ஆனால் அது வெறுமனே திராவிட எதிர்ப்பு அரசியலாக இருந்தது. திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பங்கை அது நிராகரித்தது. முன்னோக்கிப் போவதற்குப் பதில் பின்னோக்கிச் சென்ற அந்தத் திடீர் தமிழ்த் தேசியம் இனவாத, பிற்போக்கு, சாதிவாத அமைப்புகளின் சந்தர்ப்பவாதக் கூட்டணியாகவும் உருவெடுத்தது.

ஆனால் 21ஆம் நூற்றாண்டின் தமிழ்த் தேசிய அரசியலுக்கான விவாதங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருந்தன. கடவுள் மகத்தானவர்தான் போலும்! தமிழ்த் தேசிய அரசியல் எந்த பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே இந்த மாணவர் போராட்டத்தை அவர் உருவாக்கியருளியிருக்கிறார். தமிழக அரசியலில் சமீப காலத்தில் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கான விடைகளை இந்தப் போராட்டம் சூசகமாகத் தந்திருக்கிறது. அதற்கு முன் இந்தப் போராட்டத்தின் தன்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். யார் இந்த மாணவர்கள்? இவர்களது சமூகப் பின்புலம் என்ன? இவர்கள் எந்த சமூக இயக்கப் போக்கைப் பிரதிபலிக்கிறார்கள்? இந்தப் போராட்டம் விதிவிலக்கானதா?

போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டு நடுத்தர வர்க்கத்து மாணவர்கள். இவர்கள் திராவிட இயக்கத்தால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பலன் பெற்று சமூக முன்னேற்றமடைந்தவர்களின் வாரிசுகள். ஆனால் இவர்கள் வகைமாதிரியான திராவிட அரசியலின் பிரதிநிதிகள் அல்ல. எதற்கெடுத்தாலும் ஸ்டிரைக் செய்யும் மாணவர்களும் அல்ல. படிப்பிலும் வேலையிலும் தங்களுக்கான பாதையைத் தெரிவுசெய்துகொண்டு முன்னேறக்கூடிய மனநிலை கொண்டவர்களாக இருந்தாலும், முக்கிய தறுவாயில் களத்தில் இறங்கத் தயங்கவும் மாட்டார்கள் என்பதை இப்போது நிரூபித்திருக்கிறார்கள். மதிப்பிழந்துபோன, முன்மாதிரியாகக் கொள்ள முடியாத அரசியல் கட்சிகளுக்கு வெளியே தமக்கென சுயமான அரசியல் வெளியை உருவாக்கும் விளைவு இவர்களிடம் தென்படுகிறது. சமூகத்தில் இதற்கு அடுத்த படிநிலையில் இருக்கும் உழைக்கும் வர்க்கங்களைச் சேர்ந்த மாணவர்களும்கூட அரசியல், கலாச்சார ரீதியில் புதிய முகத்தை இந்தப் போராட்டத்தில் காட்டியிருக்கிறார்கள். அரசுக் கலைக் கல்லூரி முதல் அண்ணா பல்கலைக்கழகம் வரை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தன்மைதான் தெரிந்தது.

அவர்கள் தமக்கிடையில் உறவையும் அமைப்பாக்கத்தையும் உருவாக்கத் தவறவில்லை. தங்கள் சொந்தப் பணத்தை செலவழித்து, ஃபேஸ்புக் போன்ற புதிய தொடர்பு முறைகளைப் பயன்படுத்தித் தகவல்களையும் ஆதரவையும் பகிர்ந்துகொண்டார்கள். அதன் மூலம் கட்சிகளாலும் உருவாக்க முடியாத சீர்மையான அரசியல் இயக்கத்தை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களுடைய முழக்கங்கள் உடனடி கோரிக்கைகளும் அதீதமான லட்சியங்களும் கலந்தவையாக உள்ளன. ஆனால் அவர்களுக்கு அதில் தெளிவு இருக்கிறது. யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்த வாசகங்களை அவர்கள் தூக்கிச் செல்லவில்லை என்பது தெளிபு.

தங்களுடைய போராட்டம் அனைத்திந்திய அளவிலும் சர்வதேசிய அளவிலும் தாக்கம் செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில் வன்முறை இல்லாமல் போனதற்கு அச்சமோ ஜெ அரசின் திட்டமிட்ட மென்மைப் போக்கோ காரணமல்ல. மாறாக ஒரு துளிகூட எல்லை மீறிவிடக்கூடாது என மாணவர்கள் நினைத்ததே முக்கிய காரணம். புத்த பிக்குகளும் அரவிந்த ஆசிரமும் தாக்கப்பட்டது போன்றவை தமிழ்த் தேசிய அமைப்புகளின் கைவரிசையே ஒழிய அவை மாணவர்களால் ஏற்கப்பட்டவை அல்ல.

எந்தப் புலிக்கொடியைக் கண்டு திராவிடக் கட்சிகள் அஞ்சினவோ அதை இவர்கள் உயர்த்திப் பிடித்தார்கள். மத்திய அரசைக் கண்டு நடுங்கி ஈழம் என்று சொல்வதற்குக்கூட பெரிய கட்சிகள் அஞ்சிய நிலையில் அந்தச் சொல்லைத் தமிழ்நாட்டின் தாரகமந்திரமாக்கினார்கள். புதுதில்லியிடமும் வாஷிங்டனிடமும் எந்த மொழியில் பேச வேண்டுமோ அந்த மொழியில் பேசினார்கள். பான் கீ மூனை சந்திக்கு இழுத்தார்கள். ஆனால் நவிபிள்ளையை வரவேற்றார்கள். தமிழக மாணவர்களின் போராட்டம் ஒபாமா கோட்பாடு (Obama octrine) என்றழைக்கப்படும் நடப்பு அமெரிக்க உலக அரசியலுக்கு விடப்பட்ட சவால் என்பதை ஒரு ராஜதந்திரியால் புரிந்துகொள்ளாமலிருக்க முடியாது.

நகர்மயமாதல், கல்வி, வேலைவாய்ப்பு, சமூக அதிகாரம் ஆகியவை மூலம் இன்றைய நிலைக்கு இவர்கள் வந்திருப்பதற்குத் திராவிட இயக்கமே காரணம். ஆனால் அந்த இயக்கத்தின் மூன்றாம் தலைமுறை துரோகமிழைத்த நிலையில், அதைத் தாண்டிச் செல்கிறார்கள் பெரியாரின் பேரன்கள். அதைப் போலவே தமிழ்த் தேசியத்தை இனவாத, சாதிவாதச் சிறையிலிருந்து மீட்பார்கள் என்றும் இந்தப் பிராந்தியத்தின் புவிசார் அரசியலின் முக்கிய சக்தியாக தமிழர்களை ஆக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.

பணமும் சாதியுமே இனி தமிழக அரசியலை ஆளும் என்னும் அவநம்பிக்கையை கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மக்கள் உடைத்தெறிந்தபோதே சில நல்ல அறிகுறிகள் புலப்பட்டன. கூடங்குளம் எதிர்ப்பியக்கம் தமிழகத்தில் மாற்று அரசியல் ஒன்றை மைய அரசியலாக மாற்றியது. பஸ்களை உடைத்தும் கடைகளை அடைத்தும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு மாற்றாக கோரிக்கையின் பலத்தை மட்டுமே நம்பி அரசாங்கத்தை ஆத்மபலத்தோடு எதிர்கொள்ளும் அரசியலை அதுதான் தொடங்கிவைத்தது. இன்றைய மாணவர் போராட்டத்திலும் அதைப் பார்க்க முடிகிறது.

தர்மபுரியில் நடந்த சாதி வெறியாட்டத்துக்குப் பிறகு தமிழகம் வெளிப்படையாகவே சாதிவெறிச் சமூகமாகவே மாறிவிடுமோ என்று அச்சம் ஏற்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட தலித்களுக்கு ஆதரவாக தலித் அல்லாதவர்கள் நின்றதையும் திராவிட அமைப்புகளே வெளிப்படையாக தலித்களுடன் இணைந்து நின்றன என்பதையும் பாமகவிலிருந்து பிரிந்த பண்ருட்டி வேல்முருகனும் பேராசிரியர் தீரனும் டாக்டர் ராமதாஸை வெளிப்படையாகவே எதிர்த்ததையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இறுதியில் ராமதாஸ்களும் மணிகண்டன்களும் காமெடி வில்லன்களாவார்கள் என்பதையே இன்றைய சமூகச் சூழல் காட்டுகிறது.

சுப.உதயகுமாரன் முன்வைத்த ‘ஆபத்தான ஆறு, ஆதரவான நூறு’ என்கிற கருத்தாக்கம் நிஜமாகி வருகிறது. நேற்று வரை fringe groups என்று இளக்காரமாகப் பார்க்கப்பட்ட அமைப்புகள்தாம் இன்று தமிழ்நாட்டின் பிரதான அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறியுள்ளன. மே 17 இயக்கம், நாம் தமிழர் கட்சி, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி போன்றவை சில உதாரணங்கள். 2009 முதல் இவை நடத்திவந்த ஈழ ஆதரவு இயக்கங்களினூடாகப் போடப்பட்ட விதைகளே தமிழகம் முழுவதும் முளைத்துள்ளன. இப்படித்தான் தண்ணீர் ஏரி பெட்ரோல் ஏரியாக மாறியிருக்கிறது.

புதிய அரசியல் கலாச்சாரம்

நாளை என்ன ஆகும்? இன்றைய மாணவர் போராட்டம் தந்த உத்வேகத்தால் அல்ல; மாறாக அதை நடத்தியவர்களின் தன்மைகளை வைத்துப் பார்க்கும்போது, நம்பிக்கை பிறக்கவே செய்கிறது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தைத் திராவிட இயக்கம் வரையறுத்தது என்றால் இருபத்தியோராம் நூற்றாண்டுத் தமிழகத்தை இப்போது உருவாகிவரும் இந்தப் புதிய போக்கிலிருந்து முளைக்கும் அரசியல் நிர்ணயிக்க முடியும். திராவிட இயக்கத்தால் உருவான சாதகமான விளைவுகளை அங்கீகரித்து, பாதமான விளைவுகளை நிராகரித்து, இன்றைய எதார்த்தங்களுடன் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றை உருவாக்கும் சக்தி இந்தத் தலைமுறைக்கு உள்ளது. அதாவது பின்-திராவிட அரசியல் (எதிர் திராவிட அரசியலை அல்ல) அவர்கள் முன்னெடுக்க முடியும்.

மத்திய, மாநில உறவுகளில் இது நிச்சயமாகப் புதிய வியூகத்தை வகுக்கும். இன்றைய தலைமுறை இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் தமிழகத்தின் பங்கை நிச்சயம் கோரும். அனைத்திந்திய அரசியலில் கூட்டணி அரசியல் என்னும் சந்தர்ப்பவாத அரசியலுக்கு மாறாக ஃபெடரலிச அல்லது கான்ஃபெடரேஷன் முறையிலான அரசியலுக்காக இந்தியாவின் பிற மாநிலங்களிலுள்ள மாநில உரிமை அல்லது தேசிய இன உரிமைச் சக்திகளுடன் சேர்ந்து செயல்படுவதற்கான பரந்த மனப்பான்மையும் திறமையும் உடையவர்களாக இவர்கள் விளங்குவார்கள்.

மொழி அரசியலில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து, தமிழுக்கான உரிமையை இந்தத் தலைமுறை கோரும். ஆனால் மொழி அடிப்படைவாதக் கண்ணோட்டத்தை ஏற்பதற்கான எந்த அறிகுறியும் இவர்களிடம் இல்லை. செய்யாறில் அன்று நான் கண்ட தட்டிகளில் சரிபாதி ஆங்கிலத்தில் இருந்தன. போராடும் மாணவர்களில் பலர் தனியார் கல்வி நிறுவனங்களில் இந்தி படித்தவர்கள்.

சாதி ஒழிப்பு எனச் சொல்லிக் கொண்டே சாதி நிர்ணயவாத அரசியலில் சரணடைந்த திராவிடக் கட்சிகளின் அரசியலை இவர்களால் மாற்ற முடியுமா என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியவில்லை. இந்தப் போராட்டம் திராவிடக் கட்சிகளின் மீது மட்டும் விழுந்த அடியல்ல. குறுகிய மனப்பான்மைகளாலான சிறையில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியத்தை விடுவிக்கும் போராட்டமும்தான். பல்வேறு சமூகத்தவர்களுடன் மெய்யுலகிலும் மெய்நிகர் உலகிலும் பழகிக் கொண்டிருக்கும் இந்தத் தலைமுறையிடம் ஒற்றை மொழிவாதமோ சாதி அல்லது மொழி ரீதியாக ஒரு தப்பினரை ஒதுக்கும் அரசியலோ வெற்றி பெற வாய்ப்பில்லை. சுதந்திரமாக வாழும் பல சமூகத்தவர்களுடன் பழக நேர்வதாலேயே அப்படிப்பட்ட சுதந்திரம் தங்களுக்கு இல்லையே என யோசிப்பவர்களாக இவர்கள் இருப்பார்கள். ஆனால் மற்றொருவரின் சுதந்திரத்தைப் பறிக்கும் இனவாத அரசியலை ஏற்பதற்கான சமூக, கலாச்சார அடிப்படை இவர்களிடம் இல்லை. தன்னம்பிக்கையும் உலக அறிவும் இருப்பதால்தான், இவர்கள் உரிமை மறுப்புக்கும் பாரபட்சத்துக்கும் எதிராகப் போராடுகிறார்கள். தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு என்பதால் அல்ல.

இந்த மாணவர் போராட்டத்தின் முக்கிய அம்சம் மாணவிகளின் பங்கேற்பு. தலைமை வகிப்பதிலும் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்களில் கலந்துகொள்வதிலும் அவர்களின் பங்கேற்பு முழுமையாக இருந்தது. தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் பங்கேற்பு இணையாக இருந்த போராட்டங்களே அரசியல் மாற்றங்களைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றன. பெற்றோர்களின் முழு சம்மதத்துடன் பாலச்சந்திரன் புகைப்படங்களையும் முகமூடிகளையும் சுமந்து வந்த குழந்தைகள் இப்போராட்டம் எவ்வளவு ஆழமாக இச்சமூகத்தில் ஊடுருவியிருப்பதற்கான சாட்சியங்களாக இருக்கிறார்கள்.

இந்தப் பொருளில் பின்-திராவிட, புதிய தமிழ்த் தேசிய அரசியல் தமிழகத்தில் தொடங்கியிருப்பதாகவே தோன்றுகிறது. அது ஒரு சகாப்தத்தின் தொடக்கமாக இருக்குமா, கணநேர நீர்க்குமிழியாக உடைந்துபோய்விடுமா என்பதை வரலாறு தீர்மானிக்கும் என்று சொல்லித் தப்பித்துவிடலாம். ஆனால் மாற்றத்தை விழைபவர்கள் அப்படித் தப்பிக்கமாட்டார்கள்.