மொழியுரிமைகளுக்கான சென்னைப் பறைசாற்றம்

 மொழியுரிமைகளுக்கான சென்னைப் பறைசாற்றம்

மொழியுரிமை மாநாடு
19-20, செப்டம்பர், 2015
சென்னை

”சென்னைப் பறைசாற்றம்” என்று அறியப்படும் இந்த மொழியுரிமைகளுக்கான சென்னைப் பறைசாற்றத்தில், கையொப்பமிட்ட அமைப்பினரும் தனிநபர்களும் சென்னையில் செப்டம்பர் 20, 2015 அன்று ஒன்றுகூடி,

மனித உரிமைகளைப் பறைசாற்றும் முன்னோடிகளான 1948 அனைத்துலக மனித உரிமைகள் பறைசாற்றம், 1966 குடிமை மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு உடன்படிக்கை, 1992 ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுமன்றத்தின் தீர்மானம் 47/135, 1989 பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் மரபாவணம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு மற்றும் வட்டார பறைசாற்றங்கள், சட்டங்கள், உடன்பாடுகள், மரபாவணங்கள் ஆகியவற்றின் உச்சமாக 1996 ஜூன் 9ஆம் நாள் ஸ்பெயினில் பார்சிலோனா நகரில் வெளியிடப்பட்ட மொழியுரிமைகளுக்கான அனைத்துலகப் பறைசாற்றம் என்ற இவற்றைக் கருத்தில் கொண்டும்,

எந்த ஒரு மொழியையும் மற்ற எந்த மொழியின் மீதும் திணிப்பதையும் அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் ஒருதலைச்சார்பாக முன்னிலைப்படுத்தப்படுவதையும் தடுப்பது அல்லது நீக்குவது பற்றி இந்திய ஒன்றியத்தின் பல்வேறு மொழிச் சமூகங்கள் உருவாக்கிய பல்வேறு தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகளையும் மொழி உரிமைகளையும் கருத்தில் கொண்டும்,

இந்திய ஒன்றியத்திலுள்ள பல்வேறு குடிகள் பேசும் மொழிகள் உயிர்ப்போடு இருப்பதற்கும் வளர்வதற்கும் ஊறு விளைவிப்பதாக இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் தற்போதைய மொழிக்கொள்கைகள் இருக்கின்றன என்பதைக் கருத்தில் கொண்டும்,

இந்திய ஒன்றியத்திலுள்ள மொழிகள் தொடர்பான இந்திய அரசமைப்புச்சட்டத்தின் நடப்புக் கூறுகளும், அவற்றின் அடிப்படையிலான சட்டங்கள், விதிகள், வழிகாட்டு முறைகள் ஆகியவை அனைத்தும் மொழி நிகர்மையையும் மொழி உரிமைகளையும் அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்பதுடன், அவை பல்வேறு மொழியினங்களைச் சேர்ந்த மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் இருப்பவை அல்ல என்பதைக் கருத்தில் கொண்டும்,

ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பையும், அதற்கு பல்வேறு அனைத்திந்திய அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஊடகங்கள் உள்ளிட்ட அதிகார மையங்களும் மாநில அரசுகளும் துணைநிற்பதையும் முன்னெடுத்துச்செல்வதையும் கருத்தில் கொண்டும் இந்தித் திணிப்புக்கு எதிராக பல்வேறு மொழிச் சமூகங்கள் நடத்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இயக்கங்களைக் கருத்தில் கொண்டும்,

வளர்ச்சியின் பெயரால் ஆங்கிலத்துக்குக் கூடுதல் அழுத்தம் தரப்படுவதையும் நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கூறின் மீதும் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துவதும் எங்கும் ஊடுருவிப் படர்வதும் மிகுந்துவரும் நிகழ்வாக இருப்பதையும் பொது மற்றும் தனி வெளிகளில் இந்திய ஒன்றியத்திலுள்ள எல்லா மொழிகளையும் பெயர்த்து அவற்றின் இடத்தை அது நிரப்புவதையும் அதன் வழியாக நமது மொழி சார்ந்த, பண்பாடு சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த தேர்வுகள் கட்டுப்படுத்தப்படுவதையும் கருத்தில் கொண்டும்,

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாம் அட்டவணையில் பட்டியிலிடப்பட்டுள்ள மொழிகளின் சார்பாக முறையிடும் மக்கள் தங்கள் மொழிகளை இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக ஆக்கவேண்டும் என்று கோருவதையும் வேறு பல மொழிகளின் சார்பாக முறையிடும் மக்கள் தங்கள் மொழிகளை மேற்கண்ட அட்டவணையில் இணைக்கவேண்டும் என்று கோருவதையும் எண்ணிக்கையளவில் சிறிய மக்கள்தொகையினராக உள்ள நூற்றுக்கணக்கான மொழிச் சமூகங்கள் தங்கள் இனமொழிகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் போராடுவதையும் கருத்தில் கொண்டும்,

இந்திய ஒன்றியத்தின் மொழிகள் இந்திய ஒன்றியத்திலுள்ள மக்களின் பன்மைத்தன்மையைக் குறிக்கின்றன என்பதையும் இந்த மொழிகள் அந்தந்த மொழிச் சமூகங்களைப்பொறுத்தவரை அவற்றின் வரலாற்று, சமூக, பண்பாட்டு மற்றும் புவிப்பரப்பு முறையிலான உறுப்புகளாகவும் அவற்றிலிருந்து பிரிக்கப்படமுடியாத கூறுகளாகவும் இருந்துவருகின்றன என்பதைக் கருத்தில் கொண்டும்,

இந்திய ஒன்றியத்திலுள்ள மொழிகள் அவர்களின் சொந்தச் சூழல்கள், நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படைகளில் பல நூற்றாண்டுகளாக முகிழ்த்துவந்த மரபார்ந்த அறிவுமுறைகளைக் கொண்ட பேழைகள் என்பதையும் அவற்றை இழப்பது என்பது நமது மரபு, அறிவுத்தளம், மரபு சார்ந்த துறையறிவு ஆகியவற்றை இழப்பதாக ஆகிவிடும் என்பதைக் கருத்தில் கொண்டும்

பின்வருமாறு பறைசாற்றினர்

இந்திய ஒன்றியத்திலுள்ள எல்லா மொழிகளும் நிகரானவை என்றே கருதப்படுகிறது;  அத்துடன், ஒவ்வொரு மொழிக் குடும்பமும் அவரவர் மொழிகளை, ஒரு குடியாட்சிப் பின்புலத்தில், செய்யக்கூடிய எல்லா வழிகளையும் முறைகளையும் கடைப்பிடித்து, பாதுகாக்கவும், மேம்படுத்தவும், அதிகாரம் பெறும்படிச்செய்யவும் உரிமைகளைக் கொண்டிருக்கின்றன.

இந்திய ஒன்றியத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அரசாங்கத்தின் நிறைவேற்றுகை, நீதி மற்றும் சட்டமியற்றும் பிரிவுகளோடு தமது எல்லா உறவாடல்களையும் தன் தாய்மொழியைப் பயன்படுத்தி மேற்கொள்வதற்கான அடிப்படையான, அகற்றவியலாத உரிமை இருக்கின்றது, அவ்வாறே, அக்குடிமகனுடன் தன் எல்லா உறவாடல்களையும் தொடர்புப்பாடுகளையும் மேற்கொள்ள அவரது தாய்மொழியையே அரசாங்கமும் பயன்படுத்தவேண்டும். இந்திய ஒன்றியத்தின் எல்லா குடிமக்களும் தத்தம் தாய்மொழிகளில் கல்வி பெறுவதற்கான உரிமைகளை பெற்றிருக்கவேண்டும். இந்திய ஒன்றியத்தின் எல்லாக் குடிமக்களும் வணிக மற்றும் பொதுச் சேவைகளை தத்தம் தாய்மொழிகளில் பெறுவதற்கான உரிமைகளையும் உடையவர்களாக இருக்கவேண்டும்.

இந்திய ஒன்றியத்தின் எல்லா மொழிச் சமூகங்களும் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலும் கோரிக்கைகளின் அடிப்படையிலும், புதிய மொழிக்கொள்கை ஒன்றை உருவாக்கும் பொருட்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதி 17 மற்றும் தொடர்புடைய பிற கூறுகளை மீளாய்வு செய்யவும் திருத்தம் செய்யவும் ஒரு புதிய மொழி ஆணையத்தை உருவாக்கவேண்டும் என்று நாங்கள் அறைகூவல் விடுக்கிறோம்.

பின்வரும் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் அவற்றுக்கு உடனடியாக ஏற்பளிக்குமாறும் ஒன்றிய அரசை நாங்கள் கோருகிறோம்.
அ.  இந்திய அரசியல்சாசனத்தின் எட்டாம் அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளையும் ஒன்றிய அரசாங்கத்தின் அலுவல் மொழிகளாக ஆக்கவேண்டும்.
ஆ.  தற்போது ஒன்றிய அரசிடம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, பல மொழிச் சமூகங்களால் எழுப்பப்பட்டிருக்கிற கோரிக்கைகளுக்கு இணங்க, அவற்றின் மொழிகளை அரசியல் சாசனத்தின் எட்டாம் அட்டவணையில் சேர்க்கவேண்டும்.
இ.   தனிச்சிறப்பான அரசாங்க அமைப்பு ஒன்றின் மூலம், மிகக் குறைவான எண்ணிக்கையுள்ள மக்களால் பேசப்படுகிற மரபின, உள்நாட்டு மற்றும் பிற மொழிகளுக்கு ஆதரவளிப்பதுடன், அவற்றை அழிவிலிருந்தும் பிறமொழிகளோடு கரைந்து போவதிலிருந்தும் காப்பாற்ற அவசர நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்.

 

தாய்மொழியில் கல்வி பெறும் உரிமையை எந்த மட்டத்திலும் புறக்கணிக்கக்கூடாது என்பதை எல்லா அரசாங்கங்களும் உறுதிப்படுத்தவேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

ஏற்கனவே நிலவுகின்ற சட்டபூர்வமான மொழிச் சட்டங்களையும் கொள்கைகளையும் முழுமையாக நிறைவேற்றுமாறு எல்லா மாநில அரசுகளிடமும்ம் நாம் கோருகிறோம். அவ்வாறான கொள்கைகள் இல்லாத மாநிலங்கள் அவற்றை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்றும் கோருகிறோம்.

மேற்கண்ட கோரிக்கைகளை பறைசாற்றுவதைத் தொடர்ந்து, மேற்கண்ட இலக்கை அடைவதற்காக, நாடாளுமன்றத்தில் மொழி நிகர்மை மற்றும் உரிமைகள் சட்டமுன்வரைவு ஒன்றைக் கொண்டுவரவும் அதை நிறைவேற்றவும் வழிசெய்யுமாறு, அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட குடிமைச் சமூக அமைப்புகள், கல்வி மற்றும் பண்பாட்டு அமைப்புகள், ஊடக நிறுவனங்கள் ஆகியவற்றின் உறுதுணையை நாடுகிறோம். மேற்கண்ட மூன்று உரிமைகளை குறிப்பாகக் கோரியும், மொழியுரிமைகள், மொழிக் கொள்கைகள், மொழித் திட்டமிடல்கள் தொடர்பான பல்வேறு அம்சங்களை எதிர்கொள்வதற்குரிய புதிய மொழி ஆணையம் ஒன்றை உருவாக்கக் கோரியும் சட்டத்தின் அடிப்படையில் வலுவான தீர்மானங்களை நிறைவேற்றும்படி மாநில அரசாங்கங்களையும் உள்ளூர் அரசாங்கங்களையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

 

வரைவு செய்தவர்கள்:

 

ஆனந்த் ஜி, கர்நாடகம், (கன்னடம்), உமாகாந்தன் பி, கர்நாடகம், (கன்னடம், தமிழ்), கணேஷ் சேத்தன், கர்நாடகம், (கன்னடம்), கர்கா சாட்டர்ஜி, மேற்கு வங்கம், (வங்காளம்), கோமக்கம்பேடு ஹிமாகிரண் அனுகுலா, தமிழ் நாடு, (தமிழ், தெலுங்கு), ச.செந்தில்நாதன் (ஆழி செந்தில்நாதன்), தமிழ் நாடு, (தமிழ்), சாகேத் சிறீபூசண் சாகு, ஓடிஷா, (கோசலி), தமிழ்நெறியன், தமிழ் நாடு,  (தமிழ்), தீபக் பவார், மகாராட்டிரம், (மராத்தி), பி.பவித்திரன், கேரளம், (மலையாளம்), பிரியங்க் கே.எஸ்., கர்நாடகம், (கன்னடம்), மணி மு. மணிவண்ணன், தமிழ் நாடு, (தமிழ்), ரவிசங்கர் அய்யாக்கண்ணு, தமிழ் நாடு, (தமிழ்), வசந்த் ஷெட்டி, கர்நாடகம், (கன்னடம்), விவேக் வி, கர்நாடகம், (கன்னடம்), ஜோகா சிங் விர்க், பஞ்சாப், (பஞ்சாபி)

 

பரவட்டும் மொழிப்போர்த் தீ!

தமிழ்த் தேசியப் பேரியக்கம் 2016 சனவரி 24 அன்று மதுரையில் நடத்திய ’மொழிப்போர்-50’ மாநாட்டில் தமிழ் மொழியுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் ஆற்றிய உரை:

தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்திக் கொண்டிருக்கிற மொழிப் போர்-50 என்கின்ற இந்த மாநாட்டு மேடையில் அமர்ந்திருக்கும் மதிப்பிற்குரிய தோழர்களே; அரங்கத்தில் திரளாக அமர்ந்திருக்கின்ற தமிழ் நெஞ்சங்களே; இந்திய ஒன்றியத்தில் மொழிகளின் நிலைமை பற்றி சில விடயங்களை – சரியாகச் சொல்வதென்றால் எனது அனுபவங்களை –  உங்களோடு பகிர்ந்துகொள்ளத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.

கடந்த 2014ஆம் ஆண்டின் இறுதியில், தமிழ்நாட்டில், மதுரை உட்பட பல நகரங்களுக்கும் சென்றேன். எதிர்வரும் 2015ஆம் ஆண்டு என்பது 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் 50ஆவது ஆண்டு. இந்த ஆண்டில் நமக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன. 1965ஆம் ஆண்டு இந்தி எதிப்புப் போராட்டத்தின் பலனை யார் அறுவடை செய்தார்களோ அவர்கள் அதனை மறந்துவிட்டார்கள். எதற்காக இங்கே மிகப் பெரிய போராட்டம் வெடித்ததோ, அதன் நோக்கங்களை அவர்கள் மறந்து கடந்து சென்று நெடுங்காலமாகிறது. நாமெல்லோரும்தான் இணைந்து அந்த ஈகியருக்கு வழக்கம்போல ஒரு சடங்காக சனவரி 25ஆம் தேதியன்று மூலக்கொத்தளத்திலுள்ள அந்த நடராசன்-தாளமுத்து நினைவகத்திற்குச் சென்று ஒரு மாலை போட்டு மரியாதை செய்கிறோம்; அன்றைய தினம் மாலை வேளையில் தமிழ்நாட்டில் சில இடங்களில் சில நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். அதோடு முடிந்துவிடுகிறது. மொழிப் போர் ஈகியர் நினைவு நாள் என்பது இவ்விதம் முடிந்துபோகாமல் இருக்க, இந்த 50ஆம் ஆண்டினை மொழிப் போருக்கு, மொழியுரிமைப் போராட்டத்துக்கு புத்துயிர் அளிக்கக்கூடிய ஒரு போராட்ட ஆண்டாக மாற்ற வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும், உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று கேட்கத்தான் மதுரை உட்பட பல நகரங்களுக்கும் சென்றிருந்தோம்.

அதன் பிறகு தமிழ்த் தேசியப் பேரியக்கம் உட்பட கிட்டத்தட்ட 20 தமிழ் அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், புரட்சிகர அமைப்புகள் மற்றும் தமிழ் மொழிக்காகப் போராடி வருகின்ற தனிநபர்கள் என்று எல்லோருமாகச் சேர்ந்துதான் இந்த 50ஆம் ஆண்டை ‘மொழியுரிமை ஆண்டு’ என கடைப்பிடிக்க வேண்டும் என்று ‘மொழியுரிமைக் கூட்டியக்கம்’ என்ற ஓர் அமைப்பை உருவாக்கிச் செயல்படத் தொடங்கியிருக்கிறோம்.

ஆனால் அந்த செயல்பாட்டுக்குப் பின்னால் சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வேறொரு நிகழ்வுக்குத் தொடர்பிருக்கிறது. அது இங்கே தலைமை உரையில் தோழர் வைகறை அவர்கள் குறிப்பிட்ட 2014 பிப்ரவரி 21 பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள் தொடர்பானது. அந்த 2014 பிப்ரவரி 21ஆம் நாளில் புது டெல்லியில், இந்தியாவின் வெவ்வேறு மொழிகளைப் பேசும் ஒரு 10 பேர் ஒன்றுசேர்ந்தோம். நாங்கள் மிகப் பெரிய அளவுக்குத் திட்டம் போடவில்லை. புது டெல்லியில் அப்போது நடந்துகொண்டிருந்த பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் அதன் ஓர் அங்கமாக இணைந்து அந்த பன்னாட்டுத் தாய்மொழிகள் நாளுக்காக ஒரு சிறிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வோம் என்று வேலையைத் தொடங்கினோம். அப்பொழுது எங்களுக்கு நாங்களே Movement for Multilingual India என்று பெயர் வைத்துக் கொண்டோம். கர்நாடகத்திலிருந்து, மேற்கு வங்காளத்திலிருந்து, பெருந்திரளாக பஞ்சாபிலிருந்து வந்திருந்த நண்பர்கள்; பிகாரின் பூர்வ மொழிகளில் ஒன்றான மைதிலி மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நண்பர்; ஒரிசாவிலிருந்து அங்கே அதிகாரமற்றிருக்கும் கோசலம் என்ற மொழியைச் சேர்ந்த ஒரு நண்பர் என்று இணையத்தின் வழியாக அறிமுகமாகியிருந்த நண்பர்களுடனும் வேறு தோழர்கள் மூலமாக அறிமுகமாகியிருந்த தோழர்களுடனும் அப்போது பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் அந்தப் பேச்சின்போது இந்தித் திணிப்புப் பிரச்சனை, இந்தியைத் திணிப்பதால் வருகின்ற சிக்கல்கள் குறித்த எண்ணங்கள் போன்றவை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு வெளியிலும் இருக்கின்ற பிரச்சனைகள் என்பதை மிக எளிதில் புரிந்துகொண்டோம். இந்தியாவிலுள்ள மொழியுரிமையாளர்களை ஒன்றிணைக்கும் பணியை மேற்கொள்வது என்று அப்போது நான் முடிவெடுத்திருந்தேன்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு மொழிப் போரின் 50ஆவது ஆண்டான 2015ஆம் ஆண்டை மொழியுரிமை ஆண்டாக பறைசாற்றம் செய்து அந்த ஆண்டில் ஒரு சிறந்த நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். அந்தப்படிதான் 2015 செப்டம்பர் 20, 21 தேதிகளில் சென்னையில் மொழியுரிமை மாநாட்டை நடத்தி முடித்தோம். அந்த மாநாட்டிற்கு கேரளம், கர்நாடகா, மேற்கு வங்கம், மராட்டியம், பஞ்சாப், ஒரிசா ஆகிய மாநிலங்களிலிருந்து பேராளர்கள் வந்திருந்தார்கள்.

ஆக நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம், இந்தியாவில் இருக்கிற மொழிப் பிரச்சனை பற்றி; அதனால் நாம் இணைந்து செயல்படுவதற்கான ஓர் அமைப்பு வேண்டும் என்பது பற்றியும். சென்னை மாநாடு நடந்த நாள்களிலேயே அதன் விளைவாக ‘மொழி நிகர்மைக்கும் மொழி உரிமைக்குமான பரப்பியக்கம்’ (Campign for Language Equality And Rights – CLEAR) என்ற ஒரு அமைப்பினை உருவாக்கினோம். அதன் பிறகு நான் பஞ்சாபின் ஜலந்தர் நகரத்தில் பிராந்திய மொழிகளுக்கான அனைத்திந்திய மாநாடு என்கிற தலைப்பிலான ஒரு மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன் ஜார்க்கண்டின் தன்பாத் நகரத்தில் நடந்த, மொழியும் கல்வியும் வளர்ச்சியும் என்கிற தலைப்பிலான ஒரு மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். கொல்கத்தாவில், டெல்லியில், பெங்களூருவில் மொழியுரிமையாளர்களால் கூட்டப்பட்ட சில சந்திப்புகளுக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்தேன். தோழர் அருணபாரதி சொன்னதைப் போல இந்த முகநூல் போன்ற ஊடகங்களின் மூலமாகத்தான் எல்லா உறவுகளுமே உருவாகின்றன. அதன் மூலமாகவே நாங்கள் பலரையும் சந்தித்தோம், பேசியும் வருகிறோம்.

ஒட்டுமொத்தமான இந்த இரண்டாண்டு கால அனுபவங்களிலிருந்து நான் பிடிவாதமாக ஒரு விடயத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

முதலாவதாக – 1937 முதல் கிட்டத்தட்ட நான்காண்டுகள், அய்ந்தாண்டுகளுக்கொரு முறை தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் 1965ல் நடந்த அந்த மிகப் பெரிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து தமிழ்நாட்டுக்கு வெளியே நிறைய பேருக்குத் போதுமான அளவுக்கு தெரியவில்லை என்றாலும்கூட, மொழியுரிமை பற்றி பேசும் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் முக்கியமானதொரு போராட்டம் என்பதை நிச்சயமாகத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். அவர்களுடைய பாடப்புத்தகங்களில் அது பற்றி எதுவும் கிடையாதுதான். தமிழ்நாட்டுப் பாடப்புத்தகத்திலேயே அந்தப் போராட்டங்களுக்கு இடம் கிடையாது என்றால் மற்ற நாட்டுப் பாடப்புத்தகத்தில் எப்படி இடமிருக்கும்? அந்தப் போராட்டத்தைப் பற்றி தமிழ்நாட்டில் அதனால் பலனடைந்தவர்களேகூட ஆங்கிலத்தில் ஒரு நான்கு புத்தகங்களாவது எழுதாதபோது வெளி தேசங்களில் எழுதப்பட்டிருக்கும் என எப்படி எதிபார்க்க முடியும்? ஆக பெரிய அளவுக்குத் தரவுகள் இல்லாத நிலையிலும்கூட அவர்கள் தமிழ்நாட்டினுடைய இந்தப் போராட்ட்த்தைப் பற்றி ஓரளவுக்கேனும் தெரிந்துவைத்திருந்தார்கள்.

இதை சென்னை மொழியுரிமை மாநாட்டில் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அதில் அவர்கள் பேசும்போது மொழிப் பிரச்சனையில் அவர்களின் ஆதங்கம், இந்தித் திணிப்பு எதிப்புப் போராட்டம் குறித்த அவர்களின் பெருமதிப்பு, பெருமிதம் எல்லாமே வெளிப்பட்டன. மற்ற மாநிலத்தவர்கள் பொதுவாகவே ஒன்றை என்னிடம் சொல்வார்கள். “செந்தில், தமிழ்நாட்டில் நீங்கள் தப்பித்துவிட்டீர்கள்; 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மூலமாக ஏதோ ஒரு வகையில் இந்தியை ஓரளவுக்கு நீங்கள் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்” என்பார்கள். “நாங்கள் சென்னையில் வந்து பார்க்கும்போது இங்கு தமிழில் பேசுகிறார்கள் இல்லையென்றால் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்; பொதுவாகவே உங்கள் மாநிலத்தில் பிரச்சனைகள் அவ்வளவாகத் தெரியவில்லை; ஆனால் நாங்கள் இந்தியை ஏற்றுக் கொண்டதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்” என்றும் அவர்கள் சொல்வார்கள்.

உண்மை நிலவரம் இதுதான். கொல்கத்தாவில் இந்தி மொழி வங்க மொழியை பதிலீடு செய்கிறது. பெங்களூருவில் கன்னடத்தை விரட்டிவிட்டு இந்தி வந்து உட்கார்ந்துகொண்டிருக்கிறது. மும்பை என்பது அடிப்படையில் மராத்தி மாநகரம். அது முற்றிலும் இந்தி மாநகரமாகவே இருக்கிறது. இந்த சோகம், கோபம் என்பது ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எங்கள் பஞ்சாபி மொழி பேசுகிறவர்களில் பாதி பேரை இந்தி மொழிக்காரர்கள் என இந்திய அரசாங்கம் வரையறுத்து வைத்திருக்கிறது என்று பஞ்சாபியர்கள் துடிக்கிறார்கள். எண்ணிக்கை அடிப்படையில் இந்தியத் துணைக்கண்டத்திலேயே நாங்கள்தான் மிகப் பெரிய தேசிய இனம்; ஆனால் எங்கள் இடத்தில் இந்தி மொழி கோலோச்சுகிறது, எங்கள் வங்க மொழியைக் கொல்கிறார்கள்; கொல்கத்தாவிலேயே வங்க மொழியை ஓரங்கட்டுகிறார்கள் என்று பொங்குகிறார்கள் வங்காளிகள். மேற்கு வங்கத்திலும் பங்களாதேசிலும் அசாம் போன்ற இடங்களிலும் இருக்கக்கூடிய வங்காளிகளின் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தால் 15 கோடிக்கும் மேல் வரும். இப்படித்தான் இருக்கிறது நிலைமை இந்தியத் துணைக்கண்டமெங்கிலும்.

அண்மைக் காலமாக இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் வலுவாகவும் மிகப் பரவலாகவும் அதேநேரம் நவீன முறையிலும் நடந்துவரும் இடம் என்றால் அது கர்நாடகம்தான். அங்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து போராட்டங்களை பல விதங்களிலும் வடிவமைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். கடந்த ஆண்டு இங்கே சென்னையில் சனவரி 25ஆம் நாள் நாம் மொழிப் போர் ஈகியர் நினைவேந்தல் செய்த அதே நேரத்தில் தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் சார்பாக இங்கு வந்திருக்கும் தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களும் தோழர் மணி மணிவண்ணன் அவர்களும் பெங்களூரில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார்கள். 2015 சனவரி 25 அன்று பெங்களூருவில் நடந்ததும் தமிழ்நாட்டு மொழிப் போர் ஈகியருக்கு நினைவேந்தல் செய்யும் நிகழ்ச்சிதான்.

தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் காவிரிச் சிக்கல் உட்பட எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் தோழர் மணி மணிவண்ணன் அவர்கள் தமிழ்நாட்டில் நடந்த மொழிப் போரின் உக்கிரத்தை ஒரு சித்திரத்தைப் போல அந்த நிகழ்வில் எடுத்து வைத்தபோது கன்னட மக்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். இவ்வளவு கொடுமை நடந்ததா, இவ்வளவு பேர் பலியானார்களா, எங்களுக்குத் தெரியாதே என்று உறைந்துபோனார்களாம்,

நான் கொல்கத்தாவுக்குச் சென்றிருந்தபோது மொழியுரிமை தொடர்பான அந்த நிகழ்ச்சிக்கு இரண்டு முதியவர்களும் வந்திருந்தார்கள். அவர்களுக்கு 75, 80 வயதிருக்கும். அவர்கள் கையில் வங்க மொழியில் வெளியாகும் ’மாத்ரு பாஷா’ என்ற பத்திரிகையை. வைத்திருந்தார்கள். அதன் பழைய இதழ் ஒன்றை எங்களிடம் காண்பித்தார்கள். அதில் நமது மொழிப் போராட்டம் பற்றிய விரிவான ஒரு கட்டுரை இடம்பெற்றிருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் வந்திருந்த இதழ் அது. மொழிப் பிரச்சனைக்கென்றே ஒரு பத்திரிகை நடத்துகிறார்களாம்! மொழிப் பிரச்சனையில் எங்களுக்கு துரோகமிழைத்த கட்சி சிபிஎம்தான் என்று அடித்துப் பேசினார்கள். மம்தா பானர்ஜி வந்த பிறகுதான் மொழி குறித்த விடயத்தில் கொஞ்சமாவது எங்களுக்கு அரசாங்கம் துணையாக இருக்கிறது; சிபிஎம் தொடர்ச்சியாக எங்களை ஏமாற்றி வந்தது என்று அந்த முதியவர்கள் கூறியபோது உண்மை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. நீங்களும் புரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் காங்கிரஸ், பிஜேபி, சிபிஎம் மூன்றுக்குமே மொழிப் பிரச்சனையில் ஒரே நிலைப்பாடுதான் என்று சொன்ன, மேற்கு வங்கத்தில் இந்தித் திணிப்பை எதிர்க்கும் அந்த முதியவர்கள், தமிழ்நாட்டில் நடந்த அந்த மாபெரும் இந்தி எதிப்புப் போராட்டத்தை வானளாவப் புகழ்ந்துதள்ளினார்கள்.

பஞ்சாப் பாஷா அகாதெமி உள்ளிட்ட அமைப்புகள் ஜலந்தரில் நடத்திய மூன்று நாள் மாநாட்டுக்கு சென்றிருந்த சமயத்தில்தான், தமிழ்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் தமிழுக்காக ஒரு போராட்டம் இங்கே நடந்துகொண்டிருந்தது. அந்தப் போராட்டத்தின் காரணமாக, இந்த மாநாட்டின் அடுத்த அமர்வில் வந்து கலந்துகொள்ளவிருக்கும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரான தோழர் பகத்சிங் உள்ளிட்ட சிலர் சிறையில் இருந்தார்கள். இந்திய வரலாற்றிலேயே புரட்சிகரமானதோர் இடம் வகிக்கக்கூடிய கத்தர் இயக்கத்தினுடைய ஒரு தலைமை அலுவலகம் போல இருந்த ஓர் இடத்தில் அந்த மாநாடு நடந்தது. வானளாவ பகத்சிங் படம் ஒன்று அங்கே வைக்கப்பட்டிருந்தது. நான் கூறினேன்: ”எங்கள் ஊரிலும் ஒரு பகத்சிங் இருக்கிறார்; அவர் சிறையில் இருக்கிறார்; மொழிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்.” அந்த மாநாட்டில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டின் இரண்டாவது தீர்மானம் “சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழி ஆக்கவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது” என்பதாகும். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற துணைநின்றவர் யார் தெரியுமா? பஞ்சாபின் முதன்மைப் நாளிதழ்களில் ஒன்றான ’அஜீத்’ நாளிதழின் நிர்வாக ஆசிரியர் சத்னாம் சிங் மனக் அவர்கள். நம் தமிழ்நாட்டிலுள்ள தினத்தந்தி, தினகரன் போன்ற வெகுமக்கள் பத்திரிகை அது.

சத்னாம் சிங் என்னிடம் கேட்டார்: “உயர் நீதிமன்றத்தில் தமிழுக்கான போராட்டம் தமிழ்நாட்டில் நடப்பதைப் போன்று மேற்கு வங்கத்திலும் நடக்கிறது; கர்நாடகத்திலும் நடக்கிறது; பஞ்சாபிலும் நடக்கிறது; நாம் ஏன் ஒன்றிணைந்து போராடக்கூடாது?” ஒன்றிணைந்து போராடத்தான் வந்திருக்கிறோம் என்றேன் நான்.

இதையெல்லாம் தெளிவுபடுத்தும் விதத்தில் அமைந்தது சென்னையில் நாம் நடத்திய மொழியுரிமை மாநாடு. அந்த மாநாட்டின் சிறப்பு என்பது அதில் ’மொழியுரிமைக்கான சென்னைப் பறைசாற்றம்’ (Chennai Declaration for Linguistic Rights) என்கிற ஓர் ஆவணத்தை வெளியிட்டதாகும். 1996ல் ஸ்பெயினின் பார்சிலோனா நகரத்தில் உலகெங்கிலுமிருந்து வந்த மொழியுரிமைப் போராளிகள் ஒன்றுசேர்ந்து Universal Declaration of Linguistic Rights என்றொரு ஆவணத்தை வெளியிட்டார்கள். அதை அடிப்படையாக வைத்து, இந்திய அரசியல் சட்டத்தின் 17ஆவது பிரிவை முழுமையாகக் கிழித்துத் தூக்கியெறிந்துவிட்டு மொழி சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு மாற்று திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதை வியூகமாகக் கொண்டே; தீர்வாக அல்ல – வியூகமாகக் கொண்டே – அந்த சென்னைப் பறைசாற்ற ஆவணத்தை வெளியிட்டோம்.

அந்த சென்னைப் பறைசாற்ற ஆவணத்தையும் மாநாட்டையும் மையப்படுத்தி ஆறு பக்க கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது கேரளப் பத்திரிகையான மாத்யமம். இது கேரளாவின் மிக முக்கியமான வார இதழாகும். ஆந்திராவிலிருந்து வரக்கூடிய அம்மநுடி என்கிற பத்திரிகை அந்த மாநாட்டின் புகைப்படத்துடன் அட்டைப்படக் கட்டுரையே வெளியிட்டிருந்தது. அதில் சென்னைப் பறைசாற்றத்தின் தெலுங்கு வடிவமும் பதிப்பிக்கப்பட்டிருந்தது. அம்மநுடி என்றால் தெலுங்கில் தாய்மொழி என்று பொருள்.

பெங்களூருவிலிருந்து வரக்கூடிய உதயவாணி என்கிற பத்திரிகையில், மொழியுரிமைப் போராட்டத்தில் நம்முடன் கைகோர்த்திருக்கும் நண்பரான வசந்த் ஷெட்டி, விரிவான ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் சென்னைப் பறைசாற்றத்தின் கன்னடப் பதிப்பும் இடம்பெற்றிருந்தது.

ஒரிசாவில் அங்குள்ள மூன்று பத்திரிகைகளில் மாநாட்டுச் செய்தி வெளிவந்திருந்தன. சென்னப் பறைசாற்றத்தின் ஒரிய, கோசல மொழிபெயர்ப்புகளும் அவற்றில் வந்திருந்தன.

அதேபோல மேற்கு வங்கத்திலிருந்து அந்த மாநாட்டுக்கு வந்திருந்த கோர்கா சாட்டர்ஜி என்கிற மிகச் சிறந்த எழுத்தாளர் அதைப் பற்றி டிஎன்ஏ என்கிற பத்திரிகையில் கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை டக்காவிலும் மணிப்பூரிலும் நேபாளத்திலும் பாகிஸ்தானிலும் மறுபதிப்பு செய்யப்பட்டது.

நண்பர்களே, அந்த மாநாட்டைப் பற்றிய செய்தியே வராத ஒரே இடம் தமிழ்நாடுதான்.

கோர்கோ சாட்டர்ஜியின் மேற்கு வங்க நண்பர் ஒருவர் இந்து நாளிதழில் பணிபுரிகிறார். அவர் கொல்கத்தா பதிப்பில் மாநாட்டுச் செய்தியை வெளியிட்டார். சென்னையில் வெளிவரும் இந்து ஆங்கில, தமிழ் பதிப்புகள் மாநாடு குறித்து எந்த செய்தியும் இல்லை. மாநாடு நடந்த்து ஞாயிற்றுக்கிழமை. என் ஊடகத்துறை நண்பர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் எப்போதும் எனக்கு ஆதரவு அளிப்பவர்கள். ஆனால் மாநாடு அவர்களை ஈர்க்கவில்லை. இதற்கு தனிநபர்களைக் காரணம் காட்டமாட்டேன். தமிழ்நாட்டில் மொழிப் பிரச்சினை இப்போது ஈர்க்கவில்லை. மற்ற மாநிலங்களிலோ அது புதிய பிரச்சினையாக வெடித்திருக்கிறது. அதுதான் காரணம். நான் ஊடகத் துறையைச் சேர்ந்தவன். இந்தியா டுடே பத்திரிகையில் தலைமை காப்பி எடிட்டராகப் பணியாற்றியிருக்கிறேன். தொடர்ச்சியாக எல்லா ஊடக நண்பர்களுடனும் எனக்குப் பழக்கம் இருக்கிறது. என்னை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் நீங்கள் பார்த்திருக்கலாம், தொலைக்காட்சி நிறுவனங்களுடனும் எனக்குப் பழக்கமுண்டு. வேண்டி அழைத்ததும் எல்லா மாநிலங்களிலிருந்தும் மொழியுரிமை பற்றிப் பேசுகிறவர்கள் வருகிறார்கள். ஒரு முக்கியமான நிகழ்வு, அது பற்றி ஒரு நாலு வரி எழுதுங்களேன், ஒரு பைட் போடுங்களேன் என்று கேட்டுக்கொண்டபோது தமிழ்நாட்டுப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எதுவும் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. இந்தக் கொடுமையை நான் சொல்லித்தான் ஆகவேண்டும். ஆனால் தமிழ்நாட்டுக்கு வெளியே அத்தனை பேரும் 1965ல் இரத்தம் சிந்தியவர்களைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார்கள். இதையும் நான் சொல்லியாக வேண்டும்.

ஒரு வாரம் கழித்து ஜூ.வி.யில் இரண்டு பக்க பதிவு வந்தது! அத்தோடு திருப்தி அடைந்துகொள்ளவேண்டிய நிலை. பிறகு ஒரு வாரம் கழித்து நானே அந்த மாநாட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி அது தமிழ் இந்துவில் வெளிவந்தது. அது வேறு விடயம்.

கேரளாவிலிருந்து வந்திருந்த ஒரு நண்பர். பவித்ரன் அவரது பெயர். காலடி சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அவர். அவரை அழைத்துவிட்டோம், என்ன பேசுவாரோ என்று உண்மையிலேயே பயந்துகொண்டுதானிருந்தேன். ஆனால் அவர் மிகச் சிறப்பாக தமிழர்களைப் பற்றிப் பேசினார். பேசிவிட்டுப் போய், மொழி விடயத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னோடியாக இருக்கிறது என்று ஒரு ஆறு பக்க கட்டுரையும் எழுதினார்.

மகாராஷ்டிராவிலிருந்து வந்திருந்த மும்பை பல்கலைக்கழகப் பேராசிரியர் தீபக் பவாருடைய கட்டுரையை சிவசேனாவின் சாம்னா ஏடு வெளியிட்டிருந்தது. அந்தக் கட்டுரையின் தலைப்பு ‘மீண்டும் தென்னகம் வழிகட்டுகிறது’ என்பது. சிவசேனாவுடன் எனக்கு உடன்பாடில்லைதான். ஆனால் சாம்னா வெளியிட்டிருந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றிய கட்டுரை, கடந்த ஓராண்டு காலமாக உழைத்து நாங்கள் நடத்திய அந்த மாநாட்டினுடைய விளைவு என்பதை நிச்சயம் பெருமிதமாகச் சொல்லிக் கொள்ள முடியும்.

அந்த மாநாடுக்குப் பின் மூன்று மாநாடுகள் நடந்தன; நான்கு சந்திப்புகள் நிகழ்ந்தன. பத்துக்கும் மேற்பட்ட பத்திரிகைகள் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50ஆம் ஆண்டு நிறைவைப் பற்றி எழுதின. இந்தியாவில் மொழியுரிமைப் போராளிகள் எல்லோரும் ஒன்றிணைகிறார்கள் என்ற கருத்து இந்தியா முழுக்க வெளிவந்தது.

இது நான் ஒருவன் மட்டுமே செய்த முயற்சியின் பலனில்லை. மூன்று ஆண்டுகளாக முயன்று இந்தியா முழுவதிலுமிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட மொழியுரிமை ஆர்வலர்கள் ஏறத்தாழ பத்தாயிரம் பேர் இந்த மரியாதைக்குச் சொந்தக்காரர்கள். Promote Linguistic Equality என்கிற முகநூல் குழு ஒன்று உள்ளது. அது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக பல்வேறு முகநூல் பரப்புரைகளை, டுவிட்டர் பரப்புரைகளை நடத்தி வருகிறது. 2015ல் அது #StopHindiImposition, #StopHindiImperialism என்று இரண்டு ட்விட்டர் பரப்புரைகளை நடத்தியது. சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றுகிற அந்த வெளையில், இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கணினி முன், மொபைல்போனுடன் அமர்ந்து Stop Hindi Imperialism பரப்புரையை மேற்கொண்டனர். இது பல நகரங்களில் டுவிட்டரின் முதல் பத்து ட்ரெண்டிங்கிலேயே அது வந்தது. ஆனால் இதைச் செய்தவர்களில் 95 விழுக்காட்டினர் தமிழ்நாட்டுக்கு வெளியேதான் உள்ளவர்கள்.

அதே ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழுக்கான போராட்டம் நடந்துகொண்டிருந்த சமயம். டிசம்பர் 3ஆம் தேதி என்று நினைக்கிறேன். தமிழ் இன் மெட்ராஸ் ஹைகோர்ட் (#TamilInMadrasHighcourt) என்ற டுவிட்டர் பரப்புரையை கர்நாடகத்திலிருந்து பெங்களூரு தோழர்கள் நடத்தினார்கள். அதாவது சென்னைப் போராட்டத்துக்கு பெங்களூருவிலிருந்து ஆதரவு! எங்கிருந்து வந்தது இந்த ஒற்றுமை? 1965 மொழிப் போரில் இறந்தவர்களின் ஆவி இன்று இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறது. அசாமில், பஞ்சாபில் எல்லா இடங்களிலும்.

சென்னைப் பறைசாற்ற ஆவணத்தின் பஞ்சாபி, இந்தி, பெங்காலி பதிப்புகளை ஜலந்தர் நிகழ்வின்போது விநியோகித்தோம். அப்போது மைதிலி, போஜ்புரி, புந்தேலி, ராஜஸ்தானி ஆகிய மொழிக்காரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மொழியை ஒழித்துக்கட்டிவிட்டு அதன் மீது இந்தி வந்து உட்கார்ந்திருப்பதை எடுத்துரைத்தனர். அதோடு, மொழிப் போராட்டத்தில் எங்கள் மொழியையும் சேர்த்திருப்பதற்காக நன்றி; உங்களோடு துணைநிற்போம் என்றனர். மைதிலியும் போஜ்புரியும் பிகாரில் பேசப்படும் மொழிகள். புந்தேலி மத்தியப் பிரதேசத்தில் ஜான்சி பகுதியில் பேசப்படும் மொழி. ராஜஸ்தானி ரஜஸ்தானில் பேசப்படுகிறது. இந்தி மொழி இவற்றை ஒழித்துக்கட்டிவருவதாக 80 ஆண்டுகளுக்கு முன்பே நமது பாவாணர் கூறிவிட்டார். அந்த மொழிக்காரர்கள் இப்போதுதான் உணர்கிறார்கள்.

ஜார்க்கண்டில் நடந்த மாநாட்டில் சந்தாலி, முண்டா போன்ற ஆக்ரோ ஆசியாட்டிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த உள்ளூர் பூர்வக்குடி, பழங்குடி மக்களின் மொழியைச் சேர்ந்தவர்களும் வட திராவிட மொழிகளான குருக், மால்டோவைச் சேர்ந்தவர்களும் பேசினார்கள். எங்களுடைய மொழிக்காகவும் சேர்த்து நீங்கள் குரல் கொடுக்கிறீர்கள், நாம் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்கள்.

தோழர்களே, உங்களிடம் இரண்டு கோரிக்கைகள்: நாளை மறுநாள் சனவரி 26ல் காலை 9.30 மணி அளவில் ‘இது இந்திக் குடியரசு அல்ல’ (#NotHindiRepublic) என்ற டுவிட்டர் பரப்புரை முழக்கம் இந்தியாவின் முக்கிய நகரங்களிலிருந்து செய்யப்படவிருக்கிறது. இதில் கலந்துகொள்ளுங்கள், நண்பர்களுக்கும் சொல்லுங்கள். இந்தப் பரப்புரை நமது இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குச் சமமானது.

வரும் பிப்ரவரி 21ல் டெல்லியில் நமது சென்னைப் பறைசாற்றத்தை அடிப்படையாக வைத்து ஒரு பெரிய நிகழ்ச்சி நடத்துகிறோம். 25 மொழிகளைச் சேர்ந்த பேராளர்கள் அதில் கலந்துகொள்கிறார்கள். அந்தப் பேராளர்கள் அனைவரும் கையோடு கைகோர்த்து நமது நடராசன், தாளமுத்து, ராசேந்திரன், கீழ்ப்பழவூர் சின்னச்சாமி உள்ளிட்டவர்களின் படங்களைத் தாங்கி நிற்பார்கள். இந்தியா கேட் பகுதியில் மெழுகுவத்தி ஏந்தும் ஒரு நிகழ்வும் உண்டு. CLEAR அமைப்புதான் அதை நடத்துகிறது. அதன் கூட்டக ஒருங்கிணைப்பாளர் (Fedaral Co-ordinator) நான்.

மொழிப்போர்த் தீ அணைந்துவிடாது பற்றிப் படரச் செய்ய நாம் எடுத்த முயற்சி தொடரும். அனைவரும் இதற்கு கைகொடுக்க வேண்டும்.

நாளை பொள்ளாச்சியில் மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் நடக்கிறது. அய்யா மணியரசன் அவர்களும் வருகிறார்கள். 1965 போராட்டத்தில் மிக அதிக உயிர் பலி ஏற்பட்ட நகரங்களில் ஒன்று பொள்ளாச்சி. அங்கு உயிரிழந்தவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைப்பதற்கான முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. அங்குள்ளவர்களுடன் கலந்து பேசி அதற்கான தொடக்க விழாவை நாளை நடத்துகிறோம். தமிழகத்தில் பல இடங்களில் இந்த நினைவுச் சின்னம் இருக்கிறது. மொழிப்போரில் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பல இடங்கள் இன்னும் தெரியாமலே இருக்கின்றன. 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட ஆரணியை, 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட குடியாத்தத்தை நிறைய பேருக்குத் தெரியாது. இது போன்ற இடங்களையெல்லாம் தேடிக் கண்டறிந்து அங்கே நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.

இந்த மொழியுரிமைப் போராட்டம் தொடரும். மொழிப்போர்த் தீ பரவும். நன்றி!

இந்தியாவில் மொழி அரசியல்

“ஒவ்வொரு பேச்சு வடிவத்தையும் நீடித்துநிலைக்கும்படிச் செய்யவேண்டும் எனவும் வளர்க்கவேண்டும் எனவும் விரும்புகிற, மிகவும் பிரத்யேகமான, குறுகிய பார்வை கொண்ட உணர்வு, தேச விரோதமானது, உலக விரோதமுமானது. வளர்ச்சியடையாத, எழுத்துருவம் பெறாத எல்லா கிளைமொழிகளையும்… தியாகம் செய்து, மகத்தான இந்துஸ்தானி ஓடையில் கலந்துவிடும்படி செய்யவேண்டும். அது ஒரு தியாகமாகவே இருக்கும்… தற்கொலையாக அல்ல”

முதல் வாசிப்பில் எதார்த்தம்தானே எனத் தோன்றுகிற இந்த வரிகள், அதன் அடியாழத்தில் இன்று இந்தியாவில் உள்ள பல நூறு மொழிகளை அழித்துக்கொண்டிருக்கும் ஒரு மொழிக்கொள்கையின் மூலவித்துகளாகும். இந்த வரிகள் 1925ல் எழுதப்பட்டன. இந்திய சுதந்திரப் போராட்டம் விரைவாக வளர்ந்துகொண்டிருந்த இந்த தருணத்தில்தான் இந்தியாவின் தேசிய மொழியாக இந்துஸ்தானி அல்லது இந்தியை ஆக்கவேண்டும் என்கிற முனைப்பு இந்திய தேசியக் காங்கிரசில் கொடிகட்டிப் பறந்தது. இந்தி மட்டுமே இந்தியாவின் தேசிய மொழி என்றால் உங்கள் சுதந்திர இந்தியாவில் எங்கள் தாய்மொழிகளுக்கு என்ன உரிமை, அந்தஸ்து, பாதுகாப்பு இருக்கும் என்ற கேள்வி காங்கிரஸ் மேலிடத்தை நோக்கி கேட்கப்பட்டது.

அப்போதுதான் மேற்கண்ட வரிகள் எழுதப்பட்டன. சற்று ஆழமாக வாசித்துப் பார்த்தால் இந்த வரிகளில் உள்ள வன்முறை உங்களை அச்சுறுத்தும். இந்துஸ்தானி என்கிற மிகப்பெரிய பூதத்தின் முன்பு இந்தியத் துணைக்கண்டத்தின் மொழிகள் ஆடுகளைப் போல பலிகொடுக்கப்படும் சித்திரம் உங்கள் கண் முன்பு விரியும். “எனது மொழிக்கு உரிமை வேண்டும்” என்று கேள்வி கேட்ட ஒரு தமிழரை, பஞ்சாபியரை, கோசலரை, போஜ்புரியாளரை தேச விரோதி என்றும், ஏன் உலக விரோதி என்றும்கூட, இந்த வரிகளை எழுதியவர் வர்ணிக்கிறார்.

ஆதிக்க மனோநிலையும் உச்சபட்ச வன்முறை மனப்பான்மையும் வெளிப்படையாகத் தோன்றும் இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் மகாத்மா காந்திதான் என்பதை அறிந்தால் நீங்கள் அதிர்ந்துபோவீர்கள். 1925 ஆகஸ்ட் 27ல் வெளியான தன் ’எங் இந்தியா’ இதழில் இப்படித்தான் காந்தி எழுதியிருந்தார்.

இந்தியாவில் மொழிக்கொள்கை இன்று மிகமோசமானதாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் என்ன என்பதை காந்தியின் இந்த வரிகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. மத விவகாரத்தில் இதைப் போன்ற ஒரு வாதத்தை மகாத்மாவால் முன்வைத்திருக்க முடியாது. இந்தியாவின் எல்லா மதங்களும் இந்து மகாநதியில் குதித்து உயிர்நீத்து தியாகம் செய்யவேண்டும் என்று ஒருபோதும் அவரால் எழுதியிருக்கமுடியாது. அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்கவேண்டும் என்று விரும்பிய மகாத்மா காந்தியே இப்படி எழுதினார் என்றால் மொழி விவகாரத்தில் பிற இந்திய தேசியத் தலைவர்களின் மனப்பான்மை எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் எளிதில் யூகித்துக்கொள்ளமுடியும்.

இந்தக் கட்டுரை இந்திய மொழி அரசியல் வரலாற்றையும் அதன் இன்றையச் சூழலையும் விரிவாகப் பேச முனைகிறது. தமிழ்நாட்டின் நவீன வரலாற்றின் திசையை தீர்மானித்த 1965 இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் 50ஆம் ஆண்டைக் கடந்திருக்கும் நிலையில், மொழி உணர்வுகள் மீண்டும் மேலோங்கி வரக்கூடிய சூழலில், அதன் வரலாற்றை சுருக்கமாக திரும்பிப் பார்ப்போம்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் மொழி அரசியல்

வட இந்தியாவில் மொகலாயர்கள் ஆட்சிக்கு முன்பு, பெரும்பாலான ஆட்சிகளில் சமஸ்கிருதமும் செளரசேனி பிராகிருதமும் அதன் பின்பு செளரசேனி அபபிரம்சாவும் ஆட்சிமொழிகளாகவும் இணைப்பு மொழிகளாகவும் இருந்தன. மொகலாயர் ஆட்சியில் அக்பர் காலம் முதல் பாரசீக மொழி ஆட்சி மொழியாக ஆனது. செளரசேனி அபபிரம்சாவுக்கும் நல்ல அந்தஸ்து நீடித்தது. 17 – 18 நூற்றாண்டுகளில், செளரசேனியை அடித்தளமாகக் கொண்டும் அரேபிய – பாரசீக சொல்வளத்தை மேற்கட்டுமானமாகக் கொண்டும் உருது உருவானது. அதே அடித்தளத்திலிருந்துதான் இந்தியும் உருவெடுத்தது. மொழியியல் ரீதியில் இவ்விரு மொழிகளுக்கும் இடையில் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை. இந்துஸ்தானி என்கிற பெயரில் இவை ஒருசேரக் குறிப்பிடப்பட்டன.

பிரிட்டிஷ் காலத்தில் ஆங்கிலம் அதிகாரபீடத்தில் ஏறியது. 1837ல் கிழக்கிந்திய கம்பெனி பாரசீகத்தை அரியணையிலிருந்து இறக்கியது. ஆனால் பல மாகாணங்களில் உள்ளூர் மொழிகளுக்கு நிர்வாக மொழி அந்தஸ்தையும் காலனியவாதிகள் அளித்தார்கள். சமஸ்கிருதம், பாரசீகம், அரபு மொழிகளில் கல்வி தொடர்ந்தது. உருது, வங்காளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளும் நிர்வாகத்தில் பயன்படுத்தப்பட்டன.

காலனிய இந்தியாவில் மொழி அரசியல் வெடித்த முதல் களம் இந்திக்கும் உருதுக்கும் இடையிலான போராட்டமாகும். இந்து – முஸ்லிம் அடையாளங்கள் தனித்தனி அரசியல் அடையாளங்களாகத் துலக்கமுறத் தொடங்கிய பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட அரசியல், கலாச்சார, நிர்வாக மாற்றங்கள், அதுவரை இரண்டறக் கலந்திருந்த உருதுவையும் இந்தியையும் தனித்தனி அடையாளங்களாகப் பிரித்தன. அதுவரை உருதுக்கு இருந்த வரலாற்று ரீதியிலான தனி முக்கியத்துவத்தை இந்து மத சக்திகள் எதிர்த்தன. 1800களின் பிற்பகுதியில் இன்றைய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மதன் மோகன் மாளவியாவும் பாபு சிவா பிரசாதும் தேவநாகரி வடிவிலான இந்தியை அலுவல் மொழியாக ஆக்கவேண்டும் என போராட்டத்தைத் தொடங்கினார்கள். இந்தியை எழுத தேவநாகரி வரிவடிவத்தைப் பயன்படுத்துவதா அல்லது அரபு – பாரசீக வரிவடிவத்தைப் பயன்படுத்துவதா என்கிற சர்ச்சை மிகவேகமாகப் பரவியது. 1900ல் வரிவடிவ விவகாரத்தில், இந்திக்கும் உருதுக்கும் (தேவநாகரிக்கும் அரபு – பாரசீக வரிவடிவத்துக்கும்) சம அந்தஸ்தை வழங்கும் முடிவை ஆங்கிலேயே அரசு எடுத்தபோது, அது முஸ்லிம்களின் எதிர்ப்பையும் இந்துக்களின் ஆதரவையும் பெற்றது. அதைத் தொடர்ந்து உற்சாகமடைந்த இந்து சக்திகள் இந்தி மொழியை இந்தியாவின் தேசிய மொழியாக ஆக்குவதற்கான முயற்சிகளை முடுக்கினர். இந்தி மொழிக்கு சமஸ்கிருத அபிஷேகம் செய்து, இந்து மத அடையாளத்தோடு இந்தி மொழி அடையாளத்தைப் பிணைத்தனர். இந்துஸ்தானியைப் பிளந்து இந்தி தனிமொழி என்று காட்டுவதில் தீவிரம் காட்டினர். உருது முஸ்லிம்களின் மொழியாக ஆக்கப்பட்டது.

1876ல் சுயராஜ்ய முழக்கத்தை எழுப்பி, இந்தியாவில் தேசிய விடுதலை இயக்கத்தைத் தொடங்குவதற்கு காராணமாக இருந்தவர்களில் முக்கியமானவரான ஆரிய சமாஜ நிறுவனர் தயானந்த சரஸ்வதிதான் இந்தியே இந்தியாவின் தேசிய மொழி என்ற கருத்தை முதலில் முன்மொழிந்தவர். அதை வழிமொழிந்தவர் பாலகங்காதர திலகர். இந்து மதம், இந்தி மொழி, இந்துக் கலாச்சாரம் ஆகியவற்றை ஒன்றுதிரட்டி இவர்கள் முன்வைத்த கோட்பாடே பின்பு இந்து – இந்தி – இந்துஸ்தான் என்கிற இந்துத்துவ சித்தாந்தமாகவும் ஒரே நாடு – ஒரே மதம் – ஒரே மொழி என்கிற கருத்தாக்கமாகவும் வளர்ந்தது. இந்திய தேசியமானது அது கருக்கொண்ட காலத்திலேயே இந்தியாவின் பன்மைத் தன்மையை மறுப்பதாகவே இருந்தது என்றும் அது வட இந்திய உயர்சாதி மனநிலையிலிருந்து உருவான ஓர் ஆதிக்கவாத கருத்தியலாகவே இருந்தது என்றும் பல வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். இந்திக்குத் தரப்பட்ட இந்த முக்கியத்துவம் முதலில் வட இந்தியாவில் உருதுவுக்கும் பிற மொழிகளுக்கும் எதிரான அரசியலுக்கு வித்திட்டது. 1881ல் பிகாரில் முதன் முதலில் இந்தியை ஆட்சிமொழியாக்கினார்கள். அப்போதே மைதிலி, போஜ்புரி போன்ற உள்ளூர் மொழிகளை ஆட்சிமொழிகளாக ஆக்காமல் இந்தியை ஆட்சிமொழியாக்கியதற்கு எதிர்ப்புகள் இருந்தன.

1901ல் வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபு இந்தியை இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஆக்கவேண்டும் என பரிந்துரைத்தார். 1905ல் காசியில் தேவநாகரி வரிவடிவத்தை பிரபலப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட கூட்டமொன்றில் பேசிய திலகர், ஒரு தேசம் அமையவேண்டும் என்றால் அதற்கு ஒரு பொது மொழி வேண்டும் என்றும் அது இந்தியாகத்தான் இருக்கவேண்டும் என்றும் பேசினார்.

1909ல் இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக, ஆட்சி மொழியாக ஆக்கவேண்டும் என்று மகாத்மா காந்தி பேசத் தொடங்கினார். ஆங்கிலத்தின் மீதான ஈர்ப்பைக் குறைப்பது, சுதேசிய கலாச்சாரத்தை உருவாக்குவது போன்ற அரசியல் வியூகங்களின் அடிப்படையில் மிகத்தீவிரமான இந்தி பக்தராக இக்காலத்தில் காந்தி மாறியிருந்தார். இந்தி அல்லது இந்துஸ்தானியை ஏற்க மறுப்பவர்களை மிகவும் மோசமான முறையில் அவர் கடிந்துகொண்டார். சென்னை மாகாண மக்கள் இந்தியை ஏற்க மறுப்பதை அவரிடம் சுட்டிக்காட்டியபோது, அதைச் சிறுபான்மையரின் கொடுங்கோன்மை என்று வர்ணித்தார். 1917 – 20களில் காந்தி இந்தியை இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் மையத்துக்கு நகர்த்தினார். 1918ல் அவர் சென்னையில் இந்தி பிரசார சபையைத் தொடங்கினார். இந்தி பிரசாரத்துக்கான மிகப்பெரிய திட்டத்தை வகுத்து நாடெங்கும் அதை செயல்படவைத்தார். இந்திக்கு தேசிய அடையாளமில்லாத பட்சத்தில், பிராந்திய மொழிகளுக்கு உரிய இடங்களைப் பெற்றுத்தராத பட்சத்தில், சுயராஜ்யம் பற்றி பேசுவதிலேயே அர்த்தமில்லை என்று அவர் வரையறுத்தார். 1920ல் காங்கிரஸ் கட்சியையே மொழிவாரி அடிப்படையில் பிரித்தார். அப்போதுதான் சென்னை மாகாண காங்கிரஸ் ஆந்திர காங்கிரஸ் கிளையாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கிளையாகவும் பிரிந்தது. அனைத்திந்திய காங்கிரசின் மாநாடுகள் இந்துஸ்தானியில் நடத்தப்படவேண்டும் என 1923ல் காக்கிநாடா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் பாதி பேர்தான் இந்துஸ்தானி பேசுகிறார்கள், மீதி பேர் பேசும்வரை தொடர்ந்து அதைப் பரப்பவேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக இருந்தது.

பின்பு இந்தி அல்ல, இந்துஸ்தானிதான் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கவேண்டும் என்றும் கூறத் தொடங்கினார். தேவநாகரியிலும் அரபு – பாரசீக எழுத்திலும் எழுதப்படும் இந்துஸ்தானியை அவர் இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கான வழியாகவும் பார்த்தார். ஜவஹர்லால் நேருவுக்கும் இதில் உடன்பாடு இருந்தது. ஆனால் காந்திக்கும் நேருவுக்கும் இருந்த இந்துஸ்தானி ஆதரவு நிலை அவர்களது ஜனநாயக முகத்துக்கான எடுத்துக்காட்டு என்று சொல்லிவிடமுடியாது.

இந்திய தேசிய இயக்கத்தில் புருஷோத்தம் தாஸ் தான்டன் போன்ற இந்து மதவாதப் போக்கினர் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியை தேசிய மொழியாக முன்வைத்தார்கள், காந்தி, நேரு போன்றோர் மத நல்லிணக்கம் கருதி இந்துஸ்தானியை முன்வைத்தார்கள். இந்தியோ இந்துஸ்தானியோ, அது தென்னக மக்களுக்கு அந்நிய மொழிதான். தெற்கிலும் கிழக்கிலும் உள்ள மற்ற மொழி பேசுவோரின் மனநிலை என்ன, அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி காந்தியோ நேருவோ ஒரு துளியும் பொருட்படுத்தியதில்லை. சென்னை மாகாணத்தவர்கள் இந்தியைப் படிக்க என்ன தடை என்றுதான் அவர்கள் கேள்வியெழுப்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்தியா என்பது வட இந்தியா மட்டுமே. தாங்கள் சொல்வதை தென்னிந்தியாவோ வங்காளிகளின் பெருந்தேசமோ பஞ்சாபியரின் பெரும்பரப்போ பின்பொருநாள் ஏற்கத்தானே போகிறது என்கிற ஆதிக்க முன்முடிவு ஒன்று எப்போதும் இந்திய தேசியவாதிகளிடம் இருந்தது. அதற்கு காந்தியும் நேருவும்கூட விதிவிலக்கில்லை. இந்த மனநிலைதான் தமிழ்நாட்டில் 1938 – 40ல் முதல் மொழிப் போர் தோன்ற காரணமாக இருந்தது. இந்த எதிர்வினை குறித்து பிறகு பார்ப்போம்.

1947க்குப் பின் இந்தியாவில் மொழி அரசியல்
இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடைபெறுவதற்கு முன்பே, இந்தியாவுக்கான அரசியல் சாசன உருவாக்க நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இந்தியாவுக்கு பொது மொழி வேண்டும் என்கிற கோரிக்கை ஓர் உளவியல் தேவையாகவும் அப்போது இருந்தது. இந்தியாவின் ஆட்சிமொழி அல்லது தேசிய மொழி என்கிற இடத்தில் ஆங்கிலத்தை இருத்திப் பார்ப்பது என்பதை தேசியவாதிகளால் கற்பிதம்கூட செய்யமுடியாத நிலை ஆங்கிலத்தை ஏற்பதை அடிமைத்தனத்தை நீட்டிப்பதாகவே அவர்கள் கருதினார்கள். ஆனால் அவர்கள் கட்டிக்காக்க விரும்பிய இந்தியாவே ஒரு ஒற்றை நிர்வாக அலகாக உருவானதற்கு அந்த ஆங்கிலம்தான் அடிப்படையில் இருந்தது என்பதை செளகரியமாக மறந்தார்கள்.

அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான அரசியலைமைப்பு நிர்ணய அவையை எந்த மொழியில் நடத்துவது என்பதிலிருந்து பிரச்சனை கிளம்பியது. இந்தி ஆதரவாளர்கள் அதை இந்தியில் மட்டும் நடத்தவேண்டும் என்றார்கள். பிற மாகாணத்தினர் விவாதங்களை ஆங்கிலம், பிற மொழிகளிலும் நடத்தலாம் என்றார்கள். சென்னை மாகாணத்தில் இந்தியைப் பரப்ப காந்தி 25 ஆண்டுகளுக்கு முன்பே முயற்சி எடுத்தும், சென்னை மாகாணத்திலிருந்து வந்திருக்கும் உறுப்பினர்கள் இந்தியில் பேசாதது குறித்து இந்தி ஆதரவாளரான சேதி கோவிந்த் தாஸ் வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்தார்.

பிற்காலத்து ஆய்வாளர்கள் கருதுவதைப் போல, இந்தியாவை ஒரு பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்பாகப் பார்ப்பதே சரியானது என்கிற அரசியல் நிலைப்பாடு 1930 – 70கள் வரை இந்தியாவில் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லிவிடலாம். சில எல்லையோர மாநிலங்களில் மட்டுமே அத்தகைய சிந்தனைகள் முகிழ்த்திருந்தன. இந்தியாவின் மையமான தில்லியில் அப்படி ஒரு விஷயமே பேசப்படவில்லை. எனவே இந்தியாவை ஒற்றைப்படித்தான தேசமாகப் பார்ப்பதை காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட நிலையில், அந்த ஒற்றை தேசத்துக்கு ஒரு ஒற்றை பொதுமொழி என்பது தவிர்க்கவியலாத, தர்க்கபூர்வமான தேவையாக மாற்றப்பட்டது.

அரசியலமைப்பு நிர்ணய அவையில் மொழிப் பிரச்சனை குறித்த விவாதங்கள் 1946லிருந்து 1949 இறுதிவரை பல தடவைகள் நடந்தன. மொழி குறித்த பிரதான விவாதம் ஒன்று ஒன்றரை மாதங்கள் நீண்டிருக்கிறது. இறுதியில் எது ஆட்சி மொழி என்பது குறித்து முடிவெடுப்பதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்திக்கு ஆதரவாக 78 பேரும் எதிராக 78 பேரும் வாக்களித்தார்கள். யாரும் வெற்றி பெறாத நிலையில் மீண்டும் நடத்தப்பட்ட வாக்களிப்பில் இந்திக்கு எதிராக 77 பேரும் ஆதரவாக 78 பேரும் வாக்களித்தார்கள்.

அரசியலமைப்பு நிர்ணய சபையில் வேறு எந்த ஒரு விஷயம் தொடர்பாகவும் இந்த அளவுக்கு தீவிரமாக விவாதம் நடந்ததில்லை என்று அண்ணல் அம்பேத்கரே கூறுகிறார், இந்தி விவகாரம் தொடர்பான பிரிவு 115 மீது ஏற்பட்ட சர்ச்சையைப் போல வேறு எந்த ஒரு பிரிவுக்காகவும் ஏற்படவில்லை என்றும் வேறு எதுவும் இந்த அளவுக்கு சூட்டைக் கிளப்பியதில்லை என்றும் அவர் கூறினார். (மொழி விவகாரத்தில் அம்பேத்கரின் கருத்துகள் இந்திக்கு ஆதரவாக இருந்தன. மத்திய அரசுகள் மட்டுமல்ல, மாநில அரசுகள்கூட இந்தியைத்தான் ஆட்சிமொழியாகக் கொண்டிருக்கவேண்டும் என்றும் அவர் கருதினார்).

இந்தி ஆதரவாளர்களின் இறுகிய பிடி தொடக்கத்திலிருந்தே இருந்தது. 1946 டிசம்பர் 10ந் தேதி, அரசியலமைப்பு நிர்ணய அவையில் பேசிய ஆர்.வி.துலேகர் என்கிற உறுப்பினர், “இந்துஸ்தானி தெரியாத மக்களுக்கு இந்தியாவில் இருக்கவே உரிமை இல்லை. இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக இந்த அவையில் இருக்கும் உறுப்பினர்களில் யாருக்காவது இந்துஸ்தானி தெரியவில்லை என்றால், இந்த அவையின் உறுப்பினர்களாக இருக்கவே அவர்களுக்குத் தகுதியில்லை. அவர்கள் இதை விட்டுவிட்டுச் செல்வதுதான் நல்லது” என்று பேசினார்.

மார்ச் 1947ல் கே.எம்.முன்ஷியின் முன்னெடுப்பில், இந்துஸ்தானி (இரு வரிவடிவங்களிலும்) தேசிய மொழியாகவும் முதல் அலுவல் மொழியாகவும் இருக்கும் எனறும் சட்டபூர்வமாக நீக்கப்படும்வரை ஆங்கிலம் இரண்டாம் அலுவல் மொழியாகவும் இருக்கும் என்றும் ஒரு சமரசம் முன்வைக்கப்பட்டது. ஆனால் ஜூலை மாதத்தில், இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் கோர முகங்கள் வெளிப்பட்ட நிலையில், முஸ்லிம் எதிர்ப்பு இந்தி ஆதரவாளர்கள் இந்துஸ்தானி என்பதை இந்தி என்று மாற்றினார்கள். ஆங்கிலத்தை அறவே நீக்கிவிட முயற்சி செய்தார்கள். நாட்டுப் பிரிவினை என்னும் மேகமூட்டத்துக்குக் கீழே, தேசிய ஒற்றுமை என்கிற பலிபீடத்தில், இந்தி தவிர மற்ற எல்லா மொழிகளும் பலியிடப்பட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்த வேளையில், இந்திய மொழிகளின் அடிமைத்தனம் அதிகாரபூர்வ அந்தஸ்தை அடைந்தது.

1948 முழுக்க மொழிப் பிரச்சனை அரசியலமைப்பு நிர்ணய அவையை அலைக்கழித்தது. இந்தி தீவிரவாதிகளின் பெரும்பிடியில் மிதவாதிகள் சிக்கித் தவித்தார்கள். ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக நிலைநிறுத்துவதற்கு மேல் – அதுவும் ஒரு காலக் கெடுவுடன் – வேறு எந்த வாய்ப்பும் தங்களுக்கு இல்லை என்கிற நிலை உருவானது. தென்னிந்திய உறுப்பினர்கள் தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக ஆகிவிடுவோம் என்கிற அச்சத்தில், ஆங்கிலத்தை நீட்டிப்பதையே ஒரே தப்பிக்கும் உபாயமாக கருதினார்கள். அவர்கள் அஞ்சியதற்கு காரணம் இல்லாமலில்லை. இந்திய யூனியனின் அலுவல் மொழியாக இந்தி மட்டுமே இருக்கவேண்டும், ஆங்கிலம் அதிகபட்சம் ஐந்தாண்டுகளுக்கு துணை மொழியாக இருக்கலாம், யூனியன் பப்ளிக் கமிஷன் தேர்வுகளை இந்தியில் மட்டுமே எழுதவேண்டும் என்று ரவி சங்கர் சுக்லா, ஜி.எஸ்.குப்தா போன்ற இந்தி ஆதரவாளர்களைத் தலைவர்களாகக் கொண்டிருந்த நிலைக்குழு ஒன்று வேகவேகமாக முடிவெடுத்திருந்தது. இந்துஸ்தானியை ஒரு மொழியே இல்லை என்று கூறிய அந்த நிலைக்குழு, சமஸ்கிருதத்திலிருந்து மட்டுமே கலைச்சொற்களை உருவாக்கவேண்டும் எனறு அடித்துக்கூறியது. அந்த நிலைக்குழு நினைத்ததெல்லாம் நடந்திருந்தால் சுதந்திர இந்தியாவின் முதல் நிர்வாகமே இந்தி பேசுவோரின் நிர்வாகமாக மட்டுமே ஆகியிருக்கும். ஒட்டுமொத்த தென்னகமும் கிழக்கு இந்தியாவும் புறக்கணிக்கப்பட்டிருக்கும். சென்னை உறுப்பினர்களான டி.டி.கிருஷ்ணமாச்சாரி, வங்காள உறுப்பினர் எல்.கே.மைத்ரா போன்றோரின் வேண்டுகோள்களும் இறைஞ்சுதல்களும் இந்தி தீவிரவாதிகளின் காதில் விழவில்லை.

1950 நெருங்கும் வேளையில் இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்போருக்கும் ஆங்கிலமும் வேண்டும் என்போருக்கும் இடையிலான போர் உச்சம் அடைந்தது. பின்பு முன்ஷி – அய்யங்கார் சூத்திரம் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு சமரச ஏற்பாட்டின் மூலம் இது ஒரு தற்காலிக முடிவுக்கு வந்தது. இந்த சமரசத்தின் வளர்ச்சிப்போக்கிலேயே இந்திய அரசியல் சாசனத்தின் 17ஆம் பாகம் உருவாக்கப்பட்டது.

அரசியல் சாசனமும் மொழிக் கொள்கையும்

இந்திய அரசியல் சாசனத்தின் 17ஆம் பாகம் அலுவல் மொழி தொடர்பான பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. 343 முதல் 351 வரையிலான பிரிவுகளில் ஒன்றிய அரசின் மொழிக்கொள்கை விவரிக்கப்பட்டிருக்கிறது. பிரிவு 343 உட்பிரிவு 1, தேவநாகரி வரிவடிவத்திலான இந்தி மொழியை இந்தியாவின் அதிகாரபூர்வ அலுவல் மொழியாக பிரகடனப்படுத்துகிறது. அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்ட 1950லிருந்து 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலத்தையும் தொடர்ந்து அலுவல் மொழியாக பயன்படுத்துவதை உட்பிரிவு 2ம்; 15 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கான நீட்டிப்பைச் செய்வதற்கான வழியை உட்பிரிவு 3ம் அளிக்கின்றன. பிரிவு 344 இந்தியை ஆட்சிமொழியாக ஆக்குவதற்கான செயல்பாடுகளையும் அமைப்புமுறைகளையும் முன்மொழிகிறது. ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கான தடைகளைப் பற்றி ஒரு உட்பிரிவு பேசுகிறது. இன்னொரு உட்பிரிவு (4) இந்தியை முன்னிறுத்தும் செயல்பாடுகளின்போது, பொதுச் சேவைகளை அளிக்கும் விவகாரத்தில், இந்தி பேசாத மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் நலன்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறது (ஆனாலும் இவை அனைத்தும் இந்திதான் இந்தியாவின் ஒற்றை ஆட்சிமொழி என்கிற அடிப்படை நோக்கத்துக்கு எதிராகச் செல்ல இயலாது).

17ஆம் பாகத்தின் இரண்டாம் அத்தியாயம், பிராந்திய மொழிகளைப் பற்றி பேசுகிறது. பிரிவு 345 ஒரு மாநிலத்தின் ஆட்சிமொழியாக அந்த மாநிலத்தில் பயன்படுத்தப்படும் ஒன்று அல்லது அதற்கதிகமான மொழிகளை அல்லது இந்தியை ஆட்சிமொழியாக ஆக்க வழிவகுக்கிறது. பிரிவு 346 மாநிலங்களுக்கிடையில் அல்லது மாநிலத்துக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலான தொடர்பு மொழியாக எது இருக்கவேண்டும் என்பதைச் சுட்டுகிறது. எவை ஒன்றிய அரசின் அலுவல் மொழிகளாக இருக்கின்றனவோ அவை ஒன்றிய அரசுக்கும் மாநிலத்துக்கும் இடையிலான தொடர்புமொழிகளாக இருக்கும். மாநிலங்களுக்கிடையிலான தொடர்புக்கும் இவற்றையே பயன்படுத்தவேண்டும். பிரிவு 347, மாநிலங்களுக்குள் எவை அலுவல் மொழிகளாக ஆக்கப்படவேண்டும் என்பது பற்றி பேசுகிறது. ஒரு மாநிலத்தின் முழு பகுதிகளிலும் அல்லது அதன் ஒரு பகுதியில் வாழும் மக்கள், தங்களுடைய மொழியை அலுவல் மொழியாக ஆக்கவேண்டும் என்று கோரிக்கை எழுப்பினால், மாநிலம் முழுமைக்கும் அல்லது அந்தப் பகுதியில், அதை அலுவல் மொழியாக ஆக்கும்படி மாநில அரசை குடியரசுத்தலைவர் நெறிப்படுத்தமுடியும்.

மூன்றாம் அத்தியாயம், உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் எது அலுவல் மொழி என்பதைக் குறிப்பிடுகின்றது. பிரிவு 348ன்படி, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் அலுவல் மொழியாக ஆங்கிலமே இருக்கும். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் சட்டங்கள், திருத்தங்களின் மொழியாகவும் ஆங்கிலமே இருக்கும் என்கிறது இந்தப் பிரிவு. ஆங்கிலத்தின் இந்த அந்தஸ்தை மாற்றவேண்டுமானால் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியாகவேண்டும். இதே பிரிவின் உட்பிரிவு 2, உயர் நீதிமன்றங்களில் இந்தி அல்லது மாநில மொழிகளை அலுவல் மொழிச் செயல்பாடுகளுக்காக பயன்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறது. ஒரு மாநிலத்தின் ஆட்சி மொழி அல்லது இந்தியை, குடியரசுத்தலைவரின் அனுமதியைப் பெற்று, உயர் நீதிமன்றத்தில் நடைமுறைக்குக் கொண்டுவரலாம் என்கிறது அந்த உட்பிரிவு.

மொழிக்கொள்கை தொடர்பான சில சிறப்பு நெறிமுறைகளை நான்காம் அத்தியாயம் விவரிக்கிறது. ஒரு குடிமகன், தனது குறைகளைத் தீர்ப்பதற்கான எந்த ஒரு முறையீட்டையும் ஒன்றிய அல்லது மாநில அரசுகள் பயன்படுத்தும் எந்த ஒரு மொழியிலும் முன்வைக்கும் உரிமையை பிரிவு 350 வழங்குகிறது. சிறுபான்மை மொழியினரின் தாய்மொழிக் கல்வி உரிமைக்கு பிரிவு 350ஏ வழிசெய்கிறது. அவர்களுக்கான பிரத்யேக சிக்கல்களைப் பார்வையிட ஒரு சிறப்பு அலுவலரை நிர்ணயம் செய்யவேண்டும் என்று குடியரசுத்தலைவரை உட்பிரிவு 350பி கூறுகிறது.

உட்பிரிவு 351 இந்தி மொழியை செழிப்புற வைப்பதற்கான உபாயங்களை முன்வைக்கிறது. இந்திய தேசியவாதத்தின் அரசியல் உள்நோக்கங்களை பிரதிபலிக்கும் ஓர் அம்சமும் அதில் இடம்பெற்றிருக்கிறது. இந்தி மொழி தன் சொல்வளத்துக்காக முதலில் சமஸ்கிருதத்திலிருந்தும் பிறகு வேறு மொழிகளிலிருந்தும் கைக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

பிரிவுகள் 344 (1), 351 ஆகியவற்றில் கூறப்பட்டவற்றுக்கு உதவியாக, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மாநில/வட்டார மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன. இப்போது அந்த அட்டவணையில் 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அட்டவணையில் சேர்க்கப்படவேண்டும் என்று சுமார் 40 மொழிகள் இப்போது போராடிவருகின்றன. ஒன்றிய அரசில் அல்லது மாநில அரசுகளில் இதுவரை அங்கீகாரம் பெறாத பல மொழிகளைப் பொறுத்தவரை, எட்டாம் அட்டவணையில் இடம்பெறுவதை ஓர் அரசியல் சாசன அங்கீகாரமாகவே கருதப்படுகிறது.

இந்தியாவின் மொழிக்கொள்கை குறித்த மேற்கண்ட பாகம் 17 அது உருவாக்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு அரசியல் எதிர்ப்புகளைச் சந்தித்துவருகிறது. பன்மொழி நாடான இந்தியாவை ஒருமொழி நாடு போல் கருதி அரசியல் சாசனம் வகுக்கப்பட்டிருக்கிறது என்றும், இந்தப் பிரிவை தூக்கியெறிந்துவிட்டு அனைத்து மக்களுக்கும் சம உரிமையையும் சம அதிகாரத்தையும் வழங்கவேண்டும் என்றும் தொடக்க காலம் முதலே மொழி உரிமையாளர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

முன்ஷி – அய்யங்கார் சூத்திரத்தின் அடிப்படையிலான இரண்டு விஷயங்களை இந்தி தீவிரவாதிகள் இன்னமும் மன்னிக்கத் தயாராக இல்லை. 15 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆங்கிலம் தொடர்வதற்கு அந்தச் சூத்திரம் வழிசெய்திருப்பதை அவர்கள் எதிர்த்தார்கள். அதைவிட முக்கியமாக எட்டாம் அட்டவணை என்ற ஒன்று சேர்க்கப்பட்ட விஷயம். இவை இரண்டும் இந்தி மட்டுமே ஆட்சிமொழி ஆகவேண்டும் என்கிற அவர்களது கனவை சற்றேனும் கலைக்கக்கூடியதாக இருந்தன. எட்டாம் அட்டவணையில் மாநில மொழிகளை பட்டியலிட்டதற்குப் பின்னால் தென்னக, வங்க உறுப்பினர்களின் பங்களிப்பு இருந்தது. பிற்காலத்தில் அமைக்கப்படவிருந்த மொழி ஆணையத்தில் இந்த மொழிகளின் பிரதிநிதிகள் அழைக்கப்படவேண்டும் என்றொரு உள்நோக்கம் முன்ஷி – அய்யங்கார் திட்டத்தில் இருந்தது. பட்டியலிடப்பட்ட மொழிகளில் மத்திய அரசுத் தேர்வுகளை எழுதலாம் எனக் கோருவதற்கு அது பின்பு வழிவகுத்தது. இந்தி பேசாத பகுதி மக்களின் உளவியல் பாதுகாப்பாகவும் அது அமைந்தது. அரசியல் சாசனத்தில் இவற்றைப் பட்டியலிட்டதன் மூலம் இந்திவாலாக்கள் எங்கள் மொழிகளை முற்றாக அழித்துவிடாதபடிச் செய்தோம் என்று துர்காபாய் தேஷ்முக் கூறினார். இந்தப் பட்டியலை நேருவும் விரும்பினார். இவற்றை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் என்று அழைக்கவும் அவர் யோசனை தெரிவித்திருந்தார். (ஆனால் அதிகாரமிருந்தும் அந்த யோசனையை நடைமுறைப்படுத்தவில்லை).

இந்தியும், ஒருவாறாக ஆங்கிலமும் இப்படி அதிகாரமேறியபோது, தமிழ், வங்காளம், பஞ்சாபி மொழிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளுக்குள் பொருமிக்கொண்டிருந்தார்கள். இந்திக்கு அளித்த வசதிகளை இந்திவாலாக்கள் நமது சிறப்புவாய்ந்த மொழிகளுக்குத் தரவில்லை என்றும் நாம் வெறுத்தொதுக்கிய பிரிட்டிஷ்காரர்கள்கூட இப்படியொரு அடாத செயலைச் செய்யவில்லை என்றும் குமுறினார் பிறப்பால் வங்காளியான இந்து மகாசபையின் தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜி.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இந்தி மொழியின் ஆதிக்கத்துக்கு எதிராக தமிழகம் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தது. இந்தியாவில் வேறு எந்த மொழியினரைவிட தமிழர்களே கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக மிகப்பெரிய அளவுக்கு இந்தி ஏகாதிபத்தியத்தை தடுத்து நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தி பேசாத மாநிலங்கள் பலவும் இந்தியைத் தடுத்து நிறுத்த முயல்கின்றன என்றாலும், இவ்விவகாரத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்பு, மொழி அரசியல் வரலாற்றில் முன்னுதாரணமும் ஈடு இணையும் இல்லாத ஒன்றுதான்.

எப்போது இந்திக்கு ஆதரவான குரல் தமிழ்நாட்டில் எழுந்ததோ அப்போதே அதற்கு எதிரான குரலும் எழுந்துவிட்டது. 1906ல், இந்தி அல்லது இந்துஸ்தானிதான் இந்தியாவின் பொது மொழியாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு ஆலோசனைக் குழு கூட்டப்பட்டிருக்கிறது. அப்போது சுயமரியாதை இயக்கமெல்லாம் பிறந்திருக்கவில்லை. ஆனால் நவீன தமிழகத்தின் முன்னோடி சிந்தனையாளர்களில் ஒருவரான அயோத்திதாச பண்டிதர் இந்திக்குத் தரப்பட்ட முக்கியத்துவத்தை அன்றே உணர்ந்திருக்கிறார். தனது ’தமிழன்’ இதழில் 1911லேயே, “இந்திய தேசத்தில் சிலர் இந்தி பாஷையைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் சிலர் சமஸ்கிருத பாஷையைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் காரணமின்றி பேசுவது கவனக்குறைவேயாம்” என்று எழுதினார். ஆங்கிலமே இந்தியாவின் பொது மொழியாக இருக்கவேண்டும் என்பது பண்டிதரின் கருத்தாக இருந்தது.

1937ல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி தனது அரசாங்கத்தை அமைத்தது. சி.இராஜகோபாலாச்சாரி (இராஜாஜி) அதன் முதலமைச்சரானார். இந்தியை சென்னை மாகாணத்தில் கட்டாய பாடமாக ஆக்கவேண்டும் என்று அவர் தேர்தலுக்கு முன்பிருந்தே பேசிவந்தார். இந்துஸ்தானி சேவா தளம், இந்துஸ்தானி ஹிதாஷி சபா போன்ற இந்தி அமைப்புகளின் ஆதரவு அவருக்கு இருந்தது. இராமராஜ்யம் அமைப்பதற்கும் வர்ணாசிரமத்தைக் காப்பாதற்கும் இந்தியும் சமஸ்கிருதமும் கட்டாயமாக்கப்படவேண்டும் என காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி கூறினார். ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் கட்டாய இந்தி திட்டத்தை கொண்டுவரப்போவதாகச் சொன்னார்.

1937 ஆகஸ்ட் 27ல் அண்ணாவிடமிருந்தும் மறுநாள் கரந்தை தமிழ்ச் சங்கத்தில் தமிழறிஞர் த.வே.உமாமகேசுவரம் பிள்ளையிடமிருந்தும் இராஜாஜியின் திட்டத்துக்கு எதிரான எதிர்க்குரல் வந்தது. சுயமரியாதை இயக்கத் தலைவர்களான தந்தை பெரியாரும் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஏ.டி.பன்னீர்செல்வமும் 1937 அக்டோபர் 4ந் தேதி இந்தி எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள் 1938 ஜனவரி 3ல் இராஜாஜியின் வீடு சென்னையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்களால் முற்றுகையிடப்பட்டது. 1271 பேர் இதில் கைதுசெய்யப்பட்டார்கள். அதன் பிறகு தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு மாநாடுகளில் மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார், பாரதிதாசன், கி.ஆ.பெ.விஸ்வநாதம் போன்றோர் கலந்துகொண்டார்கள். இந்தப் போராட்டத்தில் பெண்களின் பங்கு மகத்தானதாக இருந்தது. நீலாம்பிகையார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், மீனாம்பாள் சிவராஜ், தர்மாம்பாள் உள்ளிட்டவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். பிற்கால திமுகவின் முக்கிய தலைவர்களான அண்ணா, என்.வி.நடராசன் போன்றோர் தளபதிகளாக விளங்கினார்கள். செப்டம்பர் மாதம் சென்னையில் கூடிய நிகழ்ச்சியொன்றில், தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கிய பெரியார் ஈ.வே.ரா, தமிழ்நாட்டை தனி நாடாக்குவோம் என்று அறிவித்தார். போராட்டத்தின்போது நீதிக் கட்சி தனது முடிவுகளில் தள்ளாடிக்கொண்டிருந்தது. இந்தியை விருப்பப் பாடமாக ஏற்கலாம் என நீதிக் கட்சியின் பெருந்தலைவர்கள் கருதினார்கள். ஆனால் இராஜாஜியின் இந்தித் திணிப்பு நோக்கமே வேறு அர்த்தம் கொண்டது என்றார் பெரியார். சுயமரியாதை இயக்கத் தலைவர்கள், தமிழறிஞர்கள், என். சிவராஜ், இரட்டைமலை சீனிவாசன் போன்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களின் தலைவர்கள், பொதுவுடைமையாளர்கள், முஸ்லிம் லீக் தலைவர்கள், எல்லா அமைப்புகளின் பெண் தலைவர்கள், ஈழத்தடிகள், விபுலானந்தர், கைவல்யம் போன்ற சைவ சித்தாந்திகள் என பலவிதமான பின்னணிகளிலிருந்து வந்திருந்த தமிழகத்தின் முக்கிய சக்திகள் அனைத்தும் இப்போராட்டத்தில் இறங்கியிருந்தன. அது மட்டுமல்ல, சீனிவாச சாஸ்திரிகள், உ.வே.சா, வி.வி.சீனிவாச அய்யங்கார் உள்பட பல பிராமணர் பிரமுகர்களும் இந்தித் திணிப்பை ஆதரிக்கவில்லை.

பலர் சிறைப்பட்ட நிலையில், சிறையில் இருந்த போராளிகளில் ஒருவரான நடராசன் 1939 ஜனவரி 15ல் மரணமடைந்தார். பிப்ரவரி 13ல் தாளமுத்து என்பவரும் சிறையிலேயே இறந்தார். இவ்விரு தியாகங்களும் மொழிப் போராட்டத்தை மிகப்பெரிய அளவுக்கு விரிவாக்கியது. ஓராண்டு கழித்து, 1940 பிப்ரவரி 21ந் தேதி கட்டாய இந்தித் திட்டத்தை கைவிடுவதாக சென்னை மாகாண அரசு அறிவித்தது. தமிழன் தொடுத்த போர் என்று அழைக்கப்பட்ட இந்த முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தின் அரசியலை திசைமாற்றியது. இருபதாம் நூற்றாண்டின் தமிழக அரசியலின் பல்வேறு மூலவித்துகள் இந்தப் போராட்டத்தின் மூலமாகவே விதைக்கப்பட்டன.

ஆனால் 1942ல் ஒரு முறையும் 1946ல் ஒரு முறையும் சென்னை மாகாண அரசுகள் மீண்டும் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியில் இறங்கி, ஒவ்வொரு முறையும் தோற்றுப்போயின. மொழி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தமிழறிஞர்களும் திராவிட இயக்கமும் போர் அரண்களாக நின்றன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும், காங்கிரஸ் கட்சியின் மொழிக்கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. 1948ல் மீண்டும் ஒருமுறை இந்தியைக் கட்டாயமாக்கும் பணியில் காங்கிரஸ் இறங்கியது. அந்த ஆண்டு ஜூலை மாதம் 17ல், பெரியார் சென்னையில் கூட்டிய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் திரு.வி.க, அண்ணா, ம.பொ.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இரண்டு ஆண்டுகள் இந்தப் போராட்டம் தொடர்ந்தது.
1950 ஜனவரி 26ல் இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது. அதே ஆண்டு மே மாதம் மாநில அரசு கட்டாய இந்தியை மீண்டும் கொண்டுவந்தது. இதை எதிர்த்து திகவும் அப்போது உருவாகிவிட்டிருந்த திமுகவும் போராடின. ஜூலையில் அரசு பணிந்து, கட்டாய இந்தி உத்தரவை திரும்பப்பெற்றது. 1952ல் சென்னை மாகாணத்திலுள்ள மத்திய அரசு அமைப்புகளில் இந்தி பெயர்ப்பலகைகளை மத்திய அரசு அமைத்தது. இதை எதிர்த்து திராவிட இயக்கங்கள் இந்திப் பெயர்களை தார் பூசி அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டன. 1959ல் வேறு பிரச்சனை வெடித்தது. இந்திய அரசுக்குச் சொந்தமான ஆல் இந்தியா ரேடியோ தன்னை ஆகாஷ்வாணி என்று அழைத்துக்கொண்டது. இதை எதிர்த்து தமிழ்நாட்டில் மீண்டும் போர்க்கோலம். அனைத்தந்திய வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழக எழுத்தாளர்கள் மறுத்தார்கள். பிறகு தமிழ்நாட்டில் மட்டும் ஆல் இண்டியா ரேடியோ அதே பெயரால் அழைக்கப்படுவது தொடர்ந்தது.

மத்திய அரசால் 1955ல் அமைக்கப்பட்ட பி.சி.கேர் தலைமையிலான ஆட்சிமொழி ஆணையம் இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்கிலேயே தனது அறிக்கையை அளித்தது ஆணையத்தின் மீதான விவாதம் 1959 ஆகஸ்ட் 7ல் நாடாளுமன்றத்தில் நடந்தபோது, ஜவகர்லால் நேரு இந்தி பேசாத மக்கள் மீது இந்தித் திணிக்கப்படாது என்று பேசினார். அந்த பேச்சே நேருவின் வாக்குறுதி என்று அழைக்கப்படுகிறது. எவ்வளவு காலம் மக்கள் விரும்புகிறார்களோ அவ்வளவு காலம் ஆங்கிலம் நீடிக்கும் என்றும் இது தொடர்பான முடிவை எடுக்கும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் விடமாட்டேன், இந்தி பேசாத மக்களிடமே விடுவேன் என்றும் நேரு உறுதிமொழிந்தார்.

1961ல் மத்திய அரசின் கல்வித்துறை தனது மும்மொழித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆங்கிலம், இந்தி, மாநில மொழி என்கிற அந்த திட்டம் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்று மொழிகளைப் படிக்கவேண்டிய தேவையை மாணவர்களுக்கு அளிக்கிறது. இந்தி மாநிலங்களில் ஆங்கிலம், இந்தி, மற்றுமொரு இந்திய மொழி என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் இந்தியை மட்டுமே கற்றால் போதும் என்பதே நிலை. இந்த ஏற்றத்தாழ்வான திட்டத்தை தமிழகம் வரவேற்கவில்லை.

. 1960ல் திமுகவில் ஈ.வெ,கி.சம்பத் தலைமையில் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. சுமார் ஒரு லட்சம் பேர் திரண்ட கூட்டத்தில் ஈ.வெ.கி.சம்பத் இந்தித் திணிப்புக்கு எதிராக முழங்கினார். அது தில்லி வரை கேட்டது. இந்தி ஒருபோதும் தமிழர்கள் மீது திணிக்கப்படாது என்று உறுதிமொழி கூறி சம்பத்துக்கு இந்திய தலைமை அமைச்சர் ஜவகர்லால் நேருவே கடிதம் எழுதவேண்டிவந்தது. இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணை ஆட்சிமொழியாக நீடிக்கும் என்று நேரு அதில் கூறியிருந்தார்.

1963ல் அலுவல் மொழிச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆங்கிலத்தை 15 ஆண்டுகளுக்கு மட்டுமே நீட்டிக்கவேண்டும் என்று 1950ல் அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டிருந்த கால எல்லை, இப்போது நீக்கப்பட்டிருப்பதாக அந்த சட்டத்துக்கான முன்வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது நேரு குறிப்பிட்டார். ஆனால் 1963 ஜனவரி 21ல் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த மசோதாவில் இந்தியோடு ஆங்கிலமும் ஒரு அலுவல் மொழியாகத் தொடரலாம் என்று கூறப்பட்டிருந்ததே ஒழிய, தொடரும் என்று கூறப்படவில்லை என்று திமுக ஆட்சேபணை தெரிவித்திருந்தது. மசோதாவில் இருந்த may என்ற சொல்லுக்குப் பதிலாக shall என்ற சொல்லை இடவேண்டும் என்று திமுக வாதாடியது. May என்ற சொல்லை May not என்றும் பிறகு பொருள்படுத்திக்கொள்ளமுடியும் என்பது திமுகவின் சரியான வாதம். மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா ஒரு பெரும் போராட்டத்தையே நடத்திப்பார்த்தார். ஆனால் சொல்லில் மாற்றம் செய்யப்படாத நிலையில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இந்தி பேசாத மக்கள் விரும்பாதவரை அவர்கள் மீது இந்தியைத் திணிக்கமாட்டோம் என்று நேரு கூறியதைச் சுட்டிக்காட்டி, இந்தி பேசாத மக்களின் கருத்தை அறிவதற்கான முறை ஏன் இந்தச் சட்டத்தில் இல்லை என்று கேள்வி கேட்டதற்கு அது அரசியல் சாசனத்துக்கு முரணானது என்று கூறி நேரு தப்பிவிட்டார். அதாவது தனது வாக்குறுதிக்கு சட்ட வடிவம் தருவதை நேருவே முன்னின்று தடுத்தார் என்பதுதான் உண்மை.

1965 நெருங்குகிறது. 1963 ஆகஸ்ட் 25ல் தஞ்சாவூரில் இந்தி எதிர்ப்பு மாநாடு கூட்டப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் 6ந் தேதி திருச்சியில் முதன் முதலாக தமிழக மாணவர்கள் ஒன்று கூடி இந்தி எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டினார்கள். அக்டோபர் 13ந் தேதி சென்னையில் கூடிய இந்தி எதிர்ப்பு மாநாட்டில், இந்திய அரசியல் சாசனத்தின் 17ஆம் பிரிவைக் கொளுத்தவேண்டும் என்று அண்ணா பேசினார். இதைத் தொடர்ந்து திமுகவினரும் தமிழ் ஆர்வலர்களும் 17ஆம் பிரிவை கொளுத்துவதும் சிறை செல்வதுமாக இருந்தனர். வரப்போகிற மிகப்பெரிய போராட்டம் ஒன்றுக்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தது.

ஜனவரி 25, 1964ல் கீழப்பழவூர் சின்னச்சாமி தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார். தமிழகமெங்கும் மொழிப் போராட்ட உணர்வு தீயாகப் பரவியது. இதற்கிடையில் நேரு மே 1964ல் மறைந்தார். அவர் மீது எவ்வளவு குறைபாடுகள் கூறப்பட்டிருந்தாலும், அவர் ஓர் இந்தி வெறியர் அல்ல என்கிற நம்பிக்கையைக் கொண்டிருந்த திமுகவினருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. அடுத்து காங்கிரஸ் கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரத்துக்கு வந்த குல்சாரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் போன்றவர்கள் மிகத் தீவிரமான இந்தி ஆதரவாளர்கள் என்பதால் அந்த அச்சம் அதிகரித்தது. அதற்கேற்ப மத்திய அரசின் வழிகாட்டலில் மார்ச் 7ந் தேதி, தமிழ்நாட்டில் அன்றைய முதல்வர் எம்.பக்தவத்சலம் மும்மொழித் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து சட்டசபையில் பேசினார். அது தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

தமிழக மாணவர்கள் கொந்தளிப்பில் இருந்தார்கள். 1965 ஜனவரி 26 – குடியரசு நாளில் – இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாகப் போகிறது, நேருவின் அந்த சொத்தை வாக்குறுதியைக்கூட புது தில்லி மதிக்கப்போவதில்லை என்று அஞ்சினார்கள். அதனால் கெடுநாளுக்கு ஒரு நாள் முன்பாகவே, ஜனவரி 25ந் தேதியே போராட்டத்தில் இறங்கினார்கள். தமிழகம் முழுவதிலுமிருந்து பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட அந்தப் போராட்டம் முழு வெற்றி அடைந்த்து. இதற்கிடையில் குடியரசு நாளை துக்க நாளாக கடைப்பிடிக்கப்போவதாக திமுக அறிவித்ததைத் தொடர்ந்து, அண்ணா உள்பட்டோர் குடியரசுத் தினத்துக்கு முந்தைய நாளே கைது செய்யப்பட்டார்கள்.

தமிழகம் முழுக்க மாணவர்கள் இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என்ற முழக்கங்களோடு சாலையில் இறங்கினார்கள். தமிழகமெங்கும் பேரணிகள் அமைதியாக நடைபெற்றன. சென்னையில் மட்டும் 50,000 மாணவர்கள் பேரணியில் கலந்துகொண்டார்கள். ஆனால் மதுரையில் ஆளும் காங்கிரஸ் தரப்பினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் மாணவர்கள் வெகுண்டனர். அவர்களது கோபத்திற்கு ரயில்வே நிலையங்களும் அஞ்சல் நிலையங்களும் அங்கிருந்த இந்தி பெயர்ப்பலகைகளும் இலக்காயின. பிறகு தமிழகமெங்கும் மாணவர்கள் மத்திய அரசின் அடையாளங்களையும் உடைமைகளையும் இலக்குவைத்து தாக்கினார்கள். காவல் துறை அவர்கள் மீது தனது துப்பாக்கிகளைத் திருப்பியது.

உலகத்தைத் திரும்பிப்பார்க்கவைத்த சம்பவங்களும் நடந்தன. குடியரசு தினம் அன்று, விடியல்பொழுதில் சென்னை கோடம்பாக்கத்தில் சிவலிங்கம் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு, தமிழ் வாழ்க என்று முழக்கமிட்டுக்கொண்டே, வெந்து துடித்து இறந்தார். சின்னச்சாமியும் சிவலிங்கம் காட்டிய வழியில் அதன் பிறகு பல தமிழ் இளைஞர்கள் தீக்குளித்தும் நஞ்சு உண்டும் இறந்தார்கள். ஜனவரி 28ல், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர் இராஜேந்திரன் கொல்லப்பட்டபோது, தமிழகம் அதிர்ந்தது. அய்யம்பாளையம் வீரப்பன், கீரனூர் முத்து, மாயவரம் சாரங்கபாணி, சத்தியமங்கலம் முத்து, விருகம்பாக்கம் அரங்கநாதன் என உயிர்த்தியாகம் செய்த தியாகிகளின் எண்ணிக்கை பெருகியபோது, தமிழகப் போராட்டம் குறித்த செய்திகள் இந்தியாவையும் உலகையும் உலுக்கின. ஓர் உள்நாட்டு யுத்தம் மூளுமோ என்று மேலைநாடுகளில் பேசப்பட்டன.

சாஸ்திரியும் பக்தவத்சலமும் ஆழம் தெரியாமல் காலைவிட்டனர். பிப்ரவரியில் தமிழ்நாட்டுக்கு மத்திய பாதுகாப்புப் படையினர் அழைக்கப்பட்டனர். ஓர் அந்நியப் படையினர் போல தமிழகத்தில் நுழைந்த துணை ராணுவம் மாணவர்களை கண்டபடி சுடத் தொடங்கியது. தமிழகத்தின் சிறு நகரங்களில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள்தான் போராட்டங்களில் இறங்கினார்கள் என்பதால் அந்தப் படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு பெருமளவில் பலியானவர்கள் பள்ளி மாணவர்களாக இருந்தார்கள். துப்பாக்கிக் குண்டுகள் நூற்றுக்கணக்கான பிஞ்சுகள் மீது பாய்ந்தன. ஆனால் ஆதிக்கப்படையினரின் வடு கோடிக்கணக்கான தமிழர்களின் மீது ஆழப் பதிந்தது.

காங்கிரஸ் கட்சியில் இது கடுமையான முரண்பாடுகளை உருவாக்கியது. பக்தவத்சலத்தின் அணுகுமுறையை சாஸ்திரி ஏற்றார், நந்தாவும் துணையிருந்தார். ஆனால் காமராஜ் இதைக் கண்டித்தார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சி.சுப்பிரமணியமும் ஓ.வி.அளகேசனும் தங்கள் பதவிகளிலிருந்து விலக முன்வந்தார்கள். சாஸ்திரி அவர்களது பதவி விலகல் கடிதங்களை அன்றைய குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பி வைக்க, ராதாகிருஷ்ணன் அதில் கையொப்பமிட மறுத்தார். சாஸ்திரிக்கு வேறு வழியில்லை. பிப்ரவரி 11ல் வானொலி வழியாகப் பேசிய அவர், நேருவின் உறுதிமொழி காக்கப்படும் என்று உறுதியளித்தார். தமிழக மாணவர்கள் தங்கள் போராட்டத்தை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார்கள்.

மொழிப் போர் என்றழைக்கப்பட்ட இந்தப் போராட்டம் தமிழ்நாட்டில் பல அரசியல் மாற்றங்களுக்குக் காரணமாக ஆனது. போராட்டத்தைத் தொடங்கியதும் இறுதிவரை அதை நடத்தியதும் மாணவர்கள்தான் என்றாலும், திமுக உருவாக்கி வைத்திருந்த அரசியல் களம் அது என்பதால், போராட்டத்தின் விளைவுகள் திமுகவுக்கு சாதகமாக இருந்தன. 1938ல் கட்டாய இந்தியைக் கொண்டுவந்த இராஜாஜி, 1965ல் திமுகவுடன் இணைந்து இந்தித் திணிப்பை எதிர்த்தார். ஆங்கிலமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கவேண்டும் என்பதில் அவர் திமுகவுடன் இசைந்தார். இந்தியை தேசிய மொழியாக அனைவரும் படிக்கவேண்டும் என்று எப்போதும் போல வற்புறுத்திய இராஜாஜி. ஆனால் அதை திணிக்கமுடியாது என்றார்.

சரஸ்வதி தேவி அளித்த நன்கொடை என்று ஆங்கிலத்தை வர்ணித்தார். அதே சமயம் 1938ல் முதல் மொழிப் போரின் தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியார் 1965ல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்துக்கு எதிராக இருந்தார். அவரது காங்கிரஸ் சார்பும் திமுக மீதான வெறுப்பும் அவரை எதிர் நிலையில் வைத்திருந்தது என்று அதற்கு காரணம் கூறப்பட்டாலும், அடிப்படையில் அவரது மொழிக்கொள்கை விமர்சனத்துக்குரியதாகவே இருந்துவந்தது. 1965 போராட்டம் திமுகவையும் இராஜாஜியையும் வேறு பல கட்சிகளையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய காங்கிரஸ் எதிர்ப்பு அணியை தமிழகம் காண்பதற்கு வழிகோலியது. அதன் விளைவாக 1967 சட்டமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியாவில் முதன் முதலாக ஒரு மாநிலக் கட்சி ஆட்சிக்கு வந்தது.

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமே நடந்த ஒன்றல்ல. தமிழ்நாட்டில் இது பேரளவுக்கு நடந்திருந்தாலும், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம். மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. இந்தியாவில் முதல் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டமே 19 ஆம் நூற்றண்டின் ஒரிசாவில்தான் நடந்தது. அப்போது மத்திய மாகாணம் ஒரிய மொழி பேசுவோர் மீது இந்தியைத் திணிக்க முயல, ஒரியர்கள் வெகுண்டு எழுந்தார்கள். அதுவே பிற்காலத்தில் இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக ஒரிசா என்கிற மாகாணத்தை அமைக்கும் நிலைக்கு காரணமாக ஆனது. இன்றும் பஞ்சாபிகளும் மராத்தியரும் வடகிழக்கு மாநிலத்தவர்களும் இந்தித் திணிப்புக்கு எதிராக முழங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

1967க்குப் பின் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தின் பிரிவு 3ல் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட, அது ஆங்கிலத்துக்கு காலவரையறையற்ற நீட்டிப்பை அளித்தது. 15 ஆண்டு காலத்தில் ஆங்கிலத்தின் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று இந்திய அரசியல் சாசனம் கூறினாலும், இந்தியோடு சேர்த்து ஆங்கிலமும் பயன்படுத்தப்படலாம் என்று ஆட்சி மொழிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் கூறுகிறது.

மற்றொரு அதிசயமும் நடந்தது. அரசியல் சாசனம் பிரிவு 343(1) ன் கீழ் 1976ல் அலுவல் மொழி விதிகள் (1976 Official Language Rules) உருவாக்கப்பட்டது. அதன் பிரிவு 1ன் முதல் இரு கூறுகள் பின்வருமாறு: (i) இந்த விதிகள் அலுவல் மொழிகள் (ஒன்றிய அரசின் அலுவல் பயன்பாடுகளுக்கானது) விதிகள், 1976 என்று அழைக்கப்படலாம் (ii) இவை இந்தியா முழுமைக்கும் நீட்டிக்கப்படவேண்டும், தமிழ்நாடு மாநிலம் நீங்கலாக ((i) These rules may be called the Official Languages (Use for Official Purposes of the Union) Rules, 1976.(ii) They shall extend to the whole of India, except the State of Tamilnadu.). 1937 முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டுவந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்களின் ஒரு சிறு விளைவுதான், மத்திய அரசு தன் அலுவல் மொழி விதிகள் தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்று 1976ல் சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்ட அதிசய நிகழ்வு. ஆனால் இந்த விதிமுறைகள் ஆவணம் ஓர் ஏட்டுச் சுரைக்காய். சட்டத்துக்குட்பட்டும் சட்டவிரோதமாகவும் இந்தியாவில் இந்தித் திணிப்பு என்பது தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதாகவே அரசியல் சாசன வல்லுநர்களும் அரசியல் பார்வையாளர்களும் கருதுகிறார்கள்.

தொடரும் சிக்கல்
அறுபதுகளோடு இந்தப் பிரச்சனை முடியவில்லை. தொடர்ச்சியாக, திட்டமிட்டு மறைமுகமாக இந்தித் திணிக்கப்பட்டுவருகிறது என்கிற குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு அடிக்கடி இலக்காகிவந்தது. 1986ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி புதிய கல்விக் கொள்கை ஒன்றை அறிவித்தார். அதன்படி உருவாக்கப்பட்ட நவோதயா பள்ளிகளில் இந்தி கட்டாய மொழியாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக கடுமையாக போராடியது. அதன் தலைவர் மு.கருணாநிதி பத்து வாரங்கள் கடும் சிறை தண்டனையை அனுபவித்தார். க.அன்பழகன் உள்ளிட்டோர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை இழந்தார்கள்.

பிறகு இந்தி வாரம், ரயில்வேயில் இந்தி என சிறுசிறு போராட்டக் களங்களை தமிழகம் கண்டது. தொலைக்காட்சியில் இந்தித் திணிப்பு, மத்திய அரசு அலுவலங்களில் இந்திக்கு முன்னுரிமை, இந்தியில் கையெழுத்து, பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறைகளில் முக்கிய தகவல்களை தமிழில் அல்லாமல் இந்தியில் வழங்குவது, தமிழ் நாளிதழ்களில் இந்தியில் விளம்பரம் செய்வது. தமிழகத்திலுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் இந்திக்கும் இந்தி மொழி பேசுவோருக்கும் முக்கியத்துவம் அளிப்பது, மத்திய அரசின் எல்லாத் திட்டங்களுக்கும் இந்தியில் பெயர் வைப்பது, தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்துவது என மத்திய அரசும் காங்கிரஸ், பாஜக உள்பட அனைத்திந்தியக் கட்சிகளும் இந்தி விவகாரத்தை தமிழ்நாட்டில் எப்போதுமே சூடாக வைத்திருந்தன.

இன்னொரு பக்கம், இந்தியை விரட்டுவதற்காக திமுகவினரும் இராஜாஜியும் பெரியாரும் முன்னிறுத்திய ஆங்கில மொழி, தமிழையே கொல்லும் நிலை உருவாகிவிட்டது என தமிழறிஞர்கள் 1990களுக்குப் பிறகு தொடர்ந்து போராடிவருகிறார்கள். 1965 இல் எழுப்பப்பட்டஇந்தி நெவர், இங்கிலீஷ் எவர் என்கிற முழக்கம், 70-80களில் தமிழ் நோவேர் என்கிற நிலையை உருவாக்கிவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டார்கள். குறிப்பாக 1990களுக்குப் பிறகு இந்தியாவில் ஏற்பட்ட உலகமயமாக்கம், தாராளமயமாக்கம், தனியார்மயக்காம் ஆகிய பொருளாதார மாற்றங்கள் நாட்டின் மொழிக் கொள்கையில் மிகப்பெரிய மாற்றத்தை மறைமுகமாகக் கொண்டுவந்தது. தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் ஆங்கிலம் முக்கிய இடத்தைப் பிடிக்க அது வழிவகுத்தது. 1965 போராட்டத்தின் பலனாக இந்தியாவில் தனது இடத்தை உறுதி செய்துகொண்ட ஆங்கிலத்தின் பொருளாதார அம்சம் இரட்டைத் தன்மை உடையதாக இருந்தது. தமிழ்நாட்டிலும் பிற தென் மாநிலங்களிலும் 90களில் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்வதற்கான மனிதவளத்தை அதுதான் உருவாக்கியது. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையும்தான் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றத்துக்கு 90களில் தெரிந்தோ தெரியாமலோ காரணமாக இருந்தன. ஆனால் ஆங்கிலத்துக்குத் தரப்பட்ட அந்த அதீத முக்கியத்துவமும் கல்வி தனியார்மயமாக்கபட்டதும் தமிழைப் புறக்கணிக்கும் நிலையை உருவாக்கியிருக்கிறது என்பதை மறுக்கவியலாது. ஒரு குறிப்பிட்ட துறையில் ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் முன்னேற்றத்தை அடைய ஆங்கிலம் உதவியிருக்கிறது. ஆனால் அது இன்று தமிழ்நாட்டின் சமூக, கலாச்சார, பொருளாதார, வரலாற்றுத் தளங்களை மிகவும் மோசமான முறையில் பாதித்திருக்கிறது. அசலான மனித மூலதன வளர்ச்சியை தமிழ்நாட்டில் ஆங்கிலம் தடுத்து நிறுத்தியிருக்கிறது என்கிற அச்சத்தை இப்போது மொழி-பொருளாதார நிபுணர்கள் எழுப்புகிறார்கள். பெரியார், அண்ணா, மு.கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என நீளும் திராவிடக் கட்சிகளின் முதல்வர்கள் இவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தமிழின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சிதைத்துவருகிறார்கள் என தமிழ் அமைப்புகள் குற்றம்சாட்ட்கின்றன. ஆனால், இது தமிழ்நாட்டுக்குரிய சிக்கல் மட்டுமல்ல, அனைத்திந்திய சிக்கல், ஏன் அனைத்துலக சிக்கல் என்பதையும் கவனிக்கத் தவறக்கூடாது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மொழியுரிமைப் போராட்டம் என்பது தமிழை ஆட்சிமொழியாக்குவது, கல்வி மொழியாக்குவது, குறைந்தபட்சம் தமிழை ஒரு மொழிப்பாடமாகவாவது நிலைப்படுத்துவது, நீதிமன்ற மொழியாக்குவது ஆகிய தளங்களில் நடந்துவருகிறது. இந்தக் களத்தில் ஆங்கிலமே வில்லனாக உருவகிக்கப்படுகிறது.

ஆனால் இந்திச் சிக்கல் ஒரு தொடர்கதைதான். 2012ல் என்சிஇஆர்டி பாடநூல்களில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் பற்றிய ஆர்.கே.லக்ஷ்மண் கார்ட்டூன், அந்தப் போராட்டத்தை தவறாக சித்தரித்தது என்று கூறி எதிர்ப்பு அலை கிளம்பியது. 2014ல் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு பதவி ஏற்ற பிறகு இந்தித் திணிப்புப் பிரச்சனை மீண்டும் எழுந்தது. சமூக ஊடகங்களில் இந்தித் திணிப்பு, உலகத் தாய்மொழி நாளில்கூட மற்ற மொழியினருக்கு இந்தியில் மட்டுமே வாழ்த்து தெரிவிப்பது, இந்தியை மட்டுமே தேர்ந்தெடுத்து வளர்ப்பது என மோடி அரசு தொடர்ச்சியாக சிக்கலை உருவாக்கிக்கொண்டுவருகிறது. தமிழக முதல்வர் ஜெ.ஜெயல்லிதா உள்பட பலரும் இதற்கு எதிராக தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்துவருகிறார்கள்.

2014 – 15ல் மீண்டும் மொழிப் பிரச்சனை நாடெங்கும் முக்கிய கவனத்தைப் பெற்றதற்கு மோடி அரசின் செயல்பாடுகள் மட்டும் காரணம் அல்ல. மாறாக நவீன தொழில்நுட்ப காலத்தின் புதிய ஆயுதங்களுடன் இந்தித் திணிப்புக்கு எதிராகவும் தங்கள் சொந்த மொழிக்கான உரிமைகளுக்காகவும் போராடத் தொடங்கிய இளைய தலைமுறையின் போராட்ட முறைகள்தான் முக்கிய காரணம். கடந்த சில ஆண்டுகளாக, மொழிச் சமத்துவ முன்னெடுப்பு (Promote Linguistic Equality, PLE) என்கிற பெயரில் இயங்கும் ஃபேஸ்புக் குழு ஒன்றில் சுமார் 10,000 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கர்நாடகம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய துறைகளில் பணியாற்றும் இந்தத் தலைமுறையினர் ஃபேஸ்புக், டிவிட்டர், சேஞ்ச்.ஆர்க் போன்ற சமூக ஊடகங்களினூடாக இந்தி, இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்றும் தமிழ் உள்பட அரசியல் சாசனத்தின் 22ஆம் பிரிவில் உள்ள மொழிகளை மத்திய அரசின் ஆட்சிமொழிகளாக ஆக்கவேண்டும் என்றும் பரப்புரை செய்கிறார்கள். 2015 ஆகஸ்ட் 15லும் (சுதந்திர தினம்) செப்டம்பர் 12லும் (இந்தி தினம்) இவர்கள் நடத்திய #StopHindiImposition மற்றும் #StopHindiImeperialism ஆகிய டிவிட்டர் பரப்புரைகள் அரசின் கவனத்தையும் மீடியாவின் கவனத்தையும் ஈர்த்தது.

தமிழகத்திலும் மொழி அரசியல் மீண்டும் புத்துயிர்ப் பெற்றிருக்கிறது. 2015 என்பது 1965 இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப் போரின் 50ஆம் ஆண்டு. திமுக, அஇஅதிமுக கட்சிகள் சடங்காக்க் கொண்டாடிவரும் ஜனவரி 25 மொழிப் போர் தியாகிகள் நாள் 2015ல் வேறு ஒரு பரிணாமத்தை எட்டியது. பல்வேறு புதிய தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் இந்த ஆண்டை மொழியுரிமை ஆண்டு என்று அறிவித்தது. இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என்று கூறி ஆட்சியில் அமர்ந்த திமுகவும் தொடர்ந்து அஇஅதிமுகவும் மொழி விவகாரத்தில் துரோகங்களைச் செய்துவிட்டன என்றும் கால ஓட்டத்தில் தமிழுக்கு அதிகாரத்தைப் பெற்றுத்தர தவறிவிட்டன என்றும் குற்றம்சாட்டிய கூட்டியக்கம், மொழி உரிமை, மொழிச் சமத்துவம் ஆகிய கோட்பாடுகளை முன்மொழிந்தது. மொழியுரிமை முன்னெடுப்புக் குழுவினரோடு இணைந்து தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் 2015 செப்டம்பர் 19 – 20ல் சென்னையில் நடத்திய மொழியுரிமை மாநாடு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டமாகும். இந்தியாவின் பல்வேறு மொழி பேசும் சமூகங்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி அந்த மாநாட்டில் வெளியிட்ட மொழியுரிமைக்கான சென்னைப் பறைசாற்றம் (Chennai Declaration of Language Rights) இந்தியாவில் மொழியுரிமைப் போராட்டத்தை அடுத்த நிலையை நோக்கி நகர்த்தியது. சுமார் 15 மொழிகளில் தற்போது மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்த பிரகடனத்தின்கீழ் 20க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளின் பிரதிநிதிகள் ஒன்றுதிரண்டிருக்கிறார்கள். இந்த மாநாட்டின் விளைவாக தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், கேரளம், பஞ்சாப் மாநிலங்களின் பிரதிநிதிகள், இந்தி மாநிலங்களில் உள்ள போஜ்புரி, மைதிலி, புந்தேலி, அங்கிகா ஊள்ளிட்ட பூர்வ மொழிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோப் இணைந்து, மொழி நிகர்மைக்கும் உரிமைக்குமான பரப்பியக்கம் (Campaign for Language Equality and Rights, CLEAR) என்று ஒரு புதிய அனைத்திந்திய அமைப்பும் உருவாக்கப்பட்டது. இவர்களின் நோக்கம் வெறுமனே ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளின் ஆதிக்கத்தை எதிர்ப்பது மட்டுமல்ல. அது மூன்று வகையான இந்திய மொழிகளின் சிக்கலைத் தீர்ப்பதை மையமாகக் கொண்டிருக்கிறது:

இந்திய அரசியல் சாசனத்தின் 8ஆம் அட்டவணையில் பட்டியலிடப்பட்டிருக்கும் மொழிகளை மத்திய அரசின் ஆட்சிமொழிகளாக ஆக்கவேண்டும் என்பது முதல் கோரிக்கை. இரண்டாவது கோரிக்கை, எட்டாவது பட்டியலில் இடம்பெறுவதற்காக போராடிக்கொண்டிருக்கும், மத்திய அரசின் அனுமதிக்காக விண்ணப்பித்துவிட்டு தற்போது காத்துக்கொண்டிருக்கும் அங்கிகா, பஞ்சாரா (லம்பாடி), பாஸிகா, போஜ்புரி, போத்தி, போதியா, புந்தேலி, சத்தீஸ்கரி, தக்தி, கார்வாலி கோந்தி, குஜ்ஜாரி, ஹோ, கச்சாச்கி காமத்பூரி கார்பி, காஷி, குடகு, கோக் பாராக், குமோவானி , குராக் , குர்மாலி , லெப்சா, லிம்பு, மாகஹி, முண்டாரி, நாக்பூரி, நிகோபாரி, இமாச்சலி, பாலி, ராஜஸ்தானி, கோசலி, செளரசேனி, சிராய்கி, தென்யிதி, துளு ஆகிய மொழிகளின் உரிமை தொடர்பானது. மூன்றாவது கோரிக்கை, பேசுவோர் எண்ணிக்கை அதிகமில்லாத மொழிகள் தொடர்பானது. அரசு ஆதரவு இல்லையென்றால் இத்தகைய சிறுமொழிகள் இன்னும் சில பத்தாண்டுகளில் காணாமலேயே போய்விடும் அபாயத்தில் இருக்கின்றன. மத்திய இந்தியாவிலும் பல்வேறு மலைப்பகுதிகளிலும் பூர்வகுடி மக்களாலும் மலைவாசிகளும் பேசப்படும் இந்த மொழிகள் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் வழக்கொழிந்து போயிருக்கின்றன என்பதை நாம் மறக்கமுடியாது.

இந்தச் சிக்கல்களைத் தீர்க்க, இந்திய அரசியல்சாசனத்தின் 17 ஆம் பிரிவைத் திருத்துவதைத் தவிர வேறு வழியில்லை. மொழிச் சமத்துவத்துக்கும் உரிமைக்குமான சட்டமுன்வரைவு ஒன்றை உருவாக்கி போராட வேண்டிய அவசியத்தை இன்று எல்லா மொழியுரிமையாளர்களும் வலியுறுத்துகிறார்கள். எழுத்திலும் எண்ணத்திலும் மொழிச் சமத்துவம் என்கிற கருத்தாக்கத்தை நடைமுறைப் படுத்தவேண்டிய அவசியம் இந்திய அரசுக்கு இருக்கிறது. குடியரசாக அவதரித்த நாள் முதல் மொழிப் பிரச்சனையால் சிக்கி அல்லாடும் இந்தியா என்னும் உலகின் மிகப் பெரிய, ஆனால் மிக இளைய ஜனநாயக நாடு, இந்த அக்னிபரீட்சையில் வெற்றிபெறுவது அதன் வரலாற்றுத் தொடர்ச்சிக்கு அத்தியாவசியமானதாகும்.

ஆனால், இன்று இந்தியாவின் ஆட்சியாளர்கள் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. பேர்ரசியவாதிகளான இந்து ராஷ்ட்டிர தலைவர்களும் அவர்களின் பிரதிநிதியான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மொழிப் பிரச்சினையில் தீர்வுகளைக் காண்பதற்கு பதிலாக அதை மேலும் மோசமானதாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது இந்தியாவின் வரலாற்றுத் தொடர்ச்சியைவிட இந்தி-இந்து-இந்துஸ்தான் கனவே பிரதானமானது என்று அவர்கள் நினைக்கிறார்கள். மோடி அரசின் ஆதரவாளர்கள் இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்களை தேசத்துரோகிகள் என்று கூறுகிறது. ஆனால் அதைத் திணிப்பதின் மூலமாக அவர்களே அவர்களுடைய இந்தியத் தேசத்துக்கு துரோகிகளாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் அந்த விதி வலியது என்றுதான் பொருள். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் மட்டும் குடிகொண்டிருந்த இந்தி எதிர்ப்புப் புயல் இன்று இந்தியா முழுவதிலும் வீசுகிறது என்றால், அது மோடி அரசின் மகத்தான சாதனையன்றி வேறென்ன? இந்தியால் இந்தியாவே நொறுங்கும் என்றால் அது விதியன்றி வேறென்ன?

கட்டுரையாளர் பற்றி: ஆழி செந்தில்நாதன் (45) – மொழி நிகர்மை உரிமை பரப்பியக்கத்தின் செயலர். இவரைத் தொடர்புகொள்ள zsenthil@gmail.com